கடைசிக் கடிதம்..


ன்று காலை கண் விழித்தவுடன் வழக்கம் போல் கைபேசியை எடுத்து, ஜிமெயில் பெட்டியை திறந்து பார்த்தேன். மின்னஞ்சல் பட்டியலில் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களிடமிருந்து வந்திருந்த கடிதம் தான் முதலில் கண்ணில்  பட்டது. 'அன்புள்ள மாதவன், ஒரு துயரச் செய்தி. விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட்..' என்ற வரியைக் கண்டவுடன் 'அந்தச் செய்தியாக' நிச்சயம் இருக்கக்கூடாது என்கிற பரபரப்புடன் அதைத் தட்டினேன். அதே செய்தி தான்! '..வெங்கட் சாமிநாதன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்'.   

இன்று சரஸ்வதி பூஜை என்பதால் என் மனைவி அதிகாலை நாலரை மணிக்கே எழுந்து, அப்போதுதான் பூஜையை ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு செய்தியை சொல்லக் கூட தோன்றவில்லை. அங்கே அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில் 'அம்மாவின் தேன்குழல்'  புத்தகம் மட்டும்  கண்ணில் பட்டு, மீண்டும் படுக்கையறைக்குச் சென்று மெத்தையின் மீது அமைதியாக அமர்ந்து விட்டேன். 

'அம்மாவின் தேன்குழல்' - என்னையும் வெ.சா அவர்களையும் இணைத்து வைத்த சிறுகதை. 

பெல்ஜியத்திற்கு வந்த பிறகு உண்டான வெறுமையை நிரப்புவதற்கு எழுத ஆரம்பித்து, எழுதியதை என் நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து வந்தேன். 'அம்மாவின் தேன்குழல்' சிறுகதையை வாசித்த என்னுடையநண்பர் ஒருவர் வல்லமை மின்னிதழில் நடந்து வரும் சிறுகதைப் போட்டி பற்றி தெரிவித்து, வல்லமைக்கு சிறுகதையை அனுப்புமாறு தெரிவித்தார். வல்லமை தளத்தில் சிறுகதைப் போட்டியின் நடுவர் வெங்கட் சாமிநாதன் என்று அறிவித்திருப்பதை பார்த்தவுடன், 'விமர்சகர் வெ.சா நடுவரா? எவ்வளவு பெரிய ஆளுமை? ஆளை விடுங்கள்.' என்று கூறிவிட்டேன். பிறகு, நண்பரின் வற்புறுத்தலின் பேரிலேயே என்னுடைய சிறுகதையை அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்தேனே தவிர எந்தவித  எதிர்பார்ப்பும் என்னிடம் இருக்கவில்லை. வெ.சா என் படைப்பை வாசிக்கப் போகிறார் என்பதே எனக்குப்  போதுமானதாக இருந்தது. நான் சற்றும்  எதிர்பார்க்காத வண்ணம் என்னுடைய சிறுகதையை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார் வெ.சா.

"மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளில். நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்." 

அவருடைய இந்த வரிகள் என்னளவில் எனக்கு ஒரு பெரிய விருது. இந்தக் கதையின் மூலம் இணைந்தது ப்ரசல்சும் மயிலாப்பூரும் மட்டுமல்ல; நானும் அவரும் கூட. அதன் பிறகு மாதமாதம் என்னுடைய சிறுகதைகளை அனுப்பி  வைத்தேன். அடுத்தடுத்த மாதங்களில் என்னுடைய வேறுசில சிறுகதைகளையும் தேர்வு செய்து விமர்சித்திருந்தார்.  ஒரு முறை "வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்." என்று தலையில் குட்டவும் செய்தார்.  இருந்தாலும் போட்டியில் பங்குபெற்ற நாங்கள் விடாமல் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தது அவருக்கு நிச்சயம் ஆச்சர்யம் அளித்திருக்கக் கூடும்.

