பனிப்போர்வை

(சிறுகதை)

சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

நான் சென்னைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலந்தில் இருந்தபோது மட்டும் இந்தச் செய்தி என்னை வந்தடைந்திருந்தால், எள்ளி நகையாடியிருப்பேன். “சென்னையில் பனிப்பொழிவா? இதென்ன ‘காதை கிழிக்கும் அமைதி’, ‘ஊரறிந்த ரகசியம்’, ‘தெளிவான குழப்பம்’ போன்றதொரு முரண்தொடையாக இருக்கிறதே?” என்று வினவி விட்டு வந்த செய்தியை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருப்பேன்.
நான் பிறந்தது என்னவோ வேலூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமாக இருந்தாலும், ஐரோப்பாவிற்குக் குடியேறி பன்னிரண்டு வருடங்களும், ஹாலந்து நாட்டில் குடியுரிமை பெற்று நான்கு வருடங்களும் ஆகிவிட்டது. ஐரோப்பாவுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் எத்தனை பனிப்பொழிவுகளைச் சந்தித்திருப்பேன்! இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னையில் நிகழ்ந்த பனிப்பொழிவை என்னால் நான் மரிக்கும் வரை மறக்கவே இயலாது. நான் மட்டும் அல்ல; உங்களாலும் அதை மறக்க முடியாது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் மீண்டும் நம்மூரில் நிகழுமா என்று தெரியவில்லை. எனவேதான் அதை உடனே எழுதிப்  பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், இங்கே ஆம்ஸ்டர்டாமில் பனி பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், முதன்முறையாக பனிப்பொழிவை எதிர்கொண்ட சென்னையில் நான் கண்ட குழப்பங்கள், ஆர்பாட்டங்கள், பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் இவை எதுவுமின்றி சலனமில்லாமல் பொழிந்து கொண்டிருக்கிறது.
என் மகள்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தான் இங்கு கோடை விடுமுறை என்றாலும் நாங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை எடுத்து இந்தியாவிற்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இதற்குப் பல காரணங்கள்.
சென்னையில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கோடைகாலமே நிலவுகிறது. ஜூலை மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ஐரோப்பாவில் கடுங்குளிர் மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரியில், அங்கு வாழ்வது என்பதே ஒரு பெரிய சாபம்.
அது என்ன சாபம் என்றுதானே கேட்கிறீர்கள்?
குளிர்காலம் வந்துவிட்டால் காலை பத்து அல்லது பதினொரு மணிக்கு உதித்து மாலை மூன்று மணிக்கே ஓய்ந்து, தினமும் சராசரியாக நான்கு அல்லது ஐந்து மணிநேரம் தான் ‘டைம் ரெஜிஸ்டர்‘ செய்கிறான் இந்தக் கதிரவன் என்கிற ஆசாமி. அவன் நிச்சயம் என் மேலதிகாரி காரல் டில்கினை சந்தித்தே ஆக வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் மங்கலாக ஒளி வீசுவதோடு நிறுத்திக்கொண்டு, தனக்கு வெப்பம் எனும் குணாதிசயம் இருப்பதையே மறந்து போய்விடுகிறான். என் மனைவி இந்த நாட்டு சூரியனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘சரியான ட்யூப்லைட்!’. பொருத்தமான ஒன்றுதான்! வடக்கு பிராந்தியங்களில் இன்னமும் மோசம் – தலையே காட்ட மாட்டான். இதற்காகவே வைட்டமின் ‘டி’ பெறுவதற்காக சூரியப் படுக்கைகளை நாடிச்சென்று ஐம்பது, அறுபது ஈரோக்களை வீச வேண்டி இருக்கிறது. சென்னையின் வெயிலையும், ஆம்ஸ்டர்டாமின் குளிரையும் பண்டமாற்றுமுறை செய்ய முடிந்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.
இதில் அவ்வப்போது பனிபொழிவு வேறு. நாடு முழுவதும் சுற்றினாலும் இங்கெல்லாம்  சேறு என்பதை பார்ப்பது அரிது. மண்ணே தெரியாமல் நாடு நகரம் முழுதும் ரப்பர் கலந்த தார் பூசி மொழுகி இருக்கிறார்களே! எங்கிருந்து சேறு உண்டாகும்? ஆனால் இந்தப் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டால் மட்டும் நடைபாதைகளில் உண்டாகும் பனிச்சகதியை பார்க்கவேண்டுமே! சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதும் கூட. பனிக்காலங்களில் மருத்துவமனைகளின் எலும்புமுறிவு பிரிவில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேடிக்கை என்னவென்றால் விழுபவர்களில் பெரும்பாலும் ‘ஸ்னோபூட்’ அணிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரண காலணிகள் அணிந்தவர்கள் சாவகாசமாக நடந்து செல்வார்கள். நானும் என் மகள்களும் ‘வழுக்கி விழுந்து விடாமல் கவனமாக எப்படி நடக்கவேண்டும்?’ என்பதை அவர்கள் அடிக்கடிப் பார்க்கும் ‘பிங்கு’ சிறுவர் நிகழ்ச்சியின் பென்குவின்-களிடமிருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறோம். பனிக்காலங்களில் கிட்டத்தட்ட சாலைகளில் பென்குவின்-களைப் போலத்தான் நடந்து செல்வோம். இயற்கையோடு தன் தொடர்பையே அறுத்துக்கொண்டுவிட்ட மனிதர்களிடமிருந்து இனி எனக்கு கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை; விலங்குகளிடம் நிறைய இருக்கிறது.
இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். குளிர்காலத்தில் ஹீட்டிங்கிற்கு ஆகும் செலவிற்கு இரண்டு முறை இந்தியா சென்று திரும்பலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருவோம். மாறாக, தமிழகத்தில் அவ்விரு மாதங்களிலும் ஐரோப்பிய கோடைகாலத்தை போன்று அருமையான தட்பவெப்பம் நிலவும். என் குழந்தைகளுக்கு நிறைய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கலாம். பொங்கல் பண்டிகை வேறு ஜனவரியில் வருவதால் அவர்களை என் கிராமத்துக்கு அழைத்துச் சென்று நம் உறவினர்களிடம் பழக வைக்கலாம், நமது கலாச்சாரத்தையும் (அப்படியொன்று இன்னமும் உயிரோடு இருந்தால்) அறிந்து கொள்வார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது அடையாளத்தை அவர்கள் தொலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஆனால் என்னதான் ஆயிற்று இந்தமுறை தமிழகத்திற்கு?
நாங்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து சென்னை வந்திறங்கிய  நாளிலிருந்தே பருவநிலை மாற்றத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. வழக்கமாக நான் விமானத்திலிருந்து வெளியே வந்த அடுத்தகணம் வெப்பநிலை மாற்றம் காரணமாக என் முகக்கண்ணாடியில் நீராவி படியும். அன்று அவ்வாறு நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு இனம்புரியாத மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது.
என் மனைவி ஆனந்தியிடம் அதைப்பற்றி கூறியபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்தோஷ். லாஸ்ட் இயர் கூட கொஞ்சம் கோல்டா தான் இருந்தது.” என்றாள்.  ‘எனக்குத் தெரியாதா என் தாயகத்தைப் பற்றி?’ என்று நினைத்துக் கொண்டேன்.
தாயின் கருவறையிலிருந்து வெளியேறிப் பிறக்கும் குழந்தை, இந்தப் பிரபஞ்சம் என்கிற  தாயின் மாபெரும் கருவறையின் வேரிடங்களுக்கு நீந்திச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறது என்பதை நம்புபவன்; உணர்ந்தவன் நான்.
பிறக்கும் குழந்தையின் உணர்வை, ஒவ்வொருமுறையும் சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வரும்போதும் பெறுபவன் நான். விமானத்தை ‘பேய்ப்பறவை’ என்று தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஒருவர். அது பேய்ப்பறவை மட்டும் அல்ல; தாய்ப்பறவையும் கூட. பத்து மணிநேர பயணத்தில் தன் வயிற்றில் பயணிகள் அனைவரையும் சுமந்து, இறுதியில் பிரசவித்துவிட்டு போவாள் அந்த மம்மாலியப் பறவை. வெளியே வந்து தாயக மண்ணில் கால்வைக்கும் போது, நான் ஏற்கனவே கூறியது போன்றே இன்னொரு தாயின் கருவறைக்குள் நுழைவதாய் உணர்வேன். ‘எனக்குத் தெரியாதா அதன் வெம்மை?’
இதற்கு முன்பு சென்னையில் சுனாமி வருவதற்கு முந்தைய தினம்  இதுபோன்றதொரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன். அது நடந்ததுகூட  ஒரு டிசம்பர் மாதம்தான் என்று நினைக்கிறேன். திடீரென்று சுனாமி பற்றிய எண்ணங்களும், மனிதர்களின் அவலக்குரல்களும் கேட்பது போலத் தோன்றியது. உடனே என் தங்கையிடமும், சித்தியிடமும் அதுபற்றி கூறி, ‘சுனாமி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?’ என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தொலைக்காட்சியில் வந்த சுனாமி பற்றிய செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் என் தங்கையும், சித்தியும்.
இதுபோன்று நமக்கு அவ்வப்போது தோன்றுவதையும், உணர்வதையும் கூறினாலே நம்மை  கேலிசெய்து கும்மியடித்துவிட்டுப்  போகிறார்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள். எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் கேட்கிறார்கள். பிறந்த குழந்தை அறிவியல் விளக்கம் கேட்டுவிட்டா தாயின் மார்பில் பால் குடிக்கிறது? இதற்காகவே நான் உணர்வதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். இத்தகைய ‘பேரறிவுவாதிகளிடம்’ (இதற்கு அவர்களே வைத்திருக்கும் பதத்தை உபயோகித்தால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாகி, சிலபல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் பதம்).  நாம் உணர்வதை எடுத்துச் சொல்லி நாமும் முட்டாள் என்று பெயர் எடுத்து, அவர்களையும் அறிவாளிகளாக ஆக்குவதைவிட, எனக்குள்ளே அமைதியாக அவற்றை ஆய்ந்து, எனக்காகவே அறிவாளியாக இருப்பது என்று நான் முடிவு செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்; உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். இங்கு ‘முழுமையாக’ என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். அதென்ன முழுமையாக நம்புவது? நம்புகிறேன்!
சென்னை வந்திறங்கிய முதல் நாள், “வானம் மேகமூட்டமாக இருக்கிறது, மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.” என்றார் ரமணன்.
இரண்டாம் நாள், “பருவநிலை மாற்றம் நம்ப முடியாததாக உள்ளது. வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் தமிழகத்திலும் நிலவ வாய்ப்பிருக்கிறது.” என்றார். அன்று இரவு, பதினொரு டிகிரி செல்சியசைதொட்டிருந்தது சென்னை.
விருகம்பாக்கம் ‘ஷ்யாமளா கார்டன்ஸ்‘ குடியிருப்பிலுள்ள என் தங்கை வீட்டில் தங்கியிருந்த நான், “எல்லோரிடமும் தெர்மல் வேர் இருக்கிறதா?” என்றேன்.
என் மனைவி சிரித்துவிட்டு, “அதெல்லாம் ஹாலன்ட்லையே நாம யூஸ் பண்ண மாட்டோம். இங்க எதுக்கு?” என்றாள்.
என் தங்கை என்னை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “தெர்மல் வேர் இல்லை அண்ணா. வாங்கலாமா?” என்று கேட்டாள். சுனாமி தினத்தன்று என்னோடு இருந்தவள் அன்றோ? என்னை உணர்ந்தவள், எனக்கு மதிப்பளித்தாள்.
“வாங்குவது நலம்” என்றேன்.
பாரிஸ் கார்னர் பூக்கடை அருகேயுள்ள யூனுஸ் சேத் கடைதான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் நாடும் கடை. அங்கு சென்று காரை நிரப்பிக் கொண்டு வந்தோம்.
அடுத்த இரு தினங்களில் சுழிநிலையை நெருங்கிக்கொண்டிருந்தது சென்னை. “வீட்டில் ஹீட்டர் இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டேன். உடனே என் மைத்துனரை கடைக்கு விரட்டினாள் என் தங்கை.
வெள்ளைச் சலவைக்கல்லாலான தரையில் யாராலும் வெறும் கால்களால் நடக்க முடியவில்லை. புத்தம்புது செருப்புகளை  வாங்கி வந்து, எல்லோரும் காலுறையும், செருப்பும் அணிந்துகொண்டு நடப்பதைப்  பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.
பரணுக்கு என்றோ புலம்பெயர்ந்திருந்த பழைய போர்வைகள், கம்பளிகள் எல்லாம் எடுத்துவந்து தரையில் விரித்துப் போட்டாள் என் தங்கை.
சென்னை மாநகரமே வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.
“தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.” என்கிற செய்தி எல்லா தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது.
“கடுங்குளிர் வானிலை நிலவும் போது என்ன மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும், என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளுடன் பல பேட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.
அதனூடே சமையற்கட்டு உரையாடல்களும் என் காதில் விழுந்து கொண்டிருந்தன.
“பால் கெடவே இல்லையே?” என்றார் என் சித்தி.
“பழங்கள் கூட அழுகவே இல்லை. இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறது” – இது என் தங்கை.
“ஹாலந்தில் இப்படித்தான். குளிர்காலங்களில் பிரிட்ஜை உபயோகிக்கவே மாட்டோம். ஒரே ஒரு அறையின் ஜன்னலை மட்டும் லேசாக திறந்து வைத்து எல்லா பொருட்களையும் அங்கே வைத்துவிடுவோம். நேச்சுரல் பிரிட்ஜ்!” என்று பெருமையாக அயல்நாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் என் மனையாள்.
அலைந்து திரிந்து இரண்டு வெவ்வேறு வகையான சூடேற்றும் சாதனங்களை எப்படியோ வாங்கி வந்துவிட்டார் எனது மைத்துனர்.
அன்றிரவே சுழிநிலைக்கும் கீழே சென்றது சென்னை.
இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை டிரைவர் வேலுவுடன் காரை எடுத்துக்கொண்டு குளிர்காலச் சென்னை எப்படி இருக்கிறது என்பதைக் காண நகர்வலம் சென்றேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இப்படிச் சுற்றுவது வழக்கம். அன்றைக்கு இருந்த குளிர் காரணமாக நகர்வல நாட்டம் மும்மடங்கு அதிகரித்திருந்தது.
யூனுஸ் சேத் ஒரே இரவிலேயே சென்னையில் பல கிளைகளை தொடங்கிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு ஆங்காகே கம்பளிச்சட்டைகள், பாய்கள், பலவித வெப்ப ஆடைகளை குளிரில் நடுங்கியபடி கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர் புத்தம்புது நடமாடும் ‘யூனுஸ் சேத்’ கடை முதலாளிகள்.
அந்தக் குளிரிலும் பாண்டிபஜார் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று குங்குமம் வைக்கும் வரை அல்லது அடுத்த பொங்கல், தீபாவளி வரும்வரை விட்டுவைக்குமா குளிர்?  பாவம். புத்தம்புது கம்பளிச்சட்டைகளையும், மேலாடைகளையும், தொப்பிகளையும்,  கையுறைகளையும், காலணிகளையும் வாங்கிய அடுத்தகணமே அணிந்து கொண்டும்; இன்னும் வாங்காதவர்கள் குளிர் தாங்கமுடியாமல், நீர்மத்தில் ஒழுங்கற்று இங்குமங்கும் ஓடும் துகள்களாய் மாறி இருந்தார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை சமாச்சாரங்களையும் அணிந்தவாறு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டுக்கொண்டு, பற்கள் தட்டச்சு அடித்தபடி, ஆளுயர மேலுறைக்குள் புதைந்தபடி செல்லும் மனிதர்களை அன்றாடம் ஐரோப்பாவில் கண்டு பழகிய எனக்கு, நம் சென்னையில் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. கையுறைகளை கழற்றிவிட்டு, என்னையும் மறந்து எனது கைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
அப்போது திடீரென குளிர்காற்று என் முகத்தில் அறைந்து முகத்தின் மேலடுக்கு உறைந்தது. சுழிநிலைக்கு கீழே செல்வது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. முறையான உடையணிந்து இருந்தால் ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பத்து-பதினைந்து  டிகிரி இருந்தாலும் கூட, காற்று அடித்தால் அவ்வளவுதான். அன்று அதுவும் நடந்துகொண்டிருந்தது. வெப்பத்தை மட்டுமே காலங்காலமாகத் தாங்கிக் கொண்டிருந்த அந்த சென்னைக் காற்று ஒரு மாறுதலுக்காக குளிரைத் தாங்கும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அனைவர் மீதும் மோதி மோதி உறையவைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
பாண்டிபஜார் பூக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மாலைகளில் உறைந்து போயிருந்த துளிகளை படம்பிடித்துக்கொண்டிருந்த என் காதில் அந்த ஆட்டோ பேர உரையாடல் காதில் விழுந்து என் கவனத்தை திசை திருப்பியது.
“ரொம்ப குளிருப்பா. சீக்கிரம் போகணும். உன்கிட்ட பேரம் பேச நேரமில்லை. முடிவா எவ்ளோ சொல்லு.”
“சார். குளிர்லையே ஆட்டோ ஓட்டுறோம். பாத்து குடு சார்.”
சாக்கு போக்கு சொல்வதற்கு இந்த ஆட்டோக்காரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். விலை உயர்வு செய்வதில் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையையே விஞ்சி விடுவார்கள் இவர்கள். அவர்களாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இவர்கள் கூறும் காரணமெல்லாமே வித்தியாசமாக இருக்கும். மழைபெய்தால், வெயிலடித்தால், புயலடித்தால், பொங்கல் வந்தால், தீபாவளி வந்தால், ஆடி மாதம் என்பதால் – இப்படி எல்லாவற்றிற்கும். இந்தப் பட்டியலில் இப்போது குளிரும் சேர்ந்துவிட்டது. சில சமயங்களில் டீசல் வண்டி வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் விலை உயர்ந்தால் சவாரி விலையை உயர்த்துவார்கள்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு ஆட்டோக்காரரிடம், “ராமசாமி சாலை செல்லவேண்டும். நூறு ரூபாய் தருகிறேன்.” என்று கூறினேன். அதுவே அங்கு செல்வதற்கு அதிகம்.
“அதெல்லாம் ஒன் வே பண்ணிட்டாங்க சார். சுத்திட்டு போனும். அம்பது ரூபா போட்டுக் குடு சார் போலாம்.” என்றார்.
கடைசியில் 125 ரூபாய்க்கு பேசிச் சென்றேன். சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றவர் அந்த ஒருவழிச் சாலையிலேயே போக ஆரம்பித்தார்.
“என்னப்பா? சுத்திட்டு போகணும்னு அதிகமா வாங்கிட்டு, ஒன்வேலயே போறியே?” என்று கோபமாகக் கேட்டேன்.
“சார். மாட்டினா மாமாக்கு தர்றதுக்குத்தான் சார் காசு” என்று அவர் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போனேன். இப்படிப்பட்டவர்கள் குளிருக்குக் காசு கேட்காமல் இருப்பார்களா? ஆட்டோவில் செல்லும் போது இலவச குளிரூட்டப்பட்ட காற்றுக்கு பணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆட்டோக்காரர்களை விடுங்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே வியாபாரிகளாகத்தான்    பிறக்கிறார்கள்; சென்ற வருடம் பிறந்து ஆண்டு நிறைவைக் கண்டிராத குழந்தைகூட வியாபாரம் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே காரையும் வேலுவையும் தேடியவாறு நடக்கும்போது, என் எதிரே திடீரென வந்து குதித்துக் கத்திய அந்த மனிதரைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டேன். அழுக்குப் படிந்த முகத்துடனும், நீண்ட தாடியுடனும், தீர்க்கமான கண்களுடனும்,  அந்தக் குளிரிலும் சட்டைகூட போடாமல், “மாயன் சரியாத்தான் சொன்னான். மாயன் சரியாத்தான் சொன்னான்!” என்று கத்தும் இந்த மனிதர் யார்?
இதுபோன்ற மனிதர்களை திருவண்ணாமலையில் அதிகம் பார்த்திருக்கிறேன். சென்னையில் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இவர் சாமியாரா? பித்துப் பிடித்தவரா? இல்லை பிச்சைக்காரரா? என்று யோசித்துக்கொண்டே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.
“ஹா ஹா ஹா!” என்று சிரித்துவிட்டு, “என்னை என்ன பிச்சைகாரன்னு நெனச்சியா? நான் ராசன் டா! மகராசன்! நீங்கல்லாம் தாண்டா பிச்சைக்காரனுங்க. சொல்றேன் கேட்டுக்கோ! மாயனுங்க கணக்கு தான் சரி! உங்க கணக்குதான்டா தப்பு! மக்கு பசங்களா! ரெண்டாயிரத்து பன்னெண்டு இல்லைடா! ரெண்டாயிரத்து பதினாறுல இருக்குடா உங்களுக்கு கச்சேரி! இன்னும் ஒரு வருஷம் தான். ஒரே ஒரு வருஷந்தான்! அப்புறம் இருக்கு உங்களுக்கு பிரச்சினை. அது என்ன பிரச்சனைன்னு நீ கேக்க வருவ. ஆனா, தப்ப வழியே கிடையாது! மாயனுங்க கணக்குதான் சரி! ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே ஓடினார்.
அவரைப் பார்த்துக்கொண்டே குழம்பிய மனதுடன் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிவந்த வேலு, “என்ன ஆச்சி சார்? அந்த பைத்தியக்காரன் எதனா பிரச்சின பண்ணானா?” என்று பதைபதைத்தபடி கேட்டார்.
“அதெல்லாம் இல்ல வேலு. காசு கொடுத்தாலும் வாங்கிக்கல. இந்தக் குளிருல துணிகூட போடாமே இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு!”.
காரை திருப்பி வீட்டிற்கு விரட்டிக்கொண்டு சென்றோம். எல்லா பண்பலைகளிலும் சென்னையின் குளிர் பற்றிய செய்திதான். இடையிடையே புத்தம் புதியதாய்க் கிளம்பியிருந்த சூடேற்றும் சாதனங்களைப் பற்றிய விளம்பரங்கள் வேறு.
“அமெரிக்கா குளிரையே தாங்கும் சார் இந்த சொட்டரு!” என்று ரங்கநாதன் தெருவில் கூவிக்கொண்டிருந்த சிறுவனுக்கும், “ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சாதனம்!” என்று பிளிரிக்கொண்டிருந்த இவர்களின் வியாபார உத்திக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.
வீட்டிற்குள் நுழைந்தால், சுடச்சுட போண்டாவுடனும், தேநீருடனும் தொலைகாட்சியில் செய்திகளில் பார்வைகளை பதித்துக் கிடந்தது ஒட்டுமொத்த குடும்பமும்.
“இன்னும் டூ டேஸ்ல சென்னைல ஸ்னோஃபாலாம்!!” என்று கைகளை உயர்த்தியபடி என்னைப் பார்த்து கத்தினார்கள் என் குழந்தைகளும், தங்கையும்.
“இது என்ன விந்தையான செய்தி?” என்று அதிசயத்துப்போய் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினால், பருவநிலை மாற்றங்களை பற்றி அவருக்கே உரித்தான பாணியில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார் ரமணன் அவர்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இது பற்றி அனிமேஷன் வித்தைகளோடு விளக்கிக் கொண்டிருந்தன.
“இந்தியால எப்படிம்மா ஸ்னோஃபால் வருது” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.
“குளோபல் வார்மிங்தான் ரீசன்.” என்றாள் என் மனையாள்.
“குளோபல் வார்மிங்னா ஹாட்டா இல்ல ஆகணும். ஏன் கோல்ட் ஆகுது” என்கிற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டாள் என் இளைய மகள். அது நிச்சயம் என் மனைவிக்கு அவுட்-ஆஃப்-சிலபஸ் ஆயிற்றே என்று நான் நினைத்த அடுத்தகணமே,
“சும்மா கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி டேபிலட்ல கேம்ஸ் விளையாடு போடி!” என்று குழந்தையை துரத்தினாள்.
வழக்கமாக மடிக்கணினியில் இணையத்தில் மூழ்கி இருக்கும் சமயங்களில் குடும்ப விவகாரங்களில் தலையிடும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால் அமைதியாக என் வேலையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி என்ன முக்கிய வேலை?
வேறென்ன? பாழாய்ப்போன இந்த ஃபேஸ்புக் தான்! இந்த ஃபேஸ்புக் சுவரை பார்க்கும் போதெல்லாம், நான் பிறந்த நிலாவூர் கிராமத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டு எடுபிடி மங்குண்டு தான் எனக்கு நினைவுக்கு வருவார். எனக்கு விளையாட்டு காட்ட, வட்டம், முக்கோணம், நட்சத்திரம் மற்றும் விதவிதமான வடிவங்களில் மாட்டுச் சாணத்தை தட்டி அதை சுவரில் அறைவார். அவை காய்ந்த பிறகு அடுப்பில் தூக்கிப்போட்டு எரிப்பது எனக்கு பிடித்தமானதொரு விளையாட்டு. என் ஃபேஸ்புக் சுவரிலும் அப்படி அன்றாடம் நிறைய நண்பர்களும், நண்பர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும், நான் வேண்டாவெறுப்போடு தொடர்ந்து வரும் சில பிரபலங்களும் என்று எல்லோரும் வகைவகையாக நிலைத்தகவல்கள், அவர்களின் சாதனைகள், சோதனைகள், அறிவுரைகள் என்று தட்டி ஒட்டி இருப்பார்கள்.
நம் தரப்புக்கு அன்று நாம் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முகநூலின் உள்ளே நுழைந்தால் அதுபோன்ற பல புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து முடித்திருந்தார்கள். ‘இதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் போல் உள்ளதே’ என்று நினைத்துக்கொண்டே சுட்டியை மேலும் கீழும் உருட்டினேன். சுவர் முழுதும் சென்னை வானிலை அறிக்கை வாசித்திருந்தார்கள் நண்பர்கள்.
இடையே ஹாலந்து நண்பன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிகழ்ந்த பனிப்பொழிவு புகைப்படத்தை தரவேற்றியிருந்தான். “விரைவில் சென்னையிலும்…” என்கிற வாசகத்துடன் அந்தப் படத்தையும் பகிர்ந்துவிட்டு வெளியே வந்தேன். சில மணித்துளிகள் கழித்து எத்தனை விருப்பங்களும், பின்னூட்டங்களும் விழுந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.
அந்த காலத்தில் எல்லாம் திருமணத்திற்கு வந்து மொய் போடுபவர்களின் கணக்கை எழுதி வைப்பார்கள். அதுபோன்றதுதான் இந்த முகநூல் லைக்குகளின்; கமெண்டுகளின் கணக்கும். நமக்கு லைக் போடுபவர்களுக்கு தவறாமல் நாமும் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், களைப்பு மிகுதியால் கணக்கெழுதாமல் கைபேசியோடு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.
நள்ளிரவில் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். என் சாரதி.
“சார், உங்க வீட்டுக்கு கீழதான் சார் நிக்கறேன். ரொம்ப குளிரு சார். பசங்களால தாங்க முடியல.”
“ஒரு நிமிஷம் வேலு. நான் கீழ வரேன்.” என்று கூறிவிட்டு ஹாலந்தில் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்குமுன் போருக்கு போவதுபோல் தயாராகுவேனே, அதேபோன்று மேலுறை, கையுறை, காலுறை சகிதமாய் வெளியே சென்றால் அங்கே வேலு காலில் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து, சால்வை போத்தியபடி நின்றுகொண்டிருந்தார்.
அப்போதுதான் எனக்கு உறைத்தது. “அடடா, இவருக்கும் ஷூ, ஸ்வெட்டர் வாங்கி இருக்கலாமே! சில சமயங்களில் எவ்வளவு சுயநலத்தோடு நடந்துகொள்கிறோம்?” என்று தோன்றியது.
உடனே மேலே சென்று பூனை போல் லாவகமாய் எனது கம்பளிச்சட்டைகள் சிலவற்றையும், அடர்த்தியான போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
“இந்தாங்க வேலு. வீட்டுக்கு போலாம் வாங்க.”
என் தங்கையுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து அழைக்கும் தூரத்தில் இருந்தது அவரது வீடு. வேலுவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியுமென்றாலும் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சமையற்கட்டு அளவிலான சிறு வீடுகள் நிறைய இருந்தன.
அவர் வீட்டிற்குள் குளிரில் நடுங்கிக்கொண்டு ஸ்டவ்வைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும், அவரது வயதான தாயாருக்கும் கொண்டுவந்த போர்வைகளைக் கொடுத்தபோது மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி பாய்ந்து பயணித்தது.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச்செல்வோம்மஞ்சம்பில் வீடுதான்இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயேபடுத்துக்கொள்வோம்அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்துகொடுப்பார் என் தாத்தாஅதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாகபொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம்.
வேலுவை இரும்புத்தொட்டி ஏதேனுமிருந்தால் எடுத்துவரச் சொன்னேன். அந்தத் தெருவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த வீட்டிற்கெதிரே இருந்து சிறிது மணலை அள்ளிவந்து வீட்டில் கொட்டிவிட்டு, அதன்மீது வேலு கொண்டுவந்த சிறு இரும்புத் தொட்டியை வைத்து, விறகுகளை போட்டுக் கொளுத்தி அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து குளிர் காய்ந்து, வேலுவின் மனைவி போட்டுக்கொடுத்த அருமையான தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தபோது மணி நான்கு. மனதில் ஒரு வேள்வி நடத்தி முடித்த திருப்தி!
கடைசியில் அந்த நாள் வந்தே விட்டது. சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.
சென்னை வெயில் வாட்டியபோதெல்லாம் வான் பார்த்து கண்களை மூடி, “ஐரோப்பாவைப் போன்று இப்போது இங்கே பனிபெய்து என் முகத்தில் பனித்துகள்கள் பளிச்சென்று விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். அன்று உண்மையாகவே விழுந்தது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனைவரும் – சிறுவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் - குளிரையும் பொருட்படுத்தாமல் ஆச்சர்யத்துடனும், குதூகலத்துடனும் வானிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அந்தத் துகள்களை வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அன்று மாலைக்குள்ளாகவே வானம் துகள்துகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டது. எல்லோரும் வெளியே பனிப்பந்துகள் செய்து வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருக்க, நாம் எப்போதும்போல் முகநூலுக்குள் நுழைந்தோம். மெரினா கடற்கரைப் புகைப்படங்கள் சிலவற்றை சுடச்சுட பகிர்ந்திருந்தது ‘உலக தமிழ் மக்கள் இயக்கம்’ பக்கமும் மற்ற சில பக்கங்களும்.
ஒயிட் கிறிஸ்துமஸை‘ எதிர்நோக்கியிருந்த சாந்தோம் தேவாலயம் அழகாயிருந்தது.
காந்தி சிலை – சாகும் வரை கோவணத்துடன் வாழ்ந்தவருக்கு சால்வை போர்த்தியிருந்தாள் இயற்கை அன்னை. ஆயினும், சிலம்பை தூக்கிக்கொண்டு நிற்கும் கைம்பெண் கண்ணகிக்கு திராவிடக் கட்சிகள் வழங்கியிருந்த கறுப்புச் சேலையை களைந்துவிட்டு, வெள்ளைச் சேலை வழங்கியிருந்தாள். இயற்கைக்கும் சிறிது மூடநம்பிக்கை உண்டு போலும்.
மாநகராட்சியின் கருந்தார் பூச்சுக்காக  நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக வழிமேல் விழிவைத்து, ஏங்கிக் காத்திருந்த வேளச்சேரி தரமணி சாலைக்கு கிடைத்திருந்த வெண்பனிப் பூச்சு யோகம், உறைந்துபோன கூவம், வீட்டு வாசலுக்கு முன்பு பால்காரர் போட்டிருந்த ஒரு வெண்பனிக்கட்டிப் பொட்டலம், வீட்டு உப்பரிகையில் தாங்கள் அழகாய் செய்திருந்த ‘ஸ்னோமேன்‘, ஒரு நாளிதழின் முதல்பக்கத்தில் முதன்முறையாக இடம்பிடித்திருந்த வானிலை ஆய்வு மைய இயக்குநரின் புகைப்படம் என பலவிதமாய் சென்னையின் அன்றைய தின அதிசயங்களை க்ளிக்கித் தள்ளி புகைப்படங்களைசுவர்தட்டியிருந்தார்கள் நண்பர்கள்.
முகநூலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றினுள் மூழ்கிக்கிடந்த மைத்துனருடன் இணைந்துகொண்டேன்.
இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையென்றாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக ஆர்வலர், ஒரு நடிகர், ஒரு வியாபாரி, ஒரு எழுத்தாளர், இரண்டு அரசியல்வாதிகள், தொலைபேசி மூலம் சில பொதுமக்கள் என்று எல்லா தொலைகாட்சிகளிலும் வந்து விவாதித்து சித்ரவதை செய்வது வாடிக்கையாகி விட்டது.
அப்படியொரு அவஸ்தையான, காரசாரமான விவாதம் ‘இன்றைய முழக்கம்’ தொலைக்காட்சியில், “நெஞ்சில மஞ்சா..” நிகழ்ச்சியில் அன்று நடந்து கொண்டிருந்தது.
“குளிர் தாங்க முடியலைங்க. கவர்மெண்டு ஒண்ணுமே செய்யமாட்டேங்குது. விறகு வாங்கினாலும் பச்சையா கெடக்கு. என்ன பன்றதுனே தெரியல. மொதலாளி வீட்டுல ஹீட்டர் இருக்குனு போனா, கரண்டு பன்னெண்டு மணிநேரம் கட் பண்றானுங்க. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்.
தொழிலதிபர் ரெங்கமணி ஆவுடையப்பன் “தற்போது கூட ஜப்பானில் ஒரு வுட் ட்ரையர்கண்டுபிடித்துள்ளார்கள். பச்சை மரத்தை உள்ளே அனுப்பினால், காய்ந்த விறகாக வெளியே வந்துவிடும். அரசாங்கம் அத்தகைய இயந்திரங்களை உடனே இறக்குமதி செய்தால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்களுடைய  நிறுவனம் அதற்கான உதவிகள் செய்யத் தயாராயிருக்கிறது.” என்று ஆலோசனை வழங்கிய அதே வேளையில், அவரது IIM அகமதாபாத் மூளை அந்த வணிக திட்டம் எப்போது சமபாட்டுப் புள்ளியைத் தொடும் என்பதை கணித்து முடித்திருந்தது.
சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கட்டுத்தறி திடீரென கத்தத் தொடங்கினார், “குளிருக்காக மரங்களை வெட்டுவதென்பது அபாயகரமானது. நாளைய சந்ததியினருக்கு மரங்களை விட்டு வைக்கவேண்டும். என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம்…. ”
தொலைபேசி மூலம் யாரோ ஒரு சாதாரணர் குறுக்கே புகுந்து, “யோவ், கட்டுத்தறி! நீ என்ன பெரிய அறிவாளின்னு காமிக்கிறையா? இன்னைக்கு சாகரவங்கள காப்பாத்த சொன்னா நாளைக்கி நாளானன்னைக்கு பெனாத்தற…” என்று சூடாகப் பேசிய போது அவரை இடைமறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, “நண்பரே உங்கள் வார்த்தை பிரயோகம் சரியில்லை.” என்று கூறியபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டு, “டூன்..டூன்..டூன்..” என்று சத்தம் வந்தது.
ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-விடம் திரும்பி, “திரு.பச்சைமாமலை, அமைச்சர் திரு.பொய்கைவீரன் அவர்கள் பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?”. அவர் இந்தக் கேள்வியை கேட்டுக்  கொண்டிருந்தபோது, பச்சைமாமலை அவர்கள் தனது புத்தம் புதிய வெள்ளை சட்டைக்குள் உடலை நுழைத்து தலையை காண்பித்து சிரித்தபடி அமர்ந்து, எனது தங்கையின் 41 அங்குல தொலைகாட்சிப் பெட்டித்திரை முழுவதையும் நிரப்பியிருக்க, கீழே அவரை பற்றிய ‘ஹைக்கூவை’ காண்பித்துக் கொண்டிருந்தது ‘இன்றைய முழக்கம்’.
திருபச்சைமாமலை
எம் எல் 
தமிழர் முன்னேற்ற கட்சி 
“சில எழுத்தாளர்களுக்கும்,  சமூக ஆர்வலர்களுக்கும்  இதுவே வேலையாகிவிட்டது. இவர்களாக ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள். அரசாங்கமோ அல்லது வேறு எவரேனும் ஒருவர் கொடுக்கின்ற தீர்வில் குறை கண்டுபிடித்தே வாழ்க்கையை ஓட்டும் ஒட்டுண்ணிகள்!” என்று வார்த்தைஜாலம் காட்டி அடுத்த தேர்தலுக்கு தொலைபேசியில் பேசியவரின் ஓட்டை தக்க வைத்துக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்தார் பச்சைமாமலை, “என்னைப் பொருத்தமட்டிலும் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் ம.மு.க-வினர் (மறத்தமிழர் முன்னேற்றக்  கட்சி) தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் முன்பே இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மின்சார பிரச்சினைக்கும் அவர்களே காரணம். மின்சாரம் இருந்திருந்தால் இத்தனை பேர் குளிரில் வாடியிருக்கமாட்டார்கள். ஆனால் எங்கள் மாண்புமிகு ஐயா அவர்கள் தொலைநோக்கோடு, அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் வண்ணம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ம.மு.க கட்சி அரசியல்வாதியும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான L.A.P.D கோதண்டம், சிறிது ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார், “இந்த மாண்புமிகு என்பது அவரோட ஐயாவோட பதவிக்கா? இல்லை அவரோட ஐயாவுக்கேவா? மாண்புமிகு முதல்வர் ஐயா என்று கூற பழகிக் கொள்ளவேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள். நான் கேட்கிறேன்… ம.மு.க பற்றி பேச த.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்சாரம் தான் பிரச்சினை என்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் இன்று ஹீட்டர் இருக்கிறது? அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஹீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று எங்கள் தலைவர் நேற்று மாலையே அறிக்கை விடுத்து தனது தாயுள்ளத்தை காண்பித்துள்ளார். அதைச் செய்வார்களா இவர்கள்?”
இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கிடையே, ‘ஊர் ரெண்டு பட்டால்..” எனும் விதமாகவும், ‘முட்டாள்களுக்கிடையே அமர்ந்திருக்கும் தான் மட்டுமே இங்கு அறிவுஜீவி’ எனும் விதமாகவும் அமர்ந்திருந்த எழுத்தாளர் முகத்தில் ஒரே புன்னகை!
இன்னொரு தொலைக்கட்சியில் தனது விநோதமான யோசனையைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய்கை வீரன், “சாலைகளிலும், நடைபாதைகளிலும் படர்ந்து கிடக்கும் பனியை மாநகராட்சி குடிநீர் வண்டிகளில் கடல்நீர் கொண்டு வந்து சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்.”
“பரவாயில்லை. கடல் நீரில் உப்பு கலந்திருக்கிறது என்கிற அளவிற்காவது அமைச்சருக்கு அறிவிருக்கிறதே!” என்றாள் என் தங்கை.
“யோசனையாம் யோசனை. மண்ணாங்கட்டி.” என்று நொந்துகொண்டார் என் மைத்துனர்.
இதற்கிடையே இன்றைய முழக்கத்தில் சற்றுமுன் வந்த செய்தி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது :
போரூர் ஏரி உறைந்து போனதால் அதில் பனிச்சறுக்கு விளையாட்டை நடத்த சென்னை மாநகராட்சிஸ்னோ ஒயிட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது
இன்னொரு தொலைக்காட்சியில்:
சாலையோரத்தில் பனிப்போர்த்தி மறைத்திருந்த குழிக்குள் விழுந்த கிழவி பலி.
குளிரினாலும், பனியால் ஏற்பட்ட விபத்துகளாலும் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 20 என்று காண்பித்தது த.மு.க சேனல்; 200 என்று காண்பித்தது  ம.மு.க சேனல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை – கடைசியில் ஒரு பூஜ்ஜியம். அவ்வளவுதானே? மேலும், இந்தியாவில் அன்றாடம் 62000 பேர் இறக்கிறார்கள். அது 62020 -ஆக இருந்தால் என்ன? இல்லை 62200 -ஆக இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? மனிதர்களை விடுங்கள்; எண்ணற்ற கால்நடைகள் மரித்துப் போயிருக்கும். அவற்றை பற்றி பச்சைமாமலையும், கட்டுத்தறியும் விவாதம் புரிந்ததாய் தெரியவில்லை. பேசினாலும் அவைகளுக்குப் புரியப்போவதில்லை.
நாட்டை உலுக்கும் அதிபயங்கரமான விஷயங்களை நாம் கையாளும் விதத்தையும், ‘நெஞ்சில மஞ்சா!’ போன்ற நிகழ்ச்சிகளில் வாதிடும் அறிஞர்களையும், அவர்களின் விஷய ஞானம், சமூகப் பார்வை இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் என்னமாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் மனதுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் தான் நம்மை ‘அறிவார்ந்த’ சமூகமாக மாற்ற இளைஞர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பரிதாபகரமான உண்மை.
இரவு தூக்கமே வரவில்லை. இருட்டில் அமர்ந்து நுண்ணறி பேசியை எடுத்து வருடிக்கொண்டிருந்த போது திடீரென கூகிள் காலண்டர் கண்ணில் பட்டது. காலண்டரைக் கண்ட அடுத்தகணம், பாண்டிபஜாரில் பார்த்த கிழவர் நினைவுக்கு வந்தார்.
“சட்டைகூட போடாமல் திரிந்து கொண்டிருந்த அந்த மகராசன் இந்நேரம் எங்கிருப்பார்? போய் பார்க்கலாமா? அவருக்கு ஒரு கம்பளிச்சட்டையும், கம்பளிப் போர்வையையும் கொடுத்திருக்கலாமே? பலியாகிற அனைத்து உயிர்களையும் நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால், பணத்திற்காகமுட்டாள்களை அறிவாளிகளாக்கிப் பார்க்கும் விந்தையான மனிதர்களுக்கிடையேகொடுத்தபணத்தையும் மதிக்காமல்கொடுத்தவனையும் முட்டாள் என்றுரைத்த அந்த மனிதரின் உயிர்மகத்தானதல்லவா?” என்று தோன்றிய அடுத்தகணம் பனிப்போருக்கு தயாராகி, ஒன்றிரண்டு கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரை எடுத்தேன். பனிப்பொழிவின்பொது கார் ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதில்லையே? என்ன இங்கெல்லாம் விண்டர்டயர் கிடையாது. சமாளித்து ஓட்ட வேண்டும். இருந்தாலும் அந்த மகராசனுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளலாம் என்று தோன்றியது.
பனிப்பொழிவு சற்று குறைந்திருந்தது.
காரில் ஏறி அமர்ந்தாலே நடு இரவிலும் கூட இந்த ரேடியோக்களின் தொல்லை தாங்க முடிவதில்லை; அதில் வரும் ஆர்.ஜேக்கள் பேசும் தமிழ் – சொல்வதற்கில்லை. டோனி க்ரைகும்ஜெப்ரி பாய்காட்டும்ஆங்கிலம் பேசுவது போலவே தமிழ் பேசவேண்டும் என்று யாரோ பாடம் நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. அன்றைய விவாத மேடையில் இரண்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலரின் ஜகதலப் பிரதாபங்களை மூச்சு விடாமல் டோனி பாணியில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் ரேடியோ பீட்-ரூட் ஆர்.ஜே ‘காதல் கிங்’ கார்த்தி. இவற்றிற்கிடையே காதலர்களுக்கு அறிவுரையும், அதன் பிறகு ஒரு டூயட் பாடலும்.
“நம் நாட்டில் ஆளாளுக்கு கருத்து பேசுகிறார்களே? பேச்சுக்கும் செயல்களுக்கும் தொடர்பே இல்லாத இதுபோன்ற போலிகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்.” என்று எரிச்சல்பட்டுகொண்டே, தியாகராயர் சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடி காரோட்டிச் சென்றபோது சாலையோரத்தில் ஒரு மரத்தருகே என் கண்கள் கண்ட அந்தக் காட்சி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, என்னை உடனே ப்ரேக் அடிக்க வைத்தது. திடீரென ப்ரேக் அடித்ததால் பனிபடர்ந்த சாலையில் என் கார் சறுக்கி, க்றீச்சிக்கொண்டேசென்று, ஒரு சுற்று சுற்றி, இன்னொரு மரத்தின் மீது மோதி நின்றது. கிட்டத்தட்ட கார் கண்ணாடியை முத்தமிட்டுத் திரும்பினேன். பழக்க தோஷம் காரணமாக அணிந்திருந்த சீட் பெல்ட்டினால்தலைதப்பியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து வலதுகாலைக் கீழே வைத்ததும், முழங்கால் வரை பனியில் புதையுண்டது. அடுத்த அடிக்கு தரையில்  இருப்போமா அல்லது ஏதேனும் ஒரு குழிக்குள் புதைந்து விடுவோமா என்கிற அளவில்தான் எனக்கு சென்னை மாநகராட்சியின் மேல் ‘நம்பிக்கை’ இருந்தது. குளிரில் உதறியபடி அச்சத்துடனும், வெகுகவனமாகவும் அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்து சென்றேன். அங்கு பென்குவின் உத்தி மட்டும் போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
மரத்தருகே நெருங்க நெருங்க, நான் கண்ட அந்தக் காட்சி இன்னும் தெளிவாகத் தெரிந்து இறுதியில் என் ஊகத்தை உறுதிப்படுத்தியது.
நான் யாரைத் தேடிச் சென்றேனோ அந்த மனிதர், அங்கே ஒரு சிறு நாய்க்குட்டியை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்க, அந்த ஜீவன்கள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, இயற்கை அன்னை என்னை முந்திக்கொண்டுச் சென்று, அடர்த்தியானதொரு வெண்பனிப் போர்வையை அவர்கள் மீது போர்த்தி இருந்தாள்.

பனிப்போர்வைக்குள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தன – அந்த இரு உயிர்களும்.

கருத்துகள்

  1. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச்செல்வோம். மஞ்சம்பில் வீடுதான். இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயேபடுத்துக்கொள்வோம். அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்துகொடுப்பார் என் தாத்தா. அதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாகபொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம். .... ;-)

    பதிலளிநீக்கு
  2. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட "போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்." ........ :-))))))))))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..