புறங்கூறாமை எனும் அறம்..

ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும்,  சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப் படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு, 'Gossip' சார்ந்த என்னுடைய  கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய "இந்தியா குறித்த ஏளனம்" பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதே நண்பர்களில் ஒருவர் சமீபத்தில் "சேப்பியன்ஸ் படித்திருக்கிறாயா? கமல் டிவிட்டரில் பரிந்துரைத்திருக்கிறார்" என்று கேட்டார். கமலஹாசன் அவர்களை வாரத்துக்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யச் சொல்லலாம். அவர் மறுக்கும் புண்ணியம் அவருக்கு வந்து சேரும். புத்தகத்தைப் பற்றி நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. அந்தப் புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஹராரி 'Gossip Theory'-யைப் பற்றிக் குறிப்பிட்டு, முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு வதந்திகளும், வீண்பேச்சுகளும் எவ்வாறு மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று அவரது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

மற்றவர்கள் இல்லாத சமயத்தில், அவர்களைப் பற்றிய குற்றம் குறைகளை புறம்பேசிக்கொண்டிருப்பது சமீப காலமாக எனக்குப் பிடிப்பதில்லை. சமீப காலம் என்று கூறினேன். ஏனெனில் நானுமே அதுபோன்ற பேச்சுகளில் ஈடுபட்டு வந்தவனே. ஆனால், கடந்த சில வருடங்களாகவே புறங்கூறாமை போன்ற கொள்கைகளோடு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் கோயமுத்தூர் பூ.சா.கோ கல்லூரியில் இயந்திரவியல் பயின்றவன். படிப்புக்கும் இப்போது நான் செய்து வரும் பணிகளுக்கும் சுத்தமாகத் தொடர்பில்லை. இயந்திரவியலில் எனக்கு அறவே பிடிக்காத பாடம் 'வெப்பவியக்கவியல்'. அதற்கு அந்தப் பாடம் காரணமா அல்லது அதைச் சொல்லித் தந்த ஆசிரியர் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. சில ஆசிரியர்கள் கடினமான பாடங்களைக்கூட எளிமையாக சொல்லிக்கொடுப்பார்கள். சிலர் எளிமையான விஷயங்களைக்கூட கடினப்படுத்தி விளக்குவார்கள். அவர் இரண்டாம் ரகம் என்று நினைக்கிறேன். ஆனால் பாருங்கள், எது நமக்குப் பிடிக்காதோ அதுதான் நம் நியூரான்களில் வேர் விட்டுத் திடமாக நின்று, கிளைத்து, வாழும் காலம் முழுமைக்கும் அச்சுறுத்திக்கொண்டேயிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட நானும் என்னிரு கல்லூரி நண்பர்களும் வெப்பவியக்கவியல் தேர்வுக்குத் தீவிரமாகத் தயார் செய்து கொண்டிருப்பதைப் போன்ற கொடுங்கனவு ஒன்று வந்தது. இருவரில் ஒருவன் என்னுடைய 'பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்' பதிவில் நான் குறிப்பிட்டிருந்த விச்சா. பின்லாந்தில் தற்போது வசித்து வரும் அவனுக்கும், இங்கிலாந்தில் வசித்து வரும் இன்னொரு நண்பன் முரளிக்கும், காலை எழுந்தவுடன் செய்தியனுப்பி பயமுறுத்தினேன். 'வெப்பவியக்கவியலில் சுழிய விதியை' (Zeroth law of Thermodynamics) இன்றைக்குத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால்கூட என்னால் உடனே கூற முடியும். அவ்வளவு எளிய விதி.  

விதி இதுதான்

மூன்று வெப்பத்தொகுதிகள் AB மற்றும் C இவற்றை எடுத்துக்கொள்வோம்.  

