சிறப்பு தொகுப்புகள்

Sunday, November 13, 2016

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய "முடி" சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்: 
.............................................................................

முடி” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது. 

முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்கள் மொழி நடை மிக வித்தியாசமானதாய் புலம்பெயர் இலக்கியங்களுகென்றேயான ஒரு சிறப்பும், உடன் தெளிவான நீரோட்டம் போன்ற ஒழுங்குடன் இருக்கிறது. 

கதைத்தொடர்ச்சி எங்கும் அறுபடவேயில்லை, இடை இடையே  கதைமாந்தர்கள் பலரை அறிந்து கொள்ளும் போதும் பணிச்சூழல் மாறுபாடுகளைக் குறிப்பிடும் போதும், flashback சொல்லப்படும் போதும், அலுவலகத்தின் hierarchy விவரிக்கப்படும் போதும், எங்கும் கதை jump ஆகி பல இடங்களுக்கு சென்று பின்னர் மூலக்கதைக்கு வராமல், ஒரு மரத்தின் தண்டிலிருந்து அதன் பல கிளைகளைப் பார்ப்பது போல மூலக்கதையுடன் ஒத்திசைந்து வரும் பல கிளைகளை தொந்தரவின்றி  வாசிக்கவும் பின் தொடரவும் முடிகிறது. தேர்ந்த எழுத்தாளரென்று தெரிகிறது. நிறைய எழுதுவீர்களா? முடிந்தால் அனுப்புங்கள்.

கதையில் மையமுடிச்சு மோகனின் தலைமுடி கொட்டும் பிரச்சினையைக் குறித்தே எனினும் கதையின் ஊடே அந்த நாட்டின் பல அம்சங்களை மேலொட்டமாக, எனினும் குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். கடினத்தன்மை கொண்ட தண்ணீர், உணவகங்கள்,  (அவற்றின் பெயரிலிருந்தே அவை இந்திய உணவகங்கள் என்று தெரிகிறது) தொடர்ந்து போனால் ஏற்படும் அதிக செலவுகள், புதன்கிழமைகளில் பள்ளி நேரங்கள், பெண்கள் அதற்கேற்ப அவர்கள் வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளுதல், மோகனின் அலுவலகத்தில் இருக்கும் பணி தொடர்பான சிரமங்கள், வசதிகள், சலுகைகள் (வீட்டில் இருந்தபடியும் கென்டில் இருந்தபடியும் வேலை செய்வது, உணவிற்கான food allowance, காப்பகங்களுக்கான பெருஞ்செலவுகள், ரெடிமிக்ஸிலும்  உறைஉணவிலும் ஓடும் வாழ்க்கை வண்டி, நீளமான நகரதின் பெயர், மலைமேல் அமைந்த இன்னோர் நகரம், அதற்கு செல்லும் தூரம், பார்ட் ஒரு இறை நம்பிக்கை இல்லாதவர்,  அதனாலேயே தேவாலயத்தில் சடங்குகள் நடக்கவில்லை என ஒரு சின்னஞ்சிறு கதையில் அயல்வாழ்வின் எத்தனை தகவல்களைச் சொல்லி இருக்கிறீர்கள்?

கதையின் மையப்பிரச்சனையாகிய முடி கொட்டுதல் படிக்க படிக்க எனக்கெ முடி கொட்டுவது போல மிகத் தீவிரமாக மனதில் பதிந்துவிட்டது. படிக்கும் போதே மனதில் நான் அதற்கான தேர்வுகளை யோசித்தவாறு  இருந்தேன், (மொட்டை அடிச்சுக்கலாமில்ல?, எர்வாமாட்டினுமா உதவலை செக்கில் ஆட்டின தேங்காயெண்ணை? இத்யாதி.,)

ஆங்காங்கே தென்படும் உங்களின் பகடிகளும் அருமை. கொன்றொழித்த வார இறுதிகள் எனும் வாக்கியதில் தென்படும் இழந்த வார இறுதிகளின் ஆவேசம், குதிரைவால் முடி என்பதில் தெரியும் ஆற்றாமை, மின் தூக்கியில் முப்புறமிருந்தும் காணக்கிடைக்கும் 300 சொட்டைகளின் தரிசனத்தில் தென்படும் இயலாமையும் வேதனையும், அய்யனார் சிலை போல மாறாமல் பிரம்மாண்டமாய் அதுவும் இளித்தபடி அமர்ந்திருக்கும் அசல், flash பிரச்சினை ஆகுமளவிற்கான பளபளக்கும் சொட்டை
// சர்வாதிகார மனப்பாங்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை  கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?// எனும் சுயவிளக்கத்தின் மூலம் தெரியப்படுத்தும் உயரதிகாரியின் குணாதிசயங்கள்.

'அமேசானின் எர்வாமாட்டினும், ஐம்பதிற்கும் மேலான செல்ஃபியும்', இந்தத் தலைப்பிலெயே இன்னுமொரு கதை எழுதலாம் போலிருக்கிறது. இப்படி அள்ளி வீசியிருக்கிறீர்கள். உங்களின் பகடிகளை மிக மிக இயல்பாக போகிற போக்கில்.
ரசித்துப் படித்தேன். எப்போதும் பதற்றமாகவும் தொட்டால் விரிஞ்சிக்கண்ணணாகவும் எரிச்சலூட்டுபவராகவுமே சித்தரிக்கப்பட்ட பார்ட், கதையின் இறுதியில்  அந்த குணங்களுகெல்லாம் கான்சரில் பாதிக்கப்பட்ட அழகிய மனைவியின் கணவராக காட்டப்படுகையில்  தோன்றும் அவர் மேலான வெறுப்பு எந்த தயக்கமும் இன்றி உடன் குற்ற உணார்வாகிறது நமக்கும் மோகனுக்கும்.

மோகனுக்கு உள்ளுரவும் அவர் மீது நன்றி உணர்வே மேலோங்கி இருந்திருக்கிறது. அதனால்தான் அவன் வேறு தளத்திற்கு மாறாமல் அங்கேயே இருந்திருக்கிறான். பெரும்பாலான இந்தியர்களை போலவே மோகனும் நடுநிலைமைஉள்ளவனாகவே இருக்கிறான். கஷ்டத்திலும் உதவிகளை மறக்காமல், வெளிப்படியாக கோபத்தயும் வெறுப்பையும்  காட்டமுடியாமல், அமோரைப் போல தப்பித்துக்கொள்ளாமல் இப்படி இந்தியனாக இருக்கிறான்.

பார்டின் மனைவி இறந்த செய்தி அறிந்தபின் மோகன் மனதில் அசைபோடும் விஷயங்கள் எல்லாமே நாம் அவனிடத்தில் இருந்தால் நிச்சயம் செய்திருக்கும் விஷயங்களே. அப்படியா? இப்படி இருக்குமா? அப்படியெல்லம் இருக்காது.. என்று மனக்குதிரையை தட்டி விடுவதெல்லாம் மிக உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறீர்கள்.

இறந்த பெண்னின் புகைப்படத்தைப் பார்த்து மோகன் நினைப்பதெல்லம் சாதாரணமாய் நாமெல்லாருமே துக்க வீட்டில் நினைப்பதுதான். ஆனால் அழுது சிவந்த கண்ணும் மூக்குமாய் மூன்று சின்னக்குழந்தைகள் அவரருகே நின்ற அந்த கணத்தில் நான் ஓடிப்போய் பார்ட்டைக்க்கட்டிக்கொண்டு கதறிவிட்டேன். ஒரு நொடியில் என் குற்ற உணர்வனைத்தும் மாளாத்துயரமாகியது
மோகனைக்கட்டிக்கொண்டு கதறி நடந்தவற்றிற்கெல்லாம் பார்ட் மன்னிப்பும் கேட்பது மிக நெகிழ்வான தருணம். அந்த பெண் கான்சரில் இற்ந்தாள் என்பதையும் சிகிழ்சையில் முடியனைத்தும் இழந்திருக்கிறாள் என்பதையும்சொல்லாமல் விட்டதும் கதையின் பலம்.

மோகனுக்கு இப்பொது தன் முடி இழப்பு எனும் கோடு, கான்சர் எனும் வலிமிகுந்த உயிரைப் பறிக்கிற உற்றவர்களை துயரப்படுத்துகிற ஒரு வியாதியாகிய பெரும் கோட்டின் முன்னாலான சின்னஞ்சிறு கோடாகிவிட்டது.

நல்ல கதை மாதவன். என்றும் நினைவில் இருக்கும் எனக்கு. ஜெயமோகன் அவர்கள் சில சமயம் கடுப்புடன், ”நான் 20 பக்கம் எழுதினால் விமர்சனம் 60 பக்கம் எழுதறாங்க..”  என்று சொல்வது போல, நீண்ட நெடும் விமர்சனமோ என்னவோ தெரியவில்லை. கதை மிக மிக அருமை மாதவன்.

ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

அன்பு ஜெயமோகன், 

அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள். 

"ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு"
..................................................................

ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.   

அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.  

அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இதில் அவர்களுடைய முடிவைப் பற்றியும், ரப்பர் தோட்டத்துக்குள் தடயமற்றுப் புதைந்து போன தந்தையாரின் வீட்டைப் பற்றியும் சொல்லும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது சற்று உணர்ச்சிவசப்பட்டேன். கட்டிலின் மீதமர்ந்து அவர் அஜிதனுடன் உரையாடும் காட்சிகளைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. நானும் என் தந்தையும் அருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அதிலும் தன் மகனிடம் அவன் அன்னைக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி பேசும் இடம் கொள்ளை அழகு. வருங்காலத்தில் என் மகனுக்கு அவன் அன்னையுடனான என் காதலைப் பற்றி சொல்லும் பொழுது அவன் இவ்விதமே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும். 

அவர் சிந்திக்கும், வாசிக்கும் காட்சிகள் நெருக்கத்திலிருந்தும், நடந்து செல்வது போன்ற காட்சிகள் தூரத்திலிருந்தும் அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் மீது அமர்ந்து ரஷ்யாவின் பனிப்பொழிவை கற்பனை செய்தபடி ரஷ்ய இலக்கியங்களை வாசித்தது பற்றி கூறிய இடம் என்னுடைய சிறுவயது நினைவுகளைக் கிளறியது. இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட ஒரு குளிர்காலத்தில் இரவு வேளைகளில் கட்டிலின் மீதமர்ந்து மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது தேநீர் போட்டுக் கொடுக்கும் என்னுடைய தாயைப் பற்றி எழுதினேன். 

அழகான இயற்கைக் சூழல், நீர்நிலைகள், கோயில்களின் பின்னணியில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள், இடையிடையே செருகப்பட்டிருந்த பொருத்தமான புகைப்படங்கள், இலையுதிர் காலத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்குப் பொருத்தமாக  விழும் இலைகள் என்று பேச்சுக்குப் பொருத்தமான காட்சிகள்,  நாயுடன் கொஞ்சி விளையாடுவது, இப்படி  இயல்பான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.  

ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஹரிதம் இல்லத்தில் குறைந்த ஒளியில் தன்னுடைய இசைக்குறிப்புகளை சரிபார்க்கும் ஒரு அமைப்பாளராகத் தெரிந்தவர், அதன் இறுதிக் காட்சியில் அவர் தட்டச்சு செய்யும் இசைப்பின்னணியில் வேளிர் மலையின் மீது தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்டபோது, தன்னுடைய இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பியானோ கலைஞராக எனக்குத் தெரிந்தார். 

பின்னணி இசை என்று எதுவும் சேர்க்காமல் விட்டதற்கு அஜிதனுக்கு நன்றி.   

ஜெயமோகனுக்கு இன்னும் நெருக்கத்தில் நான் இருப்பதாக என்னை உணர வைத்திருக்கிறது அஜிதன் தீட்டியிருக்கும் இந்த உயிரோவியம்.


அன்புடன், 
மாதவன் இளங்கோ 

நவம்பர் 3, 2016

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

சுஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை.
இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.
இத்தனை பேர் பாராட்டும் கட்டுரையை எப்படி வாசிக்காமல் போனேன்? அந்தக் கட்டுரை தேசிகனின் தளத்தில் உள்ளது என்று அவரே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது 2005-ல் எழுதப்பட்ட கட்டுரை ஆயிற்றே, இன்னமும் அந்தத் தளத்தில் இருக்குமா என்று யோசித்துக்கொண்டே தேசிகனின் தளத்தில் தேடினேன். நல்லவேளை கிடைத்துவிட்டது.
அருமையான கட்டுரை. எழுபது வயதானவர்கள் மட்டுமல்ல, முப்பது வயதானவர்களும் வாசிக்கவேண்டியது. எனக்கு ஆச்சர்யமாகப் பட்டது என்னவென்றால், அவர் தெரிவித்திருந்த பல கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போயிற்று. குறிப்பாக மறுபிறவி பற்றி சொல்லியிருந்தது. எனக்கும் அதில் துளி நம்பிக்கைக் கிடையாது. தக்காளிச் செடியின் விதையைப் போட்டால் இன்னொரு தக்காளிச் செடி முளைக்கும் என்கிற அளவில்தான் எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை. அதனாலேயே என்னுடைய வாழ்க்கையை குதூகலத்துடன் வாழ விரும்புகிறேன். அதனாலேயே இந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். மறுபிறவிக் கவலைகளில் இந்த வாழ்க்கையை இழப்பதையும், இந்தப் பிறவி பிரச்சினைகளுக்கு முந்தைய பிறவி செயல்களோடு தொடர்புபடுத்திக்கொள்வதெல்லாம் என்னளவில் தேவையற்ற செயல். அதிலும் ஒரு நான்கு வயது குழந்தை படும் கஷ்டங்களுக்கெல்லாம், முந்தைய பிறவியை காரணம் காட்டுவது என்பது என்னளவில் அட்டூழியமான செயல்.
அதே சமயம் , தக்காளிச் செடியிலிருந்து நாம் சிறிது வேறுபட்டவர்கள்தான். நாம் நம் மறுபிறவியை கண்முன்னே கண்டுகொண்டிருக்கிறோம். எப்படி? உதாரணத்துக்கு, என் மகனுக்கு திரைப்படங்களையே காண்பிக்காமல்தான் வளர்த்து வந்தேன். ஆனால், அவன் ஏழு வயதிலேயே சதா நடித்துக் கொண்டும், பாடல்களை எழுதிக்கொண்டும், இசையமைத்துப் பாடிக்கொண்டும், கதைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறான். இதை சர்வ சாதாரணமாக அவனுடைய முன்பிறவியோடு தொடர்புபடுத்திக்கொள்வது எளிது. ஆனால், அவையெல்லாம் நானிட்ட விதையன்றோ. என் கனவுகளும் உழைப்பும் என்னிடமிருந்து அவனுக்குச் சென்றிருக்கிறது. என்னிடமிருந்து மட்டுமல்ல என் மனைவியிடமிருந்தும். எங்கள் இருவரிடமிருந்து மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களிடமிருந்தும்.
இதனால்தான் எனக்கு மூலக்கூற்று உயிரியலின் சாத்தியங்களை அறிந்துகொள்ளும் ஆவல் பெருகிக்கொண்டே போகிறது. தகவல்கள் மூளையில் மட்டும் சேமிக்கப்படுவதில்லை; நம்முடைய ஒவ்வொரு செல்களிலும், ஜீன்களிலும் சேமிக்கப்படுகிறது. அந்த அளவில் நம்முடைய பிள்ளைகள்தான் நம்முடைய மறுபிறவிகள். அதை இந்த உடல் இருக்கும்போதே காணும் பாக்கியம் பெற்றவர்களன்றோ நாம்.
என்னுடைய 'பயணி' கட்டுரையை நேற்று வாசித்து விட்டு பாராட்டிய என்னுடைய நண்பர் மார்ட்டோ, "எப்படி மாதவன் இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்?" என்று ஒரு சுவாரசியமான கேள்வியை வாட்சேப்பில் கேட்டார். உண்மை என்னவென்றால் எனக்கும் அவையெல்லாம் மறந்து போயிருந்தது. ஆனால் வாசிக்கும் பொழுதோ, காரில் பயணிக்கும் பொழுதோ திடீரென்று மின்னல் போல ஒரு நினைவு வெட்டும். பிறகு நள்ளிரவின் அமைதியில் என்னுடைய டின்னிட்டஸை மறக்கடிக்கும், நினைவுகளையும் கிளற வைக்கும் நல்லதொரு இசையின் பின்னணியில், என் கடந்த காலத்தின் ஏதாவது ஒரு நாளில் நிகழ்ந்ததைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் பொழுது, அது சார்ந்த நினைவுகள் ஒரு மெல்லிய நீரோடையைப் போல சலசலத்துக்கொண்டே எனக்குள் ஓடுகிறது. அதை பின்தொடர்ந்துகொண்டே செல்கிறேன். அப்படிச் செல்லும் பொழுது தோன்றுவதையெல்லாம் எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரம் ஓடினால் நம்முடைய மரபணு நினைவகத்தில் இருப்பதைக்கூட கொண்டுவந்துவிடலாமோ என்னவோ. சில சமயங்களில் நினைவுகள் கிளைத்து வேறெங்கோவெல்லாம் சென்று விடும். அதில் தொலைந்து போகாமல் திரும்பி பிரதான நீரோட்டத்துக்கு வருவதற்குத்தான் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இப்போதும் சுஜாதா கட்டுரையில் ஆரம்பித்துவிட்டு எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறேனே, அது போன்று.
டி.என்.ஏ ரகசியத்தைப் பற்றியெல்லாம் 'சுஜாதா எழுபது' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். கடவுளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்த விஷயத்தில் நானும் அவர் கூறியிருந்த 'அக்னாஸ்டிக்' வகையறாதான். அதைத் தாண்டி சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூர்க்க நாத்திகத்தை நான் விரும்புவதில்லை. ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது, "எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விட மாட்டேன்". நமது நம்பிக்கைகள் நமக்கானவை, ஆனால் அவற்றை சதா மற்றவர்கள் மேல் விட்டு, அவர்களை சூடுபடுத்திக் கொண்டிருப்பது அவசியமுமில்லை; அதில் எனக்கு விருப்பமுமில்லை. என் தந்தையைப் போன்ற தேர்ந்தெடுத்த நபர்களிடம் மட்டுமே இதுபற்றி விவாதிப்பேன், கேள்வி எழுப்புவேன்.
நான் முதலில் வாசித்துக் கொண்டிருந்த கட்டுரை அவருடைய அம்பலம் இணைய இதழில் வந்ததாதலால், அம்பலம் தளத்தில் இப்போது என்னதான் நடந்துகொண்டிருக்கிறது பார்க்கலாம் என்று www.ambalam.com தளத்துக்குச் சென்றேன். "This site can’t be reached" என்று பதில் வந்தது. தளம் மட்டுமல்ல, "Sujatha can't be reached as well" என்கிற எண்ணம் தோன்றிய பொழுது திடுக்கென்று இருந்தது.
அதே நினைவுகளிலேயே தூங்கிப்போனேன். அந்த பாதிப்பில் எனக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்தது. அதில் நானொரு கிழவனாக மரணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி சில வெள்ளைக்காரர்கள் மரியாதையுடனும் கவலையுடனும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மனிதர் என்னுடைய படுக்கைக்கருகே அமர்ந்து என் வலது கையை தன்னுடைய கரங்களால் பற்றியபடி புன்னகைத்துக்கொண்டே, "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று தமிழில் கேட்கிறார். அதற்கு நான் கரகரத்த குரலுடன் "எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு.." என்று தெலுங்கில் தியாகராயரின் வரிகளை பதிலாகச் சொல்கிறேன். அதன் பிறகு என் உயிர் பிரிந்து விடுகிறது.
'சுஜாதா எழுபது' கட்டுரைக்கான இணைப்பு: http://sujathadesikan.blogspot.be/2005/05/blog-post_03.html

