இயேசுவும் பேதுருவும் நானும்


நேற்று என் கனவில் இயேசுபிரானும் சீமோன் பேதுருவும் வந்திருந்தார்கள். வியப்பு என்னவென்றால் அந்தக் கனவில் இயேசுவாகவும் பேதுருவாகவும் இருந்தது நானேதான். வெறும் வேடமாகத் தெரியவில்லை. சாட்சாத் நானேதான். அதுவும் இயேசுவாக இருந்த என்னுடைய முகத்திலிருந்து ஞான ஒளி வீசியது. இருவரும் போதி மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் வேத வசனங்களையெல்லாம் மாற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது.  

இயேசுவாக இருந்த நான் பேதுருவாக இருந்த என்னிடம், “பேதுரு, நான் போகுமிடத்திற்கெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இயலாது.” என்றேன். 

பேதுருவாகிய நான் இயேசுவாகிய என்னிடம், “ஆண்டவரே, ஏன் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றேன். 

இயேசுவாகிய நான் மர்மமாய் புன்னகைத்தேன். அந்தக் காரிருளில் அவரது முகத்தைப் பேதுருவாகிய நான்  நோக்கினேன். இருள் கொண்ட வானில் நிலவொளியாய் என்ன ஒரு தேஜஸ் இயேசுவான என் முகத்தில்! 

இயேசுவாகிய நான் பேதுருவாகிய என்னைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ, பேதுரு? இப்படிச் சொல்லும் நீதான் வருங்காலத்தில் நான் சொன்னதையெல்லாம் மறுத்துப் பேசப் போகிறவன். மும்முறை அல்ல. முந்நூறு முறை அல்ல. மூவாயிரம் முறை." என்றேன். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பேதுருவாகிய நான், "ஆண்டவரே, நான் உங்களை ஒருபோதும் மறுக்க மாட்டேன். என்னைப் பற்றி  முழுவதுமாக அறிந்த நீரா என்னைப் பற்றி இப்படிச் சொல்வது?" என்று புலம்பினேன். 

பேதுருவாகிய என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதை அன்புடன் துடைத்து பேதுருவான என்னை அரவணைத்துக்கொண்ட இயேசுவாகிய நான், "கலங்காதே பேதுரு. நீ மறுத்தாலும் அதுவே நடக்கப் போகிறது." என்று திட்டவட்டமாகக் கூறிய இயேசுவாகிய நான், "அதே சமயம், என் நேசத்திற்குரிய உங்களுள் ஒருவன் செய்யப் போகும் செயலைப் பற்றியும் நீ தெரிந்துகொள்ள வேண்டும்." என்றேன்.  

பேதுருவாகிய நான் இயேசுவாகிய என் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

இயேசுவாகிய நான் பேதுருவாகிய என்னிடம், "விரைவில் அவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். ஒருமுறை அல்ல. பலமுறை." என்று உறுதியாகச் சொன்னேன். 

யாரைப் பற்றி இயேசுவாகிய நான் இப்படிக் கூறினேன் என்பது தெரியாமல் பேதுருவாகிய நான் பெருங்குழப்பமுற்று இயேசுவாகய என்னை நோக்கி, "ஆண்டவரே அவன் யார்?" என்று வினவினேன். 

இயேசுவாகிய நான் மறுமொழியாக, "நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவனேதான்" என்று சொல்லிவிட்டு, அப்பத் துண்டைத் தோய்த்து எடுத்துக்கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த போதி மரத்துக்குச் சற்றுத் தள்ளி இருந்த புதரின் பின்னால் ஒளிந்து நின்று கொண்டிருந்தவனிடம் கொடுக்கச் சென்றேன்.

இயேசுவான என்னுடைய தெய்விக முகத்திலிருந்து வீசிய ஞான ஒளி பட்டு அவன் முகம் அப்போது தெளிவாகத் தெரிந்தது. அங்கே சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாஸாக நானே நின்றுகொண்டிருந்தேன்.  



"தான்தோன்றியின் நாட்குறிப்புச் சுவடியிலிருந்து..", வியாழக் கிழமை, 07 மே 2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..