ஒரு பிதாமகரின் அஸ்தமனம்

 

ன் தந்தையார் சிறுவயதிலேயே எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த உன்னதமான அவருடைய நண்பர்களில் முதன்மையானவர் டாக்டர் சம்பந்தம். வெறும் குடும்ப மருத்துவராக மட்டுமன்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு பெரியப்பாவாக, நலம்விரும்பியாக, வழிகாட்டியாக, நண்பராகப் பழகியவர். வாழ்க்கை எனும் குருஷேத்திரப் போரில் பீஷ்ம பிதாமகராக என்னருகே நின்று எனக்கு வழிகாட்டியவர்; ஜாம்பவானாக என்னுடைய பலத்தை எனக்கு நினைவூட்டியவர்; எத்தனையோ தருணங்களில் மனம் சஞ்சலமடைந்து இந்த உலகின் மீது வெறுப்புற்று விடுபட எண்ணிய போது கண்ணனாக கீதோபதேசம் செய்து, என் அகக் கண்களைத் திறந்து வைத்து என் வாகனத்தின் திசையை மாற்றிவிட முயன்று என் சாரதியாகத் திகழ்ந்தவர். பார்த்த சாரதி அவர். இன்றைக்கு நான் நானாக இருந்து பலருக்கு வழிகாட்டுவதற்கும், என்னுடைய இன்றைய நிலைக்கு முக்கியமானதொரு காரணமாகவும் இருந்தவர். நான் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அலைந்தவர். உண்மையில் இவற்றையெல்லாம் அவருடைய மகன்களுக்குக்கூட செய்திருப்பாரா என்பது சந்தேகமே.


பார்த்த சாரதி என்று கூறினேன். உண்மைதான். இளம் வயதில் அடிக்கடி மனம் சஞ்சலமடைபவனாக இருந்திருக்கிறேன். அவருடைய மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்திக்கும் போது, அவருடைய அறை ஒரு தேர் போலக் காட்சியளிக்கும். நான் பார்த்தனாக அவருக்கு அருகே நோயாளிகள் அமரும் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். அவர் கண்ணனாக என்னுடன் உரையாடிக் கொண்டிருப்பார். இது பதின்ம வயதில் தொடங்கி என் திருமணம் வரை தொடர்ந்தது. பதின்ம வயதுப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது ஒரு நண்பனைப் போல் தோளின் மீது கை போட்டுக்கொண்டு, "உறங்கி எழுந்தவுடன் உள்ளாடை நனைந்திருந்ததா?" என்றெல்லாம் கேட்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்ல டா" என்று தட்டிக் கொடுத்து ஒரு நண்பனைப் போன்று என்னை நடத்தியிருக்கிறார். அந்த வகையில், என் தந்தையிடம் பேசத் தயங்கிய விஷயங்களைக்கூட நான் அவரிடம் பேசியிருக்கிறேன். இன்றைக்கும் சாயிடம் அவருடைய அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறேன்.

நான் ஒரு "intuition" ஆசாமி. ஆனால் நம்முடைய கல்விமுறை "observe and remember" என்று தகவல்களை உள்வாங்கி நினைவில் வைத்து, அதை அப்படியே எழுதி மதிப்பெண்களைக் குவிக்கும் இயந்திரங்களைக் கொண்டாடும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நம் அரசாங்கத் தேர்வுகளும் அத்தகையோரை தேர்ந்தெடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. படைப்பூக்கத்துக்கு இங்கு இடமே இல்லை. அதன் காரணமாகவே சிறுவயதில் நான் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று வந்தேன். இதைப் பற்றி ஒருமுறை டாக்டரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, காரல் யுங் பற்றியெல்லாம் என்னிடம் கூறாமல், உன்னையும் என்னையும் போன்றவர்கள் வேறு விதமாகதான் இங்கு ஜெயிக்க முடியும் என்று, முதன்முறையாக "photographic memory" என்கிற உத்தியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த நாள் என் படிப்பு வாழ்க்கையின் திருப்புமுனை. இன்றளவும் அதைப் பயன்படுத்தி வருகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்புகூட என்னைப் போன்ற "intuition" ரக மனிதர் ஒருவருக்கு மூன்றாவது கண் பயிற்சியின் போது அதை சொல்லிக் கொடுத்தேன்.