Monday, October 17, 2016

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

ஒரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.
Look at that! Exactly. Brilliant.


(முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)

Sunday, October 16, 2016

குழந்தைகளால் நிரப்புக..

என் மகனுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்களும் பெல்ஜியர்களும்தான். அவனுடைய உற்ற நண்பர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் பாகிஸ்தானியர்களே. அதிலும் அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் - 'ஹசன்'. அவனும் பாகிஸ்தானியனே.
பெல்ஜியத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அதுவும் அரைமணிநேரம் மட்டுமே மதக்கல்வி போதிக்கப்படுகிறது. கிறித்தவம், இஸ்லாம் என்று எதை வேண்டுமானாலும் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மதக்கல்வி விரும்பாதவர்கள் 'நல்லொழுக்க வகுப்பைத்' தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என் மகன் நல்லொழுக்க வகுப்புக்குத்தான் செல்கிறான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹசன் இவனிடம், 'நீ ஏன் நல்லொழுக்க வகுப்புக்குச் செல்கிறாய். உன் நாட்டில் கடவுளே கிடையாதா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு என் மகன், 'என் நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள்களைப் பற்றியெல்லாம் நம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். அதனால்தான் நான் நல்லொழுக்கம் படிக்கிறேன்' என்று கூறியிருக்கிறான். அதற்கு ஹசன் இவனிடம், 'அப்படியானால் நாம் போய் ஆசிரியரிடம் பேசி உன்னுடைய கடவுளையும் இங்கே கொண்டு வரவேண்டும். இது சரியில்லை.' என்றானாம். அதற்கு இவனும் தலையாட்டி பாராட்டிவிட்டு வந்திருக்கிறான். பிறகு நல்லொழுக்கம் எப்படி கடவுள் கல்வியை விட முக்கியம் என்று பாடம் எடுக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று என் மகனுக்கும் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தாய்: உனக்கெதிரே இரண்டு பேர் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டுள்ளார்கள். ஒருவன் 'ஹசன்', உன்னுடைய பாகிஸ்தானிய நண்பன். இன்னொருவன் நீ இதுவரை பார்த்திராத ஒரு சிறுவன். நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ரெண்டு போரையும் காப்பாத்துவேன்' (அவன் மொழியில்..)
தாய்: அது முடியாது. யாராவது ஒருவரை மற்றும் காப்பாற்ற முடியும் என்றால் யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ஹசனைத்தான் காப்பாத்துவேன் அம்மி'
தாய்: சரி. அதில் ஒருவன் ஹசன். மற்றொருவன் ஒரு இந்தியச் சிறுவன். அப்போது நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'என்ன அம்மி இதுல டவுட். அப்பயும் ஹசனைத்தான் காப்பாத்துவேன்.'
தாய்: ஏன்?
மகன்: 'ஏன்னா அவன் என் பிரெண்டு'
ஆஹா. இதுபோதும் எனக்கு. 'இன்னும்' களங்கப்படாத குழந்தை உள்ளம். மதம் புகுந்துவிட்டதைக் காணமுடிகிறது. இருந்தாலும் தேசியவாதம், இனவாதம், சாதியம் இதெல்லாம் இந்தக் குழந்தைக்குப் புரிய வாய்ப்பில்லை. புரிந்ததெல்லாம், தெரிந்ததெல்லாம், அறிந்ததெல்லாம் 'நட்பும் அன்பும்' மட்டுமே.
எனக்கு இப்போது குழந்தைகள் பெரியவர்களாகவும், பெரியவர்கள் சிறுமைகளால் நிரம்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.
இந்த உலகம் உய்வதற்கு ஒரே வழி அதைக் குழந்தைகளால் நிரப்புவது மட்டுமேயன்றி வேறில்லை. அப்படியே வளந்தவர்களின் வாய்களை இறுகக் கட்டி விட வேண்டும். மேற்கண்ட 'வாதங்களெல்லாம்' குழந்தைகளுக்குள் திணிக்கப்படாமல் இருக்க அது உதவும்.

லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்..

'அன்டூஷாப்லே' (Intouchables) என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பற்றியும், குறிப்பாக அதன் பின்னணி இசை பற்றியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தோழா' திரைப்படம் அன்டூஷாப்லேவைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறுகிறார்கள். தழுவல் மட்டுமா என்பதை நீங்களே பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.

