சிறப்பு தொகுப்புகள்

Saturday, October 12, 2013

சுழற்சி

(சிறுகதை)

சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் - திவ்யா தம்பதியினரின் கதை.

அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.
என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.
"ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?" என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, "அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்" என்றான் கார்த்திக்.

"அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?"

"ஏன் சாமி கண்ண குத்துமா?" என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

"இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது." என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

"அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?"

"ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத." என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த 'உடைந்த நிலாக்கள்' என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

"ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?"

"ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்."

"எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்."

"யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. 'உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்'".

காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

"நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?"

"ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்."

அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

இரண்டு பெட்டிகள். ஒரு பை.

இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

மெத்தைக்கு அருகே ஒரு தண்ணீர் குடுவையும், இரண்டு குவளைகளும்.

உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

கடைசியில் வந்தே விட்டார்கள் - அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

"என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?" என்று வியந்தாள் திவ்யா.

"அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்" என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

"ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல..." என்றாள் திவ்யா.

"என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே."

"இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்."

"லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி."

"ப்பா... தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. " என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, "கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?" என்று கேட்டாள்.

"ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்." என்றான்.

"போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…" என்று கெஞ்சினாள்.

"ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்" என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி -

'அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

நன்றி: வல்லமை மின்னிதழ்

Sunday, August 4, 2013

என் முதல் கதையும்.. நட்பும்..

என் முதல் கதை ‘காக்கா பையன்’. எட்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதினேன் என்று நினைக்கிறேன். என் தம்பி அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் நண்பன் புகழேந்தியும் நானும் அந்தக் கதையை எழுதினோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதன் அவசியத்தைப் பற்றி அந்த வயதிலேயே நாங்கள் எழுதிய குறுங்கதை. பிறகு அதை நாடகமாகவும் எழுதி நாங்களே அதை டேப் ரிகார்டரில்பதிவு செய்து நண்பர்களுக்கு போட்டுக் காட்டலாம் என்று முடிவு செய்தோம்.

கதையில் மொத்தம் நான்கைந்து பாத்திரங்கள் என்று நினைக்கிறேன். காட்சி நடப்பது ஒரு தேநீர் கடையில். தேநீர் கடைக்காரர் அவரது மகன் ‘காக்காய்’ பற்றி வாடிக்கையாளர் நண்பரிடம் புலம்பும் பாத்திரம். (பையனுக்கு ஆட்டிசம் போன்ற ஏதோ ஒரு பிரச்சினை. ஆட்டிசம் பற்றியெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது) புகழேந்தி நண்பர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டான். நானே மீதி மூன்று பாத்திரங்களை ஏற்று வெவ்வேறு குரலில் பேசி அந்த நாடகத்தைப் பதிவு செய்தோம். என் தம்பிக்கு இது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. அதே சமயம், அவசர நண்பர்கள் வாழும் உலகில் ஆத்ம நண்பர்களைப் பற்றி நினைப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.

என்னமாதிரியான ஒரு நண்பன் புகழேந்தி? எப்போதுமே புன்னகையை ஏந்திக்கொண்டிருக்கும் வெகுளித்தனமான முகம், அதே சமயம் என்மேல் கைவத்த காரணத்திற்காக எங்களைவிட வயதில் மூத்தவரையே கிரிக்கெட் பேட்டைக் கொண்டு அடிக்கச் சென்ற தைரியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். புகழேந்தி அருமையாக கிரிக்கெட் விளையாடுவான். தீவிர ரஜினி ரசிகன். எஜமான் படம் பார்த்துவிட்டு, அதேபோன்றதொரு வெள்ளைச் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு, துண்டை சுற்றிக் கொண்டு திரிந்தவன்.

இப்போது எங்கு இருக்கிறானோ தெரியவில்லை? என் இதயத்துக்கு நெருக்கமானவர்கள் யாரும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலோ, இணையத்திலோ எளிதில் கிடைப்பது இல்லை; இல்லவும் இல்லை!

Sunday, July 21, 2013

வாலி..


காலன் பறித்த கால்
.........................................

உயிரைப் பறித்தல்லவோ
பழக்கம் உனக்கு?
அட, காலா!
என் தமிழ்த்தாயின்
ஒற்றைக் காலை
வெட்டிச் சென்றதேனோ?  
வலி! வலி! வலி!
நெஞ்சில் 'வாலி'!
வாலி! வாலி! வாலி!
நெஞ்சில் 'வலி'!

Saturday, July 20, 2013

அமைதிகளின் சத்தங்கள்..

இரைச்சல் விழுங்கிய
இசையின் அமைதி..
பெரும்கூட்டத்தில் சிக்குண்ட
தனிமைவிரும்பியின் அமைதி..
மூடத்தனங்களுக்கு இடையே
மேதைமையின் அமைதி..
இருளுக்குள் ஒளிந்துகொண்ட
ஒளியின் அமைதி..
ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே
அடக்கமானவனின் அமைதி..
உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே
ஒடுக்கப்பட்டவனின் அமைதி..
துரோகிகளுக்கு இடையே
தூயநட்பின் அமைதி..
பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட
உண்மையின் அமைதி..
குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே
நிறைகுடத்தின் அமைதி..
இயந்திரங்களுக்கிடையே
இயற்கையின் பேரமைதி..
வெட்டிப்பேச்சுகளுக்கிடையே
உழைப்பின் அமைதி..
ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே
எளிமையின் அமைதி ..

பிற சத்தங்கள் அனைத்துமென்
செவிப்பறையை கிழித்து
செவிடனாக்கிவிட
அத்தனை
அமைதிகளின் சத்தங்களும்
தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
'அமைதியடைந்தேன் நான்'!

(எண்ணத்தூறல்)

Friday, July 19, 2013

மர்ம பாலம்

அது ஒரு நீண்ட பாலம்.
அவனொரு விந்தை மனிதன்.
பாலத்தை கடக்க
அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்
மகிழ்வுற்றான் -
வாழ்த்தினான்.
பாலத்தை கடந்து
விலகிப் போன ஒருவனுக்காய்
துயருற்றான் -
பிரார்த்தித்தான்.
பாலத்தின் நடுவே
கடக்கவியலாமல் அயர்வுற்று
விடைபெற்ற வேறொருவனுக்காய்
மீளாத்துயருற்றான்.
பிரார்த்தித்தான்.
அவனும் அதே பாலத்தின்
ஏதோ ஒரு புள்ளியில்
நின்றுகொண்டு
தெளிவாகத் தெரியுமந்த
பாலத்தின் மறுமுனைக்கும்
தனக்குமான தூரத்திற்கு
எதிர்காலம் எனப்பெயர் வைத்து,
அது வருவதற்குள் முடித்துவிட
ஒரு நீண்ட பட்டியலொன்றை
தயாரித்தான்.
எண்ணற்ற கனவுகளும்
எண்ணற்ற கவலைகளும்
எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்
எண்ணற்ற ஏக்கங்களும்
எண்ணற்ற திட்டங்களும்
எண்ணற்ற குறிக்கோள்களும்
நிறைந்த பட்டியல் அது.
பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை
தன் தலையில் சுமந்துகொண்டு
பாலத்தின் மறுமுனை நோக்கிய
தன்னுடைய பயணத்திற்கு
வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.
எண்ணற்ற உறவுகளும்
எண்ணற்ற துரோகங்களும்
எண்ணற்ற மகிழ்ச்சிகளும்
எண்ணற்ற துயரங்களும்
எண்ணற்ற சாதனைகளும்
எண்ணற்ற சோதனைகளும்
எண்ணற்ற அனுபவங்களும்
எண்ணற்ற பாடங்களும்
நிறைந்த பயணம் அது.
பயணத்தின் நடுவே
பட்டியல் நீண்டுகொண்டே போனது.
பயணத்தின் சுமை
கூடிக்கொண்டே போனது.
நடையின் வேகம் குறைந்து
மெதுவாக பயணித்து
முன்சென்று கொண்டிருந்தான்
அந்த விந்தை மனிதன்!
நடந்து நடந்து அவனுடல்
ஓய்ந்துகொண்டே போக
அவன் உருவாக்கிய எதிர்காலம்
தேய்ந்துகொண்டே போனது.
பாலத்தின் மறுமுனையும் வந்தது
அங்கே மலைபோல் குவிந்து கிடந்த
பட்டியல்களின் மேல்
எடை பன்மடங்கு கூடியிருந்த
தன பட்டியலையும்
இறக்கி வைத்துவிட்டு,
திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பாலம் -
காணாமல் போயிருந்தது.
அவனைப் பார்த்து -
மர்மமாய் புன்னகைத்தது
வெற்றிடம்!

(எண்ணத்தூறல்)

Saturday, July 13, 2013

முடிதிருத்தகமும் மனிதமும்..

இப்போதுதான் லூவன் நகர ப்ரசல்சு தெருவிலுள்ள ஒரு முடிதிருத்தகத்திலிருந்து வருகிறேன்.

சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று - 'முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது'. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

'உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.' என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை 'Tonsorial Artist' என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. ;-)

இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் -

பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் - அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் -மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

Wednesday, July 10, 2013

'ப்ரமான் சூபியங்க'

ஆன்டன் செக்கோவ் உடன் மாக்சிம் கோர்கி
அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

'ஹுய மார்ஹன்' என்பதற்குப் பதிலாக 'குட் மார்னிங்' என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

"ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?" என்று கேட்டேன்.

"இல்லை, ரஷ்யா!" என்று கூறியவர், "தாங்கள் பாகிஸ்தானியா?" என்றார்.

"எப்படி இருவருமே 'சரியாக' தவறாகக் கேட்கிறோம்?" என்று நினைத்துக்கொண்டே, "இல்லை, இந்தியன்!" என்றேன்.

சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, "தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?" என்று கேட்டார்.

"இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு." என்றேன்.

அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, "நீங்கள் 'தாய்' (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?" என்று கேட்டேன்.

அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், "உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?" கேட்டார்.

"மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!" என்றேன்.

பரவசத்தோடு, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?" என்று கேட்டார்.

"அந்தத் தாய் - பெலகேயா நீலவ்னா!" என்றேன்.

"எனக்கு பாவெல்!" என்றார்.

தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

"என் பெயர் 'ப்ரமான் சூபியங்க' (Roman Zubenko)" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, "மாலையும் நானே வர விரும்புகிறேன்!" என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

"மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது."

Wednesday, June 12, 2013

பனிப்போர்வை

(சிறுகதை)

சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

நான் சென்னைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலந்தில் இருந்தபோது மட்டும் இந்தச் செய்தி என்னை வந்தடைந்திருந்தால், எள்ளி நகையாடியிருப்பேன். “சென்னையில் பனிப்பொழிவா? இதென்ன ‘காதை கிழிக்கும் அமைதி’, ‘ஊரறிந்த ரகசியம்’, ‘தெளிவான குழப்பம்’ போன்றதொரு முரண்தொடையாக இருக்கிறதே?” என்று வினவி விட்டு வந்த செய்தியை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருப்பேன்.
நான் பிறந்தது என்னவோ வேலூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமாக இருந்தாலும், ஐரோப்பாவிற்குக் குடியேறி பன்னிரண்டு வருடங்களும், ஹாலந்து நாட்டில் குடியுரிமை பெற்று நான்கு வருடங்களும் ஆகிவிட்டது. ஐரோப்பாவுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் எத்தனை பனிப்பொழிவுகளைச் சந்தித்திருப்பேன்! இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னையில் நிகழ்ந்த பனிப்பொழிவை என்னால் நான் மரிக்கும் வரை மறக்கவே இயலாது. நான் மட்டும் அல்ல; உங்களாலும் அதை மறக்க முடியாது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் மீண்டும் நம்மூரில் நிகழுமா என்று தெரியவில்லை. எனவேதான் அதை உடனே எழுதிப்  பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், இங்கே ஆம்ஸ்டர்டாமில் பனி பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், முதன்முறையாக பனிப்பொழிவை எதிர்கொண்ட சென்னையில் நான் கண்ட குழப்பங்கள், ஆர்பாட்டங்கள், பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் இவை எதுவுமின்றி சலனமில்லாமல் பொழிந்து கொண்டிருக்கிறது.
என் மகள்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தான் இங்கு கோடை விடுமுறை என்றாலும் நாங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை எடுத்து இந்தியாவிற்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இதற்குப் பல காரணங்கள்.
சென்னையில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கோடைகாலமே நிலவுகிறது. ஜூலை மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ஐரோப்பாவில் கடுங்குளிர் மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரியில், அங்கு வாழ்வது என்பதே ஒரு பெரிய சாபம்.
அது என்ன சாபம் என்றுதானே கேட்கிறீர்கள்?
குளிர்காலம் வந்துவிட்டால் காலை பத்து அல்லது பதினொரு மணிக்கு உதித்து மாலை மூன்று மணிக்கே ஓய்ந்து, தினமும் சராசரியாக நான்கு அல்லது ஐந்து மணிநேரம் தான் ‘டைம் ரெஜிஸ்டர்‘ செய்கிறான் இந்தக் கதிரவன் என்கிற ஆசாமி. அவன் நிச்சயம் என் மேலதிகாரி காரல் டில்கினை சந்தித்தே ஆக வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் மங்கலாக ஒளி வீசுவதோடு நிறுத்திக்கொண்டு, தனக்கு வெப்பம் எனும் குணாதிசயம் இருப்பதையே மறந்து போய்விடுகிறான். என் மனைவி இந்த நாட்டு சூரியனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘சரியான ட்யூப்லைட்!’. பொருத்தமான ஒன்றுதான்! வடக்கு பிராந்தியங்களில் இன்னமும் மோசம் – தலையே காட்ட மாட்டான். இதற்காகவே வைட்டமின் ‘டி’ பெறுவதற்காக சூரியப் படுக்கைகளை நாடிச்சென்று ஐம்பது, அறுபது ஈரோக்களை வீச வேண்டி இருக்கிறது. சென்னையின் வெயிலையும், ஆம்ஸ்டர்டாமின் குளிரையும் பண்டமாற்றுமுறை செய்ய முடிந்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.
இதில் அவ்வப்போது பனிபொழிவு வேறு. நாடு முழுவதும் சுற்றினாலும் இங்கெல்லாம்  சேறு என்பதை பார்ப்பது அரிது. மண்ணே தெரியாமல் நாடு நகரம் முழுதும் ரப்பர் கலந்த தார் பூசி மொழுகி இருக்கிறார்களே! எங்கிருந்து சேறு உண்டாகும்? ஆனால் இந்தப் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டால் மட்டும் நடைபாதைகளில் உண்டாகும் பனிச்சகதியை பார்க்கவேண்டுமே! சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதும் கூட. பனிக்காலங்களில் மருத்துவமனைகளின் எலும்புமுறிவு பிரிவில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேடிக்கை என்னவென்றால் விழுபவர்களில் பெரும்பாலும் ‘ஸ்னோபூட்’ அணிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரண காலணிகள் அணிந்தவர்கள் சாவகாசமாக நடந்து செல்வார்கள். நானும் என் மகள்களும் ‘வழுக்கி விழுந்து விடாமல் கவனமாக எப்படி நடக்கவேண்டும்?’ என்பதை அவர்கள் அடிக்கடிப் பார்க்கும் ‘பிங்கு’ சிறுவர் நிகழ்ச்சியின் பென்குவின்-களிடமிருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறோம். பனிக்காலங்களில் கிட்டத்தட்ட சாலைகளில் பென்குவின்-களைப் போலத்தான் நடந்து செல்வோம். இயற்கையோடு தன் தொடர்பையே அறுத்துக்கொண்டுவிட்ட மனிதர்களிடமிருந்து இனி எனக்கு கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை; விலங்குகளிடம் நிறைய இருக்கிறது.
இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். குளிர்காலத்தில் ஹீட்டிங்கிற்கு ஆகும் செலவிற்கு இரண்டு முறை இந்தியா சென்று திரும்பலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருவோம். மாறாக, தமிழகத்தில் அவ்விரு மாதங்களிலும் ஐரோப்பிய கோடைகாலத்தை போன்று அருமையான தட்பவெப்பம் நிலவும். என் குழந்தைகளுக்கு நிறைய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கலாம். பொங்கல் பண்டிகை வேறு ஜனவரியில் வருவதால் அவர்களை என் கிராமத்துக்கு அழைத்துச் சென்று நம் உறவினர்களிடம் பழக வைக்கலாம், நமது கலாச்சாரத்தையும் (அப்படியொன்று இன்னமும் உயிரோடு இருந்தால்) அறிந்து கொள்வார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது அடையாளத்தை அவர்கள் தொலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஆனால் என்னதான் ஆயிற்று இந்தமுறை தமிழகத்திற்கு?
நாங்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து சென்னை வந்திறங்கிய  நாளிலிருந்தே பருவநிலை மாற்றத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. வழக்கமாக நான் விமானத்திலிருந்து வெளியே வந்த அடுத்தகணம் வெப்பநிலை மாற்றம் காரணமாக என் முகக்கண்ணாடியில் நீராவி படியும். அன்று அவ்வாறு நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு இனம்புரியாத மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது.
என் மனைவி ஆனந்தியிடம் அதைப்பற்றி கூறியபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்தோஷ். லாஸ்ட் இயர் கூட கொஞ்சம் கோல்டா தான் இருந்தது.” என்றாள்.  ‘எனக்குத் தெரியாதா என் தாயகத்தைப் பற்றி?’ என்று நினைத்துக் கொண்டேன்.
தாயின் கருவறையிலிருந்து வெளியேறிப் பிறக்கும் குழந்தை, இந்தப் பிரபஞ்சம் என்கிற  தாயின் மாபெரும் கருவறையின் வேரிடங்களுக்கு நீந்திச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறது என்பதை நம்புபவன்; உணர்ந்தவன் நான்.
பிறக்கும் குழந்தையின் உணர்வை, ஒவ்வொருமுறையும் சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வரும்போதும் பெறுபவன் நான். விமானத்தை ‘பேய்ப்பறவை’ என்று தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஒருவர். அது பேய்ப்பறவை மட்டும் அல்ல; தாய்ப்பறவையும் கூட. பத்து மணிநேர பயணத்தில் தன் வயிற்றில் பயணிகள் அனைவரையும் சுமந்து, இறுதியில் பிரசவித்துவிட்டு போவாள் அந்த மம்மாலியப் பறவை. வெளியே வந்து தாயக மண்ணில் கால்வைக்கும் போது, நான் ஏற்கனவே கூறியது போன்றே இன்னொரு தாயின் கருவறைக்குள் நுழைவதாய் உணர்வேன். ‘எனக்குத் தெரியாதா அதன் வெம்மை?’
இதற்கு முன்பு சென்னையில் சுனாமி வருவதற்கு முந்தைய தினம்  இதுபோன்றதொரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன். அது நடந்ததுகூட  ஒரு டிசம்பர் மாதம்தான் என்று நினைக்கிறேன். திடீரென்று சுனாமி பற்றிய எண்ணங்களும், மனிதர்களின் அவலக்குரல்களும் கேட்பது போலத் தோன்றியது. உடனே என் தங்கையிடமும், சித்தியிடமும் அதுபற்றி கூறி, ‘சுனாமி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?’ என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தொலைக்காட்சியில் வந்த சுனாமி பற்றிய செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் என் தங்கையும், சித்தியும்.
இதுபோன்று நமக்கு அவ்வப்போது தோன்றுவதையும், உணர்வதையும் கூறினாலே நம்மை  கேலிசெய்து கும்மியடித்துவிட்டுப்  போகிறார்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள். எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் கேட்கிறார்கள். பிறந்த குழந்தை அறிவியல் விளக்கம் கேட்டுவிட்டா தாயின் மார்பில் பால் குடிக்கிறது? இதற்காகவே நான் உணர்வதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். இத்தகைய ‘பேரறிவுவாதிகளிடம்’ (இதற்கு அவர்களே வைத்திருக்கும் பதத்தை உபயோகித்தால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாகி, சிலபல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் பதம்).  நாம் உணர்வதை எடுத்துச் சொல்லி நாமும் முட்டாள் என்று பெயர் எடுத்து, அவர்களையும் அறிவாளிகளாக ஆக்குவதைவிட, எனக்குள்ளே அமைதியாக அவற்றை ஆய்ந்து, எனக்காகவே அறிவாளியாக இருப்பது என்று நான் முடிவு செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்; உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். இங்கு ‘முழுமையாக’ என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். அதென்ன முழுமையாக நம்புவது? நம்புகிறேன்!
சென்னை வந்திறங்கிய முதல் நாள், “வானம் மேகமூட்டமாக இருக்கிறது, மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.” என்றார் ரமணன்.
இரண்டாம் நாள், “பருவநிலை மாற்றம் நம்ப முடியாததாக உள்ளது. வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் தமிழகத்திலும் நிலவ வாய்ப்பிருக்கிறது.” என்றார். அன்று இரவு, பதினொரு டிகிரி செல்சியசைதொட்டிருந்தது சென்னை.
விருகம்பாக்கம் ‘ஷ்யாமளா கார்டன்ஸ்‘ குடியிருப்பிலுள்ள என் தங்கை வீட்டில் தங்கியிருந்த நான், “எல்லோரிடமும் தெர்மல் வேர் இருக்கிறதா?” என்றேன்.
என் மனைவி சிரித்துவிட்டு, “அதெல்லாம் ஹாலன்ட்லையே நாம யூஸ் பண்ண மாட்டோம். இங்க எதுக்கு?” என்றாள்.
என் தங்கை என்னை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “தெர்மல் வேர் இல்லை அண்ணா. வாங்கலாமா?” என்று கேட்டாள். சுனாமி தினத்தன்று என்னோடு இருந்தவள் அன்றோ? என்னை உணர்ந்தவள், எனக்கு மதிப்பளித்தாள்.
“வாங்குவது நலம்” என்றேன்.
பாரிஸ் கார்னர் பூக்கடை அருகேயுள்ள யூனுஸ் சேத் கடைதான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் நாடும் கடை. அங்கு சென்று காரை நிரப்பிக் கொண்டு வந்தோம்.
அடுத்த இரு தினங்களில் சுழிநிலையை நெருங்கிக்கொண்டிருந்தது சென்னை. “வீட்டில் ஹீட்டர் இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டேன். உடனே என் மைத்துனரை கடைக்கு விரட்டினாள் என் தங்கை.
வெள்ளைச் சலவைக்கல்லாலான தரையில் யாராலும் வெறும் கால்களால் நடக்க முடியவில்லை. புத்தம்புது செருப்புகளை  வாங்கி வந்து, எல்லோரும் காலுறையும், செருப்பும் அணிந்துகொண்டு நடப்பதைப்  பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.
பரணுக்கு என்றோ புலம்பெயர்ந்திருந்த பழைய போர்வைகள், கம்பளிகள் எல்லாம் எடுத்துவந்து தரையில் விரித்துப் போட்டாள் என் தங்கை.
சென்னை மாநகரமே வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.
“தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.” என்கிற செய்தி எல்லா தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது.
“கடுங்குளிர் வானிலை நிலவும் போது என்ன மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும், என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளுடன் பல பேட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.
அதனூடே சமையற்கட்டு உரையாடல்களும் என் காதில் விழுந்து கொண்டிருந்தன.
“பால் கெடவே இல்லையே?” என்றார் என் சித்தி.
“பழங்கள் கூட அழுகவே இல்லை. இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறது” – இது என் தங்கை.
“ஹாலந்தில் இப்படித்தான். குளிர்காலங்களில் பிரிட்ஜை உபயோகிக்கவே மாட்டோம். ஒரே ஒரு அறையின் ஜன்னலை மட்டும் லேசாக திறந்து வைத்து எல்லா பொருட்களையும் அங்கே வைத்துவிடுவோம். நேச்சுரல் பிரிட்ஜ்!” என்று பெருமையாக அயல்நாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் என் மனையாள்.
அலைந்து திரிந்து இரண்டு வெவ்வேறு வகையான சூடேற்றும் சாதனங்களை எப்படியோ வாங்கி வந்துவிட்டார் எனது மைத்துனர்.
அன்றிரவே சுழிநிலைக்கும் கீழே சென்றது சென்னை.
இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை டிரைவர் வேலுவுடன் காரை எடுத்துக்கொண்டு குளிர்காலச் சென்னை எப்படி இருக்கிறது என்பதைக் காண நகர்வலம் சென்றேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இப்படிச் சுற்றுவது வழக்கம். அன்றைக்கு இருந்த குளிர் காரணமாக நகர்வல நாட்டம் மும்மடங்கு அதிகரித்திருந்தது.
யூனுஸ் சேத் ஒரே இரவிலேயே சென்னையில் பல கிளைகளை தொடங்கிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு ஆங்காகே கம்பளிச்சட்டைகள், பாய்கள், பலவித வெப்ப ஆடைகளை குளிரில் நடுங்கியபடி கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர் புத்தம்புது நடமாடும் ‘யூனுஸ் சேத்’ கடை முதலாளிகள்.
அந்தக் குளிரிலும் பாண்டிபஜார் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று குங்குமம் வைக்கும் வரை அல்லது அடுத்த பொங்கல், தீபாவளி வரும்வரை விட்டுவைக்குமா குளிர்?  பாவம். புத்தம்புது கம்பளிச்சட்டைகளையும், மேலாடைகளையும், தொப்பிகளையும்,  கையுறைகளையும், காலணிகளையும் வாங்கிய அடுத்தகணமே அணிந்து கொண்டும்; இன்னும் வாங்காதவர்கள் குளிர் தாங்கமுடியாமல், நீர்மத்தில் ஒழுங்கற்று இங்குமங்கும் ஓடும் துகள்களாய் மாறி இருந்தார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை சமாச்சாரங்களையும் அணிந்தவாறு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டுக்கொண்டு, பற்கள் தட்டச்சு அடித்தபடி, ஆளுயர மேலுறைக்குள் புதைந்தபடி செல்லும் மனிதர்களை அன்றாடம் ஐரோப்பாவில் கண்டு பழகிய எனக்கு, நம் சென்னையில் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. கையுறைகளை கழற்றிவிட்டு, என்னையும் மறந்து எனது கைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
அப்போது திடீரென குளிர்காற்று என் முகத்தில் அறைந்து முகத்தின் மேலடுக்கு உறைந்தது. சுழிநிலைக்கு கீழே செல்வது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. முறையான உடையணிந்து இருந்தால் ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பத்து-பதினைந்து  டிகிரி இருந்தாலும் கூட, காற்று அடித்தால் அவ்வளவுதான். அன்று அதுவும் நடந்துகொண்டிருந்தது. வெப்பத்தை மட்டுமே காலங்காலமாகத் தாங்கிக் கொண்டிருந்த அந்த சென்னைக் காற்று ஒரு மாறுதலுக்காக குளிரைத் தாங்கும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அனைவர் மீதும் மோதி மோதி உறையவைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
பாண்டிபஜார் பூக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மாலைகளில் உறைந்து போயிருந்த துளிகளை படம்பிடித்துக்கொண்டிருந்த என் காதில் அந்த ஆட்டோ பேர உரையாடல் காதில் விழுந்து என் கவனத்தை திசை திருப்பியது.
“ரொம்ப குளிருப்பா. சீக்கிரம் போகணும். உன்கிட்ட பேரம் பேச நேரமில்லை. முடிவா எவ்ளோ சொல்லு.”
“சார். குளிர்லையே ஆட்டோ ஓட்டுறோம். பாத்து குடு சார்.”
சாக்கு போக்கு சொல்வதற்கு இந்த ஆட்டோக்காரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். விலை உயர்வு செய்வதில் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையையே விஞ்சி விடுவார்கள் இவர்கள். அவர்களாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இவர்கள் கூறும் காரணமெல்லாமே வித்தியாசமாக இருக்கும். மழைபெய்தால், வெயிலடித்தால், புயலடித்தால், பொங்கல் வந்தால், தீபாவளி வந்தால், ஆடி மாதம் என்பதால் – இப்படி எல்லாவற்றிற்கும். இந்தப் பட்டியலில் இப்போது குளிரும் சேர்ந்துவிட்டது. சில சமயங்களில் டீசல் வண்டி வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் விலை உயர்ந்தால் சவாரி விலையை உயர்த்துவார்கள்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு ஆட்டோக்காரரிடம், “ராமசாமி சாலை செல்லவேண்டும். நூறு ரூபாய் தருகிறேன்.” என்று கூறினேன். அதுவே அங்கு செல்வதற்கு அதிகம்.
“அதெல்லாம் ஒன் வே பண்ணிட்டாங்க சார். சுத்திட்டு போனும். அம்பது ரூபா போட்டுக் குடு சார் போலாம்.” என்றார்.
கடைசியில் 125 ரூபாய்க்கு பேசிச் சென்றேன். சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றவர் அந்த ஒருவழிச் சாலையிலேயே போக ஆரம்பித்தார்.
“என்னப்பா? சுத்திட்டு போகணும்னு அதிகமா வாங்கிட்டு, ஒன்வேலயே போறியே?” என்று கோபமாகக் கேட்டேன்.
“சார். மாட்டினா மாமாக்கு தர்றதுக்குத்தான் சார் காசு” என்று அவர் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போனேன். இப்படிப்பட்டவர்கள் குளிருக்குக் காசு கேட்காமல் இருப்பார்களா? ஆட்டோவில் செல்லும் போது இலவச குளிரூட்டப்பட்ட காற்றுக்கு பணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆட்டோக்காரர்களை விடுங்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே வியாபாரிகளாகத்தான்    பிறக்கிறார்கள்; சென்ற வருடம் பிறந்து ஆண்டு நிறைவைக் கண்டிராத குழந்தைகூட வியாபாரம் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே காரையும் வேலுவையும் தேடியவாறு நடக்கும்போது, என் எதிரே திடீரென வந்து குதித்துக் கத்திய அந்த மனிதரைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டேன். அழுக்குப் படிந்த முகத்துடனும், நீண்ட தாடியுடனும், தீர்க்கமான கண்களுடனும்,  அந்தக் குளிரிலும் சட்டைகூட போடாமல், “மாயன் சரியாத்தான் சொன்னான். மாயன் சரியாத்தான் சொன்னான்!” என்று கத்தும் இந்த மனிதர் யார்?
இதுபோன்ற மனிதர்களை திருவண்ணாமலையில் அதிகம் பார்த்திருக்கிறேன். சென்னையில் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இவர் சாமியாரா? பித்துப் பிடித்தவரா? இல்லை பிச்சைக்காரரா? என்று யோசித்துக்கொண்டே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.
“ஹா ஹா ஹா!” என்று சிரித்துவிட்டு, “என்னை என்ன பிச்சைகாரன்னு நெனச்சியா? நான் ராசன் டா! மகராசன்! நீங்கல்லாம் தாண்டா பிச்சைக்காரனுங்க. சொல்றேன் கேட்டுக்கோ! மாயனுங்க கணக்கு தான் சரி! உங்க கணக்குதான்டா தப்பு! மக்கு பசங்களா! ரெண்டாயிரத்து பன்னெண்டு இல்லைடா! ரெண்டாயிரத்து பதினாறுல இருக்குடா உங்களுக்கு கச்சேரி! இன்னும் ஒரு வருஷம் தான். ஒரே ஒரு வருஷந்தான்! அப்புறம் இருக்கு உங்களுக்கு பிரச்சினை. அது என்ன பிரச்சனைன்னு நீ கேக்க வருவ. ஆனா, தப்ப வழியே கிடையாது! மாயனுங்க கணக்குதான் சரி! ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே ஓடினார்.
அவரைப் பார்த்துக்கொண்டே குழம்பிய மனதுடன் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிவந்த வேலு, “என்ன ஆச்சி சார்? அந்த பைத்தியக்காரன் எதனா பிரச்சின பண்ணானா?” என்று பதைபதைத்தபடி கேட்டார்.
“அதெல்லாம் இல்ல வேலு. காசு கொடுத்தாலும் வாங்கிக்கல. இந்தக் குளிருல துணிகூட போடாமே இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு!”.
காரை திருப்பி வீட்டிற்கு விரட்டிக்கொண்டு சென்றோம். எல்லா பண்பலைகளிலும் சென்னையின் குளிர் பற்றிய செய்திதான். இடையிடையே புத்தம் புதியதாய்க் கிளம்பியிருந்த சூடேற்றும் சாதனங்களைப் பற்றிய விளம்பரங்கள் வேறு.
“அமெரிக்கா குளிரையே தாங்கும் சார் இந்த சொட்டரு!” என்று ரங்கநாதன் தெருவில் கூவிக்கொண்டிருந்த சிறுவனுக்கும், “ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சாதனம்!” என்று பிளிரிக்கொண்டிருந்த இவர்களின் வியாபார உத்திக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.
வீட்டிற்குள் நுழைந்தால், சுடச்சுட போண்டாவுடனும், தேநீருடனும் தொலைகாட்சியில் செய்திகளில் பார்வைகளை பதித்துக் கிடந்தது ஒட்டுமொத்த குடும்பமும்.
“இன்னும் டூ டேஸ்ல சென்னைல ஸ்னோஃபாலாம்!!” என்று கைகளை உயர்த்தியபடி என்னைப் பார்த்து கத்தினார்கள் என் குழந்தைகளும், தங்கையும்.
“இது என்ன விந்தையான செய்தி?” என்று அதிசயத்துப்போய் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினால், பருவநிலை மாற்றங்களை பற்றி அவருக்கே உரித்தான பாணியில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார் ரமணன் அவர்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இது பற்றி அனிமேஷன் வித்தைகளோடு விளக்கிக் கொண்டிருந்தன.
“இந்தியால எப்படிம்மா ஸ்னோஃபால் வருது” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.
“குளோபல் வார்மிங்தான் ரீசன்.” என்றாள் என் மனையாள்.
“குளோபல் வார்மிங்னா ஹாட்டா இல்ல ஆகணும். ஏன் கோல்ட் ஆகுது” என்கிற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டாள் என் இளைய மகள். அது நிச்சயம் என் மனைவிக்கு அவுட்-ஆஃப்-சிலபஸ் ஆயிற்றே என்று நான் நினைத்த அடுத்தகணமே,
“சும்மா கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி டேபிலட்ல கேம்ஸ் விளையாடு போடி!” என்று குழந்தையை துரத்தினாள்.
வழக்கமாக மடிக்கணினியில் இணையத்தில் மூழ்கி இருக்கும் சமயங்களில் குடும்ப விவகாரங்களில் தலையிடும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால் அமைதியாக என் வேலையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி என்ன முக்கிய வேலை?
வேறென்ன? பாழாய்ப்போன இந்த ஃபேஸ்புக் தான்! இந்த ஃபேஸ்புக் சுவரை பார்க்கும் போதெல்லாம், நான் பிறந்த நிலாவூர் கிராமத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டு எடுபிடி மங்குண்டு தான் எனக்கு நினைவுக்கு வருவார். எனக்கு விளையாட்டு காட்ட, வட்டம், முக்கோணம், நட்சத்திரம் மற்றும் விதவிதமான வடிவங்களில் மாட்டுச் சாணத்தை தட்டி அதை சுவரில் அறைவார். அவை காய்ந்த பிறகு அடுப்பில் தூக்கிப்போட்டு எரிப்பது எனக்கு பிடித்தமானதொரு விளையாட்டு. என் ஃபேஸ்புக் சுவரிலும் அப்படி அன்றாடம் நிறைய நண்பர்களும், நண்பர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும், நான் வேண்டாவெறுப்போடு தொடர்ந்து வரும் சில பிரபலங்களும் என்று எல்லோரும் வகைவகையாக நிலைத்தகவல்கள், அவர்களின் சாதனைகள், சோதனைகள், அறிவுரைகள் என்று தட்டி ஒட்டி இருப்பார்கள்.
நம் தரப்புக்கு அன்று நாம் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முகநூலின் உள்ளே நுழைந்தால் அதுபோன்ற பல புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து முடித்திருந்தார்கள். ‘இதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் போல் உள்ளதே’ என்று நினைத்துக்கொண்டே சுட்டியை மேலும் கீழும் உருட்டினேன். சுவர் முழுதும் சென்னை வானிலை அறிக்கை வாசித்திருந்தார்கள் நண்பர்கள்.
இடையே ஹாலந்து நண்பன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிகழ்ந்த பனிப்பொழிவு புகைப்படத்தை தரவேற்றியிருந்தான். “விரைவில் சென்னையிலும்…” என்கிற வாசகத்துடன் அந்தப் படத்தையும் பகிர்ந்துவிட்டு வெளியே வந்தேன். சில மணித்துளிகள் கழித்து எத்தனை விருப்பங்களும், பின்னூட்டங்களும் விழுந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.
அந்த காலத்தில் எல்லாம் திருமணத்திற்கு வந்து மொய் போடுபவர்களின் கணக்கை எழுதி வைப்பார்கள். அதுபோன்றதுதான் இந்த முகநூல் லைக்குகளின்; கமெண்டுகளின் கணக்கும். நமக்கு லைக் போடுபவர்களுக்கு தவறாமல் நாமும் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், களைப்பு மிகுதியால் கணக்கெழுதாமல் கைபேசியோடு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.
நள்ளிரவில் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். என் சாரதி.
“சார், உங்க வீட்டுக்கு கீழதான் சார் நிக்கறேன். ரொம்ப குளிரு சார். பசங்களால தாங்க முடியல.”
“ஒரு நிமிஷம் வேலு. நான் கீழ வரேன்.” என்று கூறிவிட்டு ஹாலந்தில் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்குமுன் போருக்கு போவதுபோல் தயாராகுவேனே, அதேபோன்று மேலுறை, கையுறை, காலுறை சகிதமாய் வெளியே சென்றால் அங்கே வேலு காலில் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து, சால்வை போத்தியபடி நின்றுகொண்டிருந்தார்.
அப்போதுதான் எனக்கு உறைத்தது. “அடடா, இவருக்கும் ஷூ, ஸ்வெட்டர் வாங்கி இருக்கலாமே! சில சமயங்களில் எவ்வளவு சுயநலத்தோடு நடந்துகொள்கிறோம்?” என்று தோன்றியது.
உடனே மேலே சென்று பூனை போல் லாவகமாய் எனது கம்பளிச்சட்டைகள் சிலவற்றையும், அடர்த்தியான போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
“இந்தாங்க வேலு. வீட்டுக்கு போலாம் வாங்க.”
என் தங்கையுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து அழைக்கும் தூரத்தில் இருந்தது அவரது வீடு. வேலுவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியுமென்றாலும் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சமையற்கட்டு அளவிலான சிறு வீடுகள் நிறைய இருந்தன.
அவர் வீட்டிற்குள் குளிரில் நடுங்கிக்கொண்டு ஸ்டவ்வைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும், அவரது வயதான தாயாருக்கும் கொண்டுவந்த போர்வைகளைக் கொடுத்தபோது மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி பாய்ந்து பயணித்தது.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச்செல்வோம்மஞ்சம்பில் வீடுதான்இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயேபடுத்துக்கொள்வோம்அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்துகொடுப்பார் என் தாத்தாஅதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாகபொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம்.
வேலுவை இரும்புத்தொட்டி ஏதேனுமிருந்தால் எடுத்துவரச் சொன்னேன். அந்தத் தெருவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த வீட்டிற்கெதிரே இருந்து சிறிது மணலை அள்ளிவந்து வீட்டில் கொட்டிவிட்டு, அதன்மீது வேலு கொண்டுவந்த சிறு இரும்புத் தொட்டியை வைத்து, விறகுகளை போட்டுக் கொளுத்தி அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து குளிர் காய்ந்து, வேலுவின் மனைவி போட்டுக்கொடுத்த அருமையான தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தபோது மணி நான்கு. மனதில் ஒரு வேள்வி நடத்தி முடித்த திருப்தி!
கடைசியில் அந்த நாள் வந்தே விட்டது. சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.
சென்னை வெயில் வாட்டியபோதெல்லாம் வான் பார்த்து கண்களை மூடி, “ஐரோப்பாவைப் போன்று இப்போது இங்கே பனிபெய்து என் முகத்தில் பனித்துகள்கள் பளிச்சென்று விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். அன்று உண்மையாகவே விழுந்தது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனைவரும் – சிறுவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் - குளிரையும் பொருட்படுத்தாமல் ஆச்சர்யத்துடனும், குதூகலத்துடனும் வானிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அந்தத் துகள்களை வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அன்று மாலைக்குள்ளாகவே வானம் துகள்துகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டது. எல்லோரும் வெளியே பனிப்பந்துகள் செய்து வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருக்க, நாம் எப்போதும்போல் முகநூலுக்குள் நுழைந்தோம். மெரினா கடற்கரைப் புகைப்படங்கள் சிலவற்றை சுடச்சுட பகிர்ந்திருந்தது ‘உலக தமிழ் மக்கள் இயக்கம்’ பக்கமும் மற்ற சில பக்கங்களும்.
ஒயிட் கிறிஸ்துமஸை‘ எதிர்நோக்கியிருந்த சாந்தோம் தேவாலயம் அழகாயிருந்தது.
காந்தி சிலை – சாகும் வரை கோவணத்துடன் வாழ்ந்தவருக்கு சால்வை போர்த்தியிருந்தாள் இயற்கை அன்னை. ஆயினும், சிலம்பை தூக்கிக்கொண்டு நிற்கும் கைம்பெண் கண்ணகிக்கு திராவிடக் கட்சிகள் வழங்கியிருந்த கறுப்புச் சேலையை களைந்துவிட்டு, வெள்ளைச் சேலை வழங்கியிருந்தாள். இயற்கைக்கும் சிறிது மூடநம்பிக்கை உண்டு போலும்.
மாநகராட்சியின் கருந்தார் பூச்சுக்காக  நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக வழிமேல் விழிவைத்து, ஏங்கிக் காத்திருந்த வேளச்சேரி தரமணி சாலைக்கு கிடைத்திருந்த வெண்பனிப் பூச்சு யோகம், உறைந்துபோன கூவம், வீட்டு வாசலுக்கு முன்பு பால்காரர் போட்டிருந்த ஒரு வெண்பனிக்கட்டிப் பொட்டலம், வீட்டு உப்பரிகையில் தாங்கள் அழகாய் செய்திருந்த ‘ஸ்னோமேன்‘, ஒரு நாளிதழின் முதல்பக்கத்தில் முதன்முறையாக இடம்பிடித்திருந்த வானிலை ஆய்வு மைய இயக்குநரின் புகைப்படம் என பலவிதமாய் சென்னையின் அன்றைய தின அதிசயங்களை க்ளிக்கித் தள்ளி புகைப்படங்களைசுவர்தட்டியிருந்தார்கள் நண்பர்கள்.
முகநூலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றினுள் மூழ்கிக்கிடந்த மைத்துனருடன் இணைந்துகொண்டேன்.
இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையென்றாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக ஆர்வலர், ஒரு நடிகர், ஒரு வியாபாரி, ஒரு எழுத்தாளர், இரண்டு அரசியல்வாதிகள், தொலைபேசி மூலம் சில பொதுமக்கள் என்று எல்லா தொலைகாட்சிகளிலும் வந்து விவாதித்து சித்ரவதை செய்வது வாடிக்கையாகி விட்டது.
அப்படியொரு அவஸ்தையான, காரசாரமான விவாதம் ‘இன்றைய முழக்கம்’ தொலைக்காட்சியில், “நெஞ்சில மஞ்சா..” நிகழ்ச்சியில் அன்று நடந்து கொண்டிருந்தது.
“குளிர் தாங்க முடியலைங்க. கவர்மெண்டு ஒண்ணுமே செய்யமாட்டேங்குது. விறகு வாங்கினாலும் பச்சையா கெடக்கு. என்ன பன்றதுனே தெரியல. மொதலாளி வீட்டுல ஹீட்டர் இருக்குனு போனா, கரண்டு பன்னெண்டு மணிநேரம் கட் பண்றானுங்க. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்.
தொழிலதிபர் ரெங்கமணி ஆவுடையப்பன் “தற்போது கூட ஜப்பானில் ஒரு வுட் ட்ரையர்கண்டுபிடித்துள்ளார்கள். பச்சை மரத்தை உள்ளே அனுப்பினால், காய்ந்த விறகாக வெளியே வந்துவிடும். அரசாங்கம் அத்தகைய இயந்திரங்களை உடனே இறக்குமதி செய்தால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்களுடைய  நிறுவனம் அதற்கான உதவிகள் செய்யத் தயாராயிருக்கிறது.” என்று ஆலோசனை வழங்கிய அதே வேளையில், அவரது IIM அகமதாபாத் மூளை அந்த வணிக திட்டம் எப்போது சமபாட்டுப் புள்ளியைத் தொடும் என்பதை கணித்து முடித்திருந்தது.
சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கட்டுத்தறி திடீரென கத்தத் தொடங்கினார், “குளிருக்காக மரங்களை வெட்டுவதென்பது அபாயகரமானது. நாளைய சந்ததியினருக்கு மரங்களை விட்டு வைக்கவேண்டும். என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம்…. ”
தொலைபேசி மூலம் யாரோ ஒரு சாதாரணர் குறுக்கே புகுந்து, “யோவ், கட்டுத்தறி! நீ என்ன பெரிய அறிவாளின்னு காமிக்கிறையா? இன்னைக்கு சாகரவங்கள காப்பாத்த சொன்னா நாளைக்கி நாளானன்னைக்கு பெனாத்தற…” என்று சூடாகப் பேசிய போது அவரை இடைமறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, “நண்பரே உங்கள் வார்த்தை பிரயோகம் சரியில்லை.” என்று கூறியபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டு, “டூன்..டூன்..டூன்..” என்று சத்தம் வந்தது.
ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-விடம் திரும்பி, “திரு.பச்சைமாமலை, அமைச்சர் திரு.பொய்கைவீரன் அவர்கள் பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?”. அவர் இந்தக் கேள்வியை கேட்டுக்  கொண்டிருந்தபோது, பச்சைமாமலை அவர்கள் தனது புத்தம் புதிய வெள்ளை சட்டைக்குள் உடலை நுழைத்து தலையை காண்பித்து சிரித்தபடி அமர்ந்து, எனது தங்கையின் 41 அங்குல தொலைகாட்சிப் பெட்டித்திரை முழுவதையும் நிரப்பியிருக்க, கீழே அவரை பற்றிய ‘ஹைக்கூவை’ காண்பித்துக் கொண்டிருந்தது ‘இன்றைய முழக்கம்’.
திருபச்சைமாமலை
எம் எல் 
தமிழர் முன்னேற்ற கட்சி 
“சில எழுத்தாளர்களுக்கும்,  சமூக ஆர்வலர்களுக்கும்  இதுவே வேலையாகிவிட்டது. இவர்களாக ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள். அரசாங்கமோ அல்லது வேறு எவரேனும் ஒருவர் கொடுக்கின்ற தீர்வில் குறை கண்டுபிடித்தே வாழ்க்கையை ஓட்டும் ஒட்டுண்ணிகள்!” என்று வார்த்தைஜாலம் காட்டி அடுத்த தேர்தலுக்கு தொலைபேசியில் பேசியவரின் ஓட்டை தக்க வைத்துக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்தார் பச்சைமாமலை, “என்னைப் பொருத்தமட்டிலும் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் ம.மு.க-வினர் (மறத்தமிழர் முன்னேற்றக்  கட்சி) தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் முன்பே இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மின்சார பிரச்சினைக்கும் அவர்களே காரணம். மின்சாரம் இருந்திருந்தால் இத்தனை பேர் குளிரில் வாடியிருக்கமாட்டார்கள். ஆனால் எங்கள் மாண்புமிகு ஐயா அவர்கள் தொலைநோக்கோடு, அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் வண்ணம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ம.மு.க கட்சி அரசியல்வாதியும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான L.A.P.D கோதண்டம், சிறிது ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார், “இந்த மாண்புமிகு என்பது அவரோட ஐயாவோட பதவிக்கா? இல்லை அவரோட ஐயாவுக்கேவா? மாண்புமிகு முதல்வர் ஐயா என்று கூற பழகிக் கொள்ளவேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள். நான் கேட்கிறேன்… ம.மு.க பற்றி பேச த.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்சாரம் தான் பிரச்சினை என்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் இன்று ஹீட்டர் இருக்கிறது? அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஹீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று எங்கள் தலைவர் நேற்று மாலையே அறிக்கை விடுத்து தனது தாயுள்ளத்தை காண்பித்துள்ளார். அதைச் செய்வார்களா இவர்கள்?”
இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கிடையே, ‘ஊர் ரெண்டு பட்டால்..” எனும் விதமாகவும், ‘முட்டாள்களுக்கிடையே அமர்ந்திருக்கும் தான் மட்டுமே இங்கு அறிவுஜீவி’ எனும் விதமாகவும் அமர்ந்திருந்த எழுத்தாளர் முகத்தில் ஒரே புன்னகை!
இன்னொரு தொலைக்கட்சியில் தனது விநோதமான யோசனையைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய்கை வீரன், “சாலைகளிலும், நடைபாதைகளிலும் படர்ந்து கிடக்கும் பனியை மாநகராட்சி குடிநீர் வண்டிகளில் கடல்நீர் கொண்டு வந்து சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்.”
“பரவாயில்லை. கடல் நீரில் உப்பு கலந்திருக்கிறது என்கிற அளவிற்காவது அமைச்சருக்கு அறிவிருக்கிறதே!” என்றாள் என் தங்கை.
“யோசனையாம் யோசனை. மண்ணாங்கட்டி.” என்று நொந்துகொண்டார் என் மைத்துனர்.
இதற்கிடையே இன்றைய முழக்கத்தில் சற்றுமுன் வந்த செய்தி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது :
போரூர் ஏரி உறைந்து போனதால் அதில் பனிச்சறுக்கு விளையாட்டை நடத்த சென்னை மாநகராட்சிஸ்னோ ஒயிட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது
இன்னொரு தொலைக்காட்சியில்:
சாலையோரத்தில் பனிப்போர்த்தி மறைத்திருந்த குழிக்குள் விழுந்த கிழவி பலி.
குளிரினாலும், பனியால் ஏற்பட்ட விபத்துகளாலும் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 20 என்று காண்பித்தது த.மு.க சேனல்; 200 என்று காண்பித்தது  ம.மு.க சேனல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை – கடைசியில் ஒரு பூஜ்ஜியம். அவ்வளவுதானே? மேலும், இந்தியாவில் அன்றாடம் 62000 பேர் இறக்கிறார்கள். அது 62020 -ஆக இருந்தால் என்ன? இல்லை 62200 -ஆக இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? மனிதர்களை விடுங்கள்; எண்ணற்ற கால்நடைகள் மரித்துப் போயிருக்கும். அவற்றை பற்றி பச்சைமாமலையும், கட்டுத்தறியும் விவாதம் புரிந்ததாய் தெரியவில்லை. பேசினாலும் அவைகளுக்குப் புரியப்போவதில்லை.
நாட்டை உலுக்கும் அதிபயங்கரமான விஷயங்களை நாம் கையாளும் விதத்தையும், ‘நெஞ்சில மஞ்சா!’ போன்ற நிகழ்ச்சிகளில் வாதிடும் அறிஞர்களையும், அவர்களின் விஷய ஞானம், சமூகப் பார்வை இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் என்னமாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் மனதுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் தான் நம்மை ‘அறிவார்ந்த’ சமூகமாக மாற்ற இளைஞர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பரிதாபகரமான உண்மை.
இரவு தூக்கமே வரவில்லை. இருட்டில் அமர்ந்து நுண்ணறி பேசியை எடுத்து வருடிக்கொண்டிருந்த போது திடீரென கூகிள் காலண்டர் கண்ணில் பட்டது. காலண்டரைக் கண்ட அடுத்தகணம், பாண்டிபஜாரில் பார்த்த கிழவர் நினைவுக்கு வந்தார்.
“சட்டைகூட போடாமல் திரிந்து கொண்டிருந்த அந்த மகராசன் இந்நேரம் எங்கிருப்பார்? போய் பார்க்கலாமா? அவருக்கு ஒரு கம்பளிச்சட்டையும், கம்பளிப் போர்வையையும் கொடுத்திருக்கலாமே? பலியாகிற அனைத்து உயிர்களையும் நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால், பணத்திற்காகமுட்டாள்களை அறிவாளிகளாக்கிப் பார்க்கும் விந்தையான மனிதர்களுக்கிடையேகொடுத்தபணத்தையும் மதிக்காமல்கொடுத்தவனையும் முட்டாள் என்றுரைத்த அந்த மனிதரின் உயிர்மகத்தானதல்லவா?” என்று தோன்றிய அடுத்தகணம் பனிப்போருக்கு தயாராகி, ஒன்றிரண்டு கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரை எடுத்தேன். பனிப்பொழிவின்பொது கார் ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதில்லையே? என்ன இங்கெல்லாம் விண்டர்டயர் கிடையாது. சமாளித்து ஓட்ட வேண்டும். இருந்தாலும் அந்த மகராசனுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளலாம் என்று தோன்றியது.
பனிப்பொழிவு சற்று குறைந்திருந்தது.
காரில் ஏறி அமர்ந்தாலே நடு இரவிலும் கூட இந்த ரேடியோக்களின் தொல்லை தாங்க முடிவதில்லை; அதில் வரும் ஆர்.ஜேக்கள் பேசும் தமிழ் – சொல்வதற்கில்லை. டோனி க்ரைகும்ஜெப்ரி பாய்காட்டும்ஆங்கிலம் பேசுவது போலவே தமிழ் பேசவேண்டும் என்று யாரோ பாடம் நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. அன்றைய விவாத மேடையில் இரண்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலரின் ஜகதலப் பிரதாபங்களை மூச்சு விடாமல் டோனி பாணியில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் ரேடியோ பீட்-ரூட் ஆர்.ஜே ‘காதல் கிங்’ கார்த்தி. இவற்றிற்கிடையே காதலர்களுக்கு அறிவுரையும், அதன் பிறகு ஒரு டூயட் பாடலும்.
“நம் நாட்டில் ஆளாளுக்கு கருத்து பேசுகிறார்களே? பேச்சுக்கும் செயல்களுக்கும் தொடர்பே இல்லாத இதுபோன்ற போலிகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்.” என்று எரிச்சல்பட்டுகொண்டே, தியாகராயர் சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடி காரோட்டிச் சென்றபோது சாலையோரத்தில் ஒரு மரத்தருகே என் கண்கள் கண்ட அந்தக் காட்சி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, என்னை உடனே ப்ரேக் அடிக்க வைத்தது. திடீரென ப்ரேக் அடித்ததால் பனிபடர்ந்த சாலையில் என் கார் சறுக்கி, க்றீச்சிக்கொண்டேசென்று, ஒரு சுற்று சுற்றி, இன்னொரு மரத்தின் மீது மோதி நின்றது. கிட்டத்தட்ட கார் கண்ணாடியை முத்தமிட்டுத் திரும்பினேன். பழக்க தோஷம் காரணமாக அணிந்திருந்த சீட் பெல்ட்டினால்தலைதப்பியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து வலதுகாலைக் கீழே வைத்ததும், முழங்கால் வரை பனியில் புதையுண்டது. அடுத்த அடிக்கு தரையில்  இருப்போமா அல்லது ஏதேனும் ஒரு குழிக்குள் புதைந்து விடுவோமா என்கிற அளவில்தான் எனக்கு சென்னை மாநகராட்சியின் மேல் ‘நம்பிக்கை’ இருந்தது. குளிரில் உதறியபடி அச்சத்துடனும், வெகுகவனமாகவும் அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்து சென்றேன். அங்கு பென்குவின் உத்தி மட்டும் போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
மரத்தருகே நெருங்க நெருங்க, நான் கண்ட அந்தக் காட்சி இன்னும் தெளிவாகத் தெரிந்து இறுதியில் என் ஊகத்தை உறுதிப்படுத்தியது.
நான் யாரைத் தேடிச் சென்றேனோ அந்த மனிதர், அங்கே ஒரு சிறு நாய்க்குட்டியை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்க, அந்த ஜீவன்கள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, இயற்கை அன்னை என்னை முந்திக்கொண்டுச் சென்று, அடர்த்தியானதொரு வெண்பனிப் போர்வையை அவர்கள் மீது போர்த்தி இருந்தாள்.

பனிப்போர்வைக்குள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தன – அந்த இரு உயிர்களும்.