சிறப்பு தொகுப்புகள்

Saturday, February 14, 2015

கணையாழியின் 34-ஆம் பக்கம்

பெல்ஜியம் வந்து சேர்ந்தவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்: 

"கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது."

சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.  

'Kanayazhi of Feb carries an article on your short story collection' என்று எழுதியிருந்தவர் தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரலும், மூத்த கலை விமர்சகரும், எழுத்தாளருமான திரு. வெ.சா (வெங்கட் சாமிநாதன்). 
திரு.வெ.சா அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் 

கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று கணையாழி பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தபோது, வேறொருவர் என் கதைகளைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையைப் பற்றி எனக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், கட்டுரையின் தலைப்பையும், அதற்குக் கீழ் அவருடைய பெயரையும் பார்த்தவுடன் 'இனிய அதிர்ச்சி'! சிறிது நேரம் கழித்தே வாசிக்க ஆரம்பித்தேன். அருகே என் மனைவியும், நண்பன் அருணும் இருந்தார்கள். அவர்களும் உவகை அடைந்தார்கள்.  

"இப்போது பெல்ஜியத்திலிருந்து... ஒரு மாதவன் இளங்கோ" என்கிற தலைப்பில் 'அம்மாவின் தேன்குழல்நூலைஅறிமுகப்படுத்தி ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் புத்தக முன்னுரையில் நான் எழுதியிருந்த என் அனுபவக் குறிப்பு ஒன்றைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதே கட்டுரையில் வல்லமையைப் பற்றியும், வல்லமையில் எழுதிவரும் சக படைப்பாளிகளான பழமைபேசி, கே.எஸ். சுதாகர் போன்றவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். 

கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போது, ஒரு மழை நாளில் மாலைப்போழ்தில் சென்னையில் அவரைச் சந்தித்த தருணம் மறக்கவியலாது. எழுத்தாளர் திலீப் குமாரும் உடனிருந்தார். திலீப் குமாரைப் பார்த்து கைகுலுக்கிய அந்த நொடியிலிருந்தே என்னுடைய நியூரான்களில் அவரைத் தேடிக்கொண்டே இருந்தேன். அதை என் குழப்ப முக பாவனையிலிருந்தே நிச்சயம் அவர் ஊகித்திருப்பார். சட்டென்று சொல்வனம் இதழில் பார்த்த அவருடைய புகைப்படம் என் நினைவுக்கு வந்தது. அவருடைய வேறு எந்த புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை.  இத்தனைக்கும் அன்று காலைதான் அவரைப் பற்றி ஞாநி அவர்களின் இல்லத்தில் பேசிக்கொண்டிருந்தேன். ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியல் மூலமே அவருடைய சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது. சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவம் என்றும், அவருடைய 'தீர்வும்' ,'அக்ரஹாரத்தில் பூனையும்', 'கடிதமும்', நான் மிகவும் ரசித்த சிறுகதைகள் என்றும் அவரிடமே தெரிவித்தேன். 'மூங்கில் குருத்து' சிறுகதைக்கு கிட்டத்தட்ட என் வயது. (அவரது படைப்புகளைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்)

திரு. திலீப் குமார் அவர்களுடன்

சரி. இந்தக் குழப்பங்களில் இருந்து மீள்வதற்குச் சில நிமிடங்கள் ஆனது, அதற்குள் திரு. வெ.சா அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார். 'தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல்', 'கலை இலக்கிய விமர்சகர்', 'எழுத்தாளர்' என்று தான் ஏந்தியிருக்கும் அத்தனையத்தனை அடையாளங்களையும் உதறிவிட்டு, எனக்கும், என் மனையாளுக்கும் ஒரு நண்பனாகவும், ஒரு தாத்தாவாகவும் மட்டுமே தன்னைக் காட்டிக்கொண்டார். அத்தனை எளிமை. அத்தனை கனிவு. அவரிடம் என்னென்னவோ 'இலக்கியத்தனமான விஷயங்கள்??!!' எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதுவுமே பேசத் தோன்றவில்லை. அதுவும் கூட எனக்குப் பிடித்திருந்தது. வாசகனாக எழுத்தாளனை சந்திக்கச் சென்றவன், ஒரு பேரனாகத் திரும்பினேன். ஆமாம். என் தாத்தா இன்றிருந்தால் அவருடைய வயதிருக்கும்.  

