சுழற்சி

(சிறுகதை)

சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் - திவ்யா தம்பதியினரின் கதை.

அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.
என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.
"ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?" என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, "அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்" என்றான் கார்த்திக்.

"அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?"

"ஏன் சாமி கண்ண குத்துமா?" என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

"இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது." என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

"அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?"

"ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத." என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த 'உடைந்த நிலாக்கள்' என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

"ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?"

"ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்."

"எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்."

"யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. 'உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்'".

காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

"நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?"

"ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்."

அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

இரண்டு பெட்டிகள். ஒரு பை.

இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

மெத்தைக்கு அருகே ஒரு தண்ணீர் குடுவையும், இரண்டு குவளைகளும்.

உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

கடைசியில் வந்தே விட்டார்கள் - அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

"என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?" என்று வியந்தாள் திவ்யா.

"அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்" என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

"ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல..." என்றாள் திவ்யா.

"என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே."

"இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்."

"லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி."

"ப்பா... தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. " என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, "கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?" என்று கேட்டாள்.

"ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்." என்றான்.

"போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…" என்று கெஞ்சினாள்.

"ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்" என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி -

'அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

நன்றி: வல்லமை மின்னிதழ்

கருத்துகள்

  1. வணக்கம்

    அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ////............

    சிறுகதை அருமையாக உள்ளது முவுப்பகுதியும் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிகள் செம ட்விஸ்ட்! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஒரு காற்றாடியின் கதை ....
    மனித உணர்வுகளை ஒரு இயந்திரத்தின் மூலம்
    விளக்கும் அற்புதமான கதை மாதவன்...
    ==
    உன் விழிநீர் கசிந்தால்
    என் இதயம் வலிக்குமடி....
    அதுவே தரை வீழ்ந்தால்
    அங்கேயே
    செத்து மடிவேனடி...

    இப்படி புரிந்துணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்
    ஒரு காதல் தம்பதி...
    அழுகையும் கண்ணீரும் சிரிப்பும் இன்பமும் துன்பமும்...
    இதுவே எம் வாழ்வோ
    இனிதான் வாழ்வோமோ
    என்று தருணங்களை சபித்து மகிழ்ந்து...
    அப்பப்பா...
    எத்தனை எத்தனை உணர்வுகள் கதையில்....

    உன் வலிகளை சாளர வழி உன் தாய்க்கு ஏகிய எனை
    விட்டுப் போவாயோ...

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன்...
    உங்கள் எழுத்துக்கள் இன்னும் மிளிரட்டும்...

    பதிலளிநீக்கு
  4. என்னவென்று சரியாக சொல்லத் தெரிமவில்லை. ஆனாலும் எங்கோ தளை தட்டுவது போனற ஓர் உணர்வு.

    நல்ல விவரிப்பு.


    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..