சிறப்பு தொகுப்புகள்

Sunday, May 29, 2016

"Like your Papa giving.."

(மீள்நினைவு)
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதாக நினைவு. ஒன்பதாகவும் இருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. எங்கள் தெருவில் திருவிழாவோ அல்லது அண்டை வீட்டில் எதோ விழாவென்று நினைக்கிறேன். ஒலிப்பெருக்கியில் எல்.ஆர். ஈஸ்வரி உரத்த குரலில் மாரியம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். எனக்கு காலாண்டு தேர்வோ அல்லது அரையாண்டு தேர்வோ நடந்து கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி என்னைப் படிக்க விடாமல் சதி செய்து கொண்டிருந்தார். விழாக்குழுவினருக்கு தேர்வைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இருந்ததாய்த் தெரியவில்லை. அவர்களின் கொண்டாட்டம் அவர்களுக்கு முக்கியம். தேர்வு நாட்களில் மாணவர்களெல்லாம் தவநிலையில் இருக்கும் முனிவர்களைப் போன்றவர்கள். அந்த சமயத்தில்தான் இதுபோன்ற திருவிழாக்களும், கிரிக்கெட் போட்டிகளும், சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களும் அப்சரஸ் அழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி போன்று மாணவர்கள் முன்பு தோன்றி, தவத்தைக் கலைக்க நடனமாடுவார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போதெல்லாம் அப்படி ஒரு முனிவனாய் என்னை நான் உணர்ந்ததுண்டு.
நான் வழக்கமாக எங்களுடைய வீட்டு மாடியில் அமர்ந்துதான் படிப்பேன். சில சமயம் தண்ணீர்த் தொட்டி அருகில். அந்தக் குறுகிய வீட்டின் இருட்டுக்குள் அமர்ந்து படிப்பதற்கு எனக்குப் பிடிக்காது. அதற்காகவே காலை, மாலை வேளைகளில், குறிப்பாக மாலையில் திருப்பத்தூர் இரயில்வே நிலையத்துக்குச் சென்று, அங்கு நடைமேடையின் மீதமைந்த நீள் இருக்கையில் அமர்ந்து படிப்பதுண்டு. அவ்வப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பீம்ராவும், செல்வமும் என்னோடு சேர்ந்துகொள்வார்கள். உண்மையில் இதை ஆரம்பித்து வைத்தவன் செல்வம்தான் என்று நினைக்கிறேன். செல்வம் அவ்வளவாக வாயைத் திறக்கமாட்டான். அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. பீம்ராவுடன் அங்கே படிக்கச் சென்ற சமயங்களில், படித்ததை விடப் பேசியதுதான் அதிகம். அவனுக்கு நான் இடையூறு. எனக்கு அவன். நானும் அவனும் ஆபத்தான கூட்டாளிகள் என்று பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் விருது வாங்கியிருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பள்ளியிலும் வெளியிலும் சேர்ந்து செய்த சேட்டைகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் எங்களின் கலகம் என்றும் நன்மையில்தான் முடியும். இன்றைக்கும் ஒருமையிலும், விலங்குகளின் பெயர்களையும் சொல்லி ஒருவரையொருவர் மரியாதையோடு விளித்துக் கொள்ளும் அளவில் நட்பு தொடர்கிறது. நான் சிறுவயதில் நண்பர்களின் வீடுகளுக்கு அதிகமாகச் சென்றதில்லை. அப்படியே சென்றாலும் அங்கு நீண்ட நேரம் இருந்ததில்லை. ஆனால் பீம்ராவ் வீடும், இன்னொரு நண்பன் புகழேந்தியின் வீடும் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பீம்ராவ் வீட்டிற்குச் செல்வதற்கு இரயில் நிலையத்தைக் கடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து அவன் வீடு ஐந்து நிமிடம்தான். படித்துக்கொண்டிருக்கும்போது பசி எடுத்தால் நேராக அவன் வீட்டிற்கு அடைக்கலம் புகுந்து விடுவோம்.
நாங்கள் அடிக்கடி சென்று கிரிக்கெட் விளையாடும் இரண்டு மைதானங்களுமே இரயில் நிலையத்தை ஒட்டியே அமைந்திருக்கும். அதனால் எனக்கும் இரயில் நிலைத்திற்கும் படிப்பு, அரட்டை, விளையாட்டு என்று வலுவானதொரு பிணைப்பு உண்டு. மாலை வேளைகளில் இரயில் நிலையத்தைச் சூழ்ந்த அமைதியும், நீள் இருக்கைகளுக்கு அருகிலேயே நடைபாதை விளக்குகளும் படிப்பதற்கு ஏதுவாக இருந்ததால், சில நாட்கள் ஒன்பது, பத்து மணி வரையெல்லாம் படிப்பதுண்டு.