என் மனைவி கூட, "இலக்கியவாதிகளைச் சந்தித்து விட்டு வந்தது போலவே தெரியவில்லை. நெருங்கிய உறவினர்களுடன், தந்தையுடன், தாத்தாவுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியோடு பேசிவிட்டு வந்தது போலிருக்கிறது" என்று கூறினாள். நானும் அவ்வாறே உணர்ந்தேன். உண்மையில் அவரை முதன்முறை சந்திப்பது போலவே தெரியவில்லை. அது ஒன்றும் விந்தையில்லை. ஏனெனில் அவரை வாசிக்கும்போது அவருடன் வாழ்ந்துகொண்டே, அந்த இடங்களுக்கெல்லாம் பயணித்தது போன்று, அந்த மனிதர்களைச் சந்திப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் - சி.சு.செல்லப்பா ஒரு வாமன அவதாரம் கட்டுரைத் தொகுப்பு. 'அவர் செல்லப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நுழையும் போது, செல்லப்பா அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மூட்டைக் கட்டிக்கொண்டிருந்ததாக' ஒரு இடம் வரும். உண்மையில் அந்தக் காட்சி என்னுள் உறைந்து போயிருக்கிறது. அவர்கள் இருவரோடும் மூன்றாவது ஆளாக, ஒரு சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்தற்கு முந்தைய நாள் வரை, அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவருடைய கருப்பு வெள்ளை உருவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இந்த மடலை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் அப்படியில்லை. என் தாத்தாவே நினைவுக்கு வருகிறார்.

நெகிழ்ச்சியாக இருக்கிறது. 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' புத்தகத்தை வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகனுக்கு அதன் நடுப்பக்கத்தில் கட்டுரை.

"...எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே..." என்று புத்தக முன்னுரையிலேயே அவர் அம்மாவின் தேன்குழலையும், அமைதியின் சத்தத்தையும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்தது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  

"இந்தக் கட்டுரையை நிச்சயம் நான் தொடர்ந்து எழுதுவதற்காக, எனக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டே எழுதியிருப்பீர்கள் என்பதை அறிவேன். 

ஆயினும், என்னளவில் இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருதும் ஆகும். 

இதன் மூலம் தாங்கள் மிகப் பெரிய பொறுப்பை என் தோள்களில் ஏற்றி வைத்திருப்பதாகவே உணர்கிறேன். நீங்கள் முதன்முதலில் என் கதையைப் பற்றி எழுதியதை இன்றும் என் இல்லத்தில் பாரதியார் புகைப்படத்துக்கு அருகே வைத்துள்ளேன். இந்தியாவிற்குச் சென்று வந்தவுடன் எழுத்தாளர் ஞாநி அவர்கள் வரைந்த, சற்றுப் பெரிய பாரதியார் படத்தை வைத்து மாற்றினேன். அதற்கருகே இந்தக் கோப்பையையும் வைத்துவிடுவேன்.

மிக்க நன்றி, ஐயா!"

கணையாழி பிப்ரவரி இதழை மேக்ஸ்டரில் வாங்கி வாசிக்கலாம்: http://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/84244

கணையாழி கட்டுரையின் ஒளிவருடிப் பிரதிகளையும் இங்கே இணைத்துள்ளேன். (நன்றி: அகநாழிகை பொன். வாசுதேவன்)
Thursday, February 12, 2015

ten months ago, you wrote...

மேற்படி பொருளுடன் 'Your Journal Awaits' என்று பென்சுவிலிருந்து (Penzu) கடந்த மாதம் 26-ஆம் தேதி வந்திருந்த மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். உடனே பென்சுக்கு சென்று என்னுடைய நாட்குறிப்பேட்டை சற்று நேரம் புரட்டிவிட்டு, மார்ச் மாதம் 26-ஆம் தேதி எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்தேன். 'பார்வை' என்று தலைப்பும் வைத்திருக்கிறேன். 

(பென்சு நாட்குறிப்பேட்டிலிருந்து..)
இதை எழுதியதற்கு இரண்டு மாதங்கள் கழித்து, என் மனைவி, மகனுடன் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்றிருந்தபோது இந்தக் காட்சி நினைவுக்கு வந்ததால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து என்னைச் சுற்றி நடப்பதையெல்லாம் 'கேட்டுக்கொண்டிருந்தேன்' - வானவில் உட்பட. அன்று மாலை நாட்குறிப்பில் எதுவும் எழுதவில்லை. 'நிறங்கள்' கதையை எழுதி வல்லமைக்கு அனுப்பிவிட்டேன். அதுவும் ஒரு 26-ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது.

நிறங்களிலிந்து சில வரிகள்:

"காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசி முறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக் கச்சேரிதான்!
அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்து கொண்டது சிறு தூறல்! அதன் விளைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த மிதம், அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும் யாருக்குப் பிடிக்கும்? மிதம்தான் இதம்."

இதைக் கதை என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. எதோ தோன்றியதை எழுதினேன். Thoughtful response. அவ்வளவே. ஆனால், அதை வாசித்த ஒருவருக்கு பிடித்திருப்பது நிறைவளிக்கிறது.

திரு. மோகன் துரைசாமி அவர்கள் 'நிறங்கள்' பற்றி முகநூலில் எழுதியது:

"கண் பார்வை இல்லாததால், தன் காதுகள் மற்றும் உணர்வின் மூலம் மட்டுமே இந்த உலகைப் பார்த்து வரும் ஓர் மாற்றுத்திறனாளி, உள்ளங்கவரும் இயற்கையின் மாலை நேரம், பறவைகளின் கானங்கள், இளந்தூறலின் மென்மை, வர்ணஜாலம் காட்டும் வானவில் போன்றவற்றை ஏக்கம் கலந்த நிராசையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வித்தியாசமான கற்பனை முலம் வெளிப்படுத்தும் கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.. தொடர்ந்து நிறங்கள் பக்கம் தன் நினைவலைகளை திருப்பும் அந்த மாற்றுத்திறனாளி, பிடித்த நிறம் பிடிக்காதவை என்று வரிசைப்படுத்தி, பச்சை நிறம் என்றால் மகிழ்ச்சி,, சிவப்பு என்றால் கோபத்தைக் குறிக்கும் என்று ஒவ்வொரு நிறத்தையும் சோகம், பயம், வெறுப்பு, வியப்பு என்று ஒவ்வொரு உணர்ச்சியுடன் வகைப்படுத்துகிறார்.. அவரால் பார்க்க முடிந்த ஒரே நிறம் கருமைதான் என்ற வரிகள், இறைவா யாரும் கண்ணில்லாமல் பிறக்க வேண்டாம் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவித்தது."

ஏற்கனவே 'முடி' சிறுகதை பற்றி அவர் முகநூலில் எழுதியிருந்ததையும் இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன்:

அவருக்கு என்...Friday, February 6, 2015

சின்ன விஷயங்களின் மனிதனுடன்..

'ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். 
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய 'சின்ன விஷயங்களின் மனிதன்' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? 

புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்:

"யானையைக் கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து."

எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்!

இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனையும் இந்த மண்புழுக்களே! நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவைகள் இந்த யானைகள்! அதைப் பற்றிய கவலை அவருக்கு இருந்திருக்கலாம்.

யானைகளுக்கிடையே நெளியும் மண்புழுவைப் பற்றி யோசிக்கும் போது நான் ஏற்கனவே எழுதியிருந்த 'அமைதியின் சத்தங்கள்' நினைவுக்கு வருகிறது. வண்ணதாசனின் அந்த மண்புழுவை நான் இப்படியெல்லாம் பார்க்கிறேன்:

இரைச்சல் விழுங்கிய இசையின் அமைதி..
பெரும்கூட்டத்தில் சிக்குண்ட தனிமைவிரும்பியின் அமைதி..
மூடத்தனங்களுக்கு இடையே மேதைமையின் அமைதி..
இருளுக்குள் ஒளிந்துகொண்ட ஒளியின் அமைதி..
ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே அடக்கமானவனின் அமைதி..
உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே ஒடுக்கப்பட்டவனின் அமைதி..
துரோகிகளுக்கு இடையே தூயநட்பின் அமைதி..
பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட உண்மையின் அமைதி..
குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே நிறைகுடத்தின் அமைதி..
இயந்திரங்களுக்கிடையே இயற்கையின் பேரமைதி..
வெட்டிப்பேச்சுகளுக்கிடையே உழைப்பின் அமைதி..
ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே எளிமையின் அமைதி ..

