அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..

நாட்குறிப்பு எழுதுவது எளிது. அது நாமே நமக்காக எழுதிக்கொள்வது. என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக எழுதுவதற்குத் தனித்திறமை வேண்டும். குறிப்பாக குழந்தை எழுத்தாளர்களை நான் வியப்புடன் பார்க்கிறேன். குழந்தைகளுக்கு எழுதுவதென்பது ஒரு சவாலான விஷயம்; அத்தனை எளிதானதில்லை. உதாரணத்துக்கு, மாணவர்களுக்கான தினமலர் பட்டம் இதழுக்காக "வானவில்" பற்றி நான் எழுதிய எளியதொரு அறிவியல் துணுக்கை எடுத்துக்கொள்வோம். அது மொத்தம் மூன்று வழிகளில் எழுதப்பட்டது. இறுதியாக, மூன்றாவது வடிவமே இதழில் பிரசுரிக்கப்பட்டது. பட்டம் இதழின் உதவி ஆசிரியர் பொன். வாசுதேவன் அவர்களுக்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும். ஒரு இதழில் ஆசிரியரின் பங்கு என்னவென்பதற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப்பிழைகளோடு புத்தகங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இஃதோர் அரும்பணியன்றோ.  வாசித்துப் பாருங்கள். புரியும்.  

ஒன்று - "வானவில்லுக்கு எத்தனை நிறங்கள்?"

வானவில் ஒரு கண்கவர் வளிமண்டல நிகழ்வு. குழந்தைகளாகட்டும், கவிஞர்களாகட்டும், அறிவியலாளர்களாகட்டும், யாருக்குத்தான் வானவில்லை பிடிக்காது? 'வானவில்லில் எத்தனை நிறங்கள் உள்ளன?' என்று கேட்டால் உடனே ஏழு என்று கூறிவிடுவீர்கள். நிறங்களை எளிதாக நினைவில் வைத்திருக்க VIBGYOR அல்லது ROY.G.BIV என்பது போன்ற நினைவுக் குறியீடுகளை உங்கள் அறிவியல் ஆசிரியர்கள் உங்களுக்குச் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதையும் நீங்கள் இருபது முறை சொல்லிப் பார்த்து மனனம் செய்திருப்பீர்கள். ஆனால் வானவில் அத்தனை எளிமையானது அல்ல.

வானவில்லில் எப்போதும் ஏழு நிறங்கள் மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக, காலை வேளையிலும் மாலை வேளையிலும் தோன்றும் வானவில்லில் ROY மட்டுமே தோன்றும். G-யும் BIV-வும் தோன்ற வாய்ப்பு இல்லை. பிரான்சு நாட்டு வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர். 'ழான் ரிகார்' (Jean Ricard)  என்கிற வளிமண்டல அறிவியலாளரின் தலைமையிலான குழு தனது சமீபத்திய ஆய்வின் மூலம் மொத்தம் பன்னிரண்டு வெவ்வேறு வகையிலான வானவில்களை கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில் ஆறு நிறங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். வானவில்லில் கருநீலத்தை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

வானவில்லில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துளிகளின் அளவைப் பொறுத்தது எனினும், அதன் நிறங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பது தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரமே என்று கண்டறிந்துள்ளார்கள். சூரியன் தொடுவானத்துக்கு வெகு அருகில் இருக்கும் போது தோன்றும் வானவில்லில் சிவப்பு நிறம் மட்டுமே காணப்படும்; அது ஒரு சிவப்பு வில் மட்டுமே. 

சிவப்பு வானவில்; சிவப்பு வில் - சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலையருகே எடுக்கப்பட்ட படம்

தொடுவானத்திலிருந்து சூரியன் இன்னும் சற்று மேலே, எழுபது டிகிரி கோணத்தில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் தோன்றும். இன்னும் சற்று மேலே போனால் பச்சை மற்றும் நீல நிறங்கள் தோன்றும்.

அடுத்த முறை வானவில்லை நீங்கள் காண நேர்ந்தால் இந்த ஆய்வை உறுதிபடுத்துவீர்களா?

-0-0-0-

இரண்டு - "வானவில்லுக்கு எத்தனை நிறங்கள்?"

அன்றைக்கு அறிவியல் தேர்வு. வழக்கத்துக்கு மாறாக விடியற்காலையே எழுந்து படித்துக்கொண்டிருந்த வேலன், ஜன்னலின் வழியே வானவில்லை பார்த்தவுடன் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டான். மிதமான மழையும் இதமான காலைக் கதிரவனையும், அனைத்துக்கும் மேலாக வானவில்லையும் யாருக்குத்தான் பிடிக்காது? மழையோடும் வானவில்லோடும் சிறிது நேரம் ஆட்டம் போட்டுவிட்டுக் கிளம்பி பள்ளிக்குச் சென்று விட்டான்.

பள்ளியில் கேள்வித்தாளைப் பார்த்தவுடன் வேலனுக்குப் பெரும் வியப்பு. காரணம் என்னவென்றால், 'வானவில்லில் உள்ள வண்ணங்கள் எத்தனை?' என்கிற பன்முகத் தெரிவு வினா ஒன்றுக்கு, அங்கே கொடுத்திருந்த 3, 6, 7 என்கிற மூன்று விடைகளில் சரியான விடை ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தார்கள். காலையில் கண்ட வானவில் இன்னும் அவன் மனதிலேயே இருந்ததால் சந்தேகம் சிறிதுமின்றி '3' என்கிற விடையை தேர்ந்தெடுத்துவிட்டான்.

வேலன் செய்தது சரியா? நீங்களாக இருந்தால் உடனே ஏழு என்று கூறிவிடுவீர்கள். நிறங்களை எளிதாக நினைவில் வைத்திருக்க VIBGYOR அல்லது ROY.G.BIV என்பது போன்ற நினைவுக் குறியீடுகளை உங்கள் அறிவியல் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதையும் நீங்கள் இருபது முறை சொல்லிப் பார்த்து மனனம் செய்திருப்பீர்கள். ஆனால் வானவில் அத்தனை எளிமையானது அல்ல. மேலும் வானவில்லில் எப்போதும் ஏழு நிறங்கள் மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரட்டை வானவில் - கனடாவில் எடுக்கப்பட்ட படம்

குறிப்பாக, காலை வேளையிலும் மாலை வேளையிலும் தோன்றும் வானவில்லில் ROY மட்டுமே தோன்றும். G-யும் BIV-வும் தோன்ற வாய்ப்பு இல்லை. பிரான்சு நாட்டு வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர். 'ழான் ரிகார்' (Jean Ricard) என்கிற வளிமண்டல அறிவியலாளரின் தலைமையிலான குழு தனது சமீபத்தியஆய்வின் மூலம் மொத்தம் பன்னிரண்டு வெவ்வேறு வகையிலான வானவில்களை கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில் ஆறு நிறங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். கருநீலத்தை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

வானவில்லில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துளிகளின் அளவைப் பொறுத்தது எனினும், அதன் நிறங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பது தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரமே என்று கண்டறிந்துள்ளார்கள். சூரியன் தொடுவானத்துக்கு வெகு அருகில் இருக்கும் போது தோன்றும் வானவில்லில் சிவப்பு நிறம் மட்டுமே தோன்றும்; அது சிவப்பு வில். தொடுவானத்திலிருந்து சூரியன் இன்னும் சற்று மேலே, எழுபது டிகிரி கோணத்தில் இருக்கும் போது தோன்றும் வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் தோன்றும்.

இப்போது சொல்லுங்கள். வேலன் தேர்ந்தெடுத்த விடை சரியா? தவறா?

-0-0-0-

மூன்று - "வானவில்லே... வானவில்லே...!"

மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில் தோன்றுகிறது. வானவில்லில், ஊதா (Violet), கருநீலம் (Indigo), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange), சிவப்பு (Red) ஆகிய ஏழு நிறங்கள் உள்ளன. இதை நினைவில் வைத்துக் கொள்ளச் சுருக்கமாக ‘விப்கியார்’ (VIBGYOR)  என்கிறோம். வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் (Isaac Newton). இவை எல்லாமே உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.

வானவில்லில் எப்போதும் ஏழு நிறங்கள் மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புதிய செய்தி. குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் தோன்றும் வானவில்லில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டுமே தோன்றும். ஊதா, கருநீலம், நீலம், பச்சை ஆகிய நிறங்கள் தோன்ற வாய்ப்பு இல்லை.

பன்னிரெண்டு வெவ்வேறு வகையிலான வானவில்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டு வானிலை ஆய்வு மையத்தைச் (நேஷனல் மெடியோரோலாஜிகல் ரிசர்ச் சென்டர் - National Meteorological Research Center) சேர்ந்த ‘ழான் ரிகார்’ (Jean Ricard) என்ற வளி மண்டல அறிவியலாளர் (அட்மாஸ்பெரிக் சைன்டிஸ்ட் - Atmospheric Scientist) இதைக் கண்டுபிடித்து இருக்கிறார்.

ழான் கண்டறிந்த புதிய வானவில் வகைப்பாடுகள்

வானவில்லில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துளிகளின் அளவைப் பொறுத்தது. அதன் நிறங்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிப்பது தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்தான்.

சூரியன் தொடுவானத்துக்கு வெகுஅருகில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு நிறம் மட்டுமே தோன்றும். தொடுவானத்திலிருந்து சூரியன் இன்னும் சற்று மேலே, எழுபது டிகிரி கோணத்தில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் தோன்றுகின்றன.

அடுத்தமுறை நீங்கள் வானவில்லைப் பார்க்கும்போது மறக்காமல் அதில் எத்தனை நிறங்கள் உள்ளன என்பதைக் கவனிப்பீர்கள்தானே!

-0-0-0-

பட்டம் இதழில்.. 

நன்றி: தினமலர் "பட்டம்" இதழ்

கருத்துகள்

  1. நல்ல ஒப்பீட்டுப் பதிவு இளங்கோ. பொதுவாக, செய்திகளைத் திருத்தும்போது கவனத்தில் கொள்ளப்படுகிற அடிப்படையான விஷயம் யாருக்கானது அந்தச் செய்தி என்பதுதான். தினமலர் மாணவர் பதிப்பு - பட்டம் இதழ் மாணவர்களுக்கானது என்பதால், 15 வயதுள்ள மாணவர்கள் வாசித்தால் புரியவேண்டும் அல்லது எளிமையாகச் சொல்லப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் உங்கள் கட்டுரை திருத்தப்பட்டது. அதற்காக உங்களுடைய கட்டுரை சரியான வடிவத்தில் அல்ல என்று அர்த்தமில்லை. வேறொரு வாசிப்பு, புரிதல் தளத்தில் அந்தப் பதிவு சரியாகவே வந்துள்ளது. உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றியும், அன்பும்.

    பதிலளிநீக்கு
  2. Wow.. அருமை.... சந்தேகமில்லாமல் மூன்றாவது வடிவமே மாணவர்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.... அருமையான பதிவு. .. பணி....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்