அன்று திருவிழா ஏற்படுத்திய இரைச்சலால் அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க முடியாமல் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்துக்கு விரைந்தேன். வழக்கமாக நான் அமரும் இருக்கை, நிலையத்திலிருந்து சற்றுத் தள்ளி, நடை மேடையின் இறுதியில் ஒன்றிரண்டு மரங்கள் புடைசூழ அமைந்திருக்கும். என்னளவில் அது ஒரு ராஜ சிம்மாசனம். சில நாட்களில் மலர் மஞ்சமும் கூட. அந்தப் பகுதியில் நடை மேடையும் சற்று அகலமாகவே இருக்கும். வெகுசில பயணிகள், ஓரிரு இரயில்வே ஊழியர்கள், எப்போதாவது நடைபயிற்சி செய்யும் வயதானவர்களைத் தவிர வேறு யாரும் நாங்கள் இருக்கும் பகுதி வரை வந்ததில்லை. எப்போதாவது இரயில் வண்டிகள் கடந்து போகும்போது ஏற்படும் சப்தத்தையும், அதிர்வையும் தவிர வேறு எந்த இடையூறும் அங்கு கிடையாது. திருப்பத்தூருக்கு அருகிலேயே ஜோலார்பேட்டை சந்திப்பு இருப்பதால் முக்கியமான இரயில்கள் எதுவும் திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் நிற்காது. எப்போதாவது ஓரிரு வண்டிகள் நிற்கும்போது மட்டும் விற்பனையாளர்களின் "டீ காபி போண்டா.. டீ காபி போண்டா" கதறல்கள் கேட்கும்.
செல்வம் எனக்கு முன்னரே அங்கு வந்து அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அளவளாவி விட்டு நான் என்னுடைய இருக்கையைப் பிடித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டேன். இரயில்வே நிலையத்துக்கு படிக்கச் செல்லும்போதெல்லாம் என்னுடைய அம்மா ஒரு கைப்பை நிறைய நிலக்கடலையையும், தின்பண்டங்களையும் கொடுத்து அனுப்பி விடுவார். பீம்ராவ் அதற்காகவே இரயில் நிலையத்துக்கு வருவான் என்று நினைக்கிறேன். ஒரு பக்கத்துக்கு இரண்டு நிலக்கடலை வீதம் கணக்கு வைத்து படித்துக் கொண்டிருப்பேன்.
அன்றைக்கு ஒரு நீண்ட பயணிகள் விரைவு இரயில் வண்டி வந்து நின்றது. அது வழக்கமாக எங்கள் நிலையத்தில் நிற்கும் வண்டியாகத் தெரியவில்லை. நான் அமர்ந்து கொண்டிருந்த பகுதியில்தான் முதல் வகுப்புப் பெட்டி நின்று கொண்டிருந்தது. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. ஆனால் உள்ளிருந்து வெளியே பார்க்கலாம் என்று அப்போது எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் முதல் வகுப்புப் பெட்டிக்குள் எப்படி இருக்கிறதென்று பார்த்து விட வேண்டும் என்று எனக்கொரு ஆசை இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த அந்த வண்டி வடநாட்டிலிருந்து கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்க வேண்டும்.
வண்டியைப் பார்ப்பதும் படிப்பதுமாக இருந்தேன். எதிரே நின்று கொண்டிருந்த முதல் வகுப்புப் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே வந்த மனிதர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, "இங்கே வா." என்று அழைத்தார். நான் செல்வத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ, "இரண்டு பேரும் இங்கே வாருங்கள்" என்று ஹிந்தியிலும், பின்பு ஆங்கிலத்திலும் அழைத்தார். சில சமயங்களில் எங்களை பயணிகள் தண்ணீர் பிடித்துத் தர வேண்டுவார்கள். ஒருவேளை தண்ணீர் பிடித்து வரச் சொல்வாரா என்று எண்ணியபடியே புத்தகங்களை இருக்கையில் வைத்து விட்டு அவருக்கு அருகே சென்றோம். அவர் குர்தா அணிந்திருந்தார். குள்ள உருவம். சற்று பருமனான உடல்வாகு. கோதுமை நிறம். புன்னகை ஏந்திய நன்முகம். அவர் இப்படித்தான் என் மனதில் பதிந்திருக்கிறார்.
"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று ஆங்கிலத்தில் வினவினார். அவர் பெட்டிக்குள்ளிருந்தே எங்களை நீண்ட நேரம் கவனித்திருக்க வேண்டும்.
பள்ளியில் நாங்கள் ஆங்கிலத்தில் பேசியதில்லை. வெள்ளிக்கிழமை தோறும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றொரு விதி இருந்தது. ஆங்கில ஆசிரியர் ராஜி உருவாக்கிய விதி. பெரும்பாலான மாணவர்களுக்கு அது பிடிக்கவில்லை. எங்களுக்கு, குறிப்பாக, எனக்கும் பீம்ராவுக்கும் வெள்ளிக்கிழமை வந்தாலே ஒரே கொண்டாட்டம்தான். அன்று வெள்ளிக்கிழமையல்லாத ஒரு நாளில் ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு ஒரே சந்தோஷம்.
"தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறோம்." என்று நான் கூறியவுடன் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. வண்டியிலிருந்து இறங்கி வந்து எங்களை அணைத்துக் கொண்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதற்கு ஏன் இந்த மனிதர் இத்தனை உணர்ச்சி வசப்படுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பச்சை விளக்கு விழுந்து இரயில் கிளம்ப ஆயத்தமானது. திடீரென்று என்ன நினைத்தாரோ, தன்னுடைய சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடுக்கமே வந்துவிட்டது. ஒருவேளை இந்த மனிதர் குடித்திருக்கிறாரா? குடிபோதையில்தான் மனிதன் ஒன்று மிருகமாகிறான் அல்லது குழந்தையாகிறான். இவர் குழந்தைபோல் நடந்துகொள்கிறாரே. ஆனால் அவர் நிச்சயம் குடித்திருக்கவில்லை.