"வெப்பத்தொகுதி A மற்றும் வெப்பத்தொகுதி B இவையிரண்டும் சமநிலையில் இருக்குமானால், மேலும் வெப்பத்தொகுதி B மற்றும் வெப்பத்தொகுதி C இவையிரண்டும் சமநிலையில் இருக்குமானால், வெப்பத்தொகுதிகள் A-வும் C-யும் நிச்சயம் சமநிலையில் இருந்தே தீரும்". 

இதிலிருந்து "புறங்கூறல் சுழிய விதி" ஒன்றை நானே உருவாக்கிக்கொண்டேன். You may want to call it the "Zeroth law of Gossip-dynamics". அதாவது - 

"நபர் A-யும்  நபர் B-யும் நபர் C-யைப் பற்றி புறம் பேசிக்கொண்டிருப்பார்களேயானால், நபர் B-யும் நபர் C-யும் நபர் A-வைப் பற்றி புறம் பேசிக்கொண்டிருப்பார்களேயானால், நபர் C-யும் நபர் A-யும் நிச்சயம் நபர் B-யைப் பற்றிப் புறம் பேசிக்கொண்டிருப்பார்கள். 
ஏனிப்படி செய்கிறோம்? அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணங்களாக எனக்குப் படுவது: 

இரண்டு மனிதர்களுக்குள் பேசிக்கொள்வதற்கு அப்படி ஒன்றுமே இருப்பதில்லை. அவர்களிருவருக்கும் பொதுவான ஆர்வங்கள், விருப்பங்கள் எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும், சினிமா, அரசியல் இவற்றைத் தாண்டி எதுவும் இருக்காது.  இவர்கள் பெரும்பாலும் குறிக்கோளற்றவர்கள். எனவே அருகிலில்லாத வேறொருவனைப் பற்றிப் பேசுவதன் மூலமாக அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் அந்தப் பிணைப்பு எவ்வளவு போலியானது என்பதை அவர்கள் உணர்வதில்லை. சில சமயங்களில் பிரிந்திருந்த இரண்டு நண்பர்கள் திரும்ப இணைவதற்கு அவர்களுடைய பொது எதிரியைப் பற்றியான பேச்சு பெருமளவு உதவி புரிகிறது. இன்னொரு முக்கியக் காரணம், மற்றவர்களைப் பற்றிய வதந்திகளும் வீண்பேச்சுகளும்தான் மனிதர்களுடைய மாபெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது.

நானும் என்னுடைய பெல்கிய நண்பனும் ஒன்று சேர்ந்தோமானால் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும். மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் பேச்சு நள்ளிரவு வரை செல்லும். ஆனால் ஒருவரைப் பற்றிக்கூட புறம்பேசி இருக்கமாட்டோம். அதற்கு நேரமே கிடைப்பதில்லை. எங்களுடைய குறிக்கோள்களையும், திட்டங்களையும் பற்றி பேசுவதற்கே நேரம் போதமாட்டேன் என்கிறது. இதில் மற்றவர்களைப் பற்றி எங்கே பேசுவது. எனவே, புறம்பேசுவதைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வாழ்க்கையின் நோக்கத்தைத் தேடுவது. வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்தித்து, அதற்காக உழைப்பது.  

