சிறப்பு தொகுப்புகள்

Thursday, June 23, 2016

வார்லி ஓவியம்

தி ஹிந்து தமிழ் இதழின் சுவர் ஓவியம் கட்டுரைத் தொடரில் கடந்த வாரம் 'வார்லி ஓவியம்' பற்றிய சுவையான செய்திகளை வாசித்தேன். இந்த ஓவியக்கலை மகாராட்டிரம் குஜராத் மாநில எல்லைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினரான வார்லி மக்கள் உருவாக்கி வளர்த்த ஓவியக்கலை. மனிதன் குகைகளில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை ஓவியங்களாக வரைய முற்பட்டு உருவானதே இந்த ஐயாயிரம் வருடங்கள் தொன்மையான ஓவியக்கலை.
வார்லி பழங்குடியினர் தங்களுடைய மண்சுவர்களில் காவி வண்ணம் பூசி அதன் பின்புலத்தில் அரிசி மாவைத் தண்ணீரில் குழைந்தது உருவாக்கிய வெள்ளை பூச்சில் ஓவியங்கள் வரைவார்களாம். பெண்களால் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் அவர்களின் அன்றாடப் பணிகளே இடம்பெற்றிருகின்றன. சூரியனுக்கு வட்டம், மலைகளுக்கு முக்கோணம், வண்டிகளுக்கு சதுரம், செவ்வகம் என்று இந்த ஓவியங்கள் பெரும்பாலும் அடிப்படை வடிவங்களைக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. தெய்வ உருவங்களையோ, மதச் சடங்குகளையோ காண முடியவில்லை என்பது மற்றொரு சிறப்பு.
இங்கே இணைப்பில் நான் பகிர்ந்திருப்பது என் தோழி வரைந்த வார்லி ஓவியம். பிறந்த நாள், திருமணம், இதர பிற விழாக்களில் கடிகாரம், பிளாஸ்டிக் பூக்கள், விளக்கு போன்ற வழக்கமான அன்பளிபபுகளைத் தருவதற்கு பதிலாக இதுபோன்ற ஓவியங்களை தருவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இந்தியப் பழங்குடியினரின் சுவர்களை அலங்கரித்த ஐந்தாயிரம் வருட தொன்மையான ஓவியங்கள் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது.


வாழ்த்துக்கள் கீர்த்திகா. தொடருங்கள்.

(முகநூல் பதிவு: 24 ஏப்ரல் 2016)

Tuesday, June 14, 2016

ஔரங்கசீப் எனும் புதிர்!

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் பற்றி வாசிப்பது என்பது எனக்கு திகட்டாத ஒரு விஷயம். அவிழ்க்க முடியாத ஒரு புதிர் அவர்.