"ஏதும் critical ஆகச் சொன்னால் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கிக் கொள்வதில்லை என்பது என் 50 வருட அனுபவம். அதற்கு முன்னர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் ஒரு critical comment-ஐ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  நியாயம் தான். அவர்கள் எல்லாம் கற்புக்கரசிகள் அல்லவா?. ஒரு தவற்றைக் கூட தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு தடவையானால் என்ன, புனிதம் கெட்டது கெட்டது தானே என்ற ஜ்வாலையில் வாழ்பவர்கள். நல்ல வேளையாக இங்கு அந்த மாதிரி எனக்கு ஏதும் உத்பாதங்கள் இது வரை எனக்கு நேரவில்லை." என்றுவேறொரு தருணத்தில் விமர்சனங்கள் எதிர்கொள்ளப்படுவதன் மீதான தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பிறகு திண்ணை, சொல்வனம் போன்ற இதழ்களில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளில் என்னைப் பற்றியும்  குறிப்பிட்டிருந்தார். நான் கடைஞன். இதை எல்லாம் அவர் செய்ய வேண்டிய தேவையே அவருக்கு இல்லை. ஆனால்அவரைப் போன்ற ஜாம்பவான்களின் நியூரான்களில் இடம் பிடிக்கும் அளவிற்காவது  என் படைப்புகள் இருப்பது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்தது. அதன் பிறகு நான் எதை எழுதினாலும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதையெல்லாம் வாசிப்பதற்கு அவருக்கு அதீத பொறுமை இருந்திருக்க வேண்டும். அவ்வப்போது தொலைபேசி மூலமாகவும் தொடர்பிலிருந்தேன்.  

கடந்த டிசம்பர் மாதம் விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பியவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்: 

"கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது."

இப்படிச் சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.  

'My dear Madhavan Elango,' என்று ஆரம்பித்து, 'எங்கிருக்கிறாய், பெல்ஜியத்திற்குத் திரும்பிவிட்டாயா?' என்று வினவிவிட்டு,'Kanayazhi of Feb carries an article on your short story collection............' என்று எழுதியிருந்தார். 

கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று கணையாழி பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தபோது, வேறொருவர் என் கதைகளைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையைப் பற்றி எனக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், கட்டுரையின் தலைப்பையும், அதற்குக் கீழ் அவருடைய பெயரையும் பார்த்தவுடன் எனக்கு 'இனிய அதிர்ச்சி'! சிறிது நேரம் கழித்தே வாசிக்க ஆரம்பித்தேன். "இப்போது பெல்ஜியத்திலிருந்து... ஒரு மாதவன் இளங்கோ" என்கிற தலைப்பில் 'அம்மாவின் தேன்குழல்' நூலை அறிமுகப்படுத்தி ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் புத்தக முன்னுரையில் நான் எழுதியிருந்த என் அனுபவக் குறிப்பு ஒன்றைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருந்தார். 



கடந்த டிசம்பர் மாதம் சென்னையில், ஒரு மழை நாளில் மாலைப்போழ்தில் அவரைச் சந்தித்த தருணம் மறக்கவியலாது. எழுத்தாளர் திலீப்குமாரும் அப்போது உடனிருந்தார். நானும் என் மனைவியும் சென்ற பத்து நிமிடங்களில்,  வெ.சா அங்கு வந்து சேர்ந்தார். மிகவும் சிரமப்பட்டுத்தான் நடந்து வந்தார். அவர் மெதுவாக நடந்து வருவதை பார்க்கும்போதுஅவருக்கு இருந்த மூட்டுவலியை உணர முடிந்தது. அதே சமயம், அதைக் கொஞ்சமும்  காட்டிக்கொள்ளாத புன்னகை சூடிய முகத்தின் மூலம், அவருடைய மனோவலிமையையும் உணர முடிந்தது. 'தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல்', 'கலை இலக்கிய விமர்சகர்', 'எழுத்தாளர்' என்று தான் ஏந்தியிருக்கும் அத்தனையத்தனை அடையாளங்களையும் உதறிவிட்டு, எனக்கும், என் மனையாளுக்கும் ஒரு நண்பனாகவும், ஒரு தாத்தாவாகவும் மட்டுமே தன்னைக் காட்டிக்கொண்டார். அத்தனை எளிமை. அத்தனை கனிவு. அவரிடம் என்னென்னவோ 'இலக்கியத்தனமான விஷயங்கள்??!!' எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதுவுமே பேசத் தோன்றவில்லை. அதுவும் கூட எனக்குப் பிடித்திருந்தது. வாசகனாக எழுத்தாளனை சந்திக்கச் சென்றவன், மாணவனாக ஆசிரியரை சந்திக்கச் சென்றவன், வெறும் பேரனாகவே திரும்பினேன்.   

