ஞாநி
ஞா நி யின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய 'விசாரணை' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை." என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி. அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, 'இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!' என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். ...