ஒரு புறம் பார்த்தால் - ஆட்சியைக் கைப்பிடிப்பதற்காகத் தன் உடன்பிறந்தவர்களுடனேயே போரிட்டவர்; இறுதியில் அவர்களைக் கொன்றவர். தான் மிகவும் நேசித்த மகள் செப்-உன்-நிசாவையே சிறையிலடைத்தவர். தந்தை ஷாஜஹானை வீட்டுக் காவலில் வைத்தவர். அவர் மறைந்த பிறகு அவர் விருப்பப்படி அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தலாம் என்று அவரது சகோதரி ஜஹானாரா அனுமதி கேட்டும், எளிய ஊர்வலம் போதும் என்று மறுத்தவர்.
மறுபுறம் - எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரம் அறவே பிடிக்காது. தாஜ்மகால் அவருக்குப் பிடிக்காமல் போனதில் பெரிய வியப்பில்லை. அரசாங்கப் பணத்தை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையாளர். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
அவருடைய தந்தையின் இறுதி ஊர்வலம் பற்றி கூறினேன். அவ்வளவு ஏன்.. தன்னுடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆலம்கீர் அவருடைய உயிலில் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் மீண்டும் வியப்பு வந்து தொற்றிக் கொள்கிறது. காபூலில் இருந்து தமிழகம் வரை பறந்து விரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமைக்குரிய பேரரசர், தான் தன் கைகளால் செய்த தொப்பிக்களை விற்றுக் கிடைத்த நான்கு ரூபாய்களையும் இரண்டு அனாக்களையும் கொண்டு தன் மீது போர்த்தப்படவேண்டிய கதரால் செய்யப்பட்ட கஃபன் துணியை வாங்கிக்கொள்ளவேண்டும். தன் கையால் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் பிரதிகளை விற்றுத் தான் பெற்ற 305 ருபாய் பணத்தில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். மேலும் தன்னுடைய உடலை ஆடம்பரங்களின்றி அடக்கம் செய்ய வேண்டும். தன் நினைவாக கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது, தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட கல் கூட வைக்கக்கூடாது என்று போகிறது உயில்.
உண்மையில் நான் அவரைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நெறியற்ற செயல். ஏனெனில் அவருடைய உயிலின் இறுதி வார்த்தையாக அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்: 'அல்லா யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூகக் கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.'
அவரது வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது என்பது அவரது இறுதி விருப்பம். இருப்பினும், அவர் பதவியேற்ற பிறகு தனக்கு அரசாங்கத்தில் பதவி அளிக்குமாறு வேண்டிய அவருடைய ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதத்தைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் என்று தோன்றியதால் எழுதினேன். ஏனெனில் இன்றைய ஆசிரியர்களும், ஆட்சியாளர்களும், மற்றவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய மடல் அது. குறிப்பாக மொழி மற்றும் கற்பிக்கும் முறை மீதான அவருடைய இந்த விமர்சனம் 350 ஆண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
இனி, அவர் தன்னுடைய ஆசிரியர் முல்லா சாகிப்பிற்கு எழுதிய கடிதம் :
கற்றவரே!
நீர் என்னிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கியப் பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன். நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது.
ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள்.
ஆஹா...! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு! எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? - உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின.. அந்த சாம்ராஜியங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழுந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனத்திற்கான, அவசியமான, முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்!
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்! சட்டம், மத வழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றை எல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்? என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத, மனத் திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தவித பயனுமே இல்லாத, புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை. நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான, இருள் அட ர்ந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். மேதாவிகளையும் கூட குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள்!
உங்களைப் போன்றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க, உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள். 'உங்களுகுத்தான் எல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்த பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அறிய தத்துவ ரகசியங்கள் புரியும்' என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால், அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி, துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால், நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால், இப்பொழுதும் சொல்கிறேன், இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டியிருப்பேன்.
எப்போதும் என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா? ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப்படையை எப்படி நடத்திச் செல்வது, என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட் டிருக்கிறேன். நிச்சயமாக உமக்கல்ல!
போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்.
.....................
ஆலம்கீர், தங்களைப் பற்றி எழுதியதற்காக என்னை மன்னிப்பீராக!

(முகநூல் பதிவு: 10 பிப்ருவரி 2016)

Sunday, June 12, 2016

ஈரம்

கடந்து போகும்
அத்தனை மேகங்களும்
பொழிவதில்லை
நீருடை மேகங்கள்
கூடிநின்று ஆர்ப்பரித்து
ஈரமீந்துவிட்டுப் போகின்றன
வறட்டு மேகங்கள்
வெறுத்து விலகிச்
சென்று விடுகின்றன
ஆயினும் அவைதம்
நிழலால் நிலத்தை
நனைத்துவிட்டே போகின்றன
நீர் மேகமோ நிழல் மேகமோ
நிலத்தின் ஈரம்
இரண்டுக்கும்தான்.

Thursday, June 9, 2016

சில வரங்களுக்காக..

பிறருக்காக நாம் முடிவெடுக்க நேரிடும் தருணங்கள் கத்தி முனையில் நடப்பது போன்றது; அபாயகரமானது. ஆயினும் நண்பர்களின் நலன் கருதி, அவர்களுக்காக நான் எடுத்த முடிவுகள் சில தவறாக முடிந்திருக்கிறது. ஒரு சிலருக்கு உண்மையான நோக்கத்தோடு உதவி செய்ய விழைந்து, அதில் மற்ற நண்பர்களையும் ஈடுபடுத்தி, பிறகு அந்த முடிவுகள் ஏற்படுத்திய பாதகங்களால் அவர்களது நட்பையும் இழந்து, இருபுறங்களிலிருந்தும் சாபங்களைப் பெற்று, பெரும் சிக்கல்களில் என்னை புகுத்திக்கொண்டு மனதை ரணப்படுத்திக்கொண்ட தருணங்கள் பல.
ஒரு மலரின் அழகை ரசித்து விட்டு, வாசத்தை நுகர்ந்து களிப்புற்று, பின்பு அதைப் பறித்து தலையில் வைத்துக்கொள்ளும்போது சிறு முள் குத்தியது என்பதற்காக, எப்படி அந்த மலரை கசக்கி நசுக்கி வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
இதுபோன்ற நல்லாத்மாக்கள் ஒவ்வொருமுறையும் கண்டும் காணாதவாறு வெறுப்புடன் கடந்து போகும்போதும், மறைந்திருந்து தாக்கும்போதும் என் தந்தையின் நாட்குறிப்பில் ஒருமுறை நான் படித்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்:
"என் சிறகுகள் முறிக்கப்படுகின்றன
என் எதிரிகளால் அல்ல
என் மென்மையான சிறகுகளின்
வெம்மையில் வளர்க்கப்பட்டவர்களால்.."
நமக்கெதற்கு இந்த வம்பெல்லாம்? இனிமேல் யாருக்கும் வேண்டிச்சென்று உதவி புரியக் கூடாது என்று சமயங்களில் தோன்றும். ஆயினும் மற்றவர்களுக்கான என் முடிவுகள் பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கிறது. என் செயல்கள் பலமுறை நன்மையிலேயே முடிந்திருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மகிழ்ச்சியோடு நம் கைகளைப் பற்றி 'நன்றி!' என்றும், 'நீங்கள் அப்போது குறுக்கிடாமல் இருந்தால்..' என்றும், 'அதை என்னால் மறக்கவே முடியாது' என்றெல்லாம் கூறி வாழ்த்தும்போதெல்லாம் காயம் பட்ட இடங்களில் மயிலிறகால் வருடுவது போல் உணர்கிறேன்.
இப்படி மயிலிறகேந்தி ஓடிவந்து வருடி அன்பு வீசும் நண்பர்கள் இருக்கும் வரை, வில்லேந்தி மறைந்து நின்று அம்பு வீசித் தாக்கும் அன்பர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
சில வரங்களுக்காக சில சாபங்களை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

Wednesday, June 8, 2016

கற்றலே வாழ்க்கை

இன்று உலக புத்தக தினம்.
காலை எழுந்தவுடன் என் மகனிடம், 'இன்று உலக புத்தக தினம். நாம் இருவரும் ஒன்றாக புத்தகம் ஒன்றை வாசிக்கலாமா?' என்று யோசனைதெரிவித்தேன்.
குதூகலத்துடன், 'என்ன புத்தகம்? என்ன புத்தகம்?' என்று கேட்டான்.
'நீ போய் உன் அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா.' என்றேன்.
அவன் தேர்ந்தெடுத்த புத்தகம் 'ரிச்சர்ட் டேவிட் பாக்' எழுதிய 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' என்கிற புத்தகம். சிறப்பான இந்நாளில் வாசிப்பதற்கு எத்தனை பொருத்தமானதொரு புத்தகம். இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் சிறுவயதில் தன்னுடைய கையொப்பமிட்டுப் பரிசளித்த புத்தகம்.


