கல்லூரி கட்டணம்

(சிறுகதை)
“ஏண்டா சீனி, காத்தால சீக்கரமா போவணும்னு நேத்து ராவே சொல்லமாட்டே? சாப்பாடே உன்னும் ஆகல!” என்று திட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் என் தாய்.
“பரவால மா. இன்னிக்கி எங்க கம்பெனி கஸ்டமர்ஸ் ரெண்டு பேரு     அமெரிக்காலர்ந்து வராங்களாம். ஏர்போர்டுக்கு போயி கூட்டினு போணும். கம்பெனி காரு சாவிய வேற நைட் ட்யூடி பாத்த இன்னோரு டிரைவர் மறந்து வீட்டுக்கு எடுத்துனு போயிட்டானாம். அவன் வீட்டுக்கு வேற போணும். நான் மத்தியானம் ஹோடல்லயே சாப்டுக்கறேன்.” என்று கூறிவிட்டு எனது ஷூவை துடைத்து மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன்.
“பால் சுத்தமா இல்ல. முருகன் கடைல டீயாச்சும் குடிச்சிட்டு போடா. வெறும் வயித்துல போகாத.”
“சரிம்மா. ஆமா, செல்விக்கு இன்னக்கி காலேஜ் இல்லையா? இன்னும் தூங்கினே இருக்குது.”
” அட போடா! ஒன்னும் தெரியாத மாரி கேக்கற. ஏந்தான் அவள நீ அந்த காலேஜில சேத்துவுட்டியோ? அப்பப்போ காசு கேட்டு ராவடி பண்றானுங்க. காலேஜி பீசு கட்டணும்னு அவ மூஞ்ச உம்முன்னு வெச்சிணு கிறா. நீயும் கம்முனு கீற. கொஞ்சம் எதனா பண்ணமுடியுமா பாரு. கட்டற தேதி முடிஞ்சி ஒன்ற மாசம் ஆகுது.”
“நான் என்னா மா பண்றது? எங்க போறது? நான் என்னா யார்கிட்டயும் கேக்காமையா இருக்கேன்?”
“இல்லாட்டி பேசாம அவள நிறுத்திட்றா நீ. கல்யாணம் பண்ணி அனுப்பில்லாம். படிப்பும் வேணா! ஒரு எழவும் வேணா!” என்று கத்தினாள்.
“மா, காலாங்காத்தால உன் கச்சேரிய ஆரம்பிக்காத. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். சாயங்காலம் பேசிக்கலாம்.” என்று கடிந்து விட்டு அய்யப்பந்தாங்கல் பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தேன்.
நல்லவேளையாக தாம்பரம் செல்லும் பேருந்து ஒன்று கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில் சிறிது மகிழ்ச்சியடைந்தாலும், சற்று நேரத்திற்கு முன்பு என் தாயுடன் பேசியது நினைவுக்கு வரவே, மீண்டும் விசனம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது.
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவுகள் தானாய் விலகிக்கொண்டன. எங்கே நாங்கள் அவர்களுக்கு பாரமாகி விடப் போகிறோமோ என்கிற (அ)நியாயமான பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
என் தாய் வீட்டுவேலை செய்ததில் கிடைத்த பணம் எங்கள் உணவிற்கே போதவில்லை என்பதால், என் படிப்பை நிறுத்திவிட்டு, என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் லாரி கிளீனராக என் வேலையைத் தொடங்கி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஓட்டுநராகி விட்டேன்.
கல்வி கற்க வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருந்தாலும், போதாமையால் இளம் வயதிலேயே இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். ஆனால், என் தங்கையை மட்டும் எப்பாடுபட்டேனும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்கிற வெறி அந்த வயதிலிருந்தே எனக்கு இருந்தது.
அவளுடைய பள்ளிக்கல்வி வரை அதிக சிரமமில்லாமல் எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால், என்றைக்குக் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தாளோ அன்றைய நாளிலிருந்தே நிலைமை தலைகீழ் ஆகிப்போனது.
இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை.
வீட்டிலும் இதற்கு மேல் விற்பதற்கு என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஓரே ஒரு சொத்தான பைக்கையும் விற்றுவிட்டேன். நான் பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர வாசிக்கும் பழக்கம் அதிகமாய் இருந்ததால், தெருவோரக் கடைகளில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் வீட்டில் ஒரு மூலையில் இரண்டு மூட்டைகள் முழுக்க நிரம்பிக் கிடந்தது. அடுத்ததாக அவைகளைத்தான் விற்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் யார் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்? தமது கதாநாயகர்களின் திரைப்படங்களின் ஆரம்ப நாள் அமர்க்களங்களுக்கு வேண்டுமானால் ஆயிரம், இரண்டாயிரம் இறைப்பார்கள்; குடம் குடமாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார்கள். புத்தகமாவது? வாங்குவதாவது?
சரி, வீட்டையாவது விற்கலாமென்றால், புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடிசையை யார் வாங்குவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் என்றைக்கு அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்து, வீட்டை இடித்துத்தள்ளுமோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றி மிரட்டிப் பார்க்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிறிய ‘கால் டாக்ஸி’ நிறுவனத்தில் ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தங்கை பொறியியல் கல்லூரி சேர்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் சென்று கடன் கேட்டேன். எனது தற்காலிகப் பணியை காரணங்காட்டி எல்லா வங்கிகளுமே கடன் தர மறுத்து விட்டன.
இதற்காகவே அரசாங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்திலோ ஓட்டுநராக வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வெறியோடு வேலை தேடியலைந்தேன்.
கடன் வாங்குவதற்கானத் தகுதியை அடைவதற்காகவே ஒரு நல்ல வேலையை த் தேடிய முதல் ஆள் நானாகத் தானிருப்பேன்.
எங்கள் கம்பெனி டாக்ஸியில் அடிக்கடி பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. மாத ஊதியம் கொஞ்சம் குறைவாயிருந்தாலும், சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, நன்றாக வேலை செய்வோருக்கு கூடுதல் ஊதியம் என்று நிறையச் சலுகைகள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது.
என் மேலதிகாரி வேணுகோபால் மிகவும் கண்டிப்பானவர். மற்ற ஓட்டுநர்களை விட என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. எனக்கு இருக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும், எனது தமிழ் உச்சரிப்பையும் பாராட்டினாலும், ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி அறிவுரை வழங்குவார். என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினால் என்னை வங்கிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கி வருவது போன்ற மற்ற சில அலுவலகப் பணிகளையும் செய்யச் சொல்லுவார். நல்ல உடைகளை அணிந்து வரச்சொல்வார். அதனால் தான் இப்போதெல்லாம் நான் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, ஷூவெல்லாம் அணிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மென்பொருள் வல்லுநரைப் போல அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னையே எனக்கு இப்போதுதான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
வார நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு, வார ஈறுகளில், சொந்தமாகக் கார் வைத்திருக்கும் எனக்குத் தெரிந்த பழைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு கார் ஓட்டினேன். அதன்மூலம் சிறிது கூடுதல் வருமானம் கிடைத்தாலும், என் தங்கையின் கல்லூரிச் செலவுகளுக்கு அது போதுமானதாக இல்லை.
போதிப்பது என்ன அவ்வளவு சிரமமான விஷயமா? பிறகு ஏன் இந்தக் கல்லூரிகள் இப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? தரமான கல்வி ஏன் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது? என் தங்கையின் இந்த வருடக் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டுவது? வேணுகோபால் சாரிடம் கேட்கலாமா? தருவாரா? நல்லவர்தான்! ஆனால் கண்டிப்பானவர் ஆயிற்றே? எப்போது திருப்பிக் கொடுப்பாய் என்று கேட்டால் என்ன சொல்வது? திருப்பிக் கொடுக்காவிட்டால் வேலைக்கே உலை வைத்துவிடுவார்களே?” என்று இப்படி ஏதேதோ கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சிந்தனையில் தொலைந்து போயிருந்த என்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தது எம்.டி.சி பேருந்து எஸ் 166.
மேற்கு தாம்பரத்திலிருந்த மற்றொரு ஓட்டுநரின் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி, சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நேராக அலுவலகத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்திற்குள் நுழையவும், எங்களுடைய அமெரிக்க கஸ்டமர்கள் வந்த விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது.
அவர்களுடைய பெயர்கள் எழுதியிருந்த போர்டை கையில் வைத்துக்கொண்டு வருகைக்கூடத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
இரண்டு மேல்நாட்டவர்கள் புன்னகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அவர்களாகத்தானிருக்கும் என்று யூகித்த சமயம், அவர்களில் ஒருவர், “ஆ யூ சி..ரி..நி.. வசன்?” என்று கேட்டார்.
பெயரைச் சிறிது குழப்பி உச்சரித்தாலும், அவர்கள் எனது பெயரை  தெரிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
“எஸ் சார். ஐயாம் சீனிவாசன்!” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்த கைவண்டியைப் பெற்றுக் கொண்டு,  கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றேன்.
சரியாக இருபது நிடங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமாகத் தங்கும் ராடிசன் ஹோட்டலுக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, காலையுணவை முடித்துக் கொண்டு வந்த அவர்களுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.
அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அது ஆங்கிலம் போலவே இருந்தாலும், பெரும்பாலான வார்த்தைகளும், விஷயங்களும் எனக்குப் புரியவே இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பற்றியும், ஒழுங்கீனமாக வண்டிகள் சென்று கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒருவேளை என் தங்கைக்கு இவர்கள் பேசுவது நன்றாகப் புரியும் என்று நினைத்துக் கொண்டபோது, அவளின் கல்லூரி கட்டணமும் சேர்ந்து நினைவுக்கு வந்து வருத்தியது.
முப்பது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஐ.டி நெடுஞ்சாலையில் இருந்த எங்கள் அலுவலகத்திற்கு சென்றடைந்தோம். காரிலிருந்து இறங்கிய அவர்கள், “யுவர் டிரைவிங் இஸ் ஆசம்! வெரி டிசிப்ளின்ட் டிரைவர்! ப்ரிசியேட் இட்!” என்று கூறிவிட்டு என்னிடம் கைகுலுக்கி வாழ்த்தினர்.
“தாங்க்யூ சார்!” என்று கூறிய எனக்கு அவர்கள் பயன்படுத்திய சில வார்த்தைகளும், உச்சரிப்புகளும் புரியவில்லை என்றாலுங்கூட, அவற்றிலிருந்த உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.
மாலை ஐந்து மணிக்கு வேணுகோபால் சாரிடமிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“ஸ்ரீனி, ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் உடனே வா.”
“இதோ வர்றேன் சார்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினேன்.
வரவேற்பு கூடத்தில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஆறடி உயரம்.
“ஸ்ரீனி, இன்னிக்கி ஒரு ஆறுமணிக்கு திரும்பவும் கஸ்டமர்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும். நம்ம பாபு சாரும் கூட வருவார். அவர் டீம்லர்ந்து இருபது இருபத்தைஞ்சி பேர் கஸ்டமர்சோட டீம் ப ஃபே டின்னருக்குப் போறாங்க. டின்னர் முடியற வரைக்கும் நீ அங்க வெயிட் பண்ணிட்டு, அவங்க டீம்ல மூணு கேர்ல்ஸ மட்டும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு போய்டு. ஒகே வா?”
“ஒகே சார்.” என்று தலையாட்டிவிட்டு, சிறிது தயக்கத்துடன் அவரை அழைத்தேன், “சார்…”
“என்னப்பா?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்..”
“இப்போ கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு ஸ்ரீனி, நாளைக்கு மார்னிங் கண்டிப்பா பேசலாம்.” என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, “ப்யூ மோர் திங்க்ஸ், ஸ்ரீனி. பாபு சார்கிட்ட டின்னர் முடிஞ்சப்புறம் ரெசீட் வாங்கிட்டு வந்து சைலஜா கிட்ட கொடுத்துடு. அப்புறம், நாளைக்கு மார்னிங் கஸ்டமர்ச கூட்டிட்டு நம்ம சிறுசேரி ஆபீஸ் வந்துடு! அவங்க ரொம்ப இம்பார்டன்ட் கஸ்டமர்ஸ். டிரைவ் பண்ணும்போது சும்மா போனெல்லாம் எடுத்து பேசிட்டு இருக்காதே! ஒகே?”
“ஒகே சார். ஆனா, நான் டிரைவ் பண்ணும்போது எப்போவுமே போன சுட்ச் ஆப் பண்ணிடுவேன் சார்.” என்றேன்.
“ஐ நோ யூ ஸ்ரீனி. பட் இட்ஸ் மை ட்யூட்டி டு வார்ன் யூ.” என்று கூறி என் தோள் மீது  தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார்.
சுமார் ஆறேகால் மணியளவில் பாபு அவர்களையும், அமெரிக்கர்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழு. அவர்கள் இறங்கிய பிறகு கதவுகளை மூடிவிட்டு மீண்டும் காருக்குள் அமரச் சென்றபோது, அவர்களில் ஒருவர், “ஹே, சி..ரி..நி, ஆ யூ நாட் ஜாய்னிங் அஸ்?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வியே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. வழக்கமாக விருந்து முடியும் வரை நான் வெளியேதான் காத்திருப்பேன்.
“நோ சார். ஐயாம் ஈட் ஹோம்.” என்று எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உளறினேன்.
“நோ நோ! ப்ளீஸ் கம்! பேபு, ப்ளீஸ் ஆஸ்க் ஹிம் டு ஜாயின் அஸ்!”
“ஸ்ரீனி, வாங்க. ப்ளீஸ். கஸ்டமர்ஸ் தப்பா நினைப்பாங்க!” என்று பாபு சார் வற்புறுத்தியதின் பேரில் அவர்களோடு விருந்திற்குச் சென்றேன்.
என் வாழ்க்கையிலேயே அத்தனை உணவு வகைகளை நான் பார்த்ததே இல்லை. எங்களுடைய நீண்ட மேசையில், கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து பேர் அமர்ந்து இருந்தனர். எல்லோருமே குதூகலத்துடன் உணவுவகைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டும், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த அணியில் நிறைய பேரை எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், அந்தச் சூழல் எனக்கு புதியது என்பதால் அங்கு அமர்வதற்கே சிறிது வெட்கமாக இருந்தது.
அதிலும் இந்த மேசைக்கரண்டியையும், முள்கரண்டியையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ? முதலில் தட்டிலிருக்கும் உணவுக்கும் கரண்டிகளுக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம்; பிறகு, அதை வாயில் திணிப்பதற்கு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்று எனக்கு  எப்போதுதான் விருந்து முடியுமோ என்றாகி விட்டது.
அத்தனை பெயர் தெரியா உணவு வகைகள் விதம் விதமாய் இருந்தாலும், எதையுமே திருப்தியாக ரசித்து ருசித்து உண்ண முடியவில்லை. எந்த வகையான உணவிற்கு எந்தக் கரண்டி, எதை வலது கையில் பிடிப்பது, எதை இடது கையில் பிடிப்பது என்று அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்குள் போதுமென்றாகி விட்டது. வெளியே எழுந்து சென்றால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்கிற பயம் வேறு இருந்ததால் தட்டையே குனிந்து பார்த்துக்கொண்டு, மெதுவாக உணவருந்திக் கொண்டிருந்தேன். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது எனது தாயையும் தங்கையையும் அழைத்து வந்து இத்தனை உணவு வகைகளையும் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது.
