சிறப்பு தொகுப்புகள்

Sunday, November 11, 2012

முதற்பதிவு...

அனைவருக்கும் வணக்கம்!

எழுதுவதென்பதே ஒரு இனிமையான விஷயம். அது ஒரு ஆனந்தமான விஷயமும் கூட. என் ஆங்கில எழுத்தாள நண்பர் ஒருவர் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு - "Please get into the habit of writing. It's a great feeling!".

வலைப்பூ ஒன்றை தொடங்கி முதலில் ஆங்கிலத்தில் தான் BLOGs எழுதலாமென்று நினைத்தேன் (எனது வேற்று மொழி நண்பர்களைக் கருதி). ஆனால், தற்போது ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதிக்கொண்டு இருப்பதால், அந்த ஆனந்தமே போதுமானதாக இருக்கிறது. 

தமிழில் அவ்வப்போது கிறுக்குவதுண்டு. முக்கியமாக சறுக்கல்களின் போது மாலை மாலையாய் விழும் எண்ணங்களுக்குத் தடை போடாமல் ஓடவிட்டுப் பின் பதிவு செய்வதுண்டு. தமிழிலும், ஆங்கிலத்திலும் அப்படி நான் கிறுக்கிய சிலவற்றை என் நெருங்கிய நண்பர்களிடமும், குடும்பத்தாரிடம் மட்டும் பகிர்ந்து கொள்வதுண்டு. அதில் சிலர் என்னிடம், "நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது? அது ஒரு நல்ல பொழுதுபோக்கு! " என்று கூறினர்.  

'எழுத்து என் பொழுதுபோக்கு' என்று கூறி, எதோ பொழுதை போக்கும் விஷயமாக அதனை கேவலப்படுத்த விரும்பவில்லை. என்னளவில் படிப்பது, எழுதுவது, சிந்திப்பது போன்றவை 'மனதிற்கினிய செயல்கள்'. ஆனால், இணையத்தில் எழுதும் யோசனை மட்டும் நன்றாகப் பட்டதால் எடுத்துக்கொண்டேன்.  

'என் வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம்?' என்ற சில நொடி சிந்தனைக்குப் பிறகு பளீரென மின்னியது - 'மின் வயல்'. பொருத்தமான தலைப்பு தான். மின் வயலில் நம் எண்ணங்களுக்கு உருக்கொடுத்து விதைக்கிறோம். நாம் விதைக்க, மின்வயலில் பின் விளைவதை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம். அது தொழில்நுட்பம் நமக்குத் தந்திருக்கும் வரம். எனக்குள் உதித்த வார்த்தையாயினும் இந்த பெயரில் ஏற்கனவே வலைப்பூக்களோ, இணையதளங்களோ  இருக்கின்றனவா என்று கூகுளிட்டேன். ஏராளம் இருந்தது. எதற்கு வம்பு? இப்போது வேறு அடிக்கடி இந்த copyright, patent, trademark போன்ற பூதங்களெல்லாம் கிளம்புகின்றன. ஒரே ஒரு கேள்வி! மின்சாரத்தை கண்டுபிடித்த எடிசனோ, 'சுழியைக் கண்ட' என் முப்பாட்டன் ஆர்யபட்டனோ அல்லது அதோடு 'ஒன்றை சேர்த்துக்' கணிப்பொறியை கண்ட பாபேஜோ patent வாங்கிருந்தால் என்ன ஆகி இருக்கும்? 

சரி. அதை விடுங்கள். என் வலைப்பூ கதைக்கு வருவோம். 'மின் வயலை' விட்டு விட்டு மீண்டும் சிந்தனை தொடர்ந்தது. அப்படி இந்த வலைப்பூவில் நான் என்ன தான் எழுதிப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்? 

