சிராய்ப்பு

(குறுங்கதை)

அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.

அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன், வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ 'ஷா'வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை.

வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் மட்டும் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான்.

சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான்.

வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள்.

அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக்.

"என்ன ஆச்சுடி குட்டி" என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான்.

"இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு அது கேக்காது டீ குட்டி!" என்று உரக்கக் கத்திக்கொண்டே வந்து அடிபட்ட இடத்தில் மருந்திட்டாள் சித்ரா.

"சின்ன ஸ்க்ராட்ச் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பதைபதைப்பு? குழந்தைய நீதான் கெடுக்கற. நானெல்லாம் சின்ன வயசில்ல அடிபட்டா, மண்ணை எடுத்து அடிபட்ட எடத்துல போட்டுப்பேன். தானா சரியாயிடும். கூல்!" என்றவனை முறைத்துவிட்டு உள்ளே குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாள். அவனும் வெளியே சென்று காரை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வலைமேயச் சென்றுவிட்டான்.

அன்று மாலை ஏழு மணி இருக்கும்.

"குழந்தைக்கு லேசா உடம்பு சுடுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்" என்று கூறிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சித்ரா.

அதைக் கேட்ட அடுத்தகணம், பதைபதைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக், "டாக்டர் வீடு இருக்கற தெருவுல ரெண்டு பக்கம் முள்ளுச்செடிங்க நிறைய இருக்கு. தெருமுனையிலேயே காரை விட்டுட்டு நடந்து போய்டுங்க, மகேந்திரா" என்று டிரைவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டு, வாட்டத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

கார் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகேந்திரனின் கைபேசிக்கு கார்த்திக்கிடமிருந்து மூன்றுமுறை அழைப்புகள் வந்தது.

மருத்துவமனை இருந்த தெருமுனையில் காரை நிறுத்தினான் மகேந்திரன்.

சித்ரா காரிலிருந்து இறங்கிவிட்டு, "இன்னொருமுறை அவர்கிட்டர்ந்து கால் வந்தா, கார் மேல ஸ்க்ராட்ச் ஆயிடும்னு கவலைபடாம இன்டர்நெட்ல எதையாச்சும் பண்ண சொல்லுங்க. ஸ்க்ராட்ச் தானே! மண்ணை அள்ளிப் பூசி  சரி பண்ணிக்கலாம்! " என்று கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இருட்டில் தனியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றாள்.
கருத்துகள்

 1. அருமை அருமை
  மனம் சிராய்த்துப் போகும் கரு
  சொல்லிச் சென்ற விதம் மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துகளுக்கும், ஊக்கத்திற்கும், மிக்க நன்றி ரமணி ஐயா!!

   நீக்கு
 2. குழந்தையின் சிராய்ப்பைவிட காரில் சிராய்ப்பு பெரிதாக தெரியும் மனிதர்.
  என்ன சொல்வது இப்படியும் மனிதர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நன்றி கோமதி!!
   பணமும் அதனால் பெறப்பட்ட அத்தனையும் மனிதனுக்காகவே தவிர, மனிதன் அவற்றுக்கானவன் அல்ல. இரு மாதங்களுக்கு முன்பு தாயகம் வந்திருந்த போது உறவினர் ஒருவர் தன்னுடைய புதிய காரில் சிராய்ப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒரு கிராமத்தில் தெருமுனையில் காரை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு எங்களை கும்மிருட்டில் நடக்க வைத்து அழைத்துச் சென்றார்.

   எனக்கு ஒரு பெரிய குழப்பம்! வழி சரியில்லை, சரி! ஆனால் அதற்காகத்தானே கார்?

   இந்த materialistic உலகத்தின் செயல்பாடுகள் எனக்கு வியப்பளிக்கிறது.

   நீக்கு
 3. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html?

  பதிலளிநீக்கு
 4. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி!!

  வாழிய நலம்!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)