நான் சொல்ல வந்தது அந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்த 'லுடோவிகோ எநௌடி' (Ludovico Einaudi) எனும் இசை மாமேதையைப் பற்றி. கடந்த வருடத்தில் பல இரவுகள் எனக்கு லுடோவிகோ எனும் கடவுளால்தான் நகர்ந்திருக்கிறது. 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றித் தெரியாது. ஆனால் நோய் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித்திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயம் விரைவில் வெளியில் வரும். டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வர முயன்றவர் லுடோவிகோ.
லுடோவிகோவின் தந்தை ஜூலியோ எநௌடி ஒரு பதிப்பாளர். இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்களுக்கு இதாலோ கால்வினோவை நிச்சயம் தெரிந்திருக்கும். ஜூலியோ இதாலோவுக்கு நெருக்கமானவர். இதாலோவின் படைப்புகளை பதிப்பித்த அவரே ஒரு எழுத்தாளரும்கூட. லுடோவிகோவின் தாத்தா இத்தாலியின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவர்.
கடந்த வருடம் லுடோவிகோவின் இசை நிகழ்ச்சியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முயன்றேன். கிடைக்கவில்லை. அடுத்த மாதம் பத்தாம் தேதி ப்ரசல்ஸ் நகரில் அவருடைய இசை நிகழ்ச்சி. அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது. அருகாமையிலுள்ள ஹேர்லேன், ஐன்ட்ஹோவன், ஆம்ஸ்டர்டாம், கோல்ன் போன்ற நகரங்களில் நடைபெற இருக்கும் அத்தனை கச்சேரிகளையும், பல இணைய தளங்களில் தேடிவிட்டேன். அத்தனையும் ஹவுஸ்புல்! இவர்கள்தான் ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிட்டுவிடுவார்களே. வருடமாவது முந்திக்கொள்ளவேண்டும்.
லுடோவிகோவின் மந்திரக் கைகள் பியானோ வாசிக்கும்போது உண்டாகும் இசையின் கரங்கள் நம் தலையில் மசாஜ் செய்து உண்டாக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. He is truly a God!
கடந்த மாதத்திலிருந்து என் மகன் சாய் பியானோ வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறான். அவனை தூங்கவைப்பது அத்தனை எளிதான காரியமில்லை. இங்குள்ள குழந்தைகள் ஏழரை மணிக்குத் தூங்கச் சென்று விடுகிறார்கள். என் மகனுடன் தினமும் பகீரப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. சரி, பியானோ வகுப்புக்கு செல்கிறானே என்று லுடோவிக்கோவைப் பற்றி அவனுக்கு கூறிவிட்டு, யூனோ மாட்டினாவை கேட்கச் சொன்னேன். நம்ப மாட்டீர்கள். இரண்டு நிமிடங்கள் கூட ஆகி இருக்காது உறங்கிவிட்டான். இரண்டு நாட்களாக மீண்டும் இல்லத்தில் இரவுகளில் லுடோவிகோ விரல்களின் நடனம் .
எனக்காக ஒரே ஒரு நாள், ஊரடங்கிய பிறகு இந்த பாடல்களை மட்டுமாவது யூட்யூபில் கேட்டுப்பாருங்கள். நான் கூறிய எதையும் மறுக்கமாட்டீர்கள்.
Ludovico Einaudi - Oltimare
Ludovico Einaudi - Divenire
Ludovico Einaudi - Una mattina
Ludovico Einaudi - I giorni
Ludovico Einaudi - nightbook
இதற்கு மேல் நீங்களே கண்டடைந்து விடுவீர்கள்.
கடவுள் இருக்கிறாரா?
நிச்சயம்.
லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்.

(முகநூல் பதிவு: 09 ஏப்ரல் 2016)

Fear no more..

இன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம் கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாடபுத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி.'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நினைவுப்படுத்தியது. ஷெல்லியின் காதலன் தனது அச்சமில்லையை எழுதுவதற்கு ஷேக்ஸ்பியரின் இந்தப் பாடலே தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும். இருந்தாலும், பாரதியின் வீச்சும் வீரியமும் எனக்கு ஷேக்ஸ்பியரில் கிடைக்கவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கடுங்குளிரில் வெளியே சென்றுவிட்டு திரும்பும்போதுதான் எனக்கு ஷேக்ஸ்பியரின் 'Nor the furious winter’s rages' வரியில் இருக்கும் அந்த rage-ஐ உணர முடிகிறது.

I badly want sunshine!

(முகநூல் பதிவு: 19 மார்ச்சு 2016)

Sunday, October 9, 2016

எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

முதலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.
https://www.youtube.com/watch?v=HGcUJ2Dg3uo
இனி நான் இந்தக் கட்டுரையில் எழுதி இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியதும்.

'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிடஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறிய போது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செல்லப்பட்டு விடும். அந்த அளவில்தான் டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் கொடுமையான அந்தச் சத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் இறந்தே தீரவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, அவர்களின் அனுமதி பெற்றுக்கொண்டு, மடிந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டேன்.

டின்னிட்டஸ் பிரச்சினையின் கொடூரத்தையும், என்னுடைய போராட்டத்தையும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும். இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி Euthanasia (=கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது.

ஒரு விழிப்புணர்வுக்காக இதைப் பற்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று 'அன்பே வா' திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் ஒரு வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த மாபெரும் அரக்கன் இந்த டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் எழுத இருக்கிறேன்.

தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சரோடு போராடுவது என்பது எத்தகையது என்று தெரியாது. பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொண்டதோடு சரி. அதை 'முடி' சிறுகதையிலும் பதிவு செய்திருக்கிறேன். டின்னிடஸ் கேன்சர் போல் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதல்ல. ஆனால், நிச்சயம் வாழவிடாமல் செய்யும் அளவுக்கு மோசமானது. அந்த அளவில், இதுவுமே உயிர்கொல்லிதான். இந்தச் சத்தங்களோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான துன்பம் வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய சிறுகதை ஒன்றுக்கு 'அமைதியின் சத்தம்' என்று தலைப்பு வைத்திருந்தேன். அந்தக் கதை டின்னிடஸ் சம்பந்தப்பட்டதல்ல. ஆனாலும் அமைதியின் சத்தம் எவ்வளவு துன்பகரமானது என்பது எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.

எப்படியோ இந்த டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நம்மூரில் எல்லாம் என்னைப் போன்ற சாதாரணனுக்கு இலவசமாக இத்தகைய வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. வசதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும் அப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதுவும் உண்மை. Especially, on human aspects.

டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ, 'அதெல்லாம் ஒன்னுமில்லடா..' என்று கூறியபோதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. என் தந்தையாரும் அப்படியே. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; யோகா தெரபிஸ்ட்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து ஒரு சில யோக முறைகளை பயிற்சி செய்து வந்தேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த டீ குடிப்பதையே நிறுத்தி விட்டு, கிரீன் டீக்கு மாறினேன். எப்போதும் எதிலாவது என்னை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது என்று முடிவுசெய்தேன். சோம்பேறித்தனத்தை 'டின்னிடஸ் அரக்கன்' தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதை அறிவேன். எந்தப் பிரச்சினையையும் தலைக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் ஏற்படும் தனிமையும் அவனுக்குச் சாதகமானதுதான். வாழ்க்கையைக் கொண்டாடுவதால் மட்டுமே அவனைத் துரத்த முடியும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை, நான் செய்வதையெல்லாம் செய்ய விட்டு, அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் என்னை கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், என் மருத்துவரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.

டின்னிட்டஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பழைய அமைதி வேண்டுமென்கிறார்கள். அதிலும் ஐரோப்பியர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள் ஆயிற்றே. அர்த்தமற்ற அமைதியின் மீது அவர்களுக்கு அப்படி என்னதான் காதலோ? ஆனால் டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேண்டுகின்ற அமைதிக்கு நிச்சயம் சாத்தியமே இல்லை என்பதே வலிமிகுந்த உண்மை. எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் கண்டுகொள்வதில்லை. போராடுவதற்கு மனதை வலிமையாக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

ஆனாலும் மனவலிமை அற்ற இவர்களுக்கு இதையெல்லாம் புரியவைப்பதில் சற்று திணறிக்கொண்டிருக்கிறேன். இருந்த மனவலிமையையும் டின்னிட்டஸ் அரக்கன் தின்றிருப்பான் என்பது எனக்குத் தெரியும். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் என் பெல்கிய நண்பன் ஒருவனை 'ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா' என்று தீர்வு சொன்னேன். இந்திய நகரங்களின் உள்ளமைந்த இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் அல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள். இங்கிருக்கும் இரண்டு நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டதால் என்னை இவர்கள் ஒரு கடவுளாகவே பார்க்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

ஒருபுறம் சாகத்துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் யுதனேசியா முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்தச் ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் கேபியிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? அவரை வாழ வைத்திருக்கமுடியுமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த அன்று இரவு எனக்குத் உறக்கமே வரவில்லை.

எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்பியலாளர் 'ஸ்டீபன் ஹாக்கிங்' பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இருபத்தோராவது வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும் செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள்தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், ஹாக்கிங்கின் வாழ்க்கையைத்தான் காட்டுவேன். இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது; அவ்வளவு எதற்கு, அவரால் அவரது உடலைக் கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டுமே சற்று செயல்படுகிறதாம். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி, மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே அவருக்குப் பிடித்தமானதொரு குரலைத் தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம் 'எப்படி இவ்வளவு நாள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?' என்று கேட்டபோது அவர் கூறியது - 'While there is life, there is hope'.