இப்படிப் பல யானைகளின் சத்தங்கள் என்றைக்கு செவிப்பறையை கிழித்து நம்மை செவிடனாக்குகிறதோ, அன்றைக்குத் தான் நமக்கு அத்தனை அமைதிகளின் சத்தங்களும் தெளிவாகக் கேட்கத் தொடங்கும். அப்போதுதான் அமைதி கிட்டும். அவர் மண்புழுவைக் கண்டு அமைதியடைகிறார்.

நான் பலரிடம் அவரை அறிமுகப்படுத்துவதற்காக பலமுறை கூறிய இந்த வரிகளை கடந்தவாரம் அவரிடமே நடுக்கத்தில் தவறாகக் கூறிவிட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. அவரே அதை சரிசெய்தார். இருப்பினும், வேறொர் சமயத்தில் இந்த வரிகளின் தாக்கத்தில் நான் எழுதிய வரிகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உரக்கச் சிரித்து அங்கீகரித்தார். என் புத்தகத்தையும் பெற்றுக்கொண்டு 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று கூறினார். அவரிடம் பகிர்ந்து கொண்ட வரிகள்:

"நரிகளின் நடமாட்டம் கூட நாட்டில் பெருகிவிட்டது; ஆனால் நாய்களைத்தான் காணமுடிவதில்லை." 
(எண்ணத்தூறல்)

நான் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'சின்ன விஷயங்களின் மனிதன்' புத்தகத்திலிருந்து சில வரிகள் :

"... சாரல் விழுகிற இந்த தினத்தின் காலைக்கு யாரும் சாட்சியம் அளிக்கத் தயாராக இல்லை. யோசனையும் வருத்தமும் எனக்கு. வழக்கமாக வருகிறவர்கள் கூட நடையை ஒத்திப் போட்டிருந்தார்கள். சாரலில் நனைந்துவிடுவார்களாம். இத்தனை நாட்கள் வெயிலில் உலர்ந்தவர்கள் இதில் சற்று நனைந்தால்தான் என்ன? காற்றில் தலை கலையக் கூடாது என்று நினைப்பவர்கள் தானே நாம் எல்லாம்.
இந்த இடத்தில்தான் அவர் மேலும் முக்கியமானவர் ஆகிறார். அதே வேகம்தான். ஆனால் அந்த அம்புப் பாய்ச்சல் இல்லை. வேறு வேறு ராகங்களில் ஒரே பாடலை இசையமைக்க அவருக்கு முடியும் போல. தனக்கு முன் இருக்கும் செம்மண் வெளியில் விழும் அத்தனை சாரல் துளியையும் மிச்சமிருக்கும் தன்னுடைய வலதுகையில் வாங்கிவிடும் மெய்மறப்பில் இருந்தார். தன்னுடைய வலது கையை மலர்த்தி, விழுகிற ஒவ்வொரு துளியையும் வாங்குகிற முயற்சியில் உயர்த்தியும் தாழ்த்தியும் ஏந்திக்கொண்டே போனார்.
நான் நம்புகிறேன், அவருக்கு ஒரு கை அல்ல. ஆயிரம் கைகள். நான் நம்புகிறேன் , அவர் எல்லாச் சாரல் துளியையும் உள்ளங்கையில் வாங்கியிருப்பார்.
நான் நம்புகிறேன், எல்லோர்க்கும் அல்ல, அவருக்காகவே இன்று பெய்தது இந்தச் சாரல் மழை."

இதே புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கட்டுரைகள் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவை. 
  • ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை
  • இப்பொதும் கூட
  • பின்னிக்கொள்ளும் விரல்கள்

இந்த மூன்று கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றுமே வெவ்வேறு கணங்களில் அவர் கண்களில் பட்ட புகைப்படங்களைப் பற்றிய அவருடைய பார்வையை தெரிவிப்பவை. அவற்றில் 'ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை' கட்டுரையில் அவர் பேசியிருக்கும் புகைப்படத்தை மட்டும் இங்கே தருகிறேன்:  