சிறுவயதில் நானும் என் தம்பியும் ஒன்றாக வாசித்த புத்தகம். இன்றைக்கு அவன் சுருங்கி என்னுடன் வாசித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.
ஆனால் என்ன, ஒரு பத்தி படிப்பதற்குள் ஓராயிரம் கேள்விகள், கிளைக் கதைகள். மகாபாரதத்தை வியாச முனி சொல்லக் கேட்டு எழுதியபோது நிச்சயம் விநாயகர் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
'பறப்பது என்பதே இரையைத் தேடுவதற்காக மட்டும்தானா? வெறும் எலும்பும் இறகுகளும் மட்டுமா நான்? மந்தைகளோடு சேர்ந்து சதா இரைக்காக சண்டையடித்துக்கொண்டு இருப்பது மட்டுமா வாழ்க்கை?' என்று தனக்குத்தானே கேள்விகளை எழுப்பிக்கொண்டு, தன்னுடைய தீவிர பயிற்சியின் மூலம், புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு, 'வாழ்வதும் பறப்பதும் உணவுக்காகவே' என்று அறிவுறுத்திய பெற்றோர்களுக்கே சவாலிடும் வகையில் அன்றாடம் புதிய முயற்சிகளை செய்துகொண்டு, அந்தக் கூற்றை மாற்றி 'வாழ்வது கற்பதற்காகவே' என்பதை உணரவைத்த 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன்' என்கிற கடற்பறவையின் கதையைத்தான் என் மகனுடன் புத்தக தினத்தில் வாசித்தேன்.
இப்போது சொல்லுங்கள், எத்தனை பொருத்தமான புத்தகம்?
'கற்றலே வாழ்க்கை.'
வாசிப்போம். கற்போம். வாழ்வோம்.

நாடு கடந்த கலை

முந்தைய குறிப்பில் மகனுடன் இன்று வாசித்த 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' புத்தகம் பற்றி எழுதியிருந்தேன். தற்போது அருண் எழுதியுள்ள 'நாடு கடந்த கலை' என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஐரோப்பிய, ஆசிய நாட்டு படைப்பாளிகள் எடுத்துள்ள குறும்படங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார். 1936-ஆம் ஆண்டில் லண்டனில் எடுக்கப்பட்ட Night Mail ஆவணப்படத்திலிருத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த Meals Ready குறும்படம் வரை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்ற சில குறும்படங்களைப் பற்றிய பதினைந்து கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில், பெல்ஜியம் நாட்டு குறும்பட இயக்குநர் Guido Thys இயக்கியுள்ள Tanghi Argentini படத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். வாசித்து முடித்துவிட்டு புத்தகம் பற்றி எழுதுகிறேன்.(முகநூல் பதிவு: 23 ஏப்ரல் 2016)

Sunday, June 5, 2016

நீரூற்று நகரம்

கடந்த வாரம் 'ஸ்பா' (SPA) நகரம் சென்றிருந்தேன்.
ஸ்பா, பெல்கியத்தின் (Belgium) தெற்கு வலோனிய பிராந்தியத்திலுள்ள ஒரு குறுநகரம். வடக்கு ப்ளெம்மிய பிராந்தியத்தின் எல்லையில் நான் வசிக்கும் தீனன் நகரிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரம். குறுக்குச் சாலைகளற்ற அதிவிரைவு சாலை கிட்டத்தட்ட ஸ்பா வரை செல்வதால் ஐம்பது நிமிடங்களில் சென்று விடலாம். அங்கிருந்து லக்சம்பர்க், ஜெர்மனி, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளையும் சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தில் தொட்டுவிடலாம்.
பெல்கியத்திலேயே எழில்மிக்க பகுதி எது என்று யாரைக் கேட்டாலும் 'ஆர்டென்' (Ardennes) மலைத்தொடரைத்தான் கூறுவார்கள். பெல்கியத்தில் தொடங்கி லக்ஸம்பர்க், பிரான்ஸ் நாடுகள் வரை பரந்து விரியும் இந்த வனப்பகுதி விடுமுறை விடுதிகளுக்கும், ஓய்வகங்களுக்கும் புகழ்பெற்றது. எழுபது பேர் தங்கக்கூடிய அளவிற்கு பெரும் பண்ணை வீடுகளும் உண்டு. என்னுடன் பணியாற்றும் பல நண்பர்கள் அடிக்கடி ஆர்டென் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். ஒரு வருடத்துக்கு முன்பே தெளிவாகத் திட்டமிட்டு முன்பதிவு செய்துவிடுவார்கள். அத்தகைய 'ஆர்டென் வனப்பகுதியின் முத்து' என்று 'ஸ்பா' நகரை அழைக்கிறார்கள்.


