ஸித்ரத்துல் முன்தஹா


ழாவது சொர்க்கத்தின் எல்லையில் "ஸித்ரத்துல் முன்தஹா" என்கிற "ஷஜாரா" இருக்கிறதாம். ஸித்ரத்துல் முன்தஹா என்றால் எல்லையின் முடிவில் இருக்கும் இலந்தை மரம். ஷஜாரா என்றால் பெருவிருட்சம். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் சூழ அமைந்த அந்த பெருவிருட்சத்தின் வேர், ஆறாம் சொர்க்கம் வரை நீள்கிறதாம். வேர்ப் பகுதியிலிருந்து ஸல்ஸபீல், கவ்ஸர், நைல், யூப்ரடீஸ் ஆகிய நான்கு பெருநதிகள் உற்பத்தியாகின்றதாம். விருட்சத்தின் இலைகள் யானைகளின் காதுகளை ஒத்ததாகவும், அதன் இலந்தைப் பழங்கள் பெரிய கூஜாக்கள் போலவும் இருக்குமாம். மரத்தைச் சுற்றிலும் எப்போதும் தங்கத்தினாலான வெட்டுக்கிளிகள் பறந்துகொண்டே இருக்குமாம்.

ஸித்ரத்துல் முந்தஹாவைத் தாண்டி யாருமே செல்ல முடியாதாம். பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் உயிரினங்கள், அவற்றின் செயல்களைப் பற்றிய குறிப்புகள் யாவும் இறுதியில் இந்த விருட்சத்தைத்தான் சென்றடைகின்றன. அதே போல மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் இறைக்கட்டளைகளும் இங்குதான் வந்தடைகின்றன. இவை இரண்டுமே வானவர்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்று ஒரு ஹதீஸ் சொல்கிறது.

இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. அந்த மரத்தின் யானைக் காது இலைகளில் உலகத்திலுள்ள சகல உயிரினங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கின்றன. காற்று வீசும்போது, அந்த இலைகளில் சில கீழே விழுகின்றன. அப்படி விழும் இலைகளில் எழுதப்பட்டிருக்கும் பெயரைக் கொண்ட உயிர் உடனே மரணத்தைத் தழுவும். அதில் சில இலைகள் அதிக காலம் இருந்து பழுத்துப்போன பிறகுதான் கீழே விழும். சில இலைகள் பசுமையாக இருக்கும்போதே விழுந்துவிடுமாம்.

எல்லா மதங்களிலுமே இத்தகைய கதைகள் இருக்கவே செய்கின்றன. பக்தர்களும் இந்தக் கதைகளை நம்பத்தான் செய்கிறார்கள். இந்து மதத்தில் "சித்திரகுப்தனின்" ஜனன மரண பாவ புண்ணியப் பதிவேட்டை ஒத்தது இந்த "ஸித்ரதுல் முன்தஹா" விருட்சம் எனலாம். என்னுடைய பெயர் விருட்சத்தின் எந்த இலையில் இருக்கிறதோ? இலையுதிர்காலத்துக்கும் பிரம்மனின் கல்பகாலத்துக்கும், யுகங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா, ஆராய்ந்திருக்கிறார்களா என்று அறிஞர்களிடம் கேட்க வேண்டும்.

இவற்றையெல்லாம் மனதில் எண்ணிப் பார்க்கும்போது என்னுடைய கற்பனை பிரமாண்டமாக விரிகிறது. சுகமாகவும் இருக்கிறது. ஓ.ஹென்றியின் “The Last Leaf” சிறுகதையும் ஏனோ நினைவுக்கு வந்தது. என்னுடைய மனவரைபடங்களைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். ஸித்ரத்துல் முன்தஹாவின் அடிப்படையில் குழந்தைகளுக்காக “Inside Out” போன்று நல்லதொரு அனிமேஷன் திரைப்படம் எடுக்கலாம். அதற்கு "The Tree of Life" என்று பெயர் வைக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..