ஒரு வழியாக விருந்து முடிந்தது. அனைவரது தட்டிலும் உணவு வகைகள் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய மீதமிருந்தது. பஃபே முறையில் அளவில்லா உணவு என்பதால் வீணடிப்பதில் தவறில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியே செல்ல நினைத்த போது, என்னுடைய புதிய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து மீண்டும் கைகுலுக்கினார்கள்.
இதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களே இதுநாள் வரை  என்னிடம் கைகுலுக்கியெல்லாம் நட்பாகப் பேசியதில்லை. அவர்களிடம் மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாய் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.
பாபு சார் என்னிடம் வந்து, “ஸ்ரீனி, இந்தாங்க ரெசிட். தென், அந்த கேர்ல்ஸ பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!” என்று கூறிவிட்டு ஒரு கவரைத் தந்தார்.
அதை வாங்கி காரில் வைத்துவிட்டு, அந்த மூன்று பெண்களையும் சென்னை நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்த அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாய் விட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்த போது மணி பதினொன்று.
காரிலிருந்து கீழே இறங்கும் போது அந்த வெள்ளைக் கவர் தென்பட்டது. நான் அலுவலகக் கவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆனால், என் தாயையும் தங்கையையும் அது போன்ற விருந்திற்கு ஒருநாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆதங்கம் மேலெழுந்ததால் பிரித்துப்  பார்த்தேன்.
அதிர்ந்தே போனேன்.
மொத்தச் செலவு 41000 ரூபாய் என்று இருந்தது. இருபத்தைந்து பேரின் இரவு உணவிற்கு நாற்பத்தியோராயிரமா??? நமக்கெதற்கு இதெல்லாம்? என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்கிற கனவை அந்தக்கணமே தகர்த்து எறிந்துவிட்டேன்.
அந்நேரத்திற்கு பேருந்து எதுவும் கிடைக்காததால், நடந்தே கிட்டத்தட்ட கிண்டிவரைச் சென்று விட்டேன். அங்கே எதிர்பட்ட ஷேர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி போரூர் வரைக்கும் அதில் சென்று, மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நள்ளிரவில் போரூர் ஏரியை பார்த்துக் கொண்டே நடப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம்.
சில நிமிட நடையில் என் வீட்டுத் தெருமுனையைச் சென்றடைந்த போது, அங்கு வழக்கமான நாய் குரைப்புகளோடு சேர்ந்து ஒருவித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது.
அந்த இருட்டில் என் வீடு மங்கலாகத் தெரிந்தது.
ஆனால்….
அங்கு ஏன் அவ்வளவு கூட்டம்?
நெஞ்சம் படபடத்தது. எனக்கு என்னவோ தவறாகப் பட்டது. இன்னும் அருகே சென்றபோது அங்கே ஒலித்துக்கொண்டிருந்த அழுகுரல்கள் மெள்ள மெள்ள என் காதுகளை வந்து நிரப்ப, என் இதயத்தில் கனம் ஏறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து, எனது நடைச் சிறிது சிறிதாய் தளர்ந்தது.
“அதோ சீனி வந்துட்டான்…..” என்று என்னைக் கண்டவுடன் என் நண்பன் துரை உரக்கக் கத்தினான்.
அடுத்த நிமிடமே, உள்ளேயிருந்த என் தாய் தலைவிரிக் கோலத்தோடு, தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டும், “டேய்ய்ய்ய்ய் சீனி……..,” என்று கதறிக்கொண்டும் என்னருகே ஓடிவந்து என் சட்டையைப் பிடித்து இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு, “எங்கடா போய்த் தொலைஞ்சே? எங்க போயி தொலைஞ்சே? செல்வி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா சீனீ….! அய்யோ! நான் இப்போ என்னடா பண்ணுவேன்?” என்று அவள் கதறி ஓலமிட்ட அந்த நொடி, என் இதயம் தடதடதடவென்று அதிர்ந்து கொண்டிருந்தது.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் வாயெழவில்லை. வீட்டிற்குச் சென்று என் தங்கையைப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. என் மனம் உறைந்து போயிருந்தது. அப்படியே பிரமைப் பிடித்தவன் போல துரைமீது சாய்ந்து கிடந்தேன்.