மரங்களடர்ந்த ஆர்டென் பள்ளத்தாக்கில், மலைத்தொடர்களும், ஆறுகளும், நீரூற்றுகளும் சூழ அமைந்த 'ஸ்பா' நகரிலுள்ள கனிம, வெப்ப நீரூற்றுகள் நோய்தீர்க்கும்தன்மை கொண்டவை. இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் லட்சக்கணக்கான ஸ்பாக்கள் (SPAs) அனைத்திற்கும் தோற்றுவாய் பெல்கியத்திலுள்ள ஸ்பா நகரம்தான் என்பது பலருக்குத் தெரியாது. அங்குள்ள 'லே தெர்மே டி ஸ்பா' (Les Therme De Spa) என்கிற ஸ்பாவில் 33 டிகிரி சூடேற்றப்பட்ட நீர் நிரம்பிய பரந்து விரிந்த நீச்சல் குளத்தில் மூன்று மணிநேர குளியல், ஒரு மணிநேரம் வெப்ப நீரூற்றில் அமர்ந்தபடி ஒய்வு, பிறகு நீராவிக் குளியல் என்று ஐந்து மணிநேரம் ஸ்பாவுக்குள்ளே நிம்மதியாய் கழிந்தது. ஒரு குன்றின் மேல் அமைந்த அந்தக் கண்ணாடி மாளிகையிலுள்ள நீச்சல் குளத்தில் இருந்தபடியே ஸ்பா நகரைச் சுற்றி அரண்போல் சூழ்ந்துள்ள ஆர்டென் மலைத்தொடரைப் பார்த்து ரசிக்கலாம். ஓரிரு மாதங்கள் கழித்துச் சென்றிருந்தால் இன்னும் பசுமையாக இருந்திருக்கும்.SPA, ஒரு நகரின் பெயராக மட்டுமல்லாமல், ஒரு வர்த்தகச் சின்னமாகவும் ஆனது இன்றோ நேற்றோ இல்லை. இன்றைக்கும் இந்தியாவில் கிடைக்கும் SPA கனிமநீர் பாட்டில்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே SPA நகரிலிருந்து தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டு வருபவைதான். எனவே நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் பழக்கம் நேற்றுத் தொடங்கியதல்ல. அதற்கு மருத்துவ, நிலவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. இன்றைக்கு, 'Bottled Water' is a billion dollar industry.'லாக் டி வார்பா' (Lac De Warfaaz) ஏரியைச் சுற்றி நடையைத் துவங்கி பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே பலத்த காற்று வீசத் தொடங்கியதால், நடையை முடித்துக்கொண்டு, ஒரு சிறிய அருந்தகத்துக்கு சென்று குளிருக்கு சூடான காபி அருந்திவிட்டு, மீண்டும் நகருக்கு வந்து, நகர்மையத்தில் அமைந்த 'கசினோ டி ஸ்பா' (Casino de Spa) சென்றோம்.
கசினோ டி ஸ்பா உலகின் பழமைவாய்ந்த பிரமாண்டமான சூதாட்டக் கூடம். லியாஷே (Liege) மாகாணத்தின் ஆயர் 1763-ல் கசினோவின் கட்டிடப்பணியை துவக்கிவைத்துள்ளார்.


அதன் பிறகு அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள 'பெல்கியம் கிராண்ட் ப்ரீ பார்முலா 1 கார் பந்தய சுற்று ஸ்பா - பிராங்கோஷா(ம்)' (Circuit de Spa-Francorchamps, Belgium Grand Prix Formula 1) இருக்கும் 'ஸ்டாவ்லோ' (Stavlot) பகுதிக்குச் சென்றோம். ஸ்டாவ்லோவுக்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையின் இருபுறமும் இயற்கை எழில்கொண்ட நிலப்பரப்பை பார்த்துக்கொண்டே, தமிழ் பாடல்களைக் கேட்டுக்கொண்டு காரை ஓட்டிச் செல்வது என்பது ஒரு வரம் என்றே தோன்றியது.