விதியின் மீதான நம்பிக்கையற்றவர்கள் மட்டுமே மருத்துவர்களைக் கடவுளாகப் பார்க்க முடியும். மற்றவர்களுக்கும் எல்லாம் விதியின் செயல். எத்தனையோ முறை என்னுடைய உயிரைக் காப்பாற்றி உலவ விட்டிருக்கிறார். நிறைய பேருக்கு இது தெரியாது. என்னுடைய முதல் தம்பி ஒரு வயதிலேயே நிமோனியா காய்ச்சலால் மரணித்து விட்டான். ஒரு முறை எனக்கும் என் தம்பிக்கும் அக்யூட் நிமோனியா காய்ச்சல் வந்த போது அம்மாவும் அப்பாவும் பதறி விட்டார்கள். டாக்டர்தான் கடவுளாகத் தோன்றி எங்களை குணப்படுத்தி மறுபிறவியளித்தார்.

அவருடைய மருத்துவ அணுகுமுறைக்கு என்றுமே நான் ரசிகன். “நான் மட்டும் மருத்துவம் படித்திருந்தால் உங்களிடம்தான் apprenticeship எடுத்திருப்பேன்" என்று அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். "மருந்து பாதி பேச்சு மீதி" என்பதே அவருடைய தாரக மந்திரம். மருந்தால் குணப்படுத்த முடியாத பிரச்சினைகளை அவருடைய பேச்சு தீர்த்து வைக்கும். இதை எல்லா மருத்துவர்களும் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஐந்து வருடங்களாக டின்னிட்டஸ் என்கிற கொடுங்கனவுடன் போராடி எப்படியோ என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். தீர்வு கிடைக்கவில்லை. இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். ஆனால், எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். ஐரோப்பாவை விடுங்கள். இப்போதெல்லாம் நம் நாட்டிலேயே பெருநகரங்களிலுள்ள மருத்துவர்களும் அப்படித்தான் செயல்படுகிறார்கள். இவர்களெல்லாம் டாக்டர் சம்பந்தம் போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

டின்னிட்டஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது அவரை அழைத்தேன். அவர் எப்போதும் போல், "அதெல்லாம் ஒன்னுமில்ல டா.." என்று கூறிய போதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. டின்னிட்டஸுக்காக சில உடற்பயிற்சிகளை அப்பாவுக்கு அவர் சொல்லிக் கொடுக்க, அவற்றையெல்லாம் அப்பா எனக்கு ஸ்கைப் வழியாக பயிற்றுவித்தார்.

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், முக்கியமாக டாக்டரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் அடைந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் ஏற்கனவே அப்படியே என்னுடைய டின்னிட்டஸ் விழிப்புணர்வுக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஏதோ அஞ்சலி செலுத்தும் விதமாக மிகைப்படுத்தி எழுதுகிறேன் என்று எண்ண வேண்டாம். கடந்த ஞாயிறன்று இங்கே பெல்ஜியத்தில் டின்னிட்டஸால் விரக்தியில் இருக்கும் பெண்மணிக்கும் அவருடைய கணவருக்கும் பயிற்சி வகுப்பு எடுத்தேன். அப்போதுகூட டாக்டரைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். இப்படி அவரைப் பற்றி சொல்வதற்கு அவருடனான அனுபவங்கள் ஏராளம்.

