என் இனிய சக இந்தியனே...

தொடர்ந்து (நீண்ட) கட்டுரை வடிவிலேயே எனது வலைப்பூவில் பதிவுசெய்து வருவதால், ஒரு மாறுதலுக்காக இந்தக் கவிதை வரிகளை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:

சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்திலிருந்து விழுந்து மரித்த செய்தியைப் படித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, "இதுபோன்ற விபத்துக்கள் மாதாமாதம் நடக்கின்றது மாதவன். போன மாதம் கூட துறையூரிலும், கிருஷ்ணகிரியிலும் வாகனத்தில் அடிபட்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம். பொறுப்பே இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்." என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். 

பெல்கிய நாட்டில் ஒவ்வொருமுறை சாலையை கடக்க முயலும்போதும், சாலையின் மறுபக்கம் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் கூட வரிக்கோடிற்கு பத்தடி தள்ளி நின்று, நான் முழுவதுமாகக் கடக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கும்.  இதைப் பார்க்கும்போதெல்லாம் 'மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது’. உண்மையாகவே இவற்றையெல்லாம் ரசிப்பதைவிட, நம் நாட்டில் இப்படி இல்லையே என்கிற ஆதங்கமே மேலெழுகிறது.

“நம் நாட்டில் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உயிர்களுக்குக் கூட இந்த மரியாதை இல்லை” என்பது வேதனை நிறைந்த ஒரு உண்மை. குழந்தைகள் மட்டுமல்ல, வயதானப் பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்று எவருக்குமே சாலைகளில் மரியாதை இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் பற்றியே அவர்களுக்குக் கவலையில்லை. Reckless driving is not only murderous, but also suicidal. வேகமாகச் சென்று அப்படி என்னதான் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக திட்டமிட்டு,  அரை மணிநேரமோ அல்லது ஒரு மணிநேரமோ முன்னதாகவே கிளம்பலாமே? என்ன ஆகிவிடப்போகிறது? 

வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது நாம் ஒவ்வொருவரும், ‘நம்முடைய குழந்தையோ, குடும்பத்தவர்களோ அல்லது நண்பர்களோ இன்னும் சிறிது நேரத்தில் சாலையைக் கடக்கலாம்’ என்கிற விழிப்புணர்வோடு ஓட்டினால் கூட, நிறைய விபத்துகள் தவிர்க்கப்பட்டு விடும். சாலை விபத்துக்கள் மட்டுமல்ல, இப்படி எத்தனையோ சமூக அவலங்களை நாள்தோறும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, ETHICAL LIVING-ற்கு நம் நாட்டில் சாத்தியமேயில்லை என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. ஒவ்வொருநாளும் நம் சக இந்தியச் சகோதரனால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் மற்ற சகோதரர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பட்டியலிட எத்தனித்தபோது, அந்தப் பட்டியல் ஒரு கவிதையாக உருவெடுத்தது. 

இதைக் கவிதை என்றெல்லாம் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். உண்மையாகச் சொன்னால், இதில் ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் ஒன்றும் இல்லை. மன்னிக்கவும்! 

வல்லமை இணைய இதழில் வெளிவந்த என்னுடைய வரிகள் இதோ உங்களுக்காக -   

என் இனிய சக இந்தியனே, 

பிறப்பு சான்றிதழுக்குப்
பின்தலை சொறிந்துகொண்டே
கையூட்டு கேட்டாய்
கொடுத்துத் தொலைத்தேன்

இறப்பு சான்றிதழுக்கு
இரண்டு மடங்கு
அதிகமாய்க் கேட்டாய்
அதையும் அளந்தேன் அழுதுகொண்டே

உள்ளாட்சித் தேர்தலின்போது
உடையும் பணமும் தந்தாய்
கடமைக்குக் காசெதற்கென்று
திடமாய் நான் மறுத்தேன்

ஆட்சிக்கு அமர்த்தினோம்
ஆட்டிப் படைத்தாய்;
அடக்குமுறை செய்தாய்
அடங்கி ஒடுங்கியே போனேன்