“எம் பொண்ண நானே கொன்னுட்டேன். நானே கொன்னுட்டேன்.” என்ற என் தாயின் கதறல்கள் என் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருக்க, துரை சொல்லிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களும் மெல்லியதாக என் செவிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.
“பீஸ் கட்டாட்டி காலேஜுக்கு வராதேனு சொல்லிட்டாங்களாம் டா பாவிப்பசங்க. வகுப்பறைல இவ பேர மட்டும் படிச்சாங்களாம். சாயங்காலம் ரொம்ப அழுதிருக்கா. அம்மா சும்மா இல்லாம, கன்னா பின்னானு திட்டிட்டு, வேலை பாக்கற எடத்துல பணம் கேக்க போனாளாம். வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிடிச்சி போல. அதுக்குள்ற மருந்து நெறைய குடிச்சிட்டா டா. இவள என்ன பண்ண? உனக்கு போன் பண்ணோம். சுட்ச் ஆபுல இருந்துச்சி. வேற யாரு நம்பரும் தெரில. ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்குப் போறதுக்குள்றயே போய்ட்டா டா.” என்று மெதுவாகக் கூறிவிட்டு, “இந்தா அவ எழுதன லெட்டர்.”
நடுநடுங்கிக்கொண்டிருந்த என் கைகளில் அந்தக் கடிதத்தைத் திணித்தான் துரை. மெதுவாக அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன்.
“அன்புள்ள அண்ணா, தன்னலமில்லாமல் இதுவரை நீ செய்த…….” – வாசிக்க ஆரம்பித்த போதே மூச்சு த் திணறியது. அதற்கு மேல் படிக்கத் தோன்றவில்லை. கடிதத்தோடு வேறொரு தாளும் இருந்தது. அதில் அவளுடைய அந்த வருட கல்லூரி கல்வி கட்டண விவரங்கள் இருந்தன.
அந்த வருட மொத்த கல்லூரி கட்டணம் -
41000 ரூபாய்.

கருத்துகள்

  1. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
    காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  2. கதையாகவே இருக்கட்டும்... முடிவு 'திக்'...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைத்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு
  3. கதையின் முடிவு நெஞ்சை கனக்க வைத்து விட்டது! அருமை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமையான படைப்பு நண்பரே! வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கதையின் முடிவு நெஞ்சை கனக்க வைத்து விட்டது!

    பதிலளிநீக்கு
  6. மனம் வலிக்கிறது...இந்தச் சூழல்தானே இருக்கிறது இன்று!! அனைவரும் ஒரு நல்ல நிலையில் இருக்க முடியாதா...நம்மால் ஆனதை அனைவரும் செய்வோம்!

    வலைச்சர அறிமுகத்தில் உங்கள் தளம் பார்த்து வந்தேன்..வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. என் வாழ்வில் நடந்த சம்பவம் போல உள்ளது
    திரும்ப திரும்ப படித்தேன்...
    என் தளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் நண்பரே..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகளும், கல்லூரி கட்டணம் பற்றி கருத்துகளும் வழங்கிய அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் என் நன்றி!

    வலைச்சரத்தில் எனது வலைதளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இத்தனை நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் அரசன் அவர்களுக்கு மீண்டுமொரு நன்றி!

    தொடர்பிலிருக்குமாறு அனைத்து நண்பர்களையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்னட்பு, நீளாயுள், நற்புகழ், நிறைசெல்வம் பெற்று வாழ்க வளமுடன்!

    அன்பன்,
    மாதவன் இளங்கோ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..