மருத்துவமனையில் அவருடைய அறையில் நோயாளி அமர்வதற்கென்று அவருக்கு அருகே ஒரு நாற்காலியும், அவரைச் சந்திக்க வரும் நண்பர்கள் அமர்வதெற்கென்று அவருக்கு எதிரே ஒரு நாற்காலியும் வைக்கப்பட்டிருக்கும். அந்த நாற்காலியில் அப்பா அமர்ந்துவிட்டார் என்றால் நாங்கள் மருத்துவமனையிலிருந்து கிளம்பி விடுவோம். அவர்களுடைய உரையாடல் ஐந்து மணிநேரங்கள்கூட போகும். சில நாட்கள் நள்ளிரவு வரை நீடிக்கும். அப்பா கிளம்புகிறேன் என்று கூறினாலும், “இரு பாரதி” என்று டாக்டர் விடமாட்டார். பின்னாளில் அந்த நாற்காலியில் நான் அமர ஆரம்பித்தேன். அப்பா உணர்வுப்பூர்வமானவர். ஒரு முடிவை எடுப்பதிலோ, ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்வதிலோ மறுப்பதிலோ அவருடைய உணர்வுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், டாக்டர் அறிவுப்பூர்வமானவர். எல்லாவற்றையும் சந்தேகித்து எல்லாவற்றின் மீது கேள்வி எழுப்பி நமக்கான விடையைக் காண வேண்டும் என்று அறிவுறுத்தியவர். இந்த இரண்டு வகையான அணுகுமுறைகளுக்கும் உளவியல் காரணம் இருக்கிறது. எனவே அவர்களுடனான என்னுடைய உரையாடல்கள் என்னை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாட நமக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் டாக்டருடனான உரையாடல்கள் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. Truly an Intellectual. கடந்த வருடம்கூட என்னுடைய அக்நாஸ்டிக் விவாதங்களை ரசித்தவர், "நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய்." என்று பாராட்டினார். சாமியார்கள் பின்னால் செல்வதை அவர் விரும்பியதில்லை. அதில் அவருக்கு அனுபவமும் அதிகம். எனக்கும் அதையே அறிவுறுத்தினார். மூட பக்தி, மூர்க்க புத்தி இரண்டையும் ஒதுக்கி தன்னை அறிவியல்பூர்வமான ஒரு "seeker" -ஆகவே என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டார்.

மருத்துவத் துறையில் அபார ஞானம் அவருக்கு. அவர் நினைத்திருந்தால் பொருளாதார ரீதியாக மிக உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் எங்கள் குறுநகர மக்களுக்கு மருத்துவப் பணி செய்வதே போதும் என்று முடிவெடுத்து சென்னையிலிருந்து திருப்பத்தூருக்குத் திரும்பி விட்டார். எளிமையான மனிதர். தான் மறைவதற்கு முந்தைய நாள் மாலை வரை நோயாளிகளைச் சந்தித்திருக்கிறார். ஏழ்மையான நோயாளிகள், "என்னிடம் இவ்வளவுதான் பணம் இருக்கிறது" என்று கூறினால் அதைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டு அனுப்பி வைப்பார். அவர்கள் கொடுக்கும் பணத்தை காகிதம் போன்று அப்படியே சட்டைப்பையில் செருகி வைத்துக் கொள்வார். சில ரூபாய் தாள்கள் கீழே விழுந்து கிடக்கும். பணத்துக்கு மரியாதை கொடுக்காத அபூர்வ மனிதர். நோயாளிகள் ஊசி போட்டுவிட்டு பணம் கொடுக்காமலேயே சென்றுவிடுவதையும் கண்ணுற்றிருக்கிறேன். நர்ஸ் அவர்களை கூப்பிட எத்தனிக்கையில், "விடு விடு” என்று சைகை செய்து விடுவார். இவையெல்லாம் மிகையே இல்லை. குறைவாகச் சொல்கிறேன் என்றே தோன்றுகிறது. தன்னுடைய அறிவுக்கூர்மையை சாமான்யர்களிடம் பிரயோகிக்க மாட்டார். அவர்கள் அளவுக்கு இறங்கி அவர்களுடைய மொழியில் கிண்டலுடன் உரையாடல் நிகழ்த்துவார்.

மனிதர் கோபப்பட்டே நான் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகை ஏந்திய முகம்தான் அவருடைய அடையாளம். Cherubic Countenance என்று நான் அழைக்கும் தேவதைகளுக்கு உரிய முகம் அவருடையது. சொற்களிலும் செயல்களிலும் அப்படியே. விவாதங்களின் போதும் உடனே ரியாக்ட் செய்ய மாட்டார். மெதுவாக, "See.." என்று ஆரம்பித்து தன்னுடைய கருத்தை சொல்வார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாக பேசக் கூடியவர். அல்லோபதி டாக்டர்தான் ஆனால் சித்தர் பாடல்களிலிருந்து மருத்துவக் குறிப்புகளை மேற்கோள் காட்டுவார். ஒவ்வொரு முறை தோல்வியில் துவண்டு போய் அவரிடம் பேசும்போதும் தவறாமல் ஒரு மூதுரைப் பாடலைச் சொல்வார்.

"அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா."

அண்மையில்கூட ஒரு கட்டுரையில் அவர் இந்தப் பாடலை அடிக்கடி சொல்வது பற்றி எழுதியிருந்தேன். கடந்த மாதம் மாணவர்களுக்கு ஆற்றிய உரையின் போதும் இந்தப் பாடலைச் சொன்னேன்.

டாக்டர் உணவுப்பிரியர். அதிலும் நொறுக்குத் தீனியைக் கண்டால் அவருக்குள்ளிருக்கும் குழந்தைமை வெளிப்படும். யார் என்ன கொண்டுவந்தாலும் அவற்றை எடுத்துக் கடித்து ரசித்துக்கொண்டே நோயாளிகளைப் பார்ப்பார். அம்மா வீட்டில் ஏதேனும் சிறப்பான உணவு, நொறுக்குத் தீனியைச் செய்தால் என்னிடமும் தம்பியிடமும் டாக்டருக்குக் கொடுத்து அனுப்புவார். அவற்றை வேண்டாம் என்று சொல்லி என்றைக்குமே எங்களிடம் அவர் formality பார்த்ததில்லை. கடந்த மாதம்கூட அம்மாவிடம் டாக்டருக்கு உணவு தந்தீர்களா என்று கேட்டேன். அவருக்கு டயாபிட்டிஸ் இருந்ததால் ஒவ்வொரு முறையும் பெல்ஜியத்திலிருந்து வரும் போதும் அவருக்காக ஸ்பெஷலாக கருப்பு சாக்கலேட்டுகள் வாங்கி வருவதுண்டு. "அதெல்லாம் பரவாயில்ல டா. மில்க் சாக்லேட்டே கொடு. தாராளமாக சாப்பிடலாம்." என்பார்.

என்னுடைய சிறுகதைத் தொகுப்பில்கூட அவருக்கு நன்றி தெரிவித்திருந்தேன். அவரே நல்ல வாசகரும்கூட. கடந்த முறை வந்த போது அவர் அருகே அமர்ந்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்த போதும் சில நூல்களை வாசிக்கச் சொன்னார். சாயுடைய IQ level-ஐ வியந்து பாராட்டினார். சரஸ்வதி அம்மாவுக்கும் அவருக்கும் சாய் ஒரு ஸ்பெஷல் குழந்தை. பத்து வயதில்கூட அவனைத் தூக்கி மடிமீது வைத்துக் கொண்டார்கள் அம்மா. இந்த பேரிழப்பை அவர் எப்படி எதிர்கொள்கிறாரோ என்பது கலக்கமாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய நாட்குறிப்பில் "பிரபலங்களும் உறவுகளும்" என்கிற தலைப்பில் பட்டியல் போட்டு நான் எழுதியிருந்த குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் இவை:

"மகாத்மா காந்தியைப் பார்க்கும் போதெல்லாம் துரைசாமி தாத்தா
...
எஸ்.பி.பி-ஐப் பார்க்கும் போதெல்லாம் சம்பந்தம் டாக்டர்
...

என்று இவர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தப் பிரபலங்களுக்கும் என் உறவுகளுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. இது என்ன மாதிரியான மன வரைபடம் என்றும் எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்படித்தான் என் மனம் தொடர்புபடுத்தி வைத்திருக்கிறது."

இந்த விஷயத்தை டாக்டரிடமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். உரக்கச் சிரித்துவிட்டு, தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை எடுத்து வரச் சொன்னார். அது அவரது திருமணத்தின் போது எடுத்த புகைப்படம். அதில் பார்ப்பதற்கு அப்படியே எண்பதுகளின் எஸ்.பி.பி போன்றே இருந்தார். தன்னுடைய தந்தையாரின் மறைவுக்குப் பிறகு மீசையை மழித்துவிட்டு சிகரம் எஸ்.பி.பியைப் போன்று மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது. அதையும் அவரிடமும் சொன்னேன். உருவத்தில் மட்டுமல்ல, கனிவிலும், பணிவிலும்கூட இருவரும் ஒரே மாதிரித்தான். தற்போது எஸ்.பி.பி மறைந்த இரண்டு வாரங்களில் அவரும் மறைந்து விட்டார்.