பார்முலா 1 ரசிகர்களுக்கும், பந்தயச் சுற்றில் கார் ஓட்ட விரும்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. வருடத்திற்கு ஆறு நாட்கள் அந்தச் சுற்றில் பொதுமக்களுக்கும் ஓட்ட வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்து விட வேண்டும். அமெச்சூர்களுக்குக் கட்டுப்பாடுகளும் அதிகம். விலை ஒன்றும் நான் நினைத்ததுபோல் அதிகமில்லை. நூறு யூரோ. வரும் ஆகஸ்டு மாதம் நிகழவிருக்கும் பார்முலா 1 போட்டியைப் பார்ப்பதற்கே டிக்கெட் விலை ஐநூறு யூரோ எனும் பட்சத்தில் அங்கு நம்முடைய காரை ஓட்டுவதற்கு நூறு யூரோ அதிகமில்லைதானே?
பார்முலா 1 மட்டுமல்ல; பறக்க விரும்புபவர்களுக்குமான இடம் 'ஸ்பா'. 'ஸ்கைடைவ் ஸ்பா' மையம் நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனக்கும் உயரத்துக்கும் ஆகாது. ஐபிள் டவரில் இரண்டாம் நிலையிலிருந்து உச்சிக்கு ஒவ்வொருமுறை செல்லும்போது மின்தூக்கியில் என் கால்கள் என் கட்டுப்பாட்டிலேயே இருந்ததில்லை. எங்கிருந்து பறப்பது? இருந்தாலும் ஒருமுறையாவது ஸ்கைடைவ் புரிந்து இந்த அச்சக்கோளாறை சரி செய்ய வேண்டும் என்கிற அவா இருக்கிறது.  அறுபது யூரோ அதிகமாகக் கொடுத்தால் மணிக்கட்டில் ஒரு கேமராவைப் பொறுத்திவிடுகிறார்கள். அது நாம் ஆகாயத்திலிருந்து கீழே விழுவதையும், பறப்பதையும், நம் உணர்வுகளையும் நாம் போடும் கூச்சல்களையும் படம் பிடித்துவிடும்.

https://www.facebook.com/madhavan.elango/videos/1100363663360799/

(இந்த காணொளி SPA நகரில் எடுக்கப்பட்டதல்ல. முகநூலில் இந்தப் பதிவு எழுதிய சில நாட்கள் கழித்து டீஸ்ட் நகருக்கு அருகே ஷ்காபன் என்ற இடத்தில் நான் 'ஸ்கைடைவ்' செய்யும் மொழுது எடுத்தது..)

பெல்கியம் ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறிய நாடு என்பதைத் தவிர வேறு எதுவும் பலருக்குத் தெரியாது. எனவே அவ்வப்போது பெல்கியம் பற்றி எழுதிப் பதிவிட இருக்கிறேன். சிறிய நாடுதான் ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் பெல்கியம் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி. அவ்வளவு ஏன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புகளின் தலைமையகங்கள் பெல்கியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில்தான் இருக்கின்றன. பிரசல்ஸ் ஐரோப்பாவின் இதயம்.
நெப்போலியன் தோல்வியுற்ற உலகப் புகழ்பெற்ற வாட்டர்லூ போர் நடைபெற்ற வாட்டர்லூ (Waterloo) என் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர தூரம்தான். அன்றைய போர்க்களம் இன்றைக்குப் பரந்து விரிந்த விளைநிலமாகக் காட்சியளிக்கிறது.
டச்சு மொழியில் 'பெல்கிய' என்றும், ஜெர்மானிய மொழியில் 'பெல்கியன்' என்றும், பிரெஞ்சு மொழியில் 'பெல்ஜிக்' என்றும் அழைக்கப்படும் பெல்ஜியத்தை தமிழில் 'பெல்கியம்' என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
அடுத்தமுறை SPA-க்களுக்குச் சென்றாலோ, SPA நீரை பருகினாலோ, அல்லது SPA என்கிற வார்த்தை எங்கேனும் தென்பட்டாலோ உங்களுக்கு பெல்கியம் நினைவு நிச்சயம் வரும் அல்லவா?
இன்னும் சுவாரசியமான தகவல்களுடன் விரைவில்.

(முகநூல் பதிவு: 01 ஏப்ரல் 2016)