எனக்கு இந்த வரிகள்தான் எல்லாமாயும் இருந்திருக்கிறது. உண்மைதான். நாம் உயிரோடு இருக்கும் வரை நமது நம்பிக்கையை மட்டும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானும் இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் எதற்கு?

இறந்தால் இன்னொரு பிறவி இருக்கிறது என்கிற மூடத்தனத்தை ஒழித்தாலாவது கைவசம் இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையின் மீது மனிதர்களுக்குப் பற்று வருமா? அப்போதுதாவது வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாட ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுமா? ஓருடல். ஒரு பிறவி. காயமே இது மெய்யடா. மெய்யே மெய். அதில் எத்தனை பிரச்சினை இருப்பினும்.

பிரச்சினைகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். அவற்றைத் தொலைத்துவிடுங்கள். டின்னிடஸ் என்பதே ஒரு பிரச்சினைதான். ஆயினும் உங்கள் பிரச்சினைகளை எனக்கிருக்கும் டின்னிட்டஸாகப் பாருங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். நண்பனாக்கிக் கொள்ளுங்கள். ரசிக்க ஆரம்பியுங்கள். அதன் மீதே தியானம் செய்யத் தொடங்குங்கள். இறுதியில் ஒருநாள் அவை தொலைந்து போகும். அவை இருக்கும். ஆனால் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. பிறகென்ன, வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லோருக்குமே தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக உதித்திருக்கும். உலகத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்சமல்லவே. 'செத்துத் தொலைப்பதற்கு பதிலாக வாழ்ந்துத் தொலைக்கலாம்' என்கிற வரி நினைவுக்கு வருகிறது. அநேகமாக வண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. வண்ணதாசன் நம்பிக்கைவாதிதான். ஆனால், எனக்கு இந்த வரிகள்கூட எதிர்மறையாகவே தெரிகிறது. அது என்ன தொலைப்பது? கொண்டாட்டத்துடனே வாழலாமே? நானும்கூட பல சமயங்களில் தவறான காரணங்களுக்காக, அற்ப விஷயங்களுக்காக 'என்ன வாழ்க்கை இது. செத்துப்போகலாம்' என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு சரியான காரணத்துக்காக வாழ விரும்புகிறேன். பெல்ஜியத்தின் சுகாதாரத் துறைக்கும், இந்தக் காணொளியை எடுத்த செய்தி நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கைத் தந்தது போல, டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கைத் தர விரும்புகிறேன். அதற்கேனும் இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். சாதாரணமாக அல்ல. பெரும் குதூகலத்துடன்.

Sunday, July 3, 2016

முடி


இன்னும் சில நாட்களில் மொத்தமாய்க் கொட்டித் தீர்ந்து விடும். ஏற்கனவே பின் மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன் மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப் பிரச்சினைதான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், 'இருபத்தைந்து இருக்கும்' என்று  கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் 'நாற்பதுக்கு மேல் இருக்கும்' என்று உறுதியாகக்  கூறுவார்கள்.    

சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது. இன்னொரு மாடல் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு அவனுடைய துணிகளனைத்தையும் எடைக்கு போடுவது போன்ற ஒரு விளம்பரம். நான் எடைக்கு துணிகளை எடுக்கும் ஆசாமியாக லுங்கி கட்டிக்கொண்டு, பனியன் அணிந்து, தராசைத் தூக்கிப் பிடித்தபடி, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அந்தப் படத்தில் என் தலைமுடியின் நீளத்தையும், அடர்த்தியையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

இப்போது அதே விளம்பரத்தை மீண்டும் எடுத்தால் நிச்சயம் என்னைக் கூப்பிட மாட்டார்கள். ஜடை போட்டுப் பின்னும் அளவுக்கு அடர்ந்த முடி குடிகொண்டிருந்த இந்த முன்னாள் மாடலின் பின் மண்டை இப்போது மின்னிக் கொண்டிருக்கிறது - பிளாஷ் பிரச்சினைகள் வரும் அளவிற்கு.  

அவ்வளவு தூரம் எதற்குப் போக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு வந்த போது கூட தலையில் முடி பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் என் தங்கை எடுத்த புகைப்படமே அதற்கு சாட்சி. 
என்னை விட்டு இத்தனை வேகமாக என் தலைமுடி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். 

கவலை அதிகம் இருந்தால் முடி கொட்டும் என்கிறார்கள். கடன் அதிகம் இருந்தாலும் கொட்டும். ஏழரை வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீட்டுக்கடனை இப்போதுதான் கட்டி முடித்தேன். சென்னையில் இருந்த போது, வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் மாத தவணை கட்டுவதற்கே சரியாக இருந்தது. நான்கு வருடங்கள் செவ்வனே கட்டிவந்தும் அசல் மாறாமல் அப்படியே அய்யனார் சிலைபோல் இளித்தபடி அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டபோதுதான் முடி கொட்ட ஆரம்பித்திருக்க வேண்டும்.
      
சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உணவுக்கா பஞ்சம் இந்த தேசத்தில்? நமக்குத்தான் எதையும் செய்யத் தெரிவதில்லை. சாம்பார் செய்ய நினைத்தால் ரசமாகிறது. வெஜிடபிள் பிரியாணி செய்ய நினைத்தால் தக்காளி சாதமாகிப் போய்த்தொலைகிறது. சமைப்பது கூட கடினமில்லை. ஆனால் அதற்குப் பிறகு வரும் பாத்திரங்களைக் கழுவும் படலத்தை நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் தயிர் சாதத்துடனும், ரொட்டியுடனும் ஓடுகிறது வண்டி. அவ்வப்போது ரெடிமிக்ஸ், ஃபுரோசன் ஃபுட் எடுத்துக்கொள்வதும் உண்டு.

உள்ளூர் இந்தியக் குடும்பஸ்தர்கள், அவர்களின் குழந்தைகளுக்குப்  பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விருந்துக்கு அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளையெல்லாம் மறுப்பதே கிடையாது. அந்த நாட்களில் மட்டும்தான் நல்ல சாப்பாடே! ஓட்டலுக்கும் போக முடியாது. அதுவும் நான் வசிக்கும் லூவன் நகரின் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஹிமாலயன் ரெஸ்டாரண்டில் தினந்தோறும் சாப்பிடவேண்டும் என்றால் இன்னொரு முறை வங்கியில் கடன் வாங்கி, வட்டி கட்ட வேண்டியது தான்.       

பெல்ஜிய நாட்டில் தண்ணீரின் கடினத்தன்மை அதிகம் என்கிறார்கள். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை நாட்களாக எனக்குத்தான் அது தெரியாமல் போயிருக்கிறது. இப்போது தண்ணீர் வரும் இடங்களில் எல்லாம் பில்ட்டர் மாட்டி வைத்திருக்கிறேன். கடினத்தன்மை கொண்ட தண்ணீரில் குளிப்பதற்கென்றே சிறப்பு ஷாம்பு ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சரி. திருமணம் என்கிற ஒன்று நடக்கும் வரையிலாவது இருப்பதைக் காப்பற்றிக்கொள்வது நல்லது.    
  
எனக்கென்னவோ இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணமாகப்படுவது - 'பார்ட் போலன்' என்னும் ஆசாமி தான். பார்ட் என்னுடைய மேலதிகாரி. அவர் ஒரு தொட்டால் விரிஞ்சிக் கண்ணன். தொட்டதற்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து கண்கள் விரிந்து, கன்னம் சிவந்து, வாய் கூப்பாடு போட ஆரம்பித்துவிடும். என் வாழ்நாளில் இத்தனை பதற்றம் நிறைந்த மனிதனை நான் பார்த்ததில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் இந்த மனிதரின் பதற்றம் அவரோடு இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அது என் தலைமுடி வரை அல்லவா நீண்டிருக்கிறது. என் சொட்டைக்கு நிச்சயம் இந்த மனிதர்தான் பிரதான காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 

எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அவரது முன்னுரிமைகள் என்னை முழி பிதுங்க வைக்கும். 'பிரசல்சு நகரில் உள்ள அலுவலகத்தில் சில பிரச்சினைகள். நீ உடனே அங்கு செல்லவேண்டும். அவர்களோடு அமர்ந்து இந்த வார இறுதிக்குள் பிரச்சினைகள் தீர்த்துவிட்டு வர வேண்டும்' என்று கூறி அனுப்பி வைத்த இரண்டு நாட்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும். 'இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் இஷ்டம் போலெல்லாம் நடந்துகொண்டால், அப்புறம் நான் எதற்கு?' என்று கத்துவார்.  

வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிவாக்கில் அழைத்து, 'இது அதிமுக்கியமான வேலை. திங்கள்கிழமை காலைக்குள் முடித்துவிடு' என்பார். வேறு வழியே இல்லாமல் வார இறுதி முழுவதும் அமர்ந்து வேலை செய்யவேண்டும்.    இது போன்ற செயல்களை, இந்தியாவில் தங்கள் பெயரைத் தாங்களே சுருக்கி வைத்துக்கொள்ளும் ஐ.டி பிராஜக்ட் மானேஜர்களான என்.கே-கள், விஷி-கள், ராண்டி-கள் செய்து பார்த்திருக்கிறேன். வெள்ளிகிழமையானால் மூன்று மணிக்கே கிளம்பி விடும் சுதந்திர விரும்பிகளான ஐரோப்பியர்களில் இவர் ஒரு வித்தியாசமான மனிதர். 

என்றைக்காவது ஒருநாள் சற்று முன்னதாக கிளம்பினால் போதும். நான் பையைத் தூக்கிக்கொண்டு நடந்து போவதை ஓரக்கண்ணால் பார்ப்பார். சில சமயங்களில், 'ஏன் அடிக்கடி சீக்கிரம் கிளம்பி விடுகிறாய்?' என்பார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதுபோல் சென்றிருப்பேன். அவருடைய போலி அழுத்தங்களின் காரணமாக இரவு வரை நான் வேலை பார்த்த நாட்களும், அவர் கொன்றழித்த என் வார இறுதிகளும் எப்போதுமே அவர் நினைவில் தங்குவதில்லை. அவருக்கென்ன? அவர் மட்டும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் யாருக்கும் சொல்லாமல் சீககிரமாகவே காணாமல் போய் விடுவார். நமக்குத்தான் சிரமம். 

'இவர் ஒரு ரேசிஸ்டா?', 'நான் ஒரு இந்தியன் என்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரா?' என்றால் அதுவும் இல்லை. எங்கள் அணியில் இருக்கும் யோஹான் டி வொல்ஃப்-பிற்கும் இதே நிலைமைதான். அலுவலக நேரத்தில் அடிக்கடிப் புகைப்பிடிக்க வெளியே செல்கிறான் என்று அவனுடைய லைட்டரை ஒருமுறை பிடுங்கி வைத்துக்கொண்டார். யோஹான் இந்த மனிதரின் செயல்களை எந்த நிலையிலும் மதித்தாகவே தெரியவில்லை. அவன் வேறொரு லைட்டரை வாங்கி வைத்துக் கொண்டான். அவனுக்கும் வெள்ளிகிழமை மாலை வேலைகளை ஒதுக்குவார். அவன் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, 'டாட் வோல்கன்ட வீக்' என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவான். திங்கள்கிழமை எப்படி இருந்தாலும் கத்துவார். குதிப்பார். அதைப்பற்றியெல்லாம் அவனுக்குக் கவலை இருந்ததில்லை. ஆனால், அதை அவன் வேறுவிதமாகவும்  சமாளித்தான். வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் அமர்ந்திருக்கும் லூவன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். கென்டு நகரில் இருக்கும் எங்களின் கிளை அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.

எங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிலும், ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அலுவலகத்திலும் வேலைப் பார்க்கலாம் என்கிற சலுகை இருந்தது. இந்தச் சலுகைகளையெல்லாம் நான் அவ்வளவாக அனுபவித்ததே இல்லை. பார்ட் என்னை அனுபவிக்கவிட்டதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் உண்மையான காரணம் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நாளொன்றுக்கு இருபது யூரோ ஃபுட் அலவன்ஸ் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் பார்ட்டின் மேல் வெறுமனே பழிசுமத்த எனக்கு விருப்பமில்லை. 

யோஹான் திங்களன்று வீட்டிலிருந்தும், வெள்ளியன்று கென்டிலிருந்தும் 'வேலை செய்வான்'. 'வீட்டிலும், கென்டிலும் இருப்பான்' என்று தான் சொல்லவேண்டும். புதன் கிழமை எங்கிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. புதன் கிழமைகளில் என்ன காரணத்தினாலோ பார்ட் வேலைக்கு வருவதில்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார். மீதம் ஒருநாள் அவருடைய சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரோ என்னவோ? இங்குள்ள பெரும்பாலானோர் அவர்களுடைய சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

பெல்ஜியத்தில் பள்ளிகூடங்கள் புதன்கிழமை அன்று அரை நாள் மட்டுமே இயங்குகின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவதற்காக வேண்டி, பெண்கள் பெரும்பாலும் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் அல்லது அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தைக் காப்பகங்களுக்கு பெருஞ்செலவு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பார்ட் வராமல் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.       

எவரையும் விட்டுவைத்ததில்லை இந்த மனிதர். ஆறுமாதங்களுக்கு முன்பு டெய்சி நெவென் என்கிற அழகிய இளம் பெண் எங்கள் அணியில் சேர்ந்தாள். ஏனோ யோஹான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அமோரியை அவளுக்கு பட்டியாக நியமித்து இருந்தார் பார்ட். அவளுக்கு சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காபி அருந்துவதலிருந்து, உணவு வரை அத்தனை நேரமும் அவளுடனேயே இருந்தான் அமோரி. அவனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனுக்கு முடி நீளம். தன்னுடைய குதிரைவால் முடியால் என்னுடைய பொறாமையை மட்டும் சம்பாதித்து வைத்திருந்தவன், நான் புறமுதுகு காட்டியபடி நின்று கொண்டிருந்த போட்டோவை என்னைக் கேட்காமலேயே பேஸ்புக்கில் போட்ட நாளில் இருந்து என் ஜன்ம எதிரியாகி விட்டான்   

டெய்சியால் பார்ட்டின் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவருடன் கைபேசியில் பேசி முடித்துவிட்டு, 'ஹீ ஈஸ் எ மேல் சாவினிஸ்ட்!' என்று கத்தி விட்டு தடாலென கைபேசியை மேஜை மீது வீசி எறிந்தாள். சாவினிஸ்ட் என்பதை விடுங்கள். இவரைப் பார்த்து ஒரு சாடிஸ்ட் என்று கூட சொல்ல முடியாது. சாடிஸ்டுகள் பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவர்கள். இந்த மனிதர் சந்தோஷப்பட்டே நான் பார்த்ததில்லையே. வரையறுக்கவே முடியாத ஒரு பிறவி.  டெய்சிக்கு சாவினிஸ்ட், அமோரிக்கு சாடிஸ்ட் என்று இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை இஸ்டுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.   

கடைசியில் டெய்சி, காரல் வாண்டர்கோட்டனிடமே முறையீடு செய்துவிட்டாள். காரல் எங்கள் டைரக்டர். அவரோ அவள் விரும்பியபடியே அவளை மட்டும் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றினாரே தவிர, பார்ட்டின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவருடைய எல்லா ப்ராஜக்டுகளும் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதனால் இருக்கலாம். எல்லாவற்றையும் என் தலையில் தாங்கிக் கொட்ட வைத்துக் கொண்டிருக்கிறேனே! என் எதிரி அமோரியே என்னை பார்ட்டின் 'ரெக்டராண்ட்' என்று கூறுவான். டச்சு மொழியில் வலதுகை’. இப்படியும் கூறிவிட்டு, 'நல்ல வேலை இடதுகை இல்லை. இந்தியாவில் இடதுகையை வேறு சில விஷயங்களுக்கு உபயோகிப்பார்கள்' என்று சொல்லிச் சிரித்து வெறுப்பேற்றுவான். காரலுக்கு நான் செய்து கொண்டிருப்பவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பார்ட் சொன்னாரோ இல்லையோ. நேரடியாகவே பாராட்டத் தெரியாத மனிதர், காரலிடம் பெரிதாக அப்படி என்ன சொல்லியிருக்கப் போகிறார். கண்டிப்பாக  என்னுடைய உழைப்பைக் காட்டி இவர் நல்ல பெயர் வாங்கியிருப்பார்.  

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இத்தகைய சர்வாதிகார மனப்போக்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?   

