உச்சத்தில் உழவு


உணவு தின்றுக் கருவுக்கு
குருதி தருவாள் - தாய்!
தன்குருதி தந்து உலகோர்க்கு
உணவு படைப்பான் - 'உழவன்’”!

நிலமென்னும் கருவறையில் விதைவீசி
உயிர்கொடுத்து உடல்வேர்க்க உழவுசெய்து
உலகுக்கே உணவு படைத்தவனின்று
சுருங்கிப் போனத்தன் வயிற்றிற்கே
ஒருவேளைச் சோறின்றி வாழ்ந்திருக்க,
எங்கனம் செய்வான் அவன் உழவு?
அன்றாடம் அவன் வீட்டில் இழவு!

பொய்த்துப்போன மழை,
வற்றிப்போன கிணறுகள்,
பாலையாகக் காட்சிதரும் ஆறுகள் - அந்தப்
பாலையின்மேல் பதிந்திருந்த ஆறுகளின்
பாதச் சுவடுகளைச் சுரண்டியதால்
வெளித்தெரியும் களிமண் என
இத்தனையும் மீறி
அறுவடைக்கு எட்டிப்பார்த்த
பயிர்களையும்
வனப்புடனே வளர்ந்து நின்ற
வாழைமரங்களையும்
காணாமல் செய்துவிட்ட
கோரப்புயலென்று
எத்தனைதான் வேதனைகள் அவனுக்கு?

மலடாகிப்போனது அவன் மண்ணல்ல!
பாரபட்சம் காட்டும் அந்த
அகண்ட வானமும்
நீர்மறுக்கும் அண்டை மாநிலத்தின்
நெஞ்சமும்தான்!

கருவறையில் கல்நட்டு
கட்டங்கட்டி விற்று விட்டான்
வயிற்றுக்காக மட்டும் அன்று!
வானம் பார்த்த பூமியின் மேலெழுந்து
வான்தொட்டு நிற்குமந்த
அடுக்குமாடிக் கட்டிடங்கள் மீதேறிச் சென்று
மழைவேண்டி யாசிக்கலாமே என்று!
வேண்டியும் பலனில்லை என்றால்
வீழ்ந்து மாய்க்கலாமும் என்று!
இப்படித்தான் நிற்கிறார்கள் -
உச்சத்தில் உழவனும்,
மரணத்தின் விளிம்பினில் உழவும்
இன்று!


 நன்றி: வல்லமை மின்னிதழ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)