இந்தப் புறங்கூறுதலில், வளர்ந்த நாடு, வளரும் நாடு, வளரா நாடு என்று எந்த விதமான பேதமுமில்லை. நானுமே அதற்கு விதிவிலக்கில்லைதான். ஆனால் பித்தம் தெளிந்த பிறகு பித்தர்களோடு இருப்பதைப் போன்றதொரு சித்திரவதை வேறொன்றுமில்லை. என்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர் அவருடைய குடும்பத்திலிருக்கும் நபர்களைப் பற்றி வம்பு பேசிக்கொண்டிருந்தார். நான் சற்று நேரம் பொறுமையாக இருந்தேன். பேச்சு விடாமல் நீண்டுகொண்டிருக்கவே நான் பொறுமையிழந்து, "மற்றவர்களைப்  பற்றிய குறைகளை அவர்களில்லாத சமயத்தில் பேசக்கூடாது என்று எங்கள் வீட்டில் விதி இருக்கிறது. என் மகன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குத் தவறான விஷயங்களை நீங்கள் போதிக்கிறீர்கள்." என்றேன். அதற்கு அவர் தான் புறம்பேசவில்லை, தன் மனக்குறைகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகக் கோபமாக விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார். எனினும் நான் கூறியதில் இருந்த நியாயத்தை உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். இல்லையெனில் அது  தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும். பிறருடனான  பிரச்சினைகளை இப்படிப் பேசுவதன் மூலம் வென்டிலேட் செய்துகொள்ளவேண்டியது அவசியம்தான். எனக்குமே அப்படி ஓரிருவர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி எத்தனைப் பேரிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே என் கேள்வி. மேலும், பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசாமல் மற்றோராயிரம் பேரிடம் பேசிப்  பயனென்ன கிட்டிவிடப் போகிறது. குறைந்தபட்சம் அவரிடம் சொல்லிவிட்டாவது வம்பு பேசலாம்.


இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். நேர்மையான முறையில் நீங்கள் சம்பந்தப்பட்டவரிடமே பேசுவதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. என்னுடைய உறவினர் ஒருவரிடம், சுழிய விதியைப் பற்றி எடுத்துக் கூறி அவரிடம் எனக்கிருந்த மனக்குறைகளை எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், அவர் உடனே என்னுடைய பழைய தவறுகளையெல்லாம் கிளறி எடுத்து, "நீ முதலில் உன்னைச் சரிப்படுத்திக்கொள்" என்று அறிவுறுத்தினார். மனமுதிர்ச்சியற்ற நிலையிலும், சூழ்நிலை காரணமாகவும் நாம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை உடனிருந்து பார்த்தவர்களால், நம்முடைய அனுபவங்களின் மூலமாகவும், கடின முயற்சிகளின் மூலமாகவும் தற்போது மேன்மை பெற்று விளங்குவதை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. "இவன் யார் நம்மிடம் வந்து சொல்ல?" என்று சினங்கொண்டு, நாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளை நம் முன்னால் அடுக்கி, குற்றவுணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களைத் தற்காத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஊனமுற்ற மனிதன் ஒருவனுடனான மல்யுத்தப் போராட்டத்தில் அவனுடைய ஊனமுற்ற பகுதியை வன்மத்துடன் அழுத்தி அவனை வெல்வதை உத்தியாகக் கொண்டவர்கள் அவர்கள் என்றுதான் தோன்றுகிறது. அது கோழைத்தனமே அன்றி பிறிதொன்றுமில்லை. எனவே, "உன்னைச் சரிப்படுத்திக்கொள்" என்று அவர் கூறிய விதத்தில் நான் புரிந்துகொண்டது இதுதான் - "நீ வேண்டுமானால் வேறொருவரிடம் என்னைப் பற்றி புறம்பேசிக்கொள். ஆனால் என்னிடம் வந்து என்னுடைய ஈகோவை உரசாதே. நான் புனிதன். நீ அற்பன்." அன்றைக்குத்தான் எனக்கு அந்த மனிதரைப் பற்றி அத்தனைப் பேர் புறம்பேசுவதில் இருந்த நியாயம் புரிந்தது. அதை அவரிடமே கூறவும் செய்தேன். சிலர் தம்மைப் பற்றிய உண்மைகளைப் பிறர் அறிந்திருக்கிறார்கள், புறம்பேசுகிறார்கள் என்பதை விட, அதைத் தம்மிடமே வந்து எதிர் நின்று சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையற்ற இவர்களும் புறங்கூறலுக்கு முக்கியமானதொரு காரணம் என்று அறிக.     

