புதுமைப்பித்தனின் செல்லம்மாள்
த மிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் ' செல்லம்மாள் ' சிறுகதையைத்தான் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன். He is truly an unparalleled genius. மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கிய 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டால், நமக்கும் மேலான சக்தி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் 'செல்லம்மாள்' கதையை எழுதியவர் நிச்சயம் அந்தக் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். புதுமைப்பித்தனே தான் எழுதிய 'காஞ்சனை' சிறுகதையில் தன்னை 'இரண்டாவது பிரம்மா' என்றும் 'நகல் பிரம்ம பரம்பரையின் கடைக்குட்டி' என்று அழைத்துக்கொள்கிறார். காஞ்சனை கதையை எழுதிய அதே வருடம் (1943) செல்லம்மாள் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுதியது பிரம்மனாக இல்லாத பட்சத்தில், அந்த இரண்டாவது பிரம்மா உருவாக்கிய 'காஞ்சனை' பிசாசுதான் ஒருவேளை 'செல்லம்மாள்' கதையை எழுதியிருக்க வேண்டும்...