என் மனைவியோடு அவரைப் பார்க்கச் சென்றிருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'குழந்தையை ஏன் அழைத்து வரவில்லை?' என்று கேட்டார்.  என் மனைவி கூட, "இலக்கியவாதிகளைச் சந்தித்து விட்டு வந்தது போலவே தெரியவில்லை. நெருங்கிய உறவினர்களுடன், தந்தையுடன், தாத்தாவுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியோடு பேசிவிட்டு வந்தது போலிருக்கிறது" என்று கூறினாள். நானும் அவ்வாறே உணர்ந்தேன். உண்மையில் அவரை முதன்முறை சந்திப்பது போலவே தெரியவில்லை. அது ஒன்றும் விந்தையில்லை. ஏனெனில் அவரை வாசிக்கும்போது அவருடன் வாழ்ந்துகொண்டே, அந்த இடங்களுக்கெல்லாம் பயணித்தது போன்று, அந்த மனிதர்களைச் சந்திப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் - 'சி.சு.செல்லப்பா ஒரு வாமன அவதாரம்' கட்டுரைத் தொகுப்பு. 'அவர் செல்லப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நுழையும் போது, செல்லப்பா அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மூட்டைக் கட்டிக்கொண்டிருந்ததாக' ஒரு இடம் வரும். உண்மையில் அந்தக் காட்சி என்னுள் உறைந்து போயிருக்கிறது. அவர்கள் இருவரோடும் மூன்றாவது ஆளாக, ஒரு சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்ததற்கு முந்தைய நாள் வரை, அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவருடைய கருப்பு வெள்ளை உருவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் அப்படியில்லை. என் தாத்தாவே நினைவுக்கு வருகிறார். 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' புத்தகத்தை வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு வாசகனுக்கு அதன் நடுப்பக்கத்தில் கட்டுரை வரைந்து ஊக்கப்படுத்தியவர் அவர். 

"...எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே..." என்று புத்தக முன்னுரையிலேயே அவர் அம்மாவின் தேன்குழலையும், அமைதியின் சத்தத்தையும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்தது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  

இதையெல்லாம் அவர் செய்தது, அவர் என் மீது கொண்ட அன்பினாலும், நான் தொடர்ந்து எழுதுவதற்காக, எனக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டே என்பதை நான் அறிவேன். 

பேரன்களுக்கும் தாத்தாக்களுக்கும் இடையான உறவு இருக்கிறதே, அது ஒரு அற்புதமான உறவு.  தம் பிள்ளைகளை  கண்டிப்பாக வளர்த்தவர்கள் கூட, தங்கள் பேரன் பேத்திகள் மீது மறந்தும் கூட கடிந்து கொள்ள விழைவதில்லை. காலம் அவர்கள் மென்மையானவர்களாக்கி விடுகிறதோ என்று  தோன்றுகிறது. பேரன் பேத்திகளும் கூட தங்கள் பெற்றோர்களை விட, தாத்தாக்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அந்த உறவு நீண்டகாலம் நீடிப்பதில்லை. நானும் அவரிடம் அத்தகைய பேரனாகவே பழகி இருக்கிறேன். தொலைபேசியில் அழைத்தால் கூட அவரைப் பேசவிட்டதில்லை. 'ப்ளெமிஷ், டச்சு எல்லாம் ஒன்றே தான். வெவ்வேறு மொழிகளில்லை.' என்றெல்லாம் சொல்லிவிட்டு, 'அத்தனை பெரிய படிப்பாளி. அவருக்கு அது தெரியாதா? எதற்கு எனக்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்!' என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டு.  