இன்றைய வாழ்க்கையே ஒரு RAT RACE போலாகிவிட்டது. எல்லோருமே முழுமூச்சாக அந்தக் களத்தில் இறங்கி, எதையோ நினைத்துக்கொண்டு, ஏதேதோ தேடி, எங்கெங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், யாருமே இந்த ஓட்டத்தை ரசிப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில், "Game is neither in the winning nor in the losing; It is in the playing" என்பார்கள். இலக்கு என்பது வெற்றி, தோல்விகளால் குறுக்கும் நெடுக்கும் பிண்ணப்பட்ட ஒரு மாய வலை.  அத்தகைய வலையில் மாட்டிக்கொண்டிருப்பதையே அறியாத குருட்டு மான்கள் நாம். அதனை அறிந்து கொள்ளவே முடியாத வண்ணம் 'result-oriented', 'goal-oriented' எனப் பட்டங்களும், பாராட்டுகளும், பரிவட்டங்களும் கட்டி நம்மை குருடர்களாக்கி விடுகிறது இந்த உலகம்.

இன்று யாரிடம் பேசிக்கொண்டிருந்தாலும், சில நிமிட உரையாடலுக்குப் பிறகு பார்த்தால், எல்லோருமே இன்றைய வாழ்க்கைமுறைகளால் மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. நானுமே ஒரு காலகட்டத்தில் அப்படியொரு வட்டத்தில் சிக்குண்டிருந்தவன் ஆதலால் என்னால் அவர்களைப் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புரியவைக்கத் தான் முடியவில்லை. பிறவிக்குருடருக்கு நிறத்தை விளக்க முயல்வது போலத்தான் இதுவும். ஆனால், ஒன்றை புரிந்துகொண்டால் போதும். இவையனைத்திற்குமே அடிப்படையான ஒரு காரணம் - "நாம் யாருமே ரசிகர்களில்லை!"   

நம்மைச் சுற்றி அப்படி என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! நம் வாழ்க்கையின் ஒரு ரசிகனாக நாமே இருந்து ரசிப்போமே, அது தருவதை ருசிப்போமே! Let's be a fan of our own life! 


இப்படித் தோன்றியது தான் - "ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்..". இந்தத் தலைப்பு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா எனத்  தேடவேண்டும் என்று ஏனோ எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை இருந்தால்? இருந்து விட்டுத் தான் போகட்டுமே! இந்தத் தலைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. ஏதேனும் ஒரு 'பழ'க்கடை வழக்கு போட்டால், பிறகு பார்த்துக்கொள்ளலாம். "ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்.." வழியாக உங்களை அடிக்கடி சந்திக்க இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் ரசித்தவை, ரசிப்பவைப் பற்றியும், நான் சந்தித்த சுவாரசியமான மனிதர்களை பற்றியும், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றியும், நான் படித்தவை, கேட்டவை, உணர்ந்தவை பற்றியும், என் கவிதைகள்,  என் மனவுலகில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தோன்றுபவைகளையும், இங்கே - இந்த மின்வயலில் விதைக்க இருக்கிறேன். வலைப்பதிவில் என் முதற்பதிவு!

மின்வயலில் என் முதல் விதை!  

விரைவில் அடுத்த விதை...6 comments:

 1. வாழ்த்துக்கள் மாதவன்
  விதை - நிழலும் நல்ல கனிகளும் தரும் தருவாக வளர்க ! வாழ்க !!!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுதலுக்கு நன்றி அனிதா!

   நாளை - எனது அடுத்த விதை!!!

   Delete
 2. Madhavan's new avatar!!! Excellent work buddy, keep it up!!!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மாதவன் !!! ரசிப்போம் ருசிப்போம், நன்றாகவே ருசிக்கிறது..
  எப்பொழுதோ வாசித்த "நல்லவர்களாக இருங்கள் உங்களுக்கே" ஞாபகம் வருகிறது..
  வாழ்க்கை ஓட்டத்தை ஓடிக்கொண்டே ரசிப்போம் நமக்காகவேணும்....விதை வளரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிரியன்!!!

   'வாழ்க்கையில் நாம் சந்தித்தேயிராத மனிதனை வாழ்த்துவதை விட உன்னதமான செயல் வேறு இல்லை' என்று நான் என்றோ படித்தது இன்று என் நினைவுக்கு வருகிறது.

   நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete