பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

(சிறுகதை)




“ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” - இப்படி கேட்ட என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்சுக்கு இன்னைக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்னு தோணிச்சிங்க. அதனால என் மனசுல இருக்கற பாரத்த இந்த பாக்சுக்குள்ள இறக்கிவச்சி உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

கொஞ்சம் பாரம் ஜாஸ்திங்கறதால இந்த  ஸ்டேடஸ் மெசேஜ் கொஞ்சம் பெரிசா போவும் போல இருக்கு. உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாத்துட்டு வந்து பொறுமையா படிங்க. இல்ல, என் கஷ்டத்த இப்போவே தெரிஞ்சிக்கணும்னா தொடர்ந்து படிங்க.

ஒரு வரி ரெண்டு வரின்னா இங்கிலீஷ்லயே எழுதியிருப்பேன். இவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் என்னால இங்கிலீஷ்ல எழுத முடியாதுங்க. தமிழில எழுதறதே பெரிய விஷயம். இதுல வேற, நம்ம ஊர்க்கார பசங்கல்லாம் பேஸ்புக் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அவங்களுக்கும் நம்ம சொல்ல வர்றது புரியணுமில்லையா? ‘இங்கிலீஷ்லயே எழுதத் தெரியாத நீ அமெரிக்காவுல போயி என்னத்த கிழிக்கற’னு உங்க மைண்ட் வாய்ஸ் பேசறது எனக்குக் கேக்குதுங்க. நான் பாக்குற வேலைக்கு ஜாவா லாங்குவேஜும் அதோட கீவேர்ட்ஸும் போதும்! ஒருநாளைக்குப் பதினாலு மணிநேரம் கம்ப்யூட்டர் கூட தானே பேசுறோம். அதுவுங்கூட சரியா தெரியாதுங்கறது வேற விஷயம். ஆனா ஒன்னு, இந்த ஊர்க்காரங்க பேசற வழவழா, கொழகொழா இங்கிலீஷுக்கு என்னோடது எவ்வளவோ பரவாயில்லீங்க.

என்னடா இவன் ரொம்ப மரியாதையா நெறைய 'ங்க' யூஸ் பண்றானேனு நெனெச்சீங்கதானே? என்ன பண்றது? இப்போதான் பேஸ்புக்ல என் பெரிப்பா, சித்தப்பா, மாமா, மாமினு எல்லா பெரியவங்களும் வந்துட்டாங்களே. என்ன பண்றது?

சித்தப்பா "ஓ! சட்டை மேல எவ்ளோ பட்டன்!" பேஸ்புக் பேஜ்லர்ந்து போட்டோவ ஷேர் பண்றார். மாமா என்னடான்னா, "Ovvoru figurum thevai machaan"-னு ஏதோவொரு பேஜை லைக் பண்றாரு. என்னதான்  நடக்குது இந்த பேஸ்புக்ல?

எங்க கெழவி மட்டும்தான் இன்னும் வரலைங்க. அவங்களுக்கும் சாவித்திரி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கானு கேள்விப்பட்டேன். உண்மையா @Savithiri Muthusamy?

தமிழில எழுதறத்துக்கு இன்னொரு காரணம் - நான் இன்னைக்கு எழுத போறது இந்த ஊருக்காரங்கள பத்தி. சாதாரண ஆளுங்களப்பத்தி எழுதனாவே பிரச்சினை. அப்படி இருக்கும்போது, இந்த ஊர் போலீஸ்காரங்கள பத்தி எழுதினா சும்மா விடுவாங்களா? அட, இப்போல்லாம் நம்ம இந்தியாவுலையே கான்ட்ரொவர்ஷியலா எதாச்சும் பேஸ்புக் ஸ்டேடஸ் போட்டா, சரியில்லையேன்னு சொல்லி, புடிச்சி உள்ள வெச்சிடறாங்க. (கான்ட்ரொவர்சிக்கு தமிழ்ல என்னங்க?) நாளைக்கு நம்மளையும் புடிச்சி உள்ள வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது? நம்மளையும்னு சொல்றதுல இருந்தே உங்களுக்கு ஏதோ  புரிஞ்சிருக்கணுமே?

டிஸ்க்ளைமர்: பிரச்சினைல மாட்டிக்கவேணாம்னு நெனெக்கற யாரும் இந்த ஸ்டேடஸ படிச்சிட்டு ‘லைக்கோ’, பாராட்டி ‘கமெண்டோ’ போட்டுறாதீங்க பா. வேணும்னா என்ன திட்டி எழுதுங்க. ஒருவேளை அதனால உங்களுக்கு அவார்டு கூட கெடைக்கலாம்.

ஆனா ஒன்ன மட்டும் தெளிவா சொல்லிடறேன். இது இந்த ஊர்ல மட்டும் நடக்கற விஷயம் இல்ல. உலகம் பூராவும் இருக்கறதுதான். என்னடா இவன் புதிர் போட்டுட்டே போறானேன்னு பாக்கறீங்களா? சிலர் செய்யற தப்புனாலையும், பலர் தப்பா ஜெனெரலைஸ் பண்றதாலையும் எவ்ளோ அப்பாவிங்க பாதிக்கப்படறாங்க?

மொதல்ல என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்ஸ் என்கிட்ட கேட்ட கேள்விக்கு வருவோம் - “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு பதிலா, உங்ககிட்ட ரெண்டு விஷயத்தை இப்போ ஷேர் பண்ணிக்க போறேன்: 16 மணிநேரத்துக்கு முன்ன நடந்த ஒரு விஷயம், அப்புறம் 16 நாளைக்கு முன்னால நடந்த இன்னொரு விஷயம்.

மொதல்ல 16 நாளைக்கு முன்ன நடந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்:

அன்னைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டில, ஹாலிவுட் பவுல்வர்டு ஏரியால இருக்கற மெக்டீல தனியா உக்காந்து, ப்ரைசும், சாண்ட்விச்சும் சாப்டிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு எதிர இருந்த டேபிள்ல இருந்தவங்கல்லாம் பதறியடிச்சி எழுந்து நின்னு எனக்கு பின்னாடி இருந்த கண்ணாடிச் சுவரு வழியா வெளிய பாத்தாங்க.

நானும் எந்திரிச்சி திரும்பிப் பார்த்தப்போ, ரோடுக்கு அந்தப்புறம் இருக்கற ஸ்னோ வைட் கபே கிட்ட ஒரே பரபரப்பாக இருந்தது. சாதாரணமாக இவ்வளவு கூட்டமெல்லாம் இந்த ஊர்ல கூடாதேனு நெனெச்சிக்கிட்டே வெளியே வந்தேன். ரெண்டு மூணு போலீஸ்காரங்க சேர்ந்து எவனோ ஒருத்தன தரையில அமுக்கிப்பிடிச்சி, ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னாடி வளைச்சி, அவன் கைல விலங்கு மாட்டிட்டு இருந்தாங்க. அந்தப் போலீஸ்காரங்க அவனைத் தூக்கி நிறுத்தனப்போ அவன் மொகத்தப் பாத்தவுடனே அப்படியே என் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போச்சுங்க. ஏன்னா, அவங்க புடிச்சி வெச்சிருந்தது என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் - இம்ரான்!

அவனைக் கார்கிட்ட இழுத்துட்டுப்போறத பாத்தவுடனே, ரோட க்ராஸ் பண்ண ஓடினேன். ஆனா அதுக்குள்ள சிக்னல் விழுந்துடுச்சி. இந்த ஊர்ல இது வேற ஒரு பெரிய தொல்லைங்க! தலை போற நேரத்துல கூட ரூல்ஸ பாலோ பண்ணியாகணும். எப்படா பச்சை விழும்னு பாத்துட்டே இருந்து, விழுந்த அதே செகண்ட் அடிச்சி பிடிச்சி க்ராஸ் பண்றதுக்குள்ள, இம்ரான கூட்டிட்டு போயிட்டாங்க போலீஸ்காரங்க.

அங்க கூடியிருந்த கூட்டத்துல சத்தம் போட்டுப் பேசிட்டு இருந்த ஒரு ஆள்கிட்ட போயி என்ன ஆச்சுனு கேட்டேன்.

"என்னாச்சுனே தெரியல. திடீர்னு பாருக்குள்ள வந்து பாட்டில தூக்கிக் கண்ணாடி மேல போட்டு ஒடச்சிட்டு வெளிய போயிட்டான்.  நல்லவேள, அந்த நேரம் கரெக்டா இந்த பக்கமா வந்த போலீஸ் அவனை அமுக்கி பிடிச்சிட்டுப் போயிட்டாங்க." என்று இங்கிலீஷ்ல சொன்னான்.
அவன் ஏன் அப்படி செஞ்சான்னு எனக்கு லேசா புரிஞ்சது. ஆனா, அந்த சமயத்துல நிஜமாவே எனக்கு என்ன செய்யறதுனே தெரியல.

"ஹி ஈஸ் மை ப்ரண்ட். அவன எங்க கூட்டிட்டு போனாங்கன்னு தெரியுமா?" என்று அந்த ஆள்கிட்டயே திரும்பவும் கேட்டேன்.

ஓ! காட் டேம்! எல்.ஏ.பி.டி ஈஸ் நாட் பார் பிரம் ஹியர். கோ தேர் அண்ட் செக்குயிக்!" என்றான்.
என்னோட போன்ல ஜிபிஎஸ்-ஐ ஆன் பண்ணிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். போற வழியில இம்ரான பத்தியே நெனெச்சிட்டுப் போனேன். எப்படி இருந்தவன்? நான் மொதமொதல்ல லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தப்போ, அவன் கூடத்தான் தங்கினேன். எனக்கு இங்க யாரைத் தெரியும்? எவ்ளோ ஹெல்ப் பண்ணினான்? வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்லர்ந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்கு அவன் தான் கைட், ப்ரண்ட், பிலாசபர், எல்லாமே. அவன் மட்டும் இல்லேனா இங்க வந்த அடுத்த வாரமே கிளம்பி இந்தியாவுக்குப் போயிருப்பேன்.

அவனுக்கு ஒரு கேர்ல் ப்ரண்ட் கெடச்சவுடனே, அவன் இருந்த வீட்ல என்ன விட்டுட்டு, வெஸ்ட் ஹாலிவுட் ஏரியாவுக்குப் போயிட்டான்.

அடிக்கடி என் ரூமுக்கு வருவான். பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா சேர்ந்து வாரத்துக்கு ரெண்டு படம் பாப்போம். இந்தியாவிலேயே ரெண்டு நாள் ஓடாத படத்தைக்கூட சீரியசா பாத்திருக்கோம். நல்லா ஊர் சுத்துவோம். சூப்பரா போயிட்டு இருந்த அவனோட வாழ்க்கைய ஒரு ஆக்சிடென்ட் அப்படியே புரட்டிப் போட்டுடிச்சி.

அவனுக்கு அம்மா கெடையாது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனோட அப்பாவும் சித்தியும் ஆம்பூர்லர்ந்து திண்டுக்கல்லுக்கு ஏதோ கல்யாணத்துக்குப் போகும்போது ஆக்சிடெண்ட்ல ஸ்பாட் டெட். எதிர்ல வந்த வேன் டிரைவர் தண்ணி அடிச்சிட்டு ஓட்டிட்டு வந்ததால நடந்த கொடுமை. அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப ஜாஸ்தியா பாசம் வெச்சிருந்ததால ஒடிஞ்சி போயிட்டான்.

