லாக்கப்.. விசாரணை.. தடம்..

லாக்கப் நாவலும், விசாரணை திரைப்படமும் தெரியும். அது என்ன தடம்?
லாக்கப் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. எங்கும் விசாரணை பற்றிய பேச்சாய் இருப்பதால் மிகுந்த ஆவலுடன் இன்று விசாரணை படம் பார்த்தேன்.
ஆந்திரத்தில் பூங்காவில் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மூன்று தமிழக இளைஞர்களை காவல்துறையினர் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். படத்தின் ஒன்பதாவது நிமிடம், காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி தனக்கு ராசியானதொரு லத்தியைத் தேர்ந்தெடுத்து அந்த இளைஞர்களை விளாச ஆரம்பித்த கணம் வரைதான் நான் படத்தோடு இருந்தேன். அதன் பிறகு என் மனம் தடம் மாறி திலீப் குமார் அவர்களின் 'தடம்' சிறுகதைக்குள் விழுந்துவிட்டது.
தடம் சிறுகதையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு போராளி லாக்-அப்பிற்குள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும், அத்தருணத்தில் அவனுடைய மனவோட்டத்தையும் செறிவாக பதிவு செய்திருப்பார் திலீப். விசாரணைக்கும் தடத்திற்கும் இருக்கும் ஒற்றுமை லாக்-அப்பிற்குள் விசாரணையின் பெயரால் குற்றவாளிகள் சந்திக்கும் சித்திரவதைகளும் அதிகாரிகளின் குரூரமும்தான். தடம் சிறுகதையை வாசித்திராதவர்களை விசாரணை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் என் அறைக்குச் சென்று மீண்டும் திலீப்குமாரை வாசிக்க ஆரம்பித்து அவருக்குள் மூழ்கி விட்டேன்.


விசாரணையில் விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் என் நண்பர்கள் மூன்று பேரின் மீது விழுந்தது போல் இருந்தது. தடத்தில் விழுந்த அடி ஒவ்வொன்றும் என் மீதே விழுந்தது போல் உணர்ந்தேன். எப்படி இருப்பினும், விசாரணை தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படம். அதற்காக வெற்றி மாறன் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.
இனி.. எனதன்பு திலீப் குமார் 1984-ஆம் ஆண்டு எழுதிய 'தடம்' சிறுகதையிலிருந்து சில வரிகள்..
.....
.....
லாக்-அப் அறைக்குள் ஓர் இளைஞன் கம்பிகளைப் பற்றியபடி வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன், தலைமுடி வெட்டப்படாமலும், கண்கள் உள்வாங்கியும் காணப்பட்டான். சட்டையற்ற அவனது மேலுடம்பில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. லாக்-அப் அறைக்கு வெளியே கம்பிகளுக்கு வெகு சமீபத்தில் சிறிது தண்ணீருடன் ஓர் அழுக்கடைந்த பிளாஸ்டிக் வாளியும் அதற்குள் ஒரு தம்பளரும் கிடந்தன.
சற்றுக் கழித்து, அரை கதவுகளிட்ட மரத்தடுப்புகளாலான அந்தச் சிறிய அறைக்குள் நான் இழுத்துச் செல்லப்பட்டேன். அறைக்குள், ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஓர் அதிகாரி சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். அகன்ற முகம் கொண்ட அவனுக்கு முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. அடர்த்தியான புