மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (3)

மதிப்புரை.காம் தளத்தில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் அம்மாவின் தேன்குழல் புத்தக மதிப்புரையை எழுதியுள்ளார். கடந்த முறை இந்தியா வந்தபோது புத்தக விழாவில் ஜே.டி.சாலிஞ்சரின் 'The Catcher in The Rye' (தமிழில் 'குழந்தைகளின் ரட்சகன்' - எதிர் வெளியீடு) வாங்கி வந்தேன். இன்னும் வாசித்து முடிக்கவில்லை. தமிழில் திரு.சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்த மதிப்புரையை எழுதியவர் அவர்தானா என்று தெரியவில்லை. அவராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

இனி அவருடைய மதிப்புரை..

மாதவன் இளங்கோவும் தேன்குழல் மகாத்மியமும்…!

கவித்துவமான தலைப்பு. சமீப காலத்தில் `அம்மா’ என்கிற புனிதமான சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு, நுகர்வு கலாசாரத்தில் ஒரு `ப்ராண்ட்’ ஆக உருவெடுத்து வருகிறது. அம்மாவின் தேன்குழல் புத்தகம் சந்தைக்கு வந்து விட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து `அம்மா’ தேன்குழல் சந்தைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாதவன் இளங்கோ எழுதி வெளிவந்திருக்கும் `அம்மாவின் தேன்குழல்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இத்தலைப்பினால் ஆன கதையின் மூலம் அம்மாவின் பாசத்தையும், புலம் பெயர்ந்த மகன் கிருஷ்ணாவின் தன்னலப் போக்கையும் சில பக்கங்களில் சொல்லிச் செல்கிறார்.


அம்மாவின் தேன்குழல், மாதவன் இளங்கோ, அகநாழிகை, ரூ. 130
இந்தக் கதையைப் படிக்கும்போது வளர்ந்து வரும் இந்த அவசர உலகத்தில் பெற்றோர்கள் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதையும், வளர்ந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் மகன் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிற பாலாம்பாள் மாமியையும், அவர் வாழும் சுற்றுப்புறத்தையும், மகன் கிருஷ்ணா வாழும் சுற்றுப்புறத்தையும், பார்வையிழந்த தாய் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞன் ஒருவனின் ஒப்பீட்டின் மூலம் தேன்குழல் அழகாக உருப் பெற்றிருக்கிறது. அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள்தான், ஆனால் அவர்களின் குழந்தைகளாகிய நாம்தான் நவீனமயமாகி வரும் கலாசாரத்தால் சுயத்தை இழந்து நிற்கிறோம்.

ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நாம் `போடா, மயிரே போச்சு’ என சொல்வதுண்டு. ஆனால் இவருடைய `முடி’ கதையைப் படித்தால் உங்களுக்கு அப்படி சொல்லத் தோன்றாது. மாறாக, தங்கத்தை விட அதிக அக்கறை எடுத்து பராமரிக்க/பாதுகாக்கத் தோன்றும். இந்தக் கதையின் கதாநாயகனுக்கு வாழ்க்கையில் `முடி’ என்பது எப்படி ஒரு `தலை’யாய பிரச்சனையாகவும், எப்படி அது அவனுக்கு தீராத மன உளைச்சலையும் தருகிறது என்பதையும் சற்றே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார். “முப்பத்திரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம்கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால் `இருப்பத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக, என் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் `நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என உறுதியாகக் கூறுவார்கள்” என்கிற `சுய தம்பட்டத்துடன்’ ஆரம்பமாகிறது இந்தக் கதை. இவனுடைய முடி பிரச்சனைக்கான காரிய கர்த்தாக்களாக அவனுடைய வேலை, மேலதிகாரி, வசிக்கும் சூழல் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. தலைக்குப் பின்னால் `ஒளிவட்டம்’ உள்ளவர்களும், இல்லாதவர்களும் படிக்க வேண்டிய கதை.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனதை நெருடிய கதை `கல்லூரிக் கட்டணம்’. தனியார்மயமாக்கப்பட்ட கல்விச் சூழல் எப்படி பாமரனை பழிவாங்குகிறது என்பதைச் சித்தரிக்கும் கதையாக இருந்தாலும், எங்கோ யாருடைய வாழ்க்கையிலோ நடந்த, நடக்கின்ற, நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாகவே எனக்கு இது தோன்றியது. தங்கை செல்வியின் படிப்பிற்காக அப்பாவின் மரணத்திற்குப் பிறகு குடும்பச் சுமையைத் தாங்கிக்கொள்ளும் சீனு, அவனின் அம்மா, சீனுவின் வேலைத் திறனை அவ்வப்போது பாராட்டும் அவனின் நலம் விரும்பும் மேலதிகாரி ஆகியோர் வாயிலாக இக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. படித்துப் பாருங்கள் கல்வி கற்பதில் உள்ள சுமை புரியும்.

சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் படித்த கதை `பிரம்மாவைக் கண்ட நாள்’. உறவினர் ஒருவருக்காக மருத்துவமனை காத்திருப்புப் பகுதியில் காத்திருந்தபோது என்னுள் இருந்த வருத்தத்தை லேசாக்கியது இந்தக் கதை. `வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது சொலவடை. நோய்விட்டுப் போகுதோ இல்லையோ அதன் வேதனையை கண்டிப்பாக இந்தக் கதை குறைக்கும்.

முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தெரியாத அளவிற்கு சரளமாக எழுதி, வெங்கட் சாமிநாதன் தேர்ந்தெடுத்த கதையான `அம்மாவின் தேன்குழல்’ என்கிற கதையின் பெயரையே இத்தொகுப்புகளின் பெயராகவும் கொண்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில் உள்ள 15 கதைகளும் ஒவ்வொரு ரசனையைக் கொண்டிருக்கிறது. கதைத் தளங்கள் பெல்ஜியம், சென்னை, திருவண்ணாமலை என பரந்து விரிந்திருக்கிறது. ஓரிரு இடங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் நல்ல வடிவமைப்புடன் வெளியிட்டிருக்கும் அகநாழிகைக்கும், கதாசிரியர் மாதவன் இளங்கோவுக்கும் பாராட்டுக்கள்!

சித்தார்த்தன் சுந்தரம்


திரு. சித்தார்த்தன் சுந்தரம் அவர்களுக்கும், மூன்றாவது முறையாக மதிப்புரையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ள மதிப்புரை தளத்துக்கும் நன்றி.  



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..