இந்தியாவுக்கு போயிட்டு திரும்பி வந்ததுல இருந்தே ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தான். திடீர்னு நைட் முழிச்சிப்பானாம். ஓடுவானாம். சாப்பாட்ட தூக்கி எறிவானாம். ரெண்டு மூணுமுற எங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண அவனோட கேர்ல் ப்ரெண்ட், நாலு மாசம் சகிச்சிட்டு அப்புறம் பிரிஞ்சி போயிட்டா. அப்பலர்ந்து அடிக்கடி என் ரூமுக்கே வந்திடுன்னு கூப்பிட்டுப் பாத்தேன், அவன் கேக்கவே இல்ல. நானும் இன்னொரு ப்ரெண்ட் கார்த்திக்கும் நெறைய முறை அவன ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போனோம்.

மென்டல் டிப்ரஷன்தான் காரணம், ரெகுலரா மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டா சரியா போய்டும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, அவன் ஒழுங்கா மருந்து சாப்பிடரானான்னு கூட எங்களுக்குத் தெரியல. அடிக்கடி அவன பாக்க அவன் ரூமுக்கு போவோம் - எப்பவுமே பூட்டியே இருக்கும்.
"அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகும்போது பேசாம நான் அவன கூட்டிட்டு போயிடறேண்டா" என்று கார்த்திக் மூனு வாரத்துக்கு முன்னாடி கூடச் சொன்னான்.

இப்படி நடந்ததெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டே பார்ட்டி மினிட்ஸ் நடந்ததுல வில்காக்ஸ் அவென்யூவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்தேன். உள்ள போயி எல்.ஏ.பி.டி ஆபீசர்கிட்ட என்ன அறிமுகப்படுத்திகிட்டு, இம்ரான் கானைப் பத்திக் கேட்டேன். அவ்வளோதான் என்னோட பாஸ்போர்ட உடனே வாங்கிக்கிட்டு, என்னப்பத்தியும், இம்ரானப் பத்தியும் எல்லா டீடைல்சயும் கேட்டு ரெகார்ட் பண்ணிட்டு என்னை போகச் சொல்லிட்டார்.

நான் இம்ரானோட ப்ராப்லெம்ச பத்தி எடுத்துச் சொல்லி அவன பாக்கணும்னு சொன்னேன். எவ்ளோ சொல்லியும் அவர் கேக்கவே விரும்பல. கடைசியா,

"வி கான்ட் லெட் யூ மீட் எ டெர்ரரிஸ்ட் லைக் ஹிம்" என்று கத்தினார்.

அந்த ஆள் சொன்னதக் கேட்டு அரண்டு போயிட்டேங்க.

" டெர்ரரிஸ்ட்?? வாட் த ஹெக்? ஹவ் கேன் யூ கால் மை ப்ரெண்ட் எ டெர்ரரிஸ்ட்? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்!" என்று என்னையறியாமல் ஆவேசமாக நானும் கத்திவிட்டேன்.

"மை ப்ராப்ளெம்??? ஹிஸ் நேம் ஈஸ் த ப்ராப்ளெம். ‘கான்’ ஈஸ் த ப்ராப்ளெம். கெட் லாஸ்ட் ரைட் அவே!" என்று அவர் கத்திய கத்தில் என் காதே கிழிஞ்சிடுச்சோனு ஒரு டவுட்டே வந்திடுச்சு.

இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சாத்தான் பாஸ்போர்ட்ட தருவேன்னு என்னை தொறத்தி அடிச்சிட்டார். அன்னைலர்ந்து நானும், கார்த்திக்கும் படாதபாடு பட்டுட்டோம். தொலச்சி எடுத்துட்டாங்க. ஒரு வாரம் கழிச்சி, என்னோட பாஸ்போர்ட்ட திருப்பி கொடுத்துட்டாலும், இம்ரானைப் பாக்கவே முடியல. ஒரு வாரத்துக்கு முன்னால போனப்ப அவன் தீவிரவாதிங்கறதால (??!!) எப்.பி.ஐ கஸ்டடில இருக்கான், நாங்க ஒண்ணுமே பண்ண முடியாதுனு கைய விரிச்சிட்டாங்க பாவிப்பசங்க. எப்.பி.ஐ சம்மந்தப்பட்டதுங்கறதால நம்ம இந்தியன் லாயர்சும் கைய விரிச்சிட்டாங்க.

கார்த்திக் இந்தியன் எம்பசில ஹெல்ப் கேக்கறதுக்காக சான் பிரான்சிஸ்கோ போனான். கான்சலேட் சீரியஸா ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கார்னு தைரியம் சொன்னான். நானும் அலைஞ்சி திரிஞ்சி நாலு நாளைக்கு முன்னாலதான் என்னோட கொலீக் மூலமா ஒரு அமெரிக்க லாயரப் புடிச்சேன். அவர் கண்டிப்பா வெளிய கொண்டுவந்திடலாம்னு ஆறுதல் சொன்னார். அப்போதான் எனக்கு உயிரே வந்தது. வெளிய வந்தவுடனே பேசாம நானே இந்தியா கூட்டிட்டு போகலாம்னு நெனெச்சிட்டு இருக்கேன்.

இப்போ 16 மணிநேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு வருவோம்.

அத சொல்றதுக்குப் பதிலா, இன்னைக்கு காலைல இதோ இங்க ஒரு பாபுலர் நியூஸ் பேப்பரோட பேஸ்புக் பேஜ்ல ஸ்டேடசா போட்டிருக்கற நியூஸ் அப்டேட்ட படிக்கறேன் கேளுங்க. இது உங்களுக்குப் புரிஞ்சா, என் வலியும் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுனு அர்த்தம்:

"சான் டியகோ நகரில் நேற்று மாலை ஒரு 'கன் மேன்' (??!!) - அதாவது ‘துப்பாக்கி ஏந்திய 'நபர்' - ஒரு வணிக வளாகத்தில் புகுந்து 23 பேரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டார். ‘ஆன்டர்சன்’ என்கிற அந்த 'கன் மேன்' ஒரு மன நோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்."

கருத்துகள்

  1. ஆக கடைசியில் மன நோயாளி ஆ(க்)கி விட்டாரா...?

    பதிலளிநீக்கு
  2. அவர்களுக்கு ஒரு நீதி எங்களுக்கி ஒரு நீதி! அதுதானே உங்கள் வலி... நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அவர்களுக்கு ஒரு நீதி எங்களுக்கி ஒரு நீதி! அதுதானே உங்கள் வலி... நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் தனபாலன், வினோத்,

    வாசிப்பிற்கும், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததற்கும் நன்றி.

    வினோத் கூறியது போல் 'Justice' சம்பத்தப்பட்ட விஷயம்.

    கதையின் ஓரிடத்தில், "ஹிஸ் நேம் ஈஸ் த பிராப்ளம்" என்றொரு வரி வரும். அதுதான் KNOT-ஆக அமைந்தது. படுகொலைகள் புரிந்தாலும், 'ஆண்டர்சனை' வெறும் கன்மேனாகப் (துப்பாக்கி ஏந்திய நபர்) பார்க்கும் அதே கண்களுக்கு மன அழுத்தத்தினால், கண்ணாடியை உடைக்க நேரிடும் வேறொரு நபர் 'தீவிரவாதியாகத்' தெரிகிறார்.

    இந்தக் கதாப்பாத்திரத்தை விடுங்கள், நமது ஐயா அப்துல் கலாம் அவர்களையே இரண்டு முறை வெகுநேரம் காத்திருக்க வைத்து சோதனை போட்டவர்கள் தானே இவர்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலைமை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..