ஒன்பதாவது மேகமும் ஏழாவது சொர்க்கமும்

தை மாதம் பிறந்து மூன்று வாரங்களாகி விட்டது. இருப்பினும் இந்த இடுகையை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

'ஒரு காரியத்தை செய்யாமலேயே இருப்பதை விட, கால தாமதமானாலும் செய்து முடித்து விடுவது சாலச் சிறந்தது' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று ஒன்று உண்டு.

நான்கு வார இடைவெளிக்குப் பிறகு இந்த இடுகையைப் பதிவு செய்கிறேன். சிங்கப்பூரிலிருந்து நண்பர் ஜெகதீசனிடமிருந்து இதுகுறித்து கடிதமே வந்துவிட்டது, “மாதவன், நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பதிவு மெளனமாக இருக்கிறதே? புதிய இடுகைகளே காணோமே? தொடர்ந்து எழுதுங்கள்!” என்று.

என்ன செய்வது?

வார நாட்களில் - இயந்திரத்தனமான அலுவலகப் பணி, மாலை வேளையில் மகனுடன் விளையாட்டு, முகநூல் மற்றும் இணைய உலாவல், சமீபத்தில் வாங்கிய சில புத்தகங்கள் வாசிப்பு, திடீரெனத் தோன்றும் கதைகளுக்கான கரு மறந்து போகுமுன் அப்போதே ஒரு பக்க சிறுகதைகளை எழுதி முடித்து விடுதல், சில சமயங்களில் அந்த மனநிலை மாறுமுன்பே முழுக்கதையையுமே எழுதி முடித்து விடுதல்…

வார ஈறுகளில் - சில மாதங்களாகவே நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கில நாவலை முடிக்க வேண்டியிருப்பதால் அதற்கான நேர அர்ப்பணிப்பு, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் கொள்வனவு, லூவன் நகரில் இருக்கும் இந்திய நண்பர்கள் சிலரின் வீட்டிற்கு விஜயம் செய்து அளவளாவிவிட்டு வருவது, பெல்கிய நண்பர் ஒருவருக்கு அவர் செய்து கொண்டிருக்கும் திட்டத்தில் உதவி மற்றும் ஆலோசனைகள்…

இவ்வாறு பல திறக்குகளில் அடியேன் இயங்கிக் கொண்டிருப்பதால் என்னுடைய வலைப்பதிவிற்கு நான்கு வாரங்கள் ஓய்வு கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று.

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு நிலவும் கடுங்குளிர் காலநிலையும் ஒரு காரணம். கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக வெப்பநிலை சுழி நிலைக்கு கீழே ஒரு நீண்ட முடக்கத்தில் இருப்பதால் வெளியே செல்லவே முடிவதில்லை. கையுறையை கழற்றி உறைபனி பொழிவதை புகைப்படம் எடுப்பதற்குள் கைகள் உறைந்து விடுகின்றன.

உடல் மட்டுமல்ல மனமும் உறைந்து விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. மனம் ‘இயங்க மாட்டேன்’ என்று மறுத்து விடுவதால் சிந்தனைகளே உதிப்பதில்லை. இங்குள்ள மனிதர்கள் ஒரு ‘சிறு’ விஷயத்தை புரிந்து கொள்வதற்குக் கூட ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், ஒருவேளை நான் சரியாக விளக்குவதில்லையோ என்கிற சம்சயம் எனக்கு இங்கு வந்த ஆரம்ப நாட்களில் இருந்தது. இப்போதெல்லாம் எனக்கே சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்வதிலிருந்து என்னால் அவர்களைப் புரிந்து கொள்ளமுடிகிறது. என் மூன்றரை வயது மகன் கூட, 'போர் அடிக்குது பா. வெளிய போலாம்' என்று கேட்குமளவிற்கு ஒரு Depressing Weather!

குளிர் காலத்தில் சூரிய ஒளியே இல்லாததொரு இருட்டு வாழ்க்கையாக வேறு இருப்பதால், வைட்டமின் D குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ‘சூரியப்படுக்கையை‘ நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. என்னைப் போன்ற ஒரு சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சென்றுவிட்டு வருவதும் உண்டு.

இத்தகைய வசதியை டச்சுக்காரர்கள் 'ZONNE BANK' என்றும், பிரித்தானியர்கள் 'SUNBED' என்றும், அமெரிக்கர்கள் 'TANNING BED' என்றும் அழைக்கிறார்கள். தமிழில் ஒளியுமிழ் படுக்கை என அழைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால், 'ஒளியுமிழ்' என்கிற பதம் LED-க்கு தான் சரியாக இருக்கும். எனவே இதனை 'சூரியப்படுக்கை' என்றே அழைக்க விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியா விக்சனரியில் இந்த புதிய தமிழ்ச் சொல்லை சேர்த்துள்ளேன். இணைப்புhttp://ta.wiktionary.org/s/43qz

சூரியப்படுக்கையை இதுவரைக் கண்டிராதவர்களுக்காக இந்தப் புகைப்படம்:

சூரியப்படுக்கை

நான் மேலே கூறிய அனைத்துமே இடுகையை எழுதாமல் விட்டதற்கு நான் சொல்லும் நொண்டிச் சாக்குகள் தாம் என்றாலும், அதற்குப் பரிகாரமாக கடந்த இரு வாரங்களாக எனது மற்ற படைப்புகளை முகநூல் வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் எனது நண்பர்கள் பலரிடம் பகிர்ந்து கொண்டது திருப்தியளிக்கிறது.

சரி, தலைப்பிற்கு வருவோம்.

தை இனிதாய்ப் பிறந்தது என்றே கூற வேண்டும். அலுவலகப் பணிகள் சிலவற்றைச் சிறப்பாகச் செய்து முடித்தது ஒரு புறமிருக்க, மறு புறம் தனிப்பட்ட முறையில், எனக்கு வந்த செய்திகளில் இரண்டு என்னை 'ஒன்பதாவது மேகத்தில்' மிதக்க வைத்தது; மற்றொன்று என்னை 'ஏழாவது சொர்க்கத்திற்கே' இட்டுச் சென்றது. 

இவையிரண்டிற்கும் இடையே எனது எட்டாவது இடுகையை எழுதி, எனது வலைப்பதிவை வாசிக்க வருகை புரிந்திருக்கும் உங்களிடம் அந்தச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான் எழுதிய 'அமைதியின் சத்தம்' என்கிற கதை 'சொல்வனம்' இணைய இதழில் வெளியாகியுள்ளது. தை பிறந்ததால், வழி பிறந்திருக்கிறது - சொல்வனத்தில் என் கதை மலர்ந்திருக்கிறது.


'சொல்வனம்' எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு தமிழ் இணைய இதழ் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கூட, சொல்வனத்தை '2012-இன் மிகச்சிறந்த இணைய இதழ்' என்று அவரது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாதமிருமுறை வெளிவரும் வரும் இந்த இதழில் எனக்குப் மிகவும் பிடித்தமானது - இலக்கியம், இசை, அறிவியல், அரசியல், சினிமா (குறிப்பாக உலக சினிமா), சமூகம் எனப் பல்வேறு பிரிவுகளில் வெளியாகும் ஆழச்செறிவான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் தாம். அதிலும் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இலக்கிய ஆளுமைகளே எழுதும் /எழுதிய சுவாரசியமான கட்டுரைகளையும், தொடர்களையும் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கிறது.. உதாரணத்திற்குச் சொன்னால், சி.சு.செல்லப்பாவைப் பற்றி வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதிவரும் தொடரான ''சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு".

சில மாதங்களுக்கு முன்புதான் எஸ்.ரா அவர்களின் இணையதளம் மூலமாக எனக்கு இந்த இதழ் அறிமுகமாகியது. பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப்போய் விட, ‘சில நாட்களுக்கு புத்தகமே தேவையில்லை’ என்று முடிவு கட்டி, முந்தைய இதழ்களை  எல்லாம் வாசிக்கத் தொடங்கி, இன்னும் சில தினங்களில் கிட்டத்தட்ட அனைத்தையுமே வாசித்து முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். இன்று என்னுடைய 'அமைதியின் சத்தம்' கதையின் மூலமாக உங்களுக்கு ஒரு தரமான இதழை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி.

மேலும், ஒரு நெருங்கிய நண்பரைப் போல ஆலோசனைகளை வழங்கி, தொடர்பிலிருக்கும் 'சொல்வனம்' இதழாசிரியருக்கு இந்த இடுகையின் மூலம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, 'வல்லமை' இணைய இதழிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. வல்லமை ஆசிரியக் குழுவினர் ஒரு படி மேலே சென்று, எனக்கு 'வல்லமையாளர்' விருதை இந்த வாரம் அளித்துள்ளார்கள்.

இதுகுறித்து வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் மின்னஞ்சலையும், எழுத்தாளர், நாடகக் கலைஞர் திவாகர் அவர்களின் WRITE-UP ஐயும் கண்டபோது என்னால் உண்மையாக நம்பவே முடியவில்லை.

Human beings (especially artists)  crave recognition - என்பார்கள். ஆனால் நான் இந்த விருதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரர் சந்தோஷ் அவர்கள் மூலமாகத்தான் இந்த இதழைப் பற்றி அறிந்தேன். முதலில், அவருக்கு என் நன்றிச் செண்டு.  

ஒன்பதாவது மேகத்தைப் பார்த்தோம், இப்போது ஏழாவது சொர்க்கத்திற்கு வருவோம்.

வல்லமை இதழுக்கு நான் அனுப்பிய கதை, (மேலே நான் குறிப்பிட்டிருந்த) இலக்கிய ஆளுமையும், மூத்த தமிழிலக்கிய விமர்சகரும், இலக்கிய உலகில் ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரலுமான திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமர்சனத்திற்கு உட்படப்போகிறது என்பதையே பெரிய வரமாக நினைத்திருந்த எனக்கு, 'எனது கதையைப் பற்றி மதிப்பிற்குரிய வெ.சா. அவர்கள் எழுதியுள்ள' மதிப்புரையை படித்த பிறகு, என்னசெய்வதென்று புரியாமல் மௌனித்துவிட்டேன். உண்மைதான். அதீத மகிழ்ச்சியில் மனம் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது.

http://www.vallamai.com/?p=31594

இலக்கிய உலகில் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற பல ஏகலைவன்களுக்கு பல துரோணர்களின் புத்தகங்களே துரோணர்கள்!! அப்படி இருக்க, துரோணர்களையே கண்முன் நிறுத்திக் கற்றுக் கொடுக்க வைத்து பிரமிக்க வைக்கிறது வல்லமை இதழ்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் வல்லமை இதழுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்! இன்னொரு விஷயத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். வல்லமைக்கு எனது படைப்புகளை மட்டுமே அனுப்பி வைத்தேன். ஆனால் எனது புகைப்படத்தையும் அவர்களே இணையத்திலிருந்து தேடி எடுத்துச் சேர்த்துள்ளார்கள். இதையெல்லாம் இன்றைக்கு யார் செய்வார்கள்?

இந்தக் கதைகளை சில இதழ்களுக்கு அனுப்பியதற்கு இன்று வரை பதில் கடிதம் கூட வராத நிலையில், 'வல்லமை' குழுவின் ஆதரவும், பெருந்தன்மையும், என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நேற்று இரவு சுமார் எட்டு மணி இருக்கும் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணி) - வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்கள் GTALK-இல் தொடர்பு கொண்டு வெ.சா. அவர்களின் மதிப்புரைக்கான இணைப்பை அனுப்பி, போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த உலகத்தில் நல்லவர்கள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தும் நிகழ்வுகளாகவே இவற்றை நான் காண்கிறேன்.

இவையனைத்திற்கும் மேலாக, இணைய இதழ்களில் வெளியான என்னுடைய படைப்புகளைப்  பார்த்துவிட்டு, அதுபற்றி எனக்குத் தெரிந்த நண்பர்கள், தெரியாத அன்பர்கள், உறவுகள் என்று பலரும் வழங்கிய கருத்துரைகளையும், கடிதங்கள் வாயிலாக வந்து குவிந்த பாராட்டுகளையும் கண்டு பேருவகை அடைந்தேன்.

I FEEL SO BLESSED TO HAVE SUCH PEOPLE IN MY LIFE!

என்னுடைய எழுதும் ஆர்வம் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை  என்னால் உணர முடிகிறது.

பத்து வரிகளாய் இருந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து வலைப்பதிவில் எழுதலாம் என்று இருக்கிறேன் - நீங்கள் ரசிக்கவும்... ருசிக்கவும்...!

பின்குறிப்பு: இந்த வலைப்பதிவையும், என் எழுத்தையும் நேசிப்பவர்கள் அருகேயுள்ள 'Join this site' பட்டனை சொடுக்கி பின்தொடரவும் அல்லது மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யவும். தொடர்பிலிருப்போம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்