இன்னும் சிலபேர் வேறொரு மூன்றாவது நபர் நம்மிடம் சொல்லியிருக்கும் ரகசியங்களைக் கூறவில்லையென்றால்கூட கோபித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ரகசியங்களும் அதுபோலவே பாதுகாக்கப்படும் என்கிற அடிப்படை உண்மையை உணர மறுக்கிறார்கள். இதில் நகைப்புக்குறிய செய்தி என்னவென்றால், ஒருமுறை அத்தகைய மூன்றாவது நபர் ஒருவரே, "மாதவனிடம் சொன்னேனே. அவர் உங்களுக்குச் சொல்லவில்லையா?" என்று கேட்டுத் தப்பித்திருக்கிறார். எனவேதான் சொல்கிறேன், உங்களிடம் யாராவது வந்து "Keep it only with you!" என்கிற நிபந்தனையோடு எந்த ரகசியத்தையாவது சொல்ல முனைந்தால், "மன்னிக்கவும். என்னால் ரகசியங்களைக் காக்க முடியாது." என்று கூறி மறுத்துவிடுங்கள், அல்லது "எத்தனைப் பேரிடம் இதுபோன்று சொல்லியிருக்கிறீர்கள்" என்று கணக்கு கேட்டுவிட்டு பிறகு சொல்லச் சொல்லுங்கள். இப்படி நீங்கள் கேட்டவுடன், தங்கள் வாழ்நாளில் தாங்கள் புறம்பேசியதே இல்லை என்பதுபோல்  திடுக்கிடுவார்கள்; பயங்காட்டுவார்கள். அதற்கெல்லாம் பயப்பட வேண்டாம். அவர்கள் நிச்சயம் உங்களிடம் மட்டுமே அந்த விஷயத்தைப் பற்றி பேசியிருக்கப் போவதில்லை. இன்னுமோராயிரம் பேர் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வரிசையில் நின்றுகொண்டு இருப்பார்கள் என்பதை உணர்க. இன்னும் சொல்லப்போனால், "Keep it with you" என்பதற்கான உண்மையான அர்த்தமே "Please share it with everyone" என்பதாகத்தான் இருக்கும். "யாருக்கும் சொல்லாதே" என்றால் "ஊர் முழுக்கச் சென்று பரப்பு" என்று அர்த்தம் கொள்க. 

என்னுடைய "புறங்கூறல் சுழிய விதியை" அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியபோது ஆரம்பத்தில் என்னுடன் பேசுவதையே பலர் நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.  இனி இவனிடம் பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். இன்னும் சிலர், "இது Gossip இல்லை. உன்னுடைய ஆலோசனை வேண்டும்." என்று அனுமதி பெற்றுக்கொண்டுத் தன்னுடைய புறங்கூறலைத் தொடருவார்கள். என்னிடம் சொன்னால் வேறெங்கும் போகாது என்கிற காரணத்தினால் அப்படி வருவோரின் எண்னிக்கை சில நாட்களில் கூடிவிட்டது. ஆனால், அவர்கள் நிச்சயம் என்னோடு நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்பது தெரியுமே. சில சமயங்களில் என்னை ஒரு ஆலோசகராக எண்ணிக்கொண்டு அவர்கள் கூறுவதை கவனித்து என்னுடைய கருத்தைத்தெரிவிக்கிறேன். பல நேரங்களில், "நீங்கள் அவர்களிடமே பேசிக்கொள்ளுங்கள். அதுதான் சரி." என்று தவிர்த்துவிடுகிறேன். அப்படித் தவிர்க்கும்போது ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேசவேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அது நமக்கும் நல்லது; அவர்களுக்கும் நல்லது.  