இவருக்கு அடுத்து எனக்கு அதிக மன உளைச்சலைத் தருவது, எங்கள் அலுவலகத்திலேயே எனக்கு அறவே பிடிக்காத இந்த எலிவேட்டர். ஆனால் என்ன செய்வது, ஆறாவது தளத்தில் இருக்கும் என்னுடைய இருக்கைக்கு அதில் தானே சென்று வர வேண்டியிருக்கிறது. அந்தப் பாழாய்ப்போன எலிவேட்டரின் உள்ளே மூன்று புறங்களிலும் கண்ணாடிகள் இருக்கும். மூன்று கண்ணாடிகளிலும் முன்னூறு சொட்டைகள் தெரியும் போது மனதில் தோன்றுவதை விவரிக்க முடியாது. அங்கேயே அமர்ந்து அழுது விடலாம் போல் இருக்கும். இதனாலேயே எலிவேட்டரில் ஏறியவுடன் கதவைப் பார்த்தபடி நின்றுகொள்வேன்.  


முழுச் சொட்டையுடையோரைப் பார்க்கும் போதெல்லாம், இவர்களுக்கு நம் நிலைமை பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும், முன்னூறு சொட்டைகள் காட்டும் இந்த லிப்டும், எரிச்சலூட்டும் முகபாவங்கள் காட்டும் இந்த பார்டும், குதிரைவால் கொண்டையான் அமோரியும் என் முடி கொட்டுவதை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.     

நான் வேறு தளத்திற்குச் சென்று விடவேண்டும் அல்லது வேறு அலுவலகத்துக்குச் சென்று விட வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு பார்டை விட்டு வேறு பிராஜக்டிற்கோ, வேறு டிபார்ட்மென்டிற்கோ சென்றுவிட வேண்டும் என்று தோன்றவில்லை. நான் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு தற்காலிக ஒப்பந்த பணியாளனாகத்தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பார்ட் தான் எனக்கு நிரந்தரப் பணியிடம் பெற்றுத் தந்தார். எனக்கு நன்றாகத் தெரியும்.  இந்த நிறுவனத்தில், ஒரு இந்தியனுக்கு வேலை பெற்றுத் தருவதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. என்னதான் கடுமையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தாலும், வெளிநாட்டான் வெளிநாட்டான்தான். அவனுக்கு என்று சில எழுதப்படாத வரம்புகள் இருக்கின்றன. அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கூட இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் செனோஃபோபியாவையும், இவர்கள் காட்டும் சட்டில் ரேசிசத்தையும் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. 

அனைத்திற்கும் மேலாக, மொழிப்பிரச்சினை. வேறு அணிக்கு மாறிச் சென்றால் ஆங்கிலத்தை மட்டும் கட்டிக்கொண்டு பிழைக்க முடியாது. மொழியறியாதவன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லாமல், பாவம் பார்க்காமல் டச்சு மொழியில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆங்கிலத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட இது என்ன தமிழகமா? 

என் மன உளைச்சலுக்கான முதல் காரணகர்த்தாவாக எனக்கு பார்ட் தென்பட்டாலும், மேலே கூறிய இந்த இரண்டு விஷயங்களில், பார்ட் தனித்தே நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால் எல்லா விஷயத்திலும் இந்த மனிதர்களைக் காட்டிலும் அவர் முரண்பட்டவராகவே தெரிகிறார்.  

முடி உதிர்ந்தது உதிர்ந்தது தான். திருமணம் ஆகி இருந்தால் இவ்வளவு கவலைப்படமாட்டேன். சத்தியமூர்த்தி மாமாதான் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதற்காகவே இந்தியாவிற்கு வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் அவர் சொல்வது - 'இவனுக்கு முழுக்க முடி கொட்றதுக்குள்ள ஒரு பொண்ண பாத்து முடிக்கணும். எனக்கே இந்த வயசிலே இவ்ளோ முடி இருக்கு. இவனுக்கு ஏன் இப்படி?'
.
அவர் மட்டுமா? நான்கு வருடங்கள் கழித்து தற்செயலாக என்னை பார்த்த நண்பரொருவர், 'என்ன பயங்கரமா மாறிட்டீங்க?' என்று கேட்டார். சொட்டை! எவ்வளவு பயங்கரமான ஒரு வார்த்தை! என் கல்லூரி நண்பர்கள் அதற்கு மேல் சென்று, 'என்ன மச்சான் மாடி காலியாகிட்டே வருது' என்பார்கள். தோற்றத்தை வைத்து பகடி செய்வதில் நம் மக்களை யாரும் விஞ்சிவிட முடியாது. இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அலோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி,  பலவித எண்ணைகள், அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எர்வாமாட்டின் என்று அத்தனையும் முயன்றாகி விட்டது. அவ்வப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்ஃபி-கள் எடுத்தது தான் மிச்சம்.

சமீபத்தில் கூட கபோக்கி என்கிற அமெரிக்க ப்ராடக்ட் ஒன்றைப் பற்றி இணையத்தில் பார்த்தேன். இலவச சாம்பிளுக்கும் விண்ணப்பித்து விட்டேன். சிப்லா கூட டுகெயின் என்கிற ஜெல்லைத் தயாரித்திருக்கிறது. தடவிய ஆறுமாதங்களில் முடி வளர்ந்து விடுகிறதாம். டாக்டர் ரெட்டி லேப்சின் மின்டாப்பை பற்றி அங்கு வேலை பார்க்கும் நண்பன் மிலிந்தனிடமே கேட்டு விட்டேன். அவனோ, 'மின்டாபும் வேண்டாம். டுகெயினும் வேண்டாம். இரண்டிலும் மினாக்சிடில் இருக்கிறது. அது மலட்டுத் தன்மைக்கு  வழிவகுக்கும்.' என்று கண்டிப்புடன் கூறிவிட்டான். எதற்கு இந்த வேண்டாத வம்பு என்று விட்டுவிட்டேன். 

இவற்றாலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்காலத்திற்குத் தயாராவது மட்டுமே சிறந்த வழி. எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விக் வாங்கலாமா என்றால் அதெல்லாம் ஊரறிந்த வித்தை. அதற்குச் சொட்டையே மேல். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பாலு மகேந்த்திராவைப் போல் எப்போதும் தொப்பி அணிந்துகொண்டிருப்பார். அது அவருக்கான பாணி. சொட்டை உள்ள சிலர் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அது போல் செய்யலாம். எனக்கென்னவோ சொட்டையை விட மொட்டை சற்று மேலானதாகத் தோன்றுகிறது. அது அவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய வார்த்தை இல்லை. பயங்கரமாயும் இல்லை. 'மொட்டை, இங்க வா' என்பதற்கும், 'சொட்டை இங்க வா' என்பதற்கும் நிச்சயம் கடலளவு வித்தியாசமிருக்கிறது. எனவே நிச்சயம் முன் மண்டையில் முடி முழுவதுமாகக் கொட்டிவிட்டால், நான் நிச்சயம் மொட்டை அடித்துக் கொள்வேன். 

இருப்பினும் இப்போதெல்லாம் முடிக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் ஒழுங்காக எடுத்துக் கொள்கிறேன். வாரத்தில் ஒருமுறைதான் தலைக்குக் குளிக்கிறேன். அதுவும் தலைக்கு மட்டும் பாட்டில் வாட்டர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறேன். அலுவலகத்திலும் அதிகமாக வேலை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறேன். பார்ட்டின் வலதுகை என்கிற பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை.  

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. பத்தரை மணியாகியும் பார்ட் வரவில்லை. வழக்கமாக எட்டரை மணிக்கெல்லாம் வந்துவிடுபவர் ஆயிற்றே. குறுஞ்செய்தி அனுப்புவார். அதுவும் இல்லை. 

யோஹான் கைபேசியில் அழைத்தான். 

"மோஹான்', என்று எப்போதும் போல் விளித்தான். அது மோஹான் இல்லை மோகன் என்று பலமுறை சொல்லியும் அவனுக்கு ஏறவில்லை. அவன் பெயர் யோஹான் என்பதால் அவன் பெயரில் இருக்கும் 'J'-இற்கு பதிலாக 'M' இருப்பதால் அப்படி அழைக்கிறான். 

'ஒரு வருத்தமான செய்தி' என்றான். 

'ஏன் இன்றைக்கு பார்ட் கென்ட் அலுவலகம் வந்துவிட்டாரா?' என்றேன் சிரித்துக்கொண்டே. 

'ஜோக்ஸ் அபார்ட், பார்ட்ஸ் வைப் பாஸ்ட் அவே'. 

'வாட்?' 

பார்ட்டின் மனைவி இறந்து விட்டார் என்றா கூறினான்? எப்படி இவனால் இதைக் கூட எந்தவித உணர்ச்சியுமின்றிக் கூற முடிகிறது.  அவன் தொடர்ந்தான். 'ஆமாம். இப்போதுதான் காரல் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.' 