"எங்களுக்கு பணம் எதற்கு? வேண்டாம்!" என்று மறுத்து அவர் கையிலேயே மீண்டும் திணிக்க முயன்றேன்.
அவர் விடவில்லை. "Like your papa giving.. Like your papa giving.." என்று கூறி மீண்டும் என் உள்ளங்கையில் வைத்து மூடிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.
"எனக்கு என் பெற்றோர் பணம் தருகிறார்கள். இது வேண்டாம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே இரயில் கிளம்பிவிட்டது.
அவரோ மீண்டும் "Like your papa giving.. please go and have some good food." என்று புன்னகைத் தவழ கூறிக்கொண்டே கையசைத்தார்.
நாங்கள் இருவரும் வண்டியுடனே சிறிது தூரம் துரித கதியில் நடந்து சென்றோம். வண்டி வேகமெடுத்தது. அவர் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக்கொண்டே சென்றார். நாங்கள் ஒன்றும் புரியதவர்களாய் அசைவற்று அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம். அதற்கு மேல் படிக்கவே தோன்றவில்லை. என் கையில் நூறு ரூபாய் பணம். அந்நாட்களில் நூறு ரூபாய் என்பது பெரிய தொகை. பள்ளியில் நான்கு நாள் உல்லாசச் சுற்றுலாவுக்கே ஐம்பது ரூபாய்தான் கேட்பார்கள். அதற்கும் வீட்டில் அனுமதி கிடைப்பது கடினம். வீட்டிலிருந்து தின்பண்டச் செலவுக்கு ஐம்பது பைசா வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. இந்த மனிதர் என்ன நினைத்திருப்பார். எங்களைப் பரம ஏழைகள் என்று நினைத்திருப்பாரா? வீட்டில் விளக்கு இல்லாததால் தெரு விளக்கில் படிக்கிறோம் என்று நினைத்திருப்பாரா? அல்லது எங்கள் படிப்பார்வத்தை ஊக்குவிக்க முனைந்தாரா? அல்லது என் வயதில் அவருக்கு மகன் இருப்பானோ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
இதுபற்றிய பேச்சிலேயே நீண்ட நேரம் ஓடிவிட்டதால், என் தந்தை இரயில் நிலையத்துக்கே என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டார். அவரிடம் நடந்ததை கூறினோம்.
"இதுபோன்ற மாமனிதர்களால்தான் நான் இன்றைக்கு நல்லதொரு நிலையில் இருக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய கல்லூரிப் படிப்பைக் கடந்திருக்க முடியாது. நல்ல மனிதர்." என்றார்.
அந்த நூறு ரூபாயை என் தந்தையிடம் கொடுத்தேன். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
"அது உங்களுக்கு அவர் கொடுத்தது. நல்ல உணவு வாங்கிச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார். நாளைக்கு தேர்வு முடிந்தவுடன் ஓட்டலுக்கு செல்லுங்கள்." என்று யோசனை சொன்னார். அடுத்த நாள் தேர்வு முடிந்தவுடன், பேருந்து நிலையம் அருகேயுள்ள லக்ஷ்மி கபேவில் மசாலா தோசை சாப்பிட்டு விட்டு அருண் ஐஸ்க்ரீமில் கசாட்டா துண்டு சாப்பிட்டது இன்றும் நினைவிருக்கிறது.
அன்றைய இரவு எனக்கு நீண்ட நேரம் உறக்கமே வரவில்லை. அந்த மனிதரின் நினைவு மீண்டும் மீண்டும் வந்து அழுத்தியது. அவரது செய்கை அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. இன்னும் சற்று நேரம் அந்த நல்ல மனிதருடன் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. இன்றும் தோன்றுகிறது. அவர் பெயரைக்கூட கேட்காமல் விட்டு விட்டோமே. முகவரியைக் கேட்டிருக்கலாமே. அவரும் எங்களிடம் இதையெல்லாம் கேட்கவில்லையே. அதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லையே. அந்தத் தேர்வு காலாண்டா அரையாண்டா என்பது நினைவில்லை. பாடம் அறிவியலா, கணிதமா என்று நினைவில்லை. பத்தாம் வகுப்பு என்று கூறியதில்கூட சந்தேகமே. தெருவில் என்ன திருவிழா என்பதும் நினைவிலில்லை. என்னுடன் அந்த வகுப்பில் படித்த பெரும்பாலானவர்களின் பெயரும், சிலரின் முகமுங்கூட நினைவிலில்லை. ஆனால் அந்த மனிதரின் புன்னகையேந்திய முகம் இன்றளவும் நன்றாக என் நினைவிலிருக்கிறது.
இன்றைக்கு நான் அவருக்கு செய்யக் கூடியது ஒன்றுதான். அது, அவரைப்போலவே 'Like your papa giving.." என்று படிப்பார்வம் மிகுந்த குழந்தைகளின் படிப்புக்கு அவர் நினைவாக உதவி புரிவது. அதுதான்அந்தத் தந்தை எனக்கு அன்றைக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனது. இரயில் நிலையத்தில் வண்டி நின்று கொண்டிருக்கும்போது கிடைத்த சில மணித்துளிகளிலேயே ஒரு சிறுவனின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட அந்த மாமனிதரால் முடிந்திருக்கிறது.
Thank you papa for your benignity and the care you showed towards this lad! Thinking of you this day.

(முகநூல் பதிவு: 13 ஏப்ரல் 2016)

Saturday, May 28, 2016

லாக்கப்.. விசாரணை.. தடம்..

லாக்கப் நாவலும், விசாரணை திரைப்படமும் தெரியும். அது என்ன தடம்?
லாக்கப் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. எங்கும் விசாரணை பற்றிய பேச்சாய் இருப்பதால் மிகுந்த ஆவலுடன் இன்று விசாரணை படம் பார்த்தேன்.
ஆந்திரத்தில் பூங்காவில் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மூன்று தமிழக இளைஞர்களை காவல்துறையினர் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். படத்தின் ஒன்பதாவது நிமிடம், காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி தனக்கு ராசியானதொரு லத்தியைத் தேர்ந்தெடுத்து அந்த இளைஞர்களை விளாச ஆரம்பித்த கணம் வரைதான் நான் படத்தோடு இருந்தேன். அதன் பிறகு என் மனம் தடம் மாறி திலீப் குமார் அவர்களின் 'தடம்' சிறுகதைக்குள் விழுந்துவிட்டது.
தடம் சிறுகதையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு போராளி லாக்-அப்பிற்குள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும், அத்தருணத்தில் அவனுடைய மனவோட்டத்தையும் செறிவாக பதிவு செய்திருப்பார் திலீப். விசாரணைக்கும் தடத்திற்கும் இருக்கும் ஒற்றுமை லாக்-அப்பிற்குள் விசாரணையின் பெயரால் குற்றவாளிகள் சந்திக்கும் சித்திரவதைகளும் அதிகாரிகளின் குரூரமும்தான். தடம் சிறுகதையை வாசித்திராதவர்களை விசாரணை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் என் அறைக்குச் சென்று மீண்டும் திலீப்குமாரை வாசிக்க ஆரம்பித்து அவருக்குள் மூழ்கி விட்டேன்.