நண்பர்கள், உறவினர்கள் என்று யாரைப் பார்க்கச் சென்றாலும், மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவதில்தான் பெரும்பாலான நேரம் கழிகிறது. அதுவும் வழமைபோல் அந்தச் சமயம் யார் அங்கு இல்லையோ அவர்களைப் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கும். இதற்காகவே புதுப்புது விஷயங்களைப் படித்துவிட்டு, யாரைப் பார்த்தாலும் அவர்கள் பேசுவதற்கு முன்பு நான் முந்திக்கொண்டு கற்றதையெல்லாம் அவர்கள் முன்பு கொட்டி, என்னைக் கண்டவுடன் ஓட்டம் எடுக்க வைத்துவிடுகிறேன். அவர்கள் புறங்கூற ஆரம்பிக்கும்போது "அசோகமித்திரனையும், ஆண்டன் செகாவையும், இதாலோ கால்வினோவையும் வாசித்திருக்கிறீர்களா?" என்று கேட்க ஆரம்பித்தால் என்னுடைய கதவுகளை நான் அடைத்துவிட்டேன் என்று பொருள். அது அவர்களுடைய புறங்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள நான் வைத்திருக்கும் ஒரு யுக்தி என்பது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதையும் மற்றவர்களிடம் சென்று "எதையெதையோ பேசிப் பேசி சாகடிக்கிறார். நம் மீது கருத்துக்களைத் திணிக்கிறார் மனிதர்" என்று குறையாகச் சிலர் கூறியிருப்பதாக இன்னொரு புறங்கூறுபவர் நான் "வேண்டாம் வேண்டாம்" என்று மறுத்தும், இது ஒன்று மட்டும் என்று "வேண்டி வேண்டிப்" புறங்கூறினார். 

இந்தப் பதிவை உற்று நோக்கினீர்களாயின் மேலே நான் எழுதியிருப்பவையெல்லாம்கூட  பலரைப் பற்றிய என்னுடைய "பொதுவான புறங்கூறலே" எனினும், புறங்கூறாமையின் அவசியத்தையும், நான் பின்பற்றி வரும் கொள்கைகளையும், அதைச் செயல்படுத்துவதில் இருக்கும் சவால்களையும் விளக்குவதற்காக இவற்றையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் முன்பெப்படியிருந்தேனோ அது தேவையில்லை,  இப்போதைக்குத் திருக்குறளின் புறங்கூறாமை அதிகாரத்தை கிட்டத்தட்ட 'I am trying to practice by the book' என்று கூறலாம். குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்திருக்கிறேன். இதில் என் நெருங்கிய நண்பர்கள் சிலரும் என்னோடு இணைந்து கொண்டுவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி. புறங்கூறாமை என்பது அத்தனை எளிதான விஷயமில்லை; இருந்தாலும் இதை நாங்கள் விடப்போவதும் இல்லை. இதை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்கிற ஆசை எனக்கிருக்கிறது. அதற்கு உங்கள் அனைவரின் உதவியும், ஒத்துழைப்பும் எனக்குத் தேவை. வாழ்க்கைக்கு இதன் மூலம் ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு தவறான பழக்கத்தைக் கைவிடுவதன் மூலம், பல நல்ல பழக்கங்கள் வந்து ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. வம்பு பேசவேண்டாமென்றால் வேறு என்ன பேசலாம் என்று நினைக்கும் அந்தக்கணமே ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு விதையிட்டுவிடுகிறோம். வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதற்குத் தகவல்களைச் சேகரிக்கவேண்டும். புத்தகங்கள் வாங்கவேண்டும். வாசிக்கவேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும். அது சார்ந்து எழும் சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதை நண்பர்களிடம் விவாதிக்கவேண்டும். இப்படி எத்தனையோ இருக்கிறது.

கடந்த காலங்களில் பிறர்சொல் கேட்டு நான் நிறைய நன்னட்புக்களை இழந்திருக்கிறேன். இப்போது சுழிய விதி நன்றாகப் புரிந்திருப்பதால், யாரைப் பற்றி யார் என்னிடம் வந்து கூறுவதும் என்னை பாதிப்பதில்லை. பயனற்றப் பேச்சுகளில் நான் ஈடுபடுவதுமில்லை. யாரிடமாவது ஏதேனும் வருத்தமிருந்தால், அது நிச்சயம் தீர்க்கப்படவேண்டியதாய் இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு, பேசித் தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அப்படிப் பேசித் தீர்க்கவேண்டிய அளவு பெரிய பிரச்சினையாக எனக்குத் தோன்றாவிடில் அதைக் கண்டுகொள்ளாமலும் விட்டு விடுகிறேன். 