பத்தாயிரம் கிலோமீட்டர் தள்ளியிருந்தாலும் என்னுடைய பெற்றோர்களுடைய உடல்நலம் சார்ந்து எந்தக் கவலையும் எனக்கு ஏற்பட்டதில்லை. டாக்டர் இருப்பதால் அவர்கள் எங்களைவிடவும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். இனி அந்தப் பொறுப்பை மீண்டும் என்னுடைய தோள்மீது ஏற்றிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் டாக்டர்.

ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும் போதும், "எப்பப்பா இந்தியா வர்றீங்க? வந்துடுங்க பா. அங்க எதுக்கு?" என்று கேட்பார்.

"தற்போதைக்கு அதைப் பற்றி யோசிக்கவில்லை டாக்டர்" என்றே அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்.

ஆனால், கடைசியாக ஒருமுறை கண் விழித்து அதே கேள்வியை இன்று கேட்பாரேயானால், "விரைவில் வர முடிவு எடுத்திருக்கிறேன் டாக்டர்" என்று சொல்லி அவருடைய புன்னகையைப் பெற்றிருப்பேன்.

பிதாமகரின் அஸ்தமனம் எனக்குள் காரிருளை ஏற்படுத்தியிருந்தாலும், அதைவிட என் இருதயத்தை பன்மடங்கு அழுத்தும் விஷயங்கள் இரண்டு. அவரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை இந்த வருடம் எடுக்கிறேன் என்று அவரிடம் கூறியிருந்தேன். அதை எடுத்திருந்தால் இவ்வளவு விஷயங்களை நான் எழுதியிருக்கத் தேவையில்லை. அவருடைய அறிவுக் கூர்மையும் மனிதப் பண்புகளும் பலரைச் சென்றடைந்திருக்கும். பல கேள்விகளைக் கேட்டு அவருடைய அறிவார்ந்த பதில்களை பதிவு செய்ய நினைத்திருந்தேன். இன்னொன்று, அவருடைய இறுதி யாத்திரைக்கு ஒரு மகனாக அருகே இருந்து ஒரு ROYAL SEND OFF கொடுக்க முடியவில்லை என்பதே. அவரைப் போலவே எனக்கும் சடங்குகளில் நம்பிக்கை கிடையாது. ஆனால், நம் வாழ்க்கையில் மிகப் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை மரியாதை செய்யும் விதமாக அவர்களுடைய இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ள முடியாத நிலை ஒரு கீழ்மைநிலை என்பதே என் எண்ணம். சோகமாக இருப்பதும் கோபப்படுவதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அங்கு வந்து கொண்டாடி வழியனுப்பி இருக்க வேண்டாமா?
பீஷ்ம பிதாமகர் என்றேன். ஆம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அம்புப் படுக்கையில்தான் அவர் வீற்றிருந்தார். இரண்டு கால்களும் துண்டிக்கப் பெற்றவர். சரஸ்வதி அம்மாதான் தினமும் கால்களுக்கு ட்ரெஸ்ஸிங் செய்து விடுவார். ஒவ்வொரு முறையும் அவருடைய காலில் விழுந்து வணங்கும் போதும் நமக்குத்தான் வருத்தமாக இருக்கும். ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டார். அந்தப் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை என்பதே உண்மை. அத்தகையதொரு கம்பீரமான வாழ்க்கை வாழ்ந்தார். தன்னம்பிக்கையின் உச்சம் அவர். துணிவின் உச்சம் அவர். அவற்றை எனக்குள் விதைத்துச் சென்றிருக்கிறார். அந்த விதையை பெரு விருட்சமாக வளர்த்து வைத்திருக்கிறேன். அதன் கனிகளை என் சுற்றத்துக்கு வழங்குவதன் மூலமாகவும், அவர்களுக்குள் விதைப்பதன் மூலமாகவுமே அவருக்கு என் நன்றியைச் செலுத்த விரும்புகிறேன்.

என் பிதாமகர் என்றும் என்னோடிருப்பார். நானாகவே இருப்பார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..