விசாரணையில் விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் என் நண்பர்கள் மூன்று பேரின் மீது விழுந்தது போல் இருந்தது. தடத்தில் விழுந்த அடி ஒவ்வொன்றும் என் மீதே விழுந்தது போல் உணர்ந்தேன். எப்படி இருப்பினும், விசாரணை தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படம். அதற்காக வெற்றி மாறன் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.
இனி.. எனதன்பு திலீப் குமார் 1984-ஆம் ஆண்டு எழுதிய 'தடம்' சிறுகதையிலிருந்து சில வரிகள்..
.....
.....
லாக்-அப் அறைக்குள் ஓர் இளைஞன் கம்பிகளைப் பற்றியபடி வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன், தலைமுடி வெட்டப்படாமலும், கண்கள் உள்வாங்கியும் காணப்பட்டான். சட்டையற்ற அவனது மேலுடம்பில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. லாக்-அப் அறைக்கு வெளியே கம்பிகளுக்கு வெகு சமீபத்தில் சிறிது தண்ணீருடன் ஓர் அழுக்கடைந்த பிளாஸ்டிக் வாளியும் அதற்குள் ஒரு தம்பளரும் கிடந்தன.
சற்றுக் கழித்து, அரை கதவுகளிட்ட மரத்தடுப்புகளாலான அந்தச் சிறிய அறைக்குள் நான் இழுத்துச் செல்லப்பட்டேன். அறைக்குள், ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஓர் அதிகாரி சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். அகன்ற முகம் கொண்ட அவனுக்கு முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. அடர்த்தியான புருவங்களும் மீசையும் கொண்டிருந்தான். கண்கள் சிவந்திருந்தன. சதைப் பிடிப்பான அவனது பெரிய மூக்கைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. அந்த மூக்கின் வாளிப்பு அவனுக்கு வெறுக்கத்தக்க ஒரு குரூரத் தன்மையைத் தந்தது. அவன் சில கணங்கள் என்னை ஏறிட்டுப் பார்த்த பின் என்னை அழைத்து வந்த அதிகாரிக்கு சமிக்ஞை செய்தான். உடனே, காவலாளிகள் என்னை வெளியே இழுத்து வந்தார்கள். பின், ஒரு பெரிய முற்றத்தைக் கடந்து என்னைக் காவல் நிலையத்தின் பின் கட்டிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முற்றத்தில் 10, 12 காவலாளிகள் அரைக்கை பனியனும், கால்சட்டையும் அணிந்தபடி அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பின்கட்டில் இருட்டாகவும், குறுகலாகவும் இருந்த அந்த அறைக்குள் என்னை அடைத்தார்கள். அறைக்குள் ஒளி மங்கிய மின்விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
பதினைந்து இருபது நிமிடங்கள் கழித்துக் கதவு திறக்கப்பட்டது. சதைப்பிடிப்பான மூக்குடைய அந்த அதிகாரியும் மூன்று காவலாளிகளும் கைகளில் லத்திகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் அந்த சதைப்பிடிப்பான மூக்குடைய அதிகாரி தன் லத்தியால் என் இடது முழங்காலில் ஓங்கி அடித்தான். நான் வலி தாளாமல் அந்தக் காலை மடக்கிக் கைகளால் பற்றித் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே மறுகாலின் முட்டியில் ஓர் அடி விழுந்தது. நான் கீழே சரிந்தேன். தலையைத் தரையில் குவித்தேன். திடீரென்று எல்லாம் நிசப்தமாகிப் போனது. மேலும் பல அடிகளை எதிர்பார்த்த நான் ஒன்றுமே நிகழாததை நினைத்துத் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அந்த அதிகாரி கையில் லத்தியை ஓங்கியபடி என்னைப் பார்த்து நின்றான். வெளிச்சமற்ற அந்த அறையில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவன் மீண்டும் தன் லத்தியைச் சுழற்றினான். இம்முறை என் தாடையில் விழுந்தது அடி. நான் அலறிக் கொண்டே முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டேன். தொடர்ந்து என் முதுகிலும் பிடரியிலும் தோள்களிலும் அடிகள் விழுந்தன. நான் கதறிக் கொண்டே இங்குமங்கும் நகர்ந்தபடி இருந்தேன். ஓர் அடி என் பாதத்தில் விழுந்தது. நான் முற்றாகத் தரையில் விழுந்தேன்.
என்னை அதுவரை அடித்தது அந்த அதிகாரி மட்டும்தான் என்பதை எப்படியோ அந்நிலையிலும் நான் உணர்ந்தேன். அந்த அதிகாரி அடிக்கும்போது எவ்வித ஆவேசப் பிதற்றலுமின்றி மெளனமாக என்னை அடித்துக் கொண்டிருந்தான். காவலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் நான் பலமுறை அடிபட்டதுண்டு. பொதுவாக, அடிக்கும்போது அவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக ஏதாவது பிதற்றிக் கொண்டே அடிப்பார்கள். தங்களது குரூரத்தின் உக்கிரத்தை நியாயப்படுத்தவும், சில சமயங்களில் தங்களது வன்மத்தின் விளைவாக தங்களுக்குள் ஏற்பட்ட அதீத அச்சத்தைப் போக்கும் முகமாகவும் பிதற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இவன் அப்படியிருக்கவில்லை. இவன் ஒரு மிருகத்தைப் போல எவ்விதக் குறுகுறுப்புமின்றித் தாக்கிக் கொண்டிருந்தான். இவன் பயங்கரமானவன் என்பதை நான் உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி அடிப்பதை நிறுத்திவிட்டு மெளனமாக நின்றான். நான் வலியால் துடித்தபடி கீழே கிடந்தேன். காவலாளிகளில் ஒருவன், என் உடைகளை முரட்டுத்தனமாகக் கழற்றி வீசினான். இவன் என்னை நிர்வாணமாக்கியவுடன் மற்ற இருவரும் அடிக்கத் துவங்கினார்கள். லத்தியால் என் தொடைகளில், புட்டத்தில், ஆடுதசையில், கைகளில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். முனகிக் கொண்டிருந்த நான் மீண்டும் அலற ஆரம்பித்தேன்.
திடீரென்று ஒருவன் என் மார்பில் காலை வைத்து என் இரு கால்களையும் பற்றி உயர நிமிர்த்தினான். மற்ற இருவரும் என் உள்ளங்கால்களில் லத்தியால் அடித்தார்கள். உள்ளங்கால்களின் நடுப்பகுதியில் குறி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தேன். முன்னெப்போதை விடவும் உரத்து அலறினேன். என் அலறல் சப்தம் வெளியே தெருவின் சந்தடியையும் மீறிக் கேட்டிருக்க வேண்டும்.
என் உள்ளங்கால்களில் அடித்து ஓய்ந்த பின் என் கால்களைப் பற்றியிருந்தவன் அவற்றை மேலும் இறுகப் பற்றி என்னைக் குப்புறப் புரட்டினான். பின் மற்ற இருவர் என் இரு கால்களை அகட்டிப் பிடிக்க இவன் என் குதத்தில் லத்தியை ஏற்றினான். அடுத்த கணம் என் தொண்டை அடைத்தது. நான் விநாடிகளில் இறந்து விடுவேன் என்று பட்டது. கண்கள் இருட்ட ஆரம்பித்தன. இவன் மேலும் லத்தியை உள்ளே ஏற்றினான். பின் திடீரென்று வெளியே இழுத்துக் கொண்டான். இவற்றுக்குப் பின் நான் வலியால் பயங்கரமாகக் கத்தினேன். ஒருவன் என் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தரையில் ஓங்கிச் சாடினான்.
பிறகு, அவர்கள் என்னைக் காலால் உதைத்தார்கள். அவர்கள் மூவரில் ஒருவன் தவிர மற்ற இருவரும் வெறும் காலோடு இருந்தார்கள். அவர்கள் என் மார்பிலும் முதுகிலும் மாறி மாறி உதைத்தார்கள். என் முகம், கழுத்து என்று மேலும் உதைகள் விழுந்து கொண்டிருந்தன. நான் வலியால் நொறுங்கிக் கொண்டிருந்தேன்.
அவர்கள் ஒருவாறாக என்னை அடிப்பதை நிறுத்திய போது இற்றுப் போன கந்தல் துணியாய்க் கிடந்தேன். உடலே உருக் குலைந்து ஓர் அருவருப்பான திரவமாகி வழிந்து கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் போக ஆரம்பித்தார்கள். தங்கள் உடைகளைச் சரி செய்து கொண்டே தங்களுக்குள் பேசினார்கள். என்னை மிகக் கேவலமான வசைகளைக் கொண்டு திட்டினார்கள். போகும்போது பூட்ஸ் அணிந்தவன் திடீரென்று என்னை நெருங்கி ஓர் ஆபாசமான வசையைக் கூவிக்கொண்டே என் குறியில் எட்டி உதைத்தான். நான் அலறிக் கொண்டே பக்கவாட்டில் சரிந்தேன். பின், மயக்கமுற்றேன்.
எங்கும், நிசப்தமாக இருந்தது. இது போன்று முன்பும் பல சிறைகளில், நிசப்தமான இரவுகளை நான் கழித்திருந்தேன். எப்போதுமே சிறைக்கூடங்களின் நிசப்தம் பெரும் பயங்கரத்தை உள்ளடக்கியது. உடைவாளை உருவியபடி இருட்டில் மறைந்து நின்று தாக்கக் காத்திருக்கும் ஒற்றனைப் போன்றது அது.
..........
..........
திலீப் குமார் - 'கடவு' சிறுகதைத் தொகுப்பு - க்ரியா பதிப்பக வெளியீடு.