எல்லாவற்றுக்கும் மேலாக, என்னிடம் வந்து மற்றவர்களைப் பற்றி பேசுபவர்களிடம் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படிப் பேசும் அந்தக்கணமே அவர்கள் தங்களுடைய நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நிச்சயம் என்னைப் பற்றி எங்கோ போய் யாரிடமோ பேசப்போகிறார்கள் என்கிற அசரீரி அந்தக்கணமே என் காதில் ஒலிக்கிறது. அதற்காக அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று நான் அர்த்தம் கொள்வதில்லை. அவர்கள் மீது கோபம் கொள்வதுமில்லை. அது ஒரு நோய். பாவம் அவர்கள் நோயாளிகள். அவ்வளவே. 

இறுதியாக ஒரு திருக்குறள்:

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்."

புரிகிறதா? அது ஒன்றுமில்லை. தாத்தா எனக்கு ஒரு படி மேலே சென்று, புறம்பேசுவதை ஒரு பெருங்குற்றமாகக் கண்டு, அறச்சீற்றம் கொண்டு, வெகுண்டெழுந்து,  "ஒருவன் மாதவன் இளங்கோவின் புறங்கூறல் சுழிய விதிப்படி புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிட, அவன் சாவது நல்லது." என்று சாடியிருக்கிறார்.


இதற்கு நானே பரவாயில்லை என்று தோன்றுகிறதா? இந்தக் குறளிலிருந்து இன்னொன்றும் நமக்குத் தெரியவருகிறது. அது என்ன தெரியுமா? 

இரண்டாயிரம் வருடங்களாக இந்த உலகம் மாறவேயில்லை. 

கருத்துகள்

  1. This is an amazing concept for self realization. I could see plenty of changes it brings to our life!

    பதிலளிநீக்கு
  2. It is an amazing concept. Very useful for self realization and get bettrr

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை. கருத்துரைகள் தொடர்ந்து வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. Complex concept to explain but nicely written. Great Work Madhavan.

    பதிலளிநீக்கு
  5. இப்போதுதான் இதை படிக்கிறேன், எனவே கேட்கிறேன்:

    "எல்லாவற்றுக்கும் மேலாக, என்னிடம் வந்து மற்றவர்களைப் பற்றி பேசுபவர்களிடம் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படிப் பேசும் அந்தக்கணமே அவர்கள் தங்களுடைய நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நிச்சயம் என்னைப் பற்றி எங்கோ போய் யாரிடமோ பேசப்போகிறார்கள் என்கிற அசரீரி அந்தக்கணமே என் காதில் ஒலிக்கிறது. அதற்காக அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று நான் அர்த்தம் கொள்வதில்லை. அவர்கள் மீது கோபம் கொள்வதுமில்லை. அது ஒரு நோய். பாவம் அவர்கள் நோயாளிகள். அவ்வளவே."

    இப்படி எல்லாம் சொல்வது கொஞ்சம் மிகையுணர்ச்சியாக இருக்கிறதே, நம்பகத்தன்மை இழக்கிறார்கள், நோயாளிகள் என்றெல்லாம் சொன்னால், அவர்களிடம் அதற்குப்பின் எப்படி நடந்து கொள்ள முடியும், எவ்வகைப்பட்ட உறவு வைத்துக் கொள்ள முடியும்? இது உண்மை என்றால் தொடர்பை அறுத்துக் கொள்வதுதானே நியாயமான முடிவாகும்?

    எல்லாரும் ஏதோ ஒரு வகையில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு ஒருத்தருக்கொருவர் அவரவர் பலம் பலவீனங்களுக்கு தகுந்தபடி அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால்தான் ஊர் உலகம் சுமுகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

  6. அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இனி புறங்கூறக்கூடாது என்று முடிவெடுத்து அதைப் பற்றிய பதிவுகளை தேடும்போது உங்கள் பதிவு கண்ணில் பட்டது. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..