இயேசுவும் பேதுருவும் நானும்
நேற்று என் கனவில் இயேசுபிரானும் சீமோன் பேதுருவும் வந்திருந்தார்கள். வியப்பு என்னவென்றால் அந்தக் கனவில் இயேசுவாகவும் பேதுருவாகவும் இருந்தது நானேதான். வெறும் வேடமாகத் தெரியவில்லை. சாட்சாத் நானேதான். அதுவும் இயேசுவாக இருந்த என்னுடைய முகத்திலிருந்து ஞான ஒளி வீசியது. இருவரும் போதி மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் வேத வசனங்களையெல்லாம் மாற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. இயேசுவாக இருந்த நான் பேதுருவாக இருந்த என்னிடம், “பேதுரு, நான் போகுமிடத்திற்கெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இயலாது.” என்றேன். பேதுருவாகிய நான் இயேசுவாகிய என்னிடம், “ஆண்டவரே, ஏன் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றேன். இயேசுவாகிய நான் மர்மமாய் புன்னகைத்தேன். அந்தக் காரிருளில் அவரது முகத்தைப் பேதுருவாகிய நான் நோக்கினேன். இருள் கொண்ட வானில் நிலவொளியாய் என்ன ஒரு தேஜஸ் இயேசுவான என் முகத்தில்! இயேசுவாகிய நான் பேதுருவாகிய என்னைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ, பேதுரு? இப்படிச் சொல்லும் நீதான் வருங...