'என்ன காரணம்?'  

'தெரியவில்லை. நாளைக்கு இறுதிச் சடங்கு. காரல் இன்று மாலை பெரு நாட்டிற்குச் செல்வதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்று  கேட்டார். நீ அவருக்கு நெருங்கியவன் என்பதால், உன்னையும் கண்டிப்பாக போக முயற்சி செய்யச் சொன்னார்.'

நான் எப்போது அவருக்கு நெருங்கியவன் ஆனேன்.

'நிச்சயம் வருகிறேன் யோஹான். ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா? ' 

'என்ன காரணம் என்று தெரியவில்லை, மோஹான். காரல் ஏனோ அவசரமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாலை புறப்படுவதற்கு முன்பு அழைக்கிறேன் என்றார். ஆனால், அமோரி ஒருமுறை பார்டின் மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறான். நான் சரியாக கவனிக்கவில்லை. அவன் சைப்ரசில் இருந்து வந்துவிட்டானா என்று தெரியவில்லை. போன் செய்து பார்க்கவேண்டும். இறுதிச் சடங்கு நடக்குமிடத்தின் முகவரியை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.' என்றான். 

அதற்கு மேல் எனக்கு வேலையே ஓடவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? இந்த ஆசாமி வீட்டிலும் இதே போன்று நடந்து கொள்பவரோ? இப்படி இருந்தால் யாருக்குத்தான் உடன் வாழப் பிடிக்கும்? விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? இருக்காது. இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவார்களே. அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டார்கள். ஆக்சிடண்டாக இருக்குமா? ஆனால், அமோரி அவருடைய மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறானே? பிரச்சினை என்றால்? மனநலம் குன்றியவளா? இருக்காது. அமோரிக்கு பார்ட்டை சுத்தமாகப் பிடிக்காது. அவன் ஏதேனும் உளறியிருப்பான். சொல்ல முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இந்த யோஹான் சரியாக கேட்டிருக்க வேண்டும். ஜடம். இவர்கள் சக மனிதர்களின் சொந்த விஷயங்களில் மூக்கையும் நுழைக்க மாட்டார்கள்; அக்கறையும் கொள்ள மாட்டார்கள். அப்படியே ஓரிருவர் அக்கறை காட்டினாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்றும் முறைத்துக் கொள்வார்கள். 

பார்ட்டை தொலைபேசியில் அழைக்கலாமா? அவர் எப்போதும் போல் எரிந்து விழுந்தால் என்ன செய்வது? நமக்கெதற்கு வம்பு. இதையெல்லாம் யோஹானைப் போலவே ஒதுங்கி நின்று பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்நேரம் அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பான். பார்ட் இருந்தால் போன் செய்துவிடுவார். இப்போது அவனுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவன் என்னமாதிரியான மனநிலையில் இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பார்ட் இன்னும் சில நாட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற எண்ணம் தோன்றியபோது என்னுடைய மனமும் லேசாக இன்புற்றது. உதடுகள் என்னை அறியாமல் விரிந்து புன்னகைத்த அடுத்த கணம், 'என்ன மாதிரியான சாடிஸ்ட் நான்?’ என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்து என் வக்கிர எண்ணங்களை ஒடுக்கியது. மனம் உடனே துக்கமடைவதற்கான காரணங்களைத் தேடியது. அவரில்லாமல் இந்த வேலை கிடைத்திருக்குமா? கடனை அடைத்திருப்போமா? ஏதோ பாவம் கோபப்படுகிறார், திட்டுகிறாரே ஒழிய, முதுகுக்குப் பின்னே என்னைப் பற்றி யாரிடமாவது தவறாகப் பேசியிருக்கிறாரா? பதட்டக்காரர். ஏதோ ஒரு விஷயத்தில் இயலாமையோ அல்லது மனப்பிறழ்வோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாவற்றுக்கும் பதற்றம் கொள்கிறார். இப்போது பாவம் மனைவியை இழந்துவிட்டு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? 

அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு ஹெயிஸ்ட்-ஆப்-டென்-பெர்க் சென்றேன். எவ்வளவு நீண்ட பெயர் இந்த நகருக்கு? மலை-மேலமைந்த-ஹெயிஸ்ட் நகரம். லூவன் நகரிலிருந்து நாற்பத்தைந்து நிமிட தூரம். பார்ட்டின் வீடு இந்த நகருக்கு அருகே உள்ள இட்டெகெம் என்கிற கிராமத்தில் இருக்கிறதாம். இறுதிச் சடங்கு ஹெயிஸ்ட்லுள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் நடக்கிறதாம். வழக்கமாக இதுபோன்ற சடங்குகள் தேவாலயத்தில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்ட் ஒரு நாத்தினாக இருக்க வேண்டும்.  

ஈமச்சடங்கு மண்டபம் இருந்த இடம் ஒரு குட்டித் தீவைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் தண்ணீர். அமைதியான இடம். யோஹான் அந்தத் தீவுக்குச் செல்லும் குறுகிய பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பது தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றேன்.

மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் கோட்டு போட்ட கனவான்களும் நன்கு உடையணிந்த பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் தாள்கள் இருந்தன. அந்தப் பெண்மணியைப் பற்றி இவர்கள் அனைவரும் எழுதிக்கொண்டு  வந்துள்ளதை இன்னும் சில நேரத்தில் வாசிப்பார்கள் என்று யோஹான் கூறினான். காரலிடம் தான் முந்தைய நாள் மாலை பேசியவற்றைப் பற்றியும் மெதுவாக சொல்லிக் கொண்டே வந்தான். 

இருவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றோம். வரவேற்பறையில் ஒரு இளம் வயது பெண்ணின் புகைப்படம் வைக்கப்பட்டு, அதற்கருகே விதம் விதமான மெழுகுவர்த்திகளை  ஏற்றி வைத்திருந்தார்கள். பார்ட்டின் மனைவி தனது இளம் வயதில் எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். பார்ட்டுக்கே நாற்பத்து ஐந்து வயதாகிறது. அவரது மனைவிக்கு ஒரு ஐந்து குறைவாக இருக்கலாம். ஆனால், அந்தப் புகைப்படத்தில் வசீகரமான புன்னகையுடன் காணப்பட்டார். 

வரவேற்பறையைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த போது, பார்ட்டும் அவருக்கு அருகே மூன்று குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எட்டிலிருந்து, பதினைந்து வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களுடைய  கண்களைப் பார்த்தேன் - சிவந்திருந்தன. முந்தைய இரவு முழுவதும் நிறைய அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது. பார்ட் ஏன் இத்தனை நாளாய் இவர்களைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை. யார்தான் பேசுகிறார்கள்.

பார்ட்டை நெருங்கினேன். அவருக்குக் கைகொடுத்து ஆறுதல் சொல்ல நினைத்த அடுத்தகணம், என்னைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தார். பார்டின் இந்த செயல் நான் இதுவரை கண்டிராதது. குழந்தைகள் ஓடிவந்து அவரின் முதுகைப் பற்றிக் கொண்டார்கள். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. பேரமைதி நிலவிய அந்தக் கூடத்தில் அவரது கதறல் என்னை நிலைகுலைய  வைத்தது.  

"கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்னவோ செய்த பார்த்துவிட்டேன். தீவிரமான சிகிச்சை! இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.' என்று உடைந்துபோன குரலுடன் பேசினார். 

கூடத்தின் மையத்தில் அவரது மனைவியின் உடல் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. யோஹான் அதற்குள் அங்கே சென்று மலர் வளையத்தை வைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான். பார்ட் என் கைகளைப் பற்றி, 'உன்னிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடு!' என்றார். 

எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது. எனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகளை தட்டிக் கொடுத்தவாறு, என் கண்ணீரை அடக்கத் திணறிக் கொண்டிருந்தேன். 

அவரது மனைவியின் உடல் வைக்கப்படிருந்த இடத்துக்குச் சென்றேன். மேஜைக்கருகே கீழே அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். எல்லோரும் மலர்வளையங்களை அங்கே வைத்திருந்தார்கள். நான் மட்டுமே பூச்செண்டு கொண்டு வந்திருந்தேன். சலனமின்றி  படுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாளைய வலி நீங்கி, களைப்புடன் அமைதியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.  

அவரது தலையைப் பார்த்தேன். ஒரு முடி கூட இல்லை.

நன்றி: சொல்வனம், 2014, பெண்கள் சிறப்பிதழ்