சிறப்பு தொகுப்புகள்

Monday, October 17, 2016

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

ஒரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.
Look at that! Exactly. Brilliant.


(முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)

Sunday, October 16, 2016

குழந்தைகளால் நிரப்புக..

என் மகனுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்களும் பெல்ஜியர்களும்தான். அவனுடைய உற்ற நண்பர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் பாகிஸ்தானியர்களே. அதிலும் அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் - 'ஹசன்'. அவனும் பாகிஸ்தானியனே.
பெல்ஜியத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அதுவும் அரைமணிநேரம் மட்டுமே மதக்கல்வி போதிக்கப்படுகிறது. கிறித்தவம், இஸ்லாம் என்று எதை வேண்டுமானாலும் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மதக்கல்வி விரும்பாதவர்கள் 'நல்லொழுக்க வகுப்பைத்' தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என் மகன் நல்லொழுக்க வகுப்புக்குத்தான் செல்கிறான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹசன் இவனிடம், 'நீ ஏன் நல்லொழுக்க வகுப்புக்குச் செல்கிறாய். உன் நாட்டில் கடவுளே கிடையாதா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு என் மகன், 'என் நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள்களைப் பற்றியெல்லாம் நம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். அதனால்தான் நான் நல்லொழுக்கம் படிக்கிறேன்' என்று கூறியிருக்கிறான். அதற்கு ஹசன் இவனிடம், 'அப்படியானால் நாம் போய் ஆசிரியரிடம் பேசி உன்னுடைய கடவுளையும் இங்கே கொண்டு வரவேண்டும். இது சரியில்லை.' என்றானாம். அதற்கு இவனும் தலையாட்டி பாராட்டிவிட்டு வந்திருக்கிறான். பிறகு நல்லொழுக்கம் எப்படி கடவுள் கல்வியை விட முக்கியம் என்று பாடம் எடுக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று என் மகனுக்கும் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தாய்: உனக்கெதிரே இரண்டு பேர் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டுள்ளார்கள். ஒருவன் 'ஹசன்', உன்னுடைய பாகிஸ்தானிய நண்பன். இன்னொருவன் நீ இதுவரை பார்த்திராத ஒரு சிறுவன். நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ரெண்டு போரையும் காப்பாத்துவேன்' (அவன் மொழியில்..)
தாய்: அது முடியாது. யாராவது ஒருவரை மற்றும் காப்பாற்ற முடியும் என்றால் யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ஹசனைத்தான் காப்பாத்துவேன் அம்மி'
தாய்: சரி. அதில் ஒருவன் ஹசன். மற்றொருவன் ஒரு இந்தியச் சிறுவன். அப்போது நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'என்ன அம்மி இதுல டவுட். அப்பயும் ஹசனைத்தான் காப்பாத்துவேன்.'
தாய்: ஏன்?
மகன்: 'ஏன்னா அவன் என் பிரெண்டு'
ஆஹா. இதுபோதும் எனக்கு. 'இன்னும்' களங்கப்படாத குழந்தை உள்ளம். மதம் புகுந்துவிட்டதைக் காணமுடிகிறது. இருந்தாலும் தேசியவாதம், இனவாதம், சாதியம் இதெல்லாம் இந்தக் குழந்தைக்குப் புரிய வாய்ப்பில்லை. புரிந்ததெல்லாம், தெரிந்ததெல்லாம், அறிந்ததெல்லாம் 'நட்பும் அன்பும்' மட்டுமே.
எனக்கு இப்போது குழந்தைகள் பெரியவர்களாகவும், பெரியவர்கள் சிறுமைகளால் நிரம்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.
இந்த உலகம் உய்வதற்கு ஒரே வழி அதைக் குழந்தைகளால் நிரப்புவது மட்டுமேயன்றி வேறில்லை. அப்படியே வளந்தவர்களின் வாய்களை இறுகக் கட்டி விட வேண்டும். மேற்கண்ட 'வாதங்களெல்லாம்' குழந்தைகளுக்குள் திணிக்கப்படாமல் இருக்க அது உதவும்.

லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்..

