உனக்குள் ஒருவன்.. அவனே நீ!


கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையநாள் இரவு விருந்திற்கு பெல்கிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.

அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் சற்று குறைவாகவே (குறைவு என்றால் '6 டிகிரி செல்சியஸ்'!!!) இருந்தது. அதனால் உணவருந்திவிட்டு மேலுறைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டபடி பேசிக்கொண்டே கால்நடையாக லூவன் நகர வீதிகளில் நடந்து சென்றோம்.

அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. (ஆனால், அவ்வாறு இருப்பதில் தவறொன்றும் இல்லை. இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே வேறொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அடுத்த இடுகைகளில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது - அது 'MBTI'. MBTI-ஐப் பற்றி நான் அறிந்துகொண்ட நாளன்று ஞானம் பெற்றுவிட்டதைப்போல் உணர்ந்தேன். என்னை முழுவதுமாய் உணர்ந்து, மற்ற மனிதர்களையும் நான் கூர்ந்து நோக்க ஆரம்பித்த நாளது.)  

அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட. வெளிநாட்டவர்களில் (உண்மையில் நான்தானே இங்கு வெளிநாட்டவன்?) இதுபோன்ற மனிதர்களை காண்பது அரிது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் அவர்கள். இல்லையென்றால், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே விருந்தை திட்டமிட்டு அவர்களை அழைக்க வேண்டும். இப்படி இருக்க, நான் அழைத்தேன் என்ற காரணத்திற்காக கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாள் இன்னொருவர் வீட்டிற்கு வேறு யாராவது வருவார்களா? (அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் அழைப்புவிடுத்தேன் - அதுவும் முகநூலில்) 

அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம்தான் அன்று பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன். அந்தத்தெருவே காதை செவிடாக்கும் அமைதியில் மூழ்கியிருந்தது. என்னுடைய குரல் மற்றும் எங்கள் இருவரின் காலணிகள் எழுப்பிய ஓசைகளைத் தவிர வேறு எதுவுமே கேட்காத அளவிற்கு ஒரு நிசப்தம். இதில் இருட்டு வேறு சேர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த தெருவில் விளக்குகளும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. மேலும், குளிர்காலத்தில் இங்கெல்லாம் மாலை நான்கு மணிக்கே இருட்டத் தொடங்கிவிடும் என்றால், இரவு ஒன்பது மணிக்கு எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்படியொரு சூழலில் என்னுடைய குரலே எனக்கு சிறிது அச்சமூட்டியது. இதற்காகவாவது இவன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்த அடுத்த வினாடி, "உங்களுக்கு எதற்கும் பயமே கிடையாதா? நீங்கள் அலுவலகத்திலும், வாழ்க்கையிலும் எப்படி எல்லாவற்றையும்  ஒரு அசட்டுத் துணிச்சலோடு எதிர்கொள்கிறீர்கள்?" என்று நான் பேசிக்கொண்டிருப்பதற்குத் தொடர்பே இல்லாத இந்தக் கேள்வியை வேகவேகமாகக் கேட்டான்.

அவன் தரத்திற்கு அது வேகம் மட்டுமல்ல; சற்று நீண்ட கேள்வியும்கூட. அப்போதுதான் அவன் மனநிலை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவனுக்குக் கண்டிப்பாக உதவவேண்டும் என்றும் தோன்றியது. அவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் எனக்குள்ளே நான் சில கேள்விகளைக் கேட்டு கொண்டிருந்தேன். ஓரிரு மணித்துளிகள் நான் அவனாகவே மாறிவிட்டுப் பின்னர் அவனிடம் மெதுவாக, " ஏனென்றால், முன்பெல்லாம் நான் ஒரு மகா கோழையாக இருந்தேன்!" என்று கூறினேன். 

"வாட்???" என்று கண்களை விரித்துக் கேட்டான்.

" ஆமாம். ஆனால், அந்தக் கோழைத்தனத்தில் இருந்து பிறந்ததுதான் இப்போது இருக்கும் இந்த தைரியம்." என்றேன்.

"எனக்குப் புரியவில்லை!" என்றான்.

அப்போது அந்தத் தெருமுனையில் ஒரு வீடு விளக்கு வெள்ளத்தில் நிரம்பிக்கிடப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே அதிசயம், ஏனென்றால் அந்த வீடு கிட்டத்தட்ட நம்ம ஊர் கல்யாண வீடு போலக் காட்சியளித்தது.  இரண்டே வித்தியாசங்கள் - 'வாழைமரங்கள் இல்லை', 'மணமக்களுக்குப்  பதிலாக சாண்டா கிளாசுக்கு ஒரு சிறிய கட்-அவுட் வைத்திருந்தார்கள்' அவ்வளவுதான்.  

குறிப்பு: அப்போது நான் எடுத்த புகைப்படத்தைக்கூட இங்கே பதிவேற்றியுள்ளேன். நீங்களே பாருங்களேன்.

இஸரன்மோலென் தெரு, லூவன் நகரம், பெல்கியம்

ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வீட்டைக் கண்டபோது, என் மனதில் பளீரென உதித்த ஒரு கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன் - "இங்கே இந்த மின்விளக்குகள் சிந்திக்கொண்டிருக்கும் ஒளியை இவ்வளவு அழகாய்க் காட்டுவது எது?"  

"அந்த அலங்கார விளக்குகள் தாம்!" என்றான்.

"இல்லை, ‘இருட்டு’!" என்றேன்.

"எப்படி?" என்றான்.

“வேண்டுமானால் அலங்கார விளக்குகளை பகலில் போட்டுப்பாரேன். இன்னும் சொல்லப்போனால், அதோ அந்த நிலவு அழகாய்த் தெரிவது கூட அந்த அகண்ட 'இருண்ட' வானத்தினால்தான்." என்று கூறிவிட்டு இன்னொரு கேள்வியொன்றை கேட்டேன்.

“"நம் ஷூக்களின் சத்தத்தை உனக்குக் கேட்க வைத்துக்கொண்டிருப்பது எது?"

"காது" என்றான்.

"இல்லை. இந்த நிசப்தம்!" என்றேன். 

அவன் புருவங்கள் சற்றுச் சுருங்கி குழப்பரேகைகள் படர்வதைக் கண்டுவிட்டு தொடர்ந்தேன்.

"சரி, இதைக்கூறு. இந்தக் குளிரை எதனால் உணர்கிறாய்?" என்றேன்.

என் மனைவி மட்டும் அக்கணம் அங்கே இருந்திருந்தால், "ஆரம்பிச்சிட்டீங்களா? அடிக்கற குளிருல அவசியம் இந்த cross examination தேவையா?" என்று கேட்டிருப்பாள்.

ஆனால், பாவம் அவன் சிறிதுநேரம் தீவிரமாகச் சிந்தித்துவிட்டு,"நீங்களே சொல்லுங்கள்!" என்றான்.

அப்போது நான் அவனுக்கு அளித்த ஒரு short but soporific lecture session- ஐத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

ஒளியின் அழகை இருட்டால்தான் காண்பிக்க முடியும். வெப்பத்தின் அருமையை குளிரால்தான் உணர்த்த முடியும். இசையின் இனிமையையும், நுட்பத்தையும் அமைதியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.

விளக்குகள் வீசும் ஒளியின் அழகை பகல் காட்டாதது போல, வெப்பத்தின் அருமையை  வெயில் உணர்த்தாதது போல, இசையின் இனிமையை இரைச்சல் நிறைந்த சூழல் உணர்த்தாதது போல -  

நான் துணிவானவன் என்பதுபோல் காட்டிக்கொண்டிருந்த நாட்களில் அந்தத் துணிவு, எனது துணிவை உணர்த்தவேயில்லை. நான் எப்போது எனக்குள் இருந்த கோழைத்தனத்தை முழுவதுமாக உணர்ந்தேனோ, அந்தக்கணம்தான் எனக்குள் இருந்த தீரனைப் பிரசவித்தேன்.          