குருதேவ் ரபீந்திரனாத் தாகூரை ஹெலென் கெல்லர் நியூயார்க்கில் சந்தித்தபோது எடுத்த படம். இதில் என்ன விந்தை இருக்கிறது. இது போன்ற எத்தனையோ புகைப்படங்களை அன்றாடம் செய்தித்தாள்களிலும், முகநூலிலும், புத்தகங்களிலும் கடந்து சென்று கொண்டுதானிருக்கிறோம். இந்தப் புகைப்படத்தை யாரிடமாவது காண்பித்து, 'உனக்கு என்ன தோன்றுகிறது?' என்று கேளுங்கள். பிறகு, மேலே நான் குறிப்பிட்டுள்ள அவருடைய கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நம்முடைய யானைப் பார்வையும், அவருடைய மண்புழுப் பார்வையும் தெளிவாக விளங்கிவிடும். ஒரு பார்வையாளன், குருதேவ், ஹெலென் கெல்லர் என்று ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் மூன்று நிமிடங்களில் மூன்று வாழ்க்கை வாழ்ந்து முடிக்கிறார். தாகூரின் தாடி இழைகளில் எழுதப்பட்டிருக்கும் தாகூரை ப்ரெயில் வாசித்து நகர்கின்றன ஹெலென் கெல்லெரின் கைகள். வாழ்க்கையின் சிறிதினும் சிறிதான விஷயங்களை; நுணுக்கங்களை ப்ரெயில் வாசித்து நகர்கிறது வண்ணதாசனின் பார்வை. தாகூரைப் போலவே வாசிக்கப்படும் நேரத்தின் பூரண அதிர்வில் நிற்கிறது வாழ்க்கை. 

புகைப்படங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்குக் கூட உயிர் கொடுக்க முயற்சிக்கும் அவருடைய பரிவும், மென்மையும், அவரால் கல்லைக் கூட எழுத்தின் மூலம் நடக்க வைக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. 'காற்றாகவும்' கட்டுரைக்கும் ஒரு புகைப்படமே தூண்டுதல். 

அசோகமித்திரன் புகைப்படம் ஒன்றைப் பற்றிய 'பின்னிக் கொள்ளும் விரல்கள்' கட்டுரையும் அப்படியே. கணையாழி இதழில் அசோகமித்திரனின் கட்டுரையுடன் வெளியான அந்தப் புகைப்படம் பற்றி அவர் எழுதியிருப்பவை:

"கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் அவருடைய புகைப்படம் அவ்வளவு நேர்த்தி மிக்கது. சமீபத்திய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  அவர் உடையைப்
பார்க்கையில் வெளிநாட்டில் எடுத்ததோ என யோசிக்க வைக்கிறது.  இங்கு,
அத்தனை பெரிய பித்தான்கள் உள்ள ஒர் மேல் கோட்டை அணிய அவரை
நிர்ப்பந்திக்கிற பருவ நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மெல்லிய ஏணியின் படியில் வலது கையையும், இடுப்பில் அவரது இன்னொரு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறார். அவர் வாழ்வின்
மொத்தக் காலமும் அவரின் காலணிகளுக்குக் கீழ் இருப்பதை, கண்களும்
அவருடைய சற்றே ஒதுங்கிய இடது கன்னமும் சொல்கின்றன. எந்தக்
கலையின் கீழும் வரமுடிகிற ஒரு முதிர்ந்த கலைஞன் போல இருக்கிறார்.
அசோகமித்திரனாக மட்டும் அல்ல,    இப்போதுதான்  இசைக்கோர்வை ஒன்றிற்கான குறிப்புகளை எழுதிவிட்டு வந்த இசைமேதையாக,  அல்லது
சர்வதேசப் பரிசு ஒன்றைப் பெறுவதற்கு முன் அலுப்பாக,  நேர்காணல்
நிமித்தமான ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் அயல்திரைப்பட இயக்குநராக,
புகை பிடிப்பதற்கு அல்லது ஒரு மிடறு அருந்துவதற்காக ஸ்டுடியோவை
விட்டு விலகி வந்து, தன் சினேகிதியை எதிர்பார்த்து நிற்கும் ஓவியனாக 
எல்லாம் உருவகித்துக் கொள்ள முடிகிறபடி அவருடைய புகைப்படம் ஒரு உலகீய அடையாளத்துடன்  இருக்கிறது."

'சின்ன விஷயங்களின் மனிதன்' என் முதல் புத்தகத்தைக் கையில் ஏந்தி நின்ற காட்சியைப் படம் பிடித்துவைத்திருக்கிறேன் என் வரிகளை அங்கீகரித்த அவரின் சிரிப்போடு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று நானும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவரது புன்னகையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.