'அன்டூஷாப்லே' (Intouchables) என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பற்றியும், குறிப்பாக அதன் பின்னணி இசை பற்றியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தோழா' திரைப்படம் அன்டூஷாப்லேவைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறுகிறார்கள். தழுவல் மட்டுமா என்பதை நீங்களே பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.

நான் சொல்ல வந்தது அந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்த 'லுடோவிகோ எநௌடி' (Ludovico Einaudi) எனும் இசை மாமேதையைப் பற்றி. கடந்த வருடத்தில் பல இரவுகள் எனக்கு லுடோவிகோ எனும் கடவுளால்தான் நகர்ந்திருக்கிறது. 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றித் தெரியாது. ஆனால் நோய் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித்திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயம் விரைவில் வெளியில் வரும். டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வர முயன்றவர் லுடோவிகோ.
லுடோவிகோவின் தந்தை ஜூலியோ எநௌடி ஒரு பதிப்பாளர். இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்களுக்கு இதாலோ கால்வினோவை நிச்சயம் தெரிந்திருக்கும். ஜூலியோ இதாலோவுக்கு நெருக்கமானவர். இதாலோவின் படைப்புகளை பதிப்பித்த அவரே ஒரு எழுத்தாளரும்கூட. லுடோவிகோவின் தாத்தா இத்தாலியின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவர்.
கடந்த வருடம் லுடோவிகோவின் இசை நிகழ்ச்சியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முயன்றேன். கிடைக்கவில்லை. அடுத்த மாதம் பத்தாம் தேதி ப்ரசல்ஸ் நகரில் அவருடைய இசை நிகழ்ச்சி. அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது. அருகாமையிலுள்ள ஹேர்லேன், ஐன்ட்ஹோவன், ஆம்ஸ்டர்டாம், கோல்ன் போன்ற நகரங்களில் நடைபெற இருக்கும் அத்தனை கச்சேரிகளையும், பல இணைய தளங்களில் தேடிவிட்டேன். அத்தனையும் ஹவுஸ்புல்! இவர்கள்தான் ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிட்டுவிடுவார்களே. வருடமாவது முந்திக்கொள்ளவேண்டும்.
லுடோவிகோவின் மந்திரக் கைகள் பியானோ வாசிக்கும்போது உண்டாகும் இசையின் கரங்கள் நம் தலையில் மசாஜ் செய்து உண்டாக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. He is truly a God!
கடந்த மாதத்திலிருந்து என் மகன் சாய் பியானோ வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறான். அவனை தூங்கவைப்பது அத்தனை எளிதான காரியமில்லை. இங்குள்ள குழந்தைகள் ஏழரை மணிக்குத் தூங்கச் சென்று விடுகிறார்கள். என் மகனுடன் தினமும் பகீரப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. சரி, பியானோ வகுப்புக்கு செல்கிறானே என்று லுடோவிக்கோவைப் பற்றி அவனுக்கு கூறிவிட்டு, யூனோ மாட்டினாவை கேட்கச் சொன்னேன். நம்ப மாட்டீர்கள். இரண்டு நிமிடங்கள் கூட ஆகி இருக்காது உறங்கிவிட்டான். இரண்டு நாட்களாக மீண்டும் இல்லத்தில் இரவுகளில் லுடோவிகோ விரல்களின் நடனம் .
எனக்காக ஒரே ஒரு நாள், ஊரடங்கிய பிறகு இந்த பாடல்களை மட்டுமாவது யூட்யூபில் கேட்டுப்பாருங்கள். நான் கூறிய எதையும் மறுக்கமாட்டீர்கள்.
Ludovico Einaudi - Oltimare
Ludovico Einaudi - Divenire
Ludovico Einaudi - Una mattina
Ludovico Einaudi - I giorni
Ludovico Einaudi - nightbook
இதற்கு மேல் நீங்களே கண்டடைந்து விடுவீர்கள்.
கடவுள் இருக்கிறாரா?
நிச்சயம்.
லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்.

(முகநூல் பதிவு: 09 ஏப்ரல் 2016)

Fear no more..