(முகநூல் பதிவு: 08 பிப்ருவரி 2016)

Thursday, May 26, 2016

காடுகளாகும் நாடுகள்..

கடந்த வாரம் நண்பன் விக்ரம் பெல்ஜியத்திற்கு வந்திருந்தான். கடைசியாக அவனை 2010-இல் பார்த்தது. வியாழனன்று மாலை அவனுடன் ப்ரசல்சு நகர மையத்திலுள்ள கிராண்ட் ப்ளாசிற்குச் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களும், காவலர்களும் ஆயுதமேந்தியபடி திரிந்துகொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியவில்லை. ஓரிருவர் என்னையும் என் நண்பனையும் கூட சந்தேகக் கண்ணோடு பார்ப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. கார்களைக் கூட அனுமதிக்காததால் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது ப்ரசல்சு நகரில் என்று நினைத்தேன். க்ராண்ட் ப்ளாசிற்கே உரித்தான அந்த உயிரோட்டமே இல்லை. எனக்கு நெருடலாக இருந்தது. பாரீஸ் நகர தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டது, வழக்கமாக இப்படி இருக்காது என்று என் நண்பனிடம் கூறினேன். அடுத்த நாள் மாலை அப்தேஸ்லாம் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அப்தேஸ்லாம் பதுங்கி இருந்த இடம் மையத்திலிருந்து நீண்ட தூரமில்லை.நேற்றைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு! இந்தத் தாக்குதலை கடந்த வாரமே அறிந்திருந்த பிரசல்ஸ் நகரம் மௌனமாக அழுதுகொண்டிருந்ததாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது.
என்னளவில் ஒவ்வொரு நகரும் ஒரு உயிருள்ள ஜீவன்தான். நான் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் எனக்கு நெருக்கமானதொரு நண்பனாக இருந்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்த ஆசானாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நகரிலும் விழுந்திருக்கிறேன், எழுந்திருக்கிறேன், கலங்கியிருக்கிறேன், சிரித்திருக்கிறேன். ஒவ்வொரு நகரைப் பற்றியும் சொல்வதற்கு எனக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இடம்மாறிச் செல்லும் போது என்னில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் செல்வது போலவே உணர்கிறேன்.
மும்பை நகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான போதும்,
சென்னை நகரம் சுனாமியாலும், பெருமழையால் உருக்குலைந்த போதும், பாரீஸ் நகரம் மும்பையில் நிகழ்ந்தது போன்றதொரு கொடுமையான தாக்குதலை எதிர்கொண்ட போதும் எனக்கு நெருக்கமானவர்கள் தாக்கப்பட்டதாகவே உணர்ந்திருக்கிறேன்.
ப்ரசல்சும் நான் வாழ்ந்த நகரம். இப்போதும் நான் பணிநிமித்தமாக அடிக்கடிச் சென்றுவரும் நகரம். பாரீஸ் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு நகரம். பாரீஸ் என்றாலே கொண்டாட்டம்தான். ப்ரசல்ஸ் நகரம் பாரீஸ் அளவிற்கு ஆர்ப்பாட்டமான நகரமில்லை. இருந்தாலும் அதற்கான கொண்டாட்டங்களும் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ போன்ற அமைப்புகளின் தலைமையகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஐரோப்பாவின் இதயம் இன்றைக்குச் செயலற்றுக் கிடக்கிறது.
நேற்று மாலை முழுவதும் நண்பர்களிடமிருந்து ஒன்றடுத்து ஒன்றாக தொலைபேசி அழைப்புகள்; குறுஞ்செய்திகள். 'நீங்கள் வீட்டிற்குப் போய்விட்டீர்களா?', 'நான் பிரசல்சுக்கு போகவில்லை. மெக்கலனிலுள்ள நண்பன் வீட்டில் இருக்கிறேன்.' , 'நான் பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டேன்' என்று.
நாடுகள் காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. கொடிய மிருகங்களுக்கு பயந்து நடுங்கிக்கொண்டே விழிப்புணர்வோடு இரை தேடிச் செல்லும் மான்களாகிவிட்டோம் நாம். புலிகளும் சிங்கங்களும் எந்நேரமும் எங்கிருந்தும் தாக்கலாம். அவைகளிடம் சிக்கிக்கொண்டு
இரையாகிவிட்டிருந்த சக மான்களுக்கு அனுதாபப்படக்கூட அவகாசமின்றி தப்பித்து எங்கோ தெறித்து ஓடும் ஒரு மானைப் போல என்னை உணர்ந்தேன், நேற்று ப்ரசல்சு நெடுஞ்சாலையில் சீறிக்கொண்டு தீனன் நகருக்குத் தப்பித்துச் சென்று கொண்டிருந்தபோது.

(முகநூல் பதிவு: 23 மார்ச்சு 2016)

தீனன் நூலகம் (Tienen Bibliotheek)

சென்ற வாரம் தீனன் (Tienen) நகர குழந்தைகள் நூலகத்துக்கு என் மகனுடன் சென்றிருந்தேன். உண்மையில் குழந்தைகளுக்கான இதுபோன்றதொரு நூலகத்தை இதுவரை நான் கண்டதில்லை. இலக்கியம், தகவல் களஞ்சியங்கள், புதிர்கள், விளையாட்டு, பாட புத்தகங்கள் என்று வயதுவாரியாக அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர எண்ணற்ற குழந்தைத் திரைப்பட மற்றும் விளையாட்டு டி.வி.டி-கள், ப்ளூரே தகடுகள். நான் சிறுவயதில் பார்த்த ஹோம் அலோன், ஜுமாஞ்சி திரைப்படங்களிலிருந்து சென்ற வருடம் வெளியான தி குட் டைனசார் வரை அனைத்து திரைப்படங்களும் கிடைக்கிறது. எதை எடுப்பதென்றே தெரியாமல் ஒரு பத்து படங்கள் எடுத்து வந்தோம். ஒவ்வொரு குழந்தையும் பத்து டி.வி.டி-கள், இருபது புத்தகங்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். தாமதமானால் அபராதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு நாளைக்கு 5 சென்டுகள் (மூணரை ரூபாய்).
எடுத்துவந்த புத்தகங்களில் அதற்குள் நான்கு புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டான் என் மகன். அவன் வாசிக்கும் வேகம் எனக்கே பிரமிப்பூட்டுகிறது. அவனுடன் அமர்ந்து படிப்பதற்காக இந்தப் புகைப்படத்திலுள்ள புத்தகத்தை எடுத்து வந்தேன். கிட்டத்தட்ட ஆயிரம் வார்த்தைகள், அவற்றின் தோற்றம் பற்றிய வேடிக்கை கதைகளை (உண்மையும் உண்டு) வாசித்துக்கொண்டிருந்தோம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல வார்த்தைகளின் தோற்றக் கதைகள் எனக்குப் புதியவை. உதாரணத்துக்கு School, Quiz, Panic போன்றவை. School என்ற ஆங்கில வார்த்தை Skhole என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து தோன்றியதாம். அதன் பொருள் என்ன தெரியுமா? 'ஓய்வு நேரம்'! அதைப் பற்றிய கிரேக்கப் பின்புலம் வியப்பளிக்கிறது. இன்றைக்கு புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு SKHOLE -க்கு செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பண்டைய கிரேக்கர்கள் என்ன சொல்வார்கள்? What an irony!
மேலும் இந்தப் புத்தகத்திலுள்ள Saxophone, Valetine's day போன்ற வார்த்தைகளுக்கான கதைகள் ஏற்கனவே அறிந்தவை.


