சிறப்பு தொகுப்புகள்

Saturday, May 25, 2013

அவை நிச்சயம் இருக்கும்!

நன்றி: திருப்பத்தூர் முகநூல் பக்கம்
இடம்: ராஜீவ் காந்தி மைதானம், திருப்பத்தூர்

இதோ 
இந்தப் புகைப்படத்தில் தெரியும் 
இதே ஊரில்.. 
இதே மைதானத்தில்.. 

வௌவாலாய்த் தொங்கி
வானமும் பூமியும்
மலையும் மரங்களும்  
கண்டு ரசிக்கும் 
அந்த வீரச்சிறுவனைப் போல்
ஒரு காலத்தில் தொங்கியவன் நான்..

உண்மை!

அதோ அங்கே கூட்டமாய்க்  கூடி
மட்டைப்பந்து விளையாடும்
அந்தப் பொடியன்களில்
ஒருவனாய் பந்தை அடித்துவிட்டு
ஓடிக்கொண்டிருந்தவன் நான்..

உண்மை!

எங்கெங்கோ சென்றேன்
எவரெவரையோ கண்டேன்
எத்தனையோ தோல்விகள் 
எத்தனையோ வெற்றிகள் 
எத்தனையோ சோதனைகள் 
எத்தனையோ சாதனைகள் 
எத்தனையோ கற்றேன் 
எத்தனையோ இழந்தேன்
எத்தனையோ பெற்றேன்

உண்மை.

இன்று,
உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறேன்
நான் என்னவோ நிமிர்ந்து பார்க்க முயற்சிக்கிறேன்
உலகம் ஏனோ இன்னும் தலைகீழாகவே தெரிகிறது!

உண்மை!

நான் என்னவோ நின்றுகொண்டு தானிருக்கிறேன்
உலகம் எதற்காகவோ எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறது!

உண்மை!

அன்புச் சிறுவனே,
நீ அங்கேயே தொங்கிக்கொண்டிரு!
நானும் வருகிறேன்.
நாமிருவரும் சேர்ந்தே தொங்குவோம்!

உண்மை!

அன்புச் சிறுவர்களே,
நீங்கள் அங்கேயே ஓடிக்கொண்டிருங்கள்!
நானும் வருகிறேன்.
நாமனைவரும் சேர்ந்தே ஓடுவோம்.

உண்மை!

நானிருக்கும் இந்த உலகத்தைவிட
அந்தக் கம்பி எனக்குப்  பிடித்திருக்கிறது!
இந்த ஓட்டத்தை விடவும்
அந்த ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
அந்த மலையும் மரங்களும் மைதானமும்
எனக்கு நிரம்பவும் பிடித்திருக்கிறது!

உண்மை!

"
கன்று தாயை விட்டுச் சென்ற பின்னும் - அது
நின்ற பூமி தன்னை மறப்பதில்லை!"
எனும் கண்ணதாசன் கூற்று -

உண்மை!

காலம் அதிவேகமாய்ச் 
சுழன்று கொண்டேயிருக்கிறது!
உலகம் அதனினும் வேகமாய்  
மாறிக் கொண்டேயிருக்கிறது!
எனக்கு பிடித்தவை
என் பேரனின் பேரனுக்கும் பிடிக்குமா?
முதலில் 
இவை அனைத்தும் கிடைக்குமா?
இவை அனைத்தும் இருக்குமா?

நாளை 
இந்தத் தம்பி தொங்கும் கம்பி
பிடுங்கி எறியப்படலாம்.

உண்மை!

அதோ 
அந்தப் பச்சை மரங்கள்
வேரோடு சாய்ந்து சிதையக்கூடும்.

உண்மை!

அதோ 

நிமிர்ந்து நிற்கும் அந்த நீல மலை,
அது கூட மண்ணோடு மண்ணாகிப் போகலாம்.

உண்மை!

ஆனால்..
ஆனால்..
ஆனால்..
எனக்கு நம்பிக்கை இருக்கிறது!
அதோ அங்கு தெரியும்
அந்த பலதரப்பட்ட 'பிளாஸ்டிக்' குப்பைகள் -
"
அவை இருக்கும்!"
உண்மை! 

என் பேரன் வரும்வரை
"
அவை இருக்கும்!"

உண்மை!

அவன் பேரன் வரும்வரை
"
அவை நிச்சயம் இருக்கும்!"

உண்மை!

அவன் பேரனின் பேரன் வரும்வரை
"
அவை நிச்சயம் இருக்கும்!"

உண்மை!

அந்த பலதரப்பட்ட 'பிளாஸ்டிக்குப்பைகள் -
"அவை நிச்சயம் இருக்கும்!"