இன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம் கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாடபுத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி.'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நினைவுப்படுத்தியது. ஷெல்லியின் காதலன் தனது அச்சமில்லையை எழுதுவதற்கு ஷேக்ஸ்பியரின் இந்தப் பாடலே தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும். இருந்தாலும், பாரதியின் வீச்சும் வீரியமும் எனக்கு ஷேக்ஸ்பியரில் கிடைக்கவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கடுங்குளிரில் வெளியே சென்றுவிட்டு திரும்பும்போதுதான் எனக்கு ஷேக்ஸ்பியரின் 'Nor the furious winter’s rages' வரியில் இருக்கும் அந்த rage-ஐ உணர முடிகிறது.

I badly want sunshine!

(முகநூல் பதிவு: 19 மார்ச்சு 2016)

Sunday, October 9, 2016

எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

முதலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.
https://www.youtube.com/watch?v=HGcUJ2Dg3uo
இனி நான் இந்தக் கட்டுரையில் எழுதி இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியதும்.

'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிடஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறிய போது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செல்லப்பட்டு விடும். அந்த அளவில்தான் டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் கொடுமையான அந்தச் சத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் இறந்தே தீரவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, அவர்களின் அனுமதி பெற்றுக்கொண்டு, மடிந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டேன்.

டின்னிட்டஸ் பிரச்சினையின் கொடூரத்தையும், என்னுடைய போராட்டத்தையும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும். இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி Euthanasia (=கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது.

ஒரு விழிப்புணர்வுக்காக இதைப் பற்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று 'அன்பே வா' திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் ஒரு வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த மாபெரும் அரக்கன் இந்த டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் எழுத இருக்கிறேன்.

தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சரோடு போராடுவது என்பது எத்தகையது என்று தெரியாது. பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொண்டதோடு சரி. அதை 'முடி' சிறுகதையிலும் பதிவு செய்திருக்கிறேன். டின்னிடஸ் கேன்சர் போல் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதல்ல. ஆனால், நிச்சயம் வாழவிடாமல் செய்யும் அளவுக்கு மோசமானது. அந்த அளவில், இதுவுமே உயிர்கொல்லிதான். இந்தச் சத்தங்களோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான துன்பம் வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய சிறுகதை ஒன்றுக்கு 'அமைதியின் சத்தம்' என்று தலைப்பு வைத்திருந்தேன். அந்தக் கதை டின்னிடஸ் சம்பந்தப்பட்டதல்ல. ஆனாலும் அமைதியின் சத்தம் எவ்வளவு துன்பகரமானது என்பது எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.

எப்படியோ இந்த டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நம்மூரில் எல்லாம் என்னைப் போன்ற சாதாரணனுக்கு இலவசமாக இத்தகைய வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. வசதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும் அப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதுவும் உண்மை. Especially, on human aspects.

டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ, 'அதெல்லாம் ஒன்னுமில்லடா..' என்று கூறியபோதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. என் தந்தையாரும் அப்படியே. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; யோகா தெரபிஸ்ட்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து ஒரு சில யோக முறைகளை பயிற்சி செய்து வந்தேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த டீ குடிப்பதையே நிறுத்தி விட்டு, கிரீன் டீக்கு மாறினேன். எப்போதும் எதிலாவது என்னை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது என்று முடிவுசெய்தேன். சோம்பேறித்தனத்தை 'டின்னிடஸ் அரக்கன்' தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதை அறிவேன். எந்தப் பிரச்சினையையும் தலைக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் ஏற்படும் தனிமையும் அவனுக்குச் சாதகமானதுதான். வாழ்க்கையைக் கொண்டாடுவதால் மட்டுமே அவனைத் துரத்த முடியும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை, நான் செய்வதையெல்லாம் செய்ய விட்டு, அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் என்னை கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், என் மருத்துவரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.