ரிச்சர்ட் கெரேவின் 'ஹாச்சி' திரைப்படத்தையும் எடுத்து வந்து பார்த்தோம். 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை எப்படி பார்க்காமால் விட்டேன் என்று தெரியவில்லை. டோக்கியோவில் நடந்த உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு 'நாய்களுக்கு ஆஸ்கார் கொடுக்கமாட்டார்களா?' என்ற கேள்வி மனதில் எழுந்தது. என் பாட்டி இறந்த பின்பு அவர் வளர்த்த நாய் உணவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டதைப் பற்றி என் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. அதுபற்றி என் மகனிடம் கூறினேன். படத்தை பார்த்ததிலிருந்தே எனக்கொரு ஹாச்சி நாய் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான் என் மகன். அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

தீனன் நூலகத்தில் ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் தீனன் ஒரு குறுநகரம். இங்கேயே இப்படி இருக்கும்போது லூவன் போன்ற நகரங்களில் எப்படி இருக்கும் என்பதை எளிதாக அனுமானிக்க முடிகிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் லூவன் நகரில்தான் வசித்து வந்தோம். ஒருநாள் கூட அங்கு குழந்தைகள் நூலகத்துக்கு சென்றதில்லை. சென்று பார்க்கவேண்டும்.
நானும் என் தம்பியும் என் தந்தையுடன் சிறுவயதில் திருப்பத்தூர் நூலகத்துக்கு செல்வோம். இன்றைக்கு தீனன் நூலகத்தில் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாமா, எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும், இந்தப் புத்தகத்தை என் பள்ளியில் பார்த்திருக்கிறேன் என்று என் மகன் என்றெல்லாம் கூறிக்கொண்டே நூலகத்தில் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
குழந்தைகளை வேறு எங்கும் அழைத்துச் செல்லவில்லையென்றாலும் பரவாயில்லை நூலகத்துக்கு, குறைந்தபட்சம் அருகிலுள்ள புத்தகக் கடைகளுக்காவது அழைத்துச் செல்லுங்கள்.

(முகநூல் பதிவு: 19 மார்ச்சு 2016)

இருளிலிருந்து

(கு.ப.ரா, கலைமகள், 1939.)
க்ஷண சுகத்திற்குப் பிறகு ஏற்பட்ட அந்த ஆழ்ந்த வெறுப்பு அவருடைய உள்ளத்தைக் கிளறிவிட்டது. யசோதை அப்படியே தூங்கிவிட்டாள். சித்தார்த்தனுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து அறையில் உலவினார். சுகத்தைப் பற்றியும் துக்கத்தைப் பற்றியும் அவர் எண்ணங்கள் மேன்மேலும் உயர்ந்து கிளம்பின. ஆரோக்கியமும் யௌவனமும் சுகபோதை கொடுக்கும் மதுவாக இருக்கின்றன.
எது நிரந்தரம்? சுகம் நிச்சயமாக நிரந்தரமன்று; ஆனால் துக்கமும் நிரந்தரமன்று. சுகமென்னும் வெள்ளப்பெருக்கு எப்பொழுதும் துக்கமென்ற சாகரத்தில் போய்த்தான் முடிவடைகிறது. சுகமே துக்கத்திலிருந்துதான், சிரமத்திலிருந்துதான் உற்பத்தியாகிறது. சொல்லப்போனால்.
சுகம் நிச்சயமில்லை. நோய், மூப்பு, மரணம் இவை நிச்சயம். சுகம் கொஞ்சம்; துக்கந்தான் அதிகம். எதற்காக இந்தத் தாரதம்மியம்? சுகம் ஏன் நசிக்கிறது? துக்கம் ஏன் நீடிக்கிறது? துக்கம் ஏன் சதா சுகத்தின் இறுதியில் மாலையின் இறுதியில் மையிருட்டுப் போல் தென்படுகிறது? துக்கம் தொலையக் கூடியதா? துக்கமற்ற சுகம் உண்டா? அது எது?
"யசோதரையிடம் நான் பெறும் இன்பம் நீடிக்கவில்லை, ஏன்? யசோதரையின் அழகே இன்பத்திற்குக் காரணம். அது நீடிக்காதே! அதன் பூரணப்பிரபையை மூப்பு வந்து ராகு போலக் கிரஹிக்கும். கிருஷ்ணபக்ஷத்தின் சதுர்த்தசி போல மரணமே வந்து அதை அபகரிக்கும். அவளுடைய காதல்? - அதுதான் நீடிக்குமா மரணத்தின் முன்பு?"
"ராஹுலனின் இளமையும் அழகையும் பார்க்கும் பொழுது எனக்கு இப்பொழுது சந்தோஷமில்லை. மூப்பின் ஞாபகந்தான் வருகிறது. சௌந்தரியமே எனக்குச் சாவைத்தான் நினைப்பூட்டுகிறது. சாவுதான் உண்மை. அன்பும் உண்மையல்ல."
"அது கூடாது, சாவு உண்மையாகக் கூடாது. அழகும் அன்பும் அழியக் கூடாது. அவை தோன்றி மறைவதென்றால், பருவத்தின் புஷ்பங்கள் போல மலர்ந்து உதிர்ந்து போவதென்றால், வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. அவற்றை ஓர் அம்சத்தில் உலகத்தில் நிலை நிறுத்த வேண்டியது அவசியம். முயற்சி செய்தால், அது முடியுமானால், என்ன சிரமந்தான் படக் கூடாது? நான் படுகிறேன். அதற்குச் சிரமம், தேவையானால் என் சுகத்தையே - வாழ்க்கையையே அதற்குத் தியாகம் செய்கிறேன்."
சித்தார்த்தனுடைய ஹிருதயத்தைத் துயரம் எட்டிக்கூடப் பார்க்க முடியாமல் பாதுகாத்துக்கொண்டு வந்தார் அவருடைய தகப்பனாரான சுத்தோதனர். துக்கம் என்ற களங்கத்தையே அறியாத துல்லியமான உள்ளம் படைத்தவனாகத் தம் மகனை வளர்த்தார்.
மகன் கண்முன் வறுமை தென்படக் கூடாதென்று ஆக்ஞாபித்தார்; நோயின் குரலோ காட்சியோ அவர் அருகிலேயே இருக்கக் கூடாதென்றும் கட்டளையிட்டார். மூப்பின் முதிர்ந்த களையுங்கூட அவர் மனத்தைக் கிளறக் கூடாதென்றும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தார்.
இவ்வளவு முன்னெச்சரிக்கைளுடன் கூடிய அந்த வாழ்க்கையால் சித்தார்த்தருடைய நினைவுகள் போக்கற்று, சுக திக்கிலிருந்து திரும்பிய வாழ்க்கையின் மூலாதாரங்களைப் பிறப்பிலும் இறப்பிலும் வளர்ப்பிலும் இளைப்பிலும் ஊக்கத்திலும் நினைப்பிலும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தன. சாதாரணமாக அவரை, எல்லோரையும் போல வாழ்க்கையில் அடிபடும்படி விட்டிருந்தால் அவர் புலன் அவ்வளவு தீஷண்யமாயிருந்திராது; வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் நடக்காததாலேயே அவர் மனம் மேலும் மிருதுவாகிப் புஷ்பப் பாதையிலேயே புண்பட்டது.
உலகத்தில் தினசரி கண்ணில் படும் கொடுங்காட்சிகளை அடிக்கடி பார்த்து உள்ளத்தின் உணர்ச்சிகள் கூர்மை மங்கிப் போயிருந்தால் அவர் மனம் அவ்வளவு பாடு பட்டிராது. அப்பொழுதுதான் மலர்ந்த மொக்கின் ஹிருதயம் போல, அவர் ஹிருதயம் சதா காற்றுப் படாது புத்தம் புதிதாகவே இருந்ததால் அதன் மூச்சே அதைப் புடைத்துத் தொட்டாற் சுருங்கியைப் போலச் சுருங்கச் செய்தது.
அவருடைய இன்பக் கனவின் இறுதியில் ஒரு சலிப்பும் ஓய்ச்சலும் உணர்ச்சிச் சாவும் ஏற்பட்டதைக் கண்டதுமே அவருக்கும் வெளியுலகத்துக்கும் நடுவே இருந்த திரையில் ஓர் ஓட்டை விழுந்துவிட்டது. அவ்வளவுதான். அதன் வழியாக வாழ்க்கையின் துன்பப் புயல் புகுந்து பாய்ந்து அவரைத் தாக்கிற்று.
அதனால்தான் துன்பமும் நோயும் மூப்பும் சாவும் சித்தார்த்தரை வேறு யாரையும் கலக்காத முறையில் கலக்கின. உலகத்தில் வேறு யாரையும் கலக்காத முறையில் கலக்கின. உலகத்தில் வேறு யாருமே திகைப்புக் கொள்ளாத வகையில் அவர் வாழ்க்கையின் துவந்துவங்களைக் கண்டு திகைப்புக்கொண்டார். அந்தத் துவந்துவங்களின் மூலங்களை ஆராய்ந்து கலைந்தெறியாத வரையில் வாழ்க்கையில் அழகும் அன்பும் க்ஷண சுகங்களாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் நாளிரவில் அவருக்குத் தோன்றிற்று.
இன்ப மயக்கம் அளிக்கும் பலவித வாசனைகள் கட்டியது போன்ற அந்தப் பள்ளியறையின் சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தார். அவர் உள்ளமும் தன் ஒற்றைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே பார்த்தது.
இரவு, மரணத்தின் கோர ஸ்வரூபம்போல, மௌன தாண்டவம் செய்து கொண்டிருந்தது. வாழ்க்கையே ஒரு மந்திர சக்தியில் ஏங்கிக் கிடக்கும்பொழுது அதன் ஹிருதயத் துடிப்புப்போலச் சுவர்க் கோழிகள் இடைவிடாமல் சத்தம் செய்துகொண்டிருந்தன. எங்கும் மேகம் கவிழ்ந்து இருள் நிறைந்திருந்தது.
திடீரென்று சித்தார்த்தன் தன் வாழ்க்கைப் பள்ளியறையின் சிறுமையையும் வெளியுலகத்தின் விஸ்தாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபொழுது அவருக்குச் சிறியதில் ஒரு வெறுப்பும், பெரியதில் ஓர் ஆழ்ந்த இரக்கமும் ஏற்பட்டது. அக வாசனையும் அழகொளியும் ஏறிய அந்த அறை சுற்றிலுமிருந்த சோக இருளில் ஓர் அணுப் போலத் தென்பட்டது. அந்த ஒளியிலிருந்து பாய்ந்து அந்த இருளில் குதித்துவிட வேண்டுமென்று அவர் உடனே வேட்கை கொண்டுவிட்டார்.
அந்த மகத்தான முகூர்த்தத்தில் அவருக்கு மனைவியின் நினைவும், மகனின் நினைவும் அற்றுப் போயின; தன் நினைவுங்கூட அற்றுப் போய்விட்டது; அதா ஒளியுலகத்துடன் தனக்கு இருந்த பற்று அந்த நிமிஷம் அறுபட்டு விழுந்ததைக் கண்டார்.
முன்னே கிடந்த முடிவற்ற இருள் அவரைக் கூவி அழைத்தது, பொங்கி வழியும் அலைகள்போல.
தகப்பன் கட்டி வைத்த இன்பச் சிறையால் சித்தார்த்தரைக் கட்டுப்படுத்த முடியவில்லை; யசோதரையின் அழகும் ராஹுலனின் அன்புங்கூட அவரை அப்பொழுது அசைக்க முடியவில்லை. அவற்றின் வேரற்ற தன்மை அந்த நிசியில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மெளனமாக, நிச்சய புத்தியுடன், அந்த ஒளி மாளிகையை விட்டு வெளியேறினார். வாழ்க்கையின் இருட்பாதையில் இறங்கினார். சந்திரோதயமாயிற்று. மேகங்களிலிருந்து விடுபட்ட சந்திரன் உச்சிவானில் தோன்றினான்.