பட்டம் பெற்றேன், தகுதித்தேர்வில்
வெற்றியும்  பெற்றேன் – வேறென்ன?
எனக்குப் பாதி, ஆளும் மந்திரிக்கு மீதியென்றாய்
தனியார் பணியில் தஞ்சம் புகுந்தேன்

இரத்தம் சுண்டி நானீன்ற பணத்தை
இரக்கமின்றி நீ தின்றாய்
இருந்தும் செலுத்தினேன்
முறையாய் வரியை

ஏழ்மையைக் காட்டியுன்
இனியமகள் கல்விபயில
பள்ளிக்கு வருவதை நிறுத்தினாய்
வருந்தியே கவனித்தேன்

ஆனாலுன் தலைவனவன் திரைப்படத்தின்
ஆரம்பநாள் அமர்க்களங்களுக்கு
இறைத்தாய் நீ இரண்டு மூன்றாயிரம்
புரியாமல் தவித்தேன்

நான் செல்லும் பாதையிலே
சிறுநீர் கழித்தாய்; குப்பைகள் போட்டாய்;
சிந்தினாய்; துப்பினாய்
அத்தனையும் சகித்தேன்

சாலைவிதிகளைக் கடைபிடித்து
சிவப்பிற்கு முன்வரும் மஞ்சளுக்கு நின்றேன்
அநாகரிகமாய்  வசைபாடினாய்
அமைதி காத்தேன்

நான் கற்ற நன்னெறிகள்
நானூற்றில் நான்கைந்துகூட
பின்பற்ற முடியாமற் செய்தாய்
பொறுமை காத்தேன்

படித்தவனாய்  இருந்தும்,
பாதகா, கிராதகா, நீ
பெண்சிசுக்கொலை செய்தாய்
பனியாய் உறைந்தேன்

‘மதம்’ பிடித்துப் போனதால்
உன்னை அவன் அடித்தான்
அவனை நீ கொன்றாய்
இருவருக்கும் அழுதேன், துடித்தேன்

பேருந்து ஓட்டுகையில்
கைபேசியில் காதல் பேசி – கவனம்சிதறிப்
பலபல கொலைகள் செய்தாய்
பொறுப்பின்மையைக் கண்டு மனம் கொந்தளித்தேன்

பிள்ளைகள் – எம் பிஞ்சுகள் செல்லும்
பள்ளி வாகனங்களையே
எமவாகனங்களாய் மாற்றிக்காட்டினாய்
எதிர்த்துக் குரல் கொடுத்தேன்

வறுமை வாழ்வில் வளம்சேர்க்க
நகரம் வந்தவென் அன்புத் தங்கையை
வன்புணர்ந்தாய்; சிதைத்தாய்; பின் வீசினாய்
மரித்தே போனாள் மலர் போன்றாள்

போராட்டம் எனும் பெயரில்
பொதுச் சொத்துக்களைச் சிதைத்தாய்
சிரித்தாய்ப் பின் குதித்தாய்
சிந்தித்தேன் பின் மௌனித்தேன்

புதைச்சாக்கடை வாயிற்புழைகளுக்கு வழிகாண்போம்
மழலைகள் மரிக்கின்றன என்றேன்
விமானநிலையங்களை சீரமைக்கக் கோடிகளை வீசினாய்
முன்னுரிமைகளைக் கண்டு கொதிப்படைந்தேன்

வீடு வாங்க வந்தேன்,
வெள்ளைப் பாதி, கறுப்புப் பாதி
வேண்டுமென்றாய்; தந்தால்தான் வீடென்றாய்
வேண்டாம் வீடென விட்டொழித்தேன்

மக்களுக்கு வேலையில்லை, வாழ வழியில்லை,
அடிப்படை வசதிகளில்லை என்றேன்
விரைவிலே வல்லரசாவோமென்று வாயிலே வடைசுட்டாய்
பேசுவதே வீணென்று விட்டுவிட்டேன்

இதை செய்வோம் அதை செய்வோம்
சாதிப்போம் பின் போதிப்போம் என்றேன்,
மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்
வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்

ஐரோப்பியரைப் பாரேன்றேன்
ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்
ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்
அமைதியாய் குமுறினேன்

சினிமா பின்னால் ஒருகூட்டம்
கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்
அரசியல் பின்னால் தெருக்கூட்டம்
இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்
இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே
அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என
அனைத்தும் கண்ட அவன் எங்கே?
அன்பு, பண்பு, அறம், மறம் -
இவையெல்லாம்தான் எங்கே?
எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் -
எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும் 
நிலை ஏனோ?

வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,
தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,
“‘நெஞ்சு பொறுக்குதிலையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’
அன்றே பகர்ந்தேன் புரியலையோ?
அறிவில்லையோ?
நெஞ்சில் உரமுமில்லையடா,
நேர்மை சிறிதுமில்லையடா,
வஞ்சனை சொல்வாரடா,
வாய்ச்சொல்லில் வீரரடா!
நீ புறப்படடா!
உலகெலாம் நம் புகழ் பரப்படா
நிலையாய், நீர்நிலையாய்,
குளமாய் நீ இராதேடா
துர்நாற்றம் வீசுமடா
ஓடும் ஓடையாய் மாறடா
ஓடடா! ஓடடா! ஓடடா!!”

வந்தோம் ஓடி வெளிநாடு!
வாவென்றது வளநாடு!
கடுமையாய் உழைத்தோம் திறமோடு
மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு
நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு
என்று மாறும் எம் திருநாடு?
வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு..
எம்மைப்போல் ஏங்குபவர்
எத்தனை பேர்?
எத்தனையோ பேர்!
இருப்பது எங்கோ வென்றாலும்,
இதயத்தால் என்றுமே இந்தியர்கள்
இதயத்திலும் என்றுமே இந்தியாதான்
சுழியைக் கண்டோம்
எண்ணத் தவறினோம்
மேல்நாட்டவரோ,
சுழியோடு ஒன்றையும் சேர்த்து,
கணிப்பொறியாக்கினர்
அதையே கற்றறிந்து – அவர்கள்
திருடிச் சென்றதை,
திரும்பப் பெறவே வந்தோம்

களவாடப்பட்ட நம்
கோஹினூர் வைரங்கள்
அந்நியச் செலாவணி வழியாயும்,
அந்நிய முதலீடுகள் வழியாயும்,
திரும்பப் பெறவே வந்தோம்
பெறவும் செய்தோம்
ஆனால்…
நம் சக இந்தியர் 
அடித்துச்சென்ற கொள்ளைப்பணத்தை - 
அந்தக் கறுப்புப்பணத்தை
எப்படிப் பெறுவோம்?
எங்கே செல்வோம்?

மாற்றம் வருமா?
வரும்!

இப்படிக்கு,
வெளிநாடு வாழ் (இதயத்தால் ) இந்தியர்கள்!

மாறுவோம்.. மாற்றுவோம்..   

கருத்துகள்

  1. மாறுவோம்.. மாற்றுவோம்..
    Very True Lines ...

    பதிலளிநீக்கு
  2. "உண்மையாகவே இவற்றையெல்லாம் ரசிப்பதைவிட, நம் நாட்டில் இப்படி இல்லையே என்கிற ஆதங்கமே மேலெழுகிறது"

    உண்மையான உணர்வுகள் இங்குள்ள வசதிகளையும் இவர்களின் வாழ்க்கை தரத்தையும் கண்டு வியக்கும் அதே வேலையில் சிறிது இதயம் கனக்கத்தான் செய்கிறது..இந்தியராய் என்ன தவறு செய்தோம், செய்கிறோம் என்று..நம்பிக்கையும் உண்டு விடிவு வருமென்று

    கட்டுரையும், செய்யுளும் மிக செழுமை..அருமை..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..