டின்னிட்டஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பழைய அமைதி வேண்டுமென்கிறார்கள். அதிலும் ஐரோப்பியர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள் ஆயிற்றே. அர்த்தமற்ற அமைதியின் மீது அவர்களுக்கு அப்படி என்னதான் காதலோ? ஆனால் டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேண்டுகின்ற அமைதிக்கு நிச்சயம் சாத்தியமே இல்லை என்பதே வலிமிகுந்த உண்மை. எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் கண்டுகொள்வதில்லை. போராடுவதற்கு மனதை வலிமையாக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

ஆனாலும் மனவலிமை அற்ற இவர்களுக்கு இதையெல்லாம் புரியவைப்பதில் சற்று திணறிக்கொண்டிருக்கிறேன். இருந்த மனவலிமையையும் டின்னிட்டஸ் அரக்கன் தின்றிருப்பான் என்பது எனக்குத் தெரியும். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் என் பெல்கிய நண்பன் ஒருவனை 'ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா' என்று தீர்வு சொன்னேன். இந்திய நகரங்களின் உள்ளமைந்த இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் அல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள். இங்கிருக்கும் இரண்டு நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டதால் என்னை இவர்கள் ஒரு கடவுளாகவே பார்க்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

ஒருபுறம் சாகத்துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் யுதனேசியா முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்தச் ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் கேபியிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? அவரை வாழ வைத்திருக்கமுடியுமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த அன்று இரவு எனக்குத் உறக்கமே வரவில்லை.

எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்பியலாளர் 'ஸ்டீபன் ஹாக்கிங்' பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இருபத்தோராவது வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும் செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள்தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், ஹாக்கிங்கின் வாழ்க்கையைத்தான் காட்டுவேன். இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது; அவ்வளவு எதற்கு, அவரால் அவரது உடலைக் கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டுமே சற்று செயல்படுகிறதாம். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி, மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே அவருக்குப் பிடித்தமானதொரு குரலைத் தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம் 'எப்படி இவ்வளவு நாள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?' என்று கேட்டபோது அவர் கூறியது - 'While there is life, there is hope'.

எனக்கு இந்த வரிகள்தான் எல்லாமாயும் இருந்திருக்கிறது. உண்மைதான். நாம் உயிரோடு இருக்கும் வரை நமது நம்பிக்கையை மட்டும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானும் இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் எதற்கு?

இறந்தால் இன்னொரு பிறவி இருக்கிறது என்கிற மூடத்தனத்தை ஒழித்தாலாவது கைவசம் இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையின் மீது மனிதர்களுக்குப் பற்று வருமா? அப்போதுதாவது வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாட ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுமா? ஓருடல். ஒரு பிறவி. காயமே இது மெய்யடா. மெய்யே மெய். அதில் எத்தனை பிரச்சினை இருப்பினும்.

பிரச்சினைகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். அவற்றைத் தொலைத்துவிடுங்கள். டின்னிடஸ் என்பதே ஒரு பிரச்சினைதான். ஆயினும் உங்கள் பிரச்சினைகளை எனக்கிருக்கும் டின்னிட்டஸாகப் பாருங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். நண்பனாக்கிக் கொள்ளுங்கள். ரசிக்க ஆரம்பியுங்கள். அதன் மீதே தியானம் செய்யத் தொடங்குங்கள். இறுதியில் ஒருநாள் அவை தொலைந்து போகும். அவை இருக்கும். ஆனால் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. பிறகென்ன, வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லோருக்குமே தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக உதித்திருக்கும். உலகத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்சமல்லவே. 'செத்துத் தொலைப்பதற்கு பதிலாக வாழ்ந்துத் தொலைக்கலாம்' என்கிற வரி நினைவுக்கு வருகிறது. அநேகமாக வண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. வண்ணதாசன் நம்பிக்கைவாதிதான். ஆனால், எனக்கு இந்த வரிகள்கூட எதிர்மறையாகவே தெரிகிறது. அது என்ன தொலைப்பது? கொண்டாட்டத்துடனே வாழலாமே? நானும்கூட பல சமயங்களில் தவறான காரணங்களுக்காக, அற்ப விஷயங்களுக்காக 'என்ன வாழ்க்கை இது. செத்துப்போகலாம்' என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு சரியான காரணத்துக்காக வாழ விரும்புகிறேன். பெல்ஜியத்தின் சுகாதாரத் துறைக்கும், இந்தக் காணொளியை எடுத்த செய்தி நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கைத் தந்தது போல, டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கைத் தர விரும்புகிறேன். அதற்கேனும் இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். சாதாரணமாக அல்ல. பெரும் குதூகலத்துடன்.