ஒன்றடுத்தொன்றாய் பல முட்கள் என் கால்களைப் பதம் பார்த்து வலியில் துடித்த காலங்கள் உண்டு. எத்தனையோ முட்கள் குத்திக் கிழித்து வலியை உண்டு பண்ணியிருந்தாலும், என் பாதத்தின் வலிமையை உணர்த்திய அந்தக் கடைசி வலிக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அந்தக் கடைசி வலியை உணர்ந்த நாளன்று –

இருட்டின் நடுவே ஒளியைக் கண்டதுபோல், என் வலிகளினூடே வலிமையைக் கண்டேன்!

அமைதியிலிருந்து எழும்பிய இசையை உணர்ந்தது போல, என் கோழைத்தனத்தில் புதைந்து கிடந்த துணிவைக் கண்டெடுத்தேன்!     

அதைக் கண்ட நாள் முதலாய், அச்சமில்லை! அசட்டு துணிச்சல்! அசாத்திய தைரியம்! எல்லாவற்றிகும் மேலாக நாம் பிறந்த மண்! 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற திருநாவுக்கரசரும், 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று முழங்கிய மீசைக்காரரும் பிறந்த மண்ணல்லவா?

எவற்றையெல்லாம் நம்முடைய பலவீனமாக நாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் சாதனங்கள். இருட்டு ஒளியை காட்டுவது போல. நிசப்தம் சப்தத்தைக் காட்டுவது போல.

எனவே, உன் பலவீனங்களாக நீ நினைப்பதை வரிசைப்படுத்து. அவற்றை உணரு. அவற்றை முழுமையாக உணர்ந்ததால் உன்னில் ஏற்படும் மாற்றங்களும், அந்த பலவீனங்களுமே உன் பலத்தை உனக்கு அடையாளம் காட்டும்! அதற்குப் பிறகு நீ வேண்டினாலும் அது உன்னைவிட்டுப் போகாது! கைவிடுவது கடினம்.

அந்த அளவிற்கு, உனக்கு நேரெதிரான ஆளாக உன்னையே அது மாற்றிக்காட்டும். அது தான் 'உண்மையான நீயும்கூட’!     

இப்படி ஒரு விரிவுரையை வழங்கியவுடனே சிறிதும் யோசிக்காமல் சட்டெனச் சொன்னான் நண்பன், "எனக்கு பலவீனமே பயம்தான்!"

அவன் கண்களைப் பார்த்தேன். தெளிவு தெரிந்தது. துணிவும் பிறந்திருப்பதாக உணர்ந்தேன். குறைந்தபட்சம் அவன் சிந்தையில் தெளிவாவது நிச்சயம் பிறந்திருக்கும்.

எனக்கு எதிரே நின்ற அவன் மாறியிருந்தான், அவனுக்கு நேரெதிரான மனிதனாய் - அவனாய்!

அவனுக்கு இனி அச்சமில்லை!

இந்த வரிகள் உங்களுக்குள் இன்று ஒரு சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால், நீங்கள் இன்று முதல் உங்களுக்குள் இருக்கும் வேறோர் மனிதனையும் அவன்  உலகத்தையும் காணப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த மாற்றத்தோடு இந்தப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்.

 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நம் பலவீனத்தை உணர்வோம்.. ரசிப்போம்.. பின்னர் அது அடையாளம் காட்டும் பலத்தை ருசிப்போம்..

கருத்துகள்

  1. nandru elango pal veru vadivangalil thangalin katduraikal eathir parkkindrean..

    பதிலளிநீக்கு
  2. Unnai arinthal Nee Unnai arinthal
    Ulagathil poradalam
    Uyarthalum Thaaznthaalum
    Thalai Vanangaamal
    Nee Vaazhalam....

    Super Madahavan. Vey good motivational start for 2013..
    By the way expecting your next message about MBTI....

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்ல விஷயம் சொல்லிருகிங்க..என்னை நானே பரிசோதித்துக் கொண்டேன்..சூப்பர்..

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி, ஆதிரா! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..