என் தந்தைவழி, தாய்வழி தாத்தாக்களைப் பறிகொடுத்த பின்னர், எனக்குக் கிடைத்த அன்பான தாத்தா இவர். இன்று அவரையும் பறிகொடுத்து நிற்கிறேன். 

கடந்த ஜூன் மாதம் அவர் பிறந்த நாளன்று காலை அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே 'Thank you dear! ' என்று பதில் அனுப்பி இருந்தார். அன்று மாலை, மீண்டும் என் மகன் வடிவமைத்த வாழ்த்து அட்டையை, அவனுடைய புகைப்படத்துடன் அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதை பார்க்கவே இல்லை போலிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தி அன்று அவரிடமிருந்து ஒரு நீண்ட கடிதம். வழக்கம் போல் ஆங்கிலத்தில் தான்  எழுதியிருந்தார். "காந்தி ஜெயந்தி அன்று எனக்கு வாழ்த்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. குழந்தையுடைய புகைப்படத்துடனான வாழ்த்து அட்டை அருமை." என்று கூறியவர், அவருடைய மூட்டுவலியைப் பற்றியும், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு, உடனே நான் அதை நினைத்து வருந்தக்கூடாது என்று, 'சரி அதை விடு ஆர்த்ரிடிஸ் பத்து வருடமாக என்னுடைய நண்பன்' என்று எழுதியிருந்தார்.



கடந்த பத்து மாதங்களாக ஒரு வரி கூட எழுதவில்லை. அது எனக்கு பெரியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவருடைய இந்தக் கடிதத்துக்கு, 'நான் டிசம்பர் மாதம் இந்தியா வருவேன். நிச்சயம் சந்திக்கலாம். Take Care.' என்று எழுதிய வரியை அனுப்பாமலே  விட்டிருக்கிறேன். அதுதான் இப்போது என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது.  

ஒருமுறை அவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தேன்:
"இந்தக் கடிதத்தை ஒரு சடங்காக நிச்சயம் நான் எழுதவில்லை. உண்மையில் இதற்கு மேல் நான் எழுதும் நல்ல படைப்புகள் மூலமாகவே நான் உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். என்னுடைய சமீபத்திய ஆக்கமான 'முடி', சொல்வனம் பெண்கள் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது. 'முடி' - உங்களுக்கு நான் செலுத்தும் ஒரு நன்றிச்செண்டு!". 

தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல், மூத்த கலை இல க்கிய  விமர்சகர், மூத்த எழுத்தாளர்  என்பதெல்லாம் மற்றவர்களுக்கே. எனக்கு அவர் தாத்தா மட்டுமே. முடி மட்டுமல்ல, இதற்கு மேல் நான் எழுதும் எல்லா வரிகளுமே நான் அவருக்குச் செலுத்தும் நன்றிச்செண்டு!


மேற்கண்ட வரிகளோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை அவரது கடைசிக் கடிதத்தை வாசித்தேன். அதில் திடீரென ஒரு வரி வேறுவிதமான அர்த்தத்தைக் காட்டி, சுருக்கென்று என் மனதைத்  தைக்கிறது.  


"Wish we were in accessible proximity, but that is not to be."  




கருத்துகள்

  1. Good piece. Saminathan would have enjoyed reading this--Cyndhujhaa

    பதிலளிநீக்கு
  2. தமிழ் எழுத்துலகின் தலைச்சிறந்த விமர்சகருக்கு சிறந்த அஞ்சலி! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள்...
    அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..