சிறப்பு தொகுப்புகள்

Wednesday, December 26, 2012

இயந்திரர்கள்


எந்திரன் திரைப்படத்தில் ROBOT-ஐ மனிதனாக மாற்ற முயலுவார்கள். எந்திரன் என்றவுடன் உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது. கவலைப்படாதீர்கள். இந்த இடுகையில் எந்திரன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. ஆனால், எந்திரன் திரைப்படத்தின் கரு இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமானது. 'எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டி, ஒரு பெண்ணை நேசிக்கச் செய்வார்கள்’.

சில நாட்களுக்கு முன்பு கூட இது தொடர்புடைய செய்தி ஒன்றை வாசித்தேன். இத்தாலி நாட்டிலுள்ள பைசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'FACE' என்கிற மனித உணர்வுகளைப் வெளிப்படுத்தக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்களாம். FACE ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘HEFES’ என்கிற மென்பொருளைக் கடந்த முப்பது வருடங்களாக படிப்படியாக உருவாக்கி வந்துள்ளார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

ஒரு இயந்திரத்தை சிரிக்கவைக்கவும், கோபப்படவைக்கவும் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அரை ஆயுள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று FACE பற்றியோ, HEFES பற்றியோ நான் எழுதப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக, ‘ஆராய்ச்சியாளர்களின் உதவியின்றி’ தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

இயந்திரங்கள் எல்லாம் மனிதர்களைப் போலச் சிரிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில், மனிதர்கள் எல்லாம் இயந்திரர்களாக மாறிக்கொண்டு வரும் ஒரு வேதனையான விஷயத்தைப் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

ஒருமுறை பெல்கியத்தில் ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சிறுகுழந்தை அழகாக RHYMES பாடிக்கொண்டிருந்தது. எனக்கு டச்சு மொழி சிறிதளவே தெரியுமென்றாலும், அது உரக்கப் பாடிய விதத்தையும், அதன் அழகிய முகபாவங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

திடீரெனெ ஏதோ தோன்றி, தலையைச் சற்று உயர்த்தி சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன். ஒரே ஒரு மனிதர் மட்டும் என்னைப் போலவே புன்னகைத்துக்கொண்டு இருந்தார். மற்ற அனைவருமே, ஏதோ ‘அவர்களுடைய உணவை வேறு யாரோ தெரியாத நபர் பிடுங்கித் தின்றுவிட்டதைப் போன்று’ அந்தக் குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறுப்பை  உமிழ்ந்துகொண்டும், அருவருப்பு உணர்வுகளை ஏந்திக்கொண்டும் இருந்த அவர்களின் பார்வை, அந்தப் பிரயாணமே ஒரு மழலை உரக்கப் பாடியதால் வீணடிக்கப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

"மழலைச் சொல் கேளாதவர்" என்று கூறிய வள்ளுவன் நினைவுக்கு வந்தான். கூடவே, FACE ரோபோவும் நினைவிற்கு வந்தது. “ஒருவேளை, இந்தக் குழந்தை செய்துகொண்டிருப்பதை ஒரு ரோபோ அந்தக்கணம் செய்து காட்டியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயம் சிரித்திருப்பார்கள்! கைதட்டிப் பாராட்டியிருப்பார்கள்!” என்று யோசித்த அடுத்தகணம் என்னையும் வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.

இவர்களிடம் ரசிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவது வீண். ரசிப்புத்தன்மையை விடுங்கள்! சகிப்புத்தன்மை வேண்டாமா? சகிப்புத்தன்மை அறவேயின்றி  வாழும் (இயங்கும்) இவர்கள் ஒரு வகையான இயந்திரர்களே!

நான் முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 2005-ல் சென்றேன். இதுவரை நான்கு முறை சென்றுவிட்டேன். ஆனால் இன்னமும் முழுமையாக பார்த்ததில்லை. அந்நகரில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி ஒரு பயணக் கட்டுரையே வரையலாம் என்று இருக்கிறேன். 

குறிப்பாக ஐபில் டவரை பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். இப்படியொரு பிரம்மாண்டத்தை அந்த காலகட்டத்திலேயே எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். குஸ்தவ் ஐபில் மீது ஒரு பெரும் மரியாதையே வந்துவிட்டது. இதை எப்படி வடிவமைத்திருப்பார்? கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, ஆயிரக்கணக்கான பணியாளர்களைக்கொண்டு எப்படிக் கட்டிமுடித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால், ஐபிலுக்கு அத்தனை அருகே சென்றாலும், அதன் கம்பீரத்தை கண்விரியப் பார்த்து, மலைத்துப்போய் ரசிப்பவர்களைவிட கேமரா லென்சினூடே பார்த்து ‘க்ளிக்குபவர்களே’ அதிகம். அந்த நேரத்தில் புகைப்படங்களை மட்டும் எடுத்து விட்டு, பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவற்றையெல்லாம் மெதுவாக ரசிக்கலாம் என்கிற இயந்திர மனநிலையை என்னவென்று சொல்வது. இதற்கு அடிப்படைக் காரணம் – ‘நாம் எப்போதுமே எதிர்காலக் கனவுகளிலோ அல்லது கடந்தகால நினைவுகளிலோ இருப்பதைத்தான் விரும்புகிறோம்’.

இன்னும் சிலபேர் வேகவேகமாய் கோபுரத்தின் மேலே சென்று, சில மணித்துளிகள் மட்டும் இருந்துவிட்டு (க்ளிக்கிவிட்டு) உடனே கீழே இறங்கி அவர்களின் பட்டியலில் இருக்கும் அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலே சென்று எனக்கு மிகவும் பிடித்த எழிலிய செய்னே நதியையும், அந்த காலகட்டத்திலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, பரந்து விரிந்த சாலைகளுடன் கூடிய அந்த பாரிஸ் நகரின் அழகை சிறிது நேரம் நின்று ரசிக்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

அலுவலகத்தில் நாம் சில செயல்களை 'OPEN' நிலையிலிருந்து 'CLOSED' நிலைக்கு நகர்த்த வேண்டுமென்பதற்காகவே, வேண்டாவெறுப்போடு, ஈடுபாடின்றி, ரசனை உணர்வு சிறிதுமின்றி செய்து முடிப்போம். அதுபோலத்தான் இவர்களின் பாரிஸ் சுற்றுலாவும். நம்மில் பலருக்கு ஒரு செயலை ‘முடிப்பதில்’ இருக்கும் ஆர்வம் அதைச் செய்வதில் இல்லை.

உங்களுக்கு யாரேனும் ஓவிய நண்பர் இருந்தால், அவர் ஓவியத்தை வரையும்போது அருகே இருந்து கவனித்துப் பாருங்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். அவர்கள் ஓவியம் வரையும் போது ஒருவித யோகநிலையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஓடும் வண்ண வண்ணத் தூரிகைகளின் ஓட்டத்தில் லயித்துப்போய் ஒருவகையான லயயோக நிலையில் இருப்பார்கள். வரைந்து முடித்துவிட்டு, "அடடா முடிந்துவிட்டதே?" என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஓவியம் என்றவுடனே 'மோனலிசா' ஓவியம் நினைவுக்கு வருகிறது. லியோனார்டோ டாவின்சி வரைந்த அசல் மோனலிசா ஓவியம் தற்போது பாரிஸ் நகரிலுள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

லூவரை முற்றிலுமாகச் சுற்றிப் பார்க்க குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். ஆனால் அதைக்கூட இரண்டு மணிநேரங்களில் சுற்றிப்பார்த்த அன்பர்களும் உண்டு. I am also not a big fan of museums. லூவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

லூவரின் கலைக்கூடத்தில் (ART GALLERY) டாவின்சி மட்டுமன்றி மைக்கேல் ஏஞ்செலோ, ரபேல் போன்ற இன்னும் எத்தனையோ தலைசிறந்த ஓவியர்கள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்தனை அழகான, பிரம்மாண்டமான, வெவ்வேறுவிதமான ஓவியங்களை ரசிப்பதை விட்டுவிட்டு, எல்லோருமே அந்த அருங்காட்சியகத்தின் வரைபடத்தை பார்த்துக்கொண்டே எதை நோக்கியோ ஒடிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களைத் தொடர்ந்து நாமும் ஓடினோமென்றால், கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் முட்டி மோதிக் கொண்டும், எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தில் சென்று கலப்பார்கள். அங்கே பலவகையான காமிராக்களின் பளிச்சொளி தொடர்மின்னல் போல் வெட்டிகொண்டிருக்கும்.

இந்த லூவர் கலைக்கூடத்தில் ஓவியங்களுக்கா பஞ்சம், அது என்ன இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம் என்று அவர்களை விலக்கிகொண்டே உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு மோனலிசா தனக்கே உரித்தான மர்மப் புன்னகையை வீசிக்கொண்டிருந்தார்.

மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தூக்கிகொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்.  

ஆனால் அந்த ஓவியத்தின் அருகே யாரும் சென்றதாகக் கூடத் தெரியவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் ஓட்டமும் நடையுமாகச் சென்றது கலையின் மேல் இருந்த காதலினால் அல்ல. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்திற்கு அருகே நானும் நின்றவன் என்கிற ஆதாரத்திற்காக.

I-TOO-WENT-TO-PARIS என்கிற பெருமித உணர்வே அவர்களை ஓடவைத்திருக்கிறது. இந்த ஓட்டத்தின் வேகத்தில் மோனலிசாவை விடப் பலமடங்கு பெரிய, பலமடங்கு அழகான எத்தனை ஓவியங்களை இவர்கள் கண்ணாரக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.

இவர்களிடமும் ரசிப்புத்தன்மையை எதிர்பார்க்கமுடியாது.     
எப்போதுமே ஒருவித பரபரப்பு நிலையில் இருக்கும் (இயங்கும்) இவர்கள் இன்னொரு வகையான இயந்திரர்கள்!

நாள்தோறும் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து சுற்றுலா வரை 'அதே வேகம்' - 'அதே இயந்திரத்தனம்'.

சென்னையில் எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் எப்போதாவது தான் என்னை தொலைபேசியில் அழைப்பார். ஆனால் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்?" என்று நம்மைப் பற்றியெல்லாம் விசாரிக்கவே அவருக்கு நேரம் இருக்காது, தோன்றவும் தோன்றாது. அவருக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் அவசர அவசரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடனே அழைப்பைத் துண்டித்துவிடுவார். நான் ஏதாவது கேட்க ஆரம்பித்தால், அதைக் காதில்கூட வாங்கிக்கொள்ளமாட்டார். ஒவ்வொரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும்போதும் அவர் இயந்திரத்தனமாகக்  கேட்பதை ரசித்துகொண்டே நானும் ஒரு கணிப்பொறியைப் போல் பதிலளிப்பது வழக்கமாகி விட்டது. இவரும் ஒரு 'OPEN-TO-CLOSE' ஆசாமிதான்.

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் சார்லி சாப்ளினின் 'MODERN TIMES' திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் 'Section 5 More Speed…' காட்சியில், தலைசொறியக்கூட நேரமில்லாமல் தொகுப்புவரிசையின் (Assembly Line) வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர் வேலை செய்யும் விதம்தான் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சியை நினைத்துச் சிரிப்பு வந்தாலும், அதுவே இன்றைய நிதர்சனமாகிப் போனதை பார்க்கும்போது கவலையாகவும் இருக்கிறது.

நாம் செய்யும் செயலிலோ, தொழிலிலோ அல்லது ஏதாவதொரு கலையிலோ  MASTERY அடைய விரும்பினால், முதலில் அதை ரசிப்பது மிகவும் அவசியம்.

இதையே தான் நாட்டிய சாஸ்திரமும் கூறுகிறது.    

"யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ  திருஷ்டி  ததோ  மனா
யதோ மனஸ் ததோ பாவா
யதோ பாவா ததோ ரசா" 

சுருங்கச் சொன்னால், 'கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்'. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.

நாம் செய்யும் செயலில் சித்தி உண்டாக இந்த விழிப்புணர்வும், ரசனையும் அவ்வளவு முக்கியம். இயந்திரத்தனம் இதற்குச் சற்றும் உதவாது. மாறாக மன உளைச்சல் போன்ற மனப் பிறழ்வு நோய்கள்தான் உண்டாகும். இந்த பாழாய்ப்போன இயந்திரத்தனமே பெரும்பாலானோரின் மன உளைச்சலுக்கு ஒரு மூலகாரணம்.

எனவே,

மன உளைச்சலைத் தூக்கி எரிய..

நாம் செய்யும் தொழிலில், கலையில் சித்தி உண்டாக...

நாம் அறியாமலேயே நமக்குள் INSTALL செய்யப்பட்டுவிட்ட ‘இயந்திரத்தனம்’ என்னும் மென்பொருளை UNINSTALL செய்ய...

ரசிப்போம்... ருசிப்போம்...

Saturday, December 8, 2012

என் இனிய சக இந்தியனே...

தொடர்ந்து (நீண்ட) கட்டுரை வடிவிலேயே எனது வலைப்பூவில் பதிவுசெய்து வருவதால், ஒரு மாறுதலுக்காக இந்தக் கவிதை வரிகளை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:


சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்திலிருந்து விழுந்து மரித்த செய்தியைப் படித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.


இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, "இதுபோன்ற விபத்துக்கள் மாதாமாதம் நடக்கின்றது மாதவன். போன மாதம் கூட துறையூரிலும், கிருஷ்ணகிரியிலும் வாகனத்தில் அடிபட்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம். பொறுப்பே இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்." என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். 


பெல்கிய நாட்டில் ஒவ்வொருமுறை சாலையை கடக்க முயலும்போதும், சாலையின் மறுபக்கம் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் கூட வரிக்கோடிற்கு பத்தடி தள்ளி நின்று, நான் முழுவதுமாகக் கடக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கும்.  இதைப் பார்க்கும்போதெல்லாம் 'மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது’. உண்மையாகவே இவற்றையெல்லாம் ரசிப்பதைவிட, நம் நாட்டில் இப்படி இல்லையே என்கிற ஆதங்கமே மேலெழுகிறது.


“நம் நாட்டில் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உயிர்களுக்குக் கூட இந்த மரியாதை இல்லை” என்பது வேதனை நிறைந்த ஒரு உண்மை. குழந்தைகள் மட்டுமல்ல, வயதானப் பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்று எவருக்குமே சாலைகளில் மரியாதை இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் பற்றியே அவர்களுக்குக் கவலையில்லை. Reckless driving is not only murderous, but also suicidal.


வேகமாகச் சென்று அப்படி என்னதான் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக திட்டமிட்டு,  அரை மணிநேரமோ அல்லது ஒரு மணிநேரமோ முன்னதாகவே கிளம்பலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?


வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது நாம் ஒவ்வொருவரும், ‘நம்முடைய குழந்தையோ, குடும்பத்தவர்களோ அல்லது நண்பர்களோ இன்னும் சிறிது நேரத்தில் சாலையைக் கடக்கலாம்’ என்கிற விழிப்புணர்வோடு ஓட்டினால் கூட, நிறைய விபத்துகள் தவிர்க்கப்பட்டு விடும்.


சாலை விபத்துக்கள் மட்டுமல்ல, இப்படி எத்தனையோ சமூக அவலங்களை நாள்தோறும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, ETHICAL LIVING-ற்கு நம் நாட்டில் சாத்தியமேயில்லை என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது.
ஒவ்வொருநாளும் நம் சக இந்தியச் சகோதரனால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் மற்ற சகோதரர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பட்டியலிட எத்தனித்தபோது, அந்தப் பட்டியல் ஒரு கவிதையாக உருவெடுத்தது. 


இதைக் கவிதை என்றெல்லாம் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
உண்மையாகச் சொன்னால், இதில் ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் ஒன்றும் இல்லை. மன்னிக்கவும்!

மாறுவோம்.. மாற்றுவோம்..

வல்லமை இணைய இதழில் வெளிவந்த என்னுடைய வரிகள் இதோ உங்களுக்காக -   

என் இனிய சக இந்தியனே, 

பிறப்பு சான்றிதழுக்குப்
பின்தலை சொறிந்துகொண்டே
கையூட்டு கேட்டாய்
கொடுத்துத் தொலைத்தேன்!

இறப்பு சான்றிதழுக்கு
இரண்டு மடங்கு
அதிகமாய்க் கேட்டாய்
அதையும் அளந்தேன் அழுதுகொண்டே!

உள்ளாட்சித் தேர்தலின்போது
உடையும் பணமும் தந்தாய்
கடமைக்குக் காசெதற்கென்று
திடமாய் நான் மறுத்தேன்!

ஆட்சிக்கு அமர்த்தினோம்
ஆட்டிப் படைத்தாய்;
அடக்குமுறை செய்தாய்
அடங்கி ஒடுங்கியே போனேன்!

பட்டம் பெற்றேன், தகுதித்தேர்வில்
வெற்றியும்  பெற்றேன் – வேறென்ன?
எனக்குப் பாதி, ஆளும் மந்திரிக்கு மீதியென்றாய்
தனியார் பணியில் தஞ்சம் புகுந்தேன்!

இரத்தம் சுண்டி நானீன்ற பணத்தை
இரக்கமின்றி நீ தின்றாய்
இருந்தும் செலுத்தினேன்
முறையாய் வரியை!

ஏழ்மையைக் காட்டியுன்
இனியமகள் கல்விபயில
பள்ளிக்கு வருவதை நிறுத்தினாய்
வருந்தியே கவனித்தேன்!

ஆனாலுன் தலைவனவன் திரைப்படத்தின்
ஆரம்பநாள் அமர்க்களங்களுக்கு
இறைத்தாய் நீ இரண்டு மூன்றாயிரம்
புரியாமல் தவித்தேன்!

நான் செல்லும் பாதையிலே
சிறுநீர் கழித்தாய்; குப்பைகள் போட்டாய்;
சிந்தினாய்; துப்பினாய்
அத்தனையும் சகித்தேன்!

சாலைவிதிகளைக் கடைபிடித்து
சிவப்பிற்கு முன்வரும் மஞ்சளுக்கு நின்றேன்
அநாகரிகமாய்  வசைபாடினாய்
அமைதி காத்தேன்!

நான் கற்ற நன்னெறிகள்
நானூற்றில் நான்கைந்துகூட
பின்பற்ற முடியாமற் செய்தாய்
பொறுமை காத்தேன்!

படித்தவனாய்  இருந்தும்,
பாதகா, கிராதகா, நீ
பெண்சிசுக்கொலை செய்தாய்
பனியாய் உறைந்தேன்!

‘மதம்’ பிடித்துப் போனதால்
உன்னை அவன் அடித்தான்
அவனை நீ கொன்றாய்!
இருவருக்கும் அழுதேன், துடித்தேன்!

பேருந்து ஓட்டுகையில்
கைபேசியில் காதல் பேசி – கவனம்சிதறிப்
பலபல கொலைகள் செய்தாய்
பொறுப்பின்மையைக் கண்டு மனம் கொந்தளித்தேன்!!

பிள்ளைகள் – எம் பிஞ்சுகள் செல்லும்
பள்ளி வாகனங்களையே
எமவாகனங்களாய் மாற்றிக்காட்டினாய்
எதிர்த்துக் குரல் கொடுத்தேன்!

வறுமை வாழ்வில் வளம்சேர்க்க
நகரம் வந்தவென் அன்புத் தங்கையை
வன்புணர்ந்தாய்; சிதைத்தாய்; பின் வீசினாய்
மரித்தே போனாள் மலர் போன்றாள்!

போராட்டம் எனும் பெயரில்
பொதுச் சொத்துக்களைச் சிதைத்தாய்
சிரித்தாய்ப் பின் குதித்தாய்
சிந்தித்தேன் பின் மௌனித்தேன்!

புதைச்சாக்கடை வாயிற்புழைகளுக்கு வழிகாண்போம்
மழலைகள் மரிக்கின்றன என்றேன்
விமானநிலையங்களை சீரமைக்கக் கோடிகளை வீசினாய்
முன்னுரிமைகளைக் கண்டு கொதிப்படைந்தேன்!

வீடு வாங்க வந்தேன்,
வெள்ளைப் பாதி, கறுப்புப் பாதி
வேண்டுமென்றாய்; தந்தால்தான் வீடென்றாய்
வேண்டாம் வீடென விட்டொழித்தேன்!

மக்களுக்கு வேலையில்லை, வாழ வழியில்லை,
அடிப்படை வசதிகளில்லை என்றேன்
விரைவிலே வல்லரசாவோமென்று வாயிலே வடைசுட்டாய்
பேசுவதே வீணென்று விட்டுவிட்டேன்!

இதை செய்வோம் அதை செய்வோம்
சாதிப்போம் பின் போதிப்போம் என்றேன்,
மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்
வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

ஐரோப்பியரைப் பாரேன்றேன்!
ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்
ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்
அமைதியாய் குமுறினேன்!

சினிமா பின்னால் ஒருகூட்டம்
கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்
அரசியல் பின்னால் தெருக்கூட்டம்
இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!
இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!
அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என
அனைத்தும் கண்ட அவன் எங்கே?
அன்பு, பண்பு, அறம், மறம் -
இவையெல்லாம்தான் எங்கே?
எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் -
எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும் 
நிலை ஏனோ?

வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,
தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,
“‘நெஞ்சு பொறுக்குதிலையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’
அன்றே பகர்ந்தேன் புரியலையோ?
அறிவில்லையோ?
நெஞ்சில் உரமுமில்லையடா,
நேர்மை சிறிதுமில்லையடா,
வஞ்சனை சொல்வாரடா,
வாய்ச்சொல்லில் வீரரடா!
நீ புறப்படடா!
உலகெலாம் நம் புகழ் பரப்படா!
நிலையாய், நீர்நிலையாய்,
குளமாய் நீ இராதேடா!
துர்நாற்றம் வீசுமடா! 
ஓடும் ஓடையாய் மாறடா!
ஓடடா! ஓடடா! ஓடடா!!”

வந்தோம் ஓடி வெளிநாடு!
வாவென்றது வளநாடு!
கடுமையாய் உழைத்தோம் திறமோடு!
மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!
நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!
என்று மாறும் எம் திருநாடு?
வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!
எம்மைப்போல் ஏங்குபவர்
எத்தனை பேர்?
எத்தனையோ பேர்!
இருப்பது எங்கோ வென்றாலும்,
இதயத்தால் என்றுமே இந்தியர்கள்!
இதயத்திலும் என்றுமே இந்தியாதான்!
சுழியைக் கண்டோம்!
எண்ணத் தவறினோம்!
மேல்நாட்டவரோ,
சுழியோடு ஒன்றையும் சேர்த்து,
கணிப்பொறியாக்கினர்!
அதையே கற்றறிந்து – அவர்கள்
திருடிச் சென்றதை,
திரும்பப் பெறவே வந்தோம்!

களவாடப்பட்ட நம்
கோஹினூர் வைரங்கள்
அந்நியச் செலாவணி வழியாயும்,
அந்நிய முதலீடுகள் வழியாயும்,
திரும்பப் பெறவே வந்தோம்!
பெறவும் செய்தோம்!
ஆனால்…
நம் சக இந்தியர் 
அடித்துச்சென்ற கொள்ளைப்பணத்தை - 
அந்தக் கறுப்புப்பணத்தை
எப்படிப் பெறுவோம்?
எங்கே செல்வோம்?

மாற்றம் வருமா?
வரும்!
மாற்றம் இல்லையெனில்,
மாற்றிக் காட்டுவோம்!

இப்படிக்கு,
வெளிநாடு வாழ் (இதயத்தால் ) இந்தியர்கள்!

மாறுவோம்.. மாற்றுவோம்..   

Saturday, December 1, 2012

என்னைக் கவர்ந்த மனிதர்கள்..


எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களைவிடவும், ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துக்களின் உந்துதலாலும், தமிழ் மேல்கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.  

சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் நம் முன்னே வந்து கொட்டும். சிதறிவிழும் சிந்தனைகளைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கவிதையாகவோ, கட்டுரையாகவோ மாறுகிறது.    

இந்த இடுகையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய் போயிற்று.

என்னைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு 'விவாதக்களம்'; சிந்திப்பது என்பது எனக்குள் 'விவாதித்துக் கொள்வது' போன்றது. ஏனெனில், நான் ஒவ்வொருமுறையும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும்போதெல்லாம், மூன்று பேர் கொண்ட ஒருதிறனாளர் குழு (Brain Trust) என் மனவெளியில் புகுந்து விடுகிறது. 'மாதவன் இளங்கோ', 'மாதவன்', மற்றும்  'இளங்கோ' ஆகிய வல்லுனர்கள் தான் அந்த குழு உறுப்பினர்கள். இவர்கள் மூவரும் கடுமையாக விவாதித்து விட்டு, முடிவாக எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.     

சில நேரங்களில் முடிவுகளைக்கூட அவர்களே எடுத்துவிடுவது உண்டு. பல நேரங்களில் முடிவே எடுக்காமல் காலங்காலமாக, இரவு பகலாக விவாதிக்கொண்டே இருப்பார்கள்.

இன்று சிறிது விரைவாகவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

"எனது கதாநாயகர்கள் என்று தலைப்பு வைக்கலாம்" என்று மாதவன் கூறினார்.

"கதாநாயகர்களா? வேண்டவே வேண்டாம்! நம் நாட்டில் கதாநாயகர்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள்தான் என்பது போலாகிவிட்டது. வேறு ஏதாவது சொல்லுங்கள்." என்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார் இளங்கோ.

"எனது முன்மாதிரிகள்?" என்று மாதவன் இளங்கோ அவர் தரப்பிற்கு  ஒரு தலைப்பை முன்வைத்தார்.

"முன்மாதிரிகள் என்றால் Role Models தானே? அதெல்லாம் வேண்டாம். அதை இவருடைய தொழிலோடு தொடர்புபடுத்தி விடுவார்கள். இல்லையென்றால் யாரேனும் ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ நினைத்துக் கொள்வார்கள்." என்று மாதவன் மறுப்பு தெரிவித்து விட்டார்.      

"என்னைக் கவர்ந்த எளிய மனிதர்கள் - இது எப்படி இருக்கிறது?" என்று மீண்டுமொரு தலைப்பை முன்மொழிந்தார் மாதவன் இளங்கோ.

அவர் கூறியதையே மற்ற இருவரும் வழிமொழிந்தாலும், 'எளிய' என்கிற சொல்லை மட்டும் நீக்கிவிடலாம் என்று இளங்கோ பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை மற்ற இருவரும் ஆதரித்து, எனக்கு ஆலோசனை வழங்கியதால், அதை ஏற்றுக்கொண்டு இந்த இடுகையைத் தொடர்கிறேன்.

அவர்கள் குறிப்பிட்டதுபோல், இன்று நான் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல்வாதியைப் பற்றியோ அல்லது  தொழிலதிபரைப் பற்றியோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

ஏனெனில், என்னைக் கவர்ந்த மனிதர்களில் பெரும்பாலானோர்  சாமான்யர்கள் தான். அவர்கள்தான் என் முன்மாதிரிகள்! அவர்கள்தான் என் கதாநாயகர்கள்

எனது வாழ்க்கைப் புத்தகத்தின் வாசித்து முடிக்கப்பட்ட பக்கங்கங்களைச் சற்று புரட்டிப் பார்த்தால், அவைகளெல்லாம் இப்படிப்பட்ட எத்தனையோ எளிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், அவர்களுடன் பழகியதால் எனக்குள் உண்டான மாற்றங்கள், அவர்களிடமிருந்து நான் கற்ற விஷயங்கள்இவற்றின் பதிவுகளால்தான் நிரம்பியுள்ளது.

இன்று அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான மனிதரைப் பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.

எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு காமாஜர் சிலை இருந்தது. தினமும் காலை வேளையில் அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடும். ஒரு வயதான பெரியவர், சிலைக்கு அருகே இருக்கும் ஒரு கல்லின்மேல் நின்றுகொண்டு, ஏதோ சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அவர் பெயர் சுப்ரமணி  - படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர்கள் அப்படி அங்கு என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமிகுதியால்ஒருநாள் அவர்கள் அருகே சென்று நடப்பவற்றை கவனித்தேன். அந்த கட்டிடடத் தொழிலாளிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பெரியவருக்கு விளக்கமளித்துக்  கொண்டிருந்தனர்.

பெரியவர் அவர்களைக் கேட்ட கேள்விகள் இவைதான்:
 1 . நீ நேற்று என்ன செய்தாய்?
2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?
3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)
4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)
5 . யாருக்காவது அடி பட்டதா?
6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா

இவ்வாறு கேட்டுவிட்டு, தொழிலாளிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்குத்  தன்னுடைய தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். கடினமான பிரச்சினைகளைக் கூட அவருக்கே உரித்தான பாணியில் - இன்முகத்தோடும்வேடிக்கையாகவும் பேசியபடியே ஆலோசனை வழங்குவதில் மனிதர் கெட்டிக்காரர்.

பிறகு, அவர் செய்த செயல் எனக்கு அப்போது புரியவில்லை. சில பணியாளர்களிடம் மட்டும் "நேற்று நீ எங்கு சென்றாய்?" என்று கேட்டு விட்டு, "இன்று இவனோடு போ!" என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

இவையெல்லாம், நான் சிறுவயதில் அவர் அருகில் இருந்து கவனித்தது! இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய வீட்டைக்கூட அவர்தான் கட்டினார். அதனால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அறிய பல  விஷயங்களை எல்லாம் ஏதோ அற்பமான சமாச்சாரங்கள் போல போகிற போக்கில் வேடிக்கையாக விளக்கிக்கொண்டு போவார்.

காலங்கள் ஓடின.

நான் ஐரோப்பாவில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருக்கிறேன். கற்றறிந்த மேதைகள் விவாதித்துக்கொண்டும், அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகளைப் பற்றி மேடையில் உரையாற்றிக்கொண்டும் இருந்தார்கள்.

"Agile Methodology Vs Traditional Project Management" என்பது தான் தலைப்பு.

சிலர் 'daily stand -up meetings' பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துக்கொண்டு  இருந்தார்கள்.

என் நினைவுகள் 21  ஆண்டுகளுக்கு முன்னர் பறந்தது!
1 . நீ நேற்று என்ன செய்தாய்?
2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?
3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

கருத்தரங்கில் - 
சிலர் தங்கள் பணிகளை 'முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்படி வரிசைப்படுத்துவது?', 'அவ்வாறு செய்வதின் அனுகூலங்கள் என்ன?', மற்றும் 'MoSCoW முறை' என்று எதையெதையோ பற்றியெல்லாம் உரையாற்றினர்.

என் நினைவுகள் மீண்டும் 21  ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது! 

4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

இன்று...
சிலர் 'பணியாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து',  என்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர்.

அன்று...
5 . யாருக்காவது அடி பட்டதா?
6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா? 

இன்று...
சிலர் திறமான முறையில் எப்படி ‘Knowledge Management’ புரிவது என்றும் ‘Staff Rotation’ பற்றியும் விவாதித்தனர்.

அன்று...
சில பணியாளர்களிடம் மட்டும் "நேற்று நீ எங்கு சென்றாய்?" என்று கேட்டு விட்டு, "இன்று இவனோடு போ!" என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..
…. இருபது வருடங்களுக்கு முன், ஒரு சாதரணரிடமிருந்து, கற்றுக்கொண்ட அதே விஷய ஞானத்தை, படித்த மாமேதைகள்  ஆங்கிலத்தில்  விளக்குவதைக்  கேட்பதற்கா  நான்  இருபதாயிரம் ரூபாய் (300)  செலவளித்தேன்? (எனது நிறுவனம் செய்த மொத்த செலவு 1400 ஈரோவை தாண்டும் என நினைக்கிறேன்)
.... அவர் பேசவில்லை, நடைமுறைப்படுத்தினார்!
.... இவர்கள் பேசும் வார்த்தைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாத போது, எங்கே, என்றைக்கு நடைமுறைப்படுத்த போகிறார்கள்?
.... இந்த எளிய விஷயங்களைப் புரியவைக்க ஒரு விவாத மேடை வேறு!

அறிவு என்பது புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பிதற்றும் மேதைகளுக்கும்,  ‘so called’ சான்றிதழ் பெற்ற  வல்லுனர்களுக்கும் (certified professionals)  மட்டுமேயான  சொத்து அல்ல.

இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான 'இயல்பறிவு' (common sense) புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.

ஆனால் இன்று பலருக்கு இயல்பறிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது - இந்தப் பலரில் நானும் அடக்கம்!

இந்த நிகழ்வு கதையும் அல்ல! என் கற்பனையும் அல்ல. உண்மை! நீங்கள் இந்த இடுகையை மின்னம்பலத்தில் படித்துக்கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ - அந்த அளவிற்கு உண்மை. என்னைத் தூண்டிய எழுப்பிய   உண்மையும் கூட!

இந்த இடுகையை என் கதாநாயகரான 'சுப்பிரமணி மேஸ்திரிக்குச்' சமர்ப்பிக்கிறேன்.

ஆம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், என் கதாநாயகர்களில் பெரும்பாலானோர்  சாமான்யர்கள்!

இன்னும் சொல்லப்போனால், திருபாய் அம்பானி போன்ற சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தால்கூட, அவர்கள் சாமானியர்களாக இருந்தபோது செய்தவற்றயே பெரும்பாலும் அவை பேசுகின்றன. அவர்களுக்கு இருந்த கடின உழைப்பு, ஒழுக்கம், உந்துதல், இயல்பறிவு - இவற்றிற்குப் பரிசாகத்தான் காலம் அவர்களை சிகரத்தில் வைத்து அழகு பார்த்தது.

என் கதாநாயகரும்  சிகரம் தொட்டவர் தான்! என்ன? அவர் தொட்ட 'சிகரத்தின் உயரம்தான் வேறு!'.

கடந்த இடுகையில் 'ஏடுகளை வாசிப்போம்' என்றேன்.

இந்தமுறை கூறுகிறேன் - 'சாமான்ய மனிதர்களையும் வாசிப்போம்!', ‘சிகரம் தொடுவோம்!’நன்றி: இந்தக் கட்டுரையை சிறப்பு கட்டுரையாக (featured) 04-மார்ச்-2013 அன்று வெளியிட்டுள்ளது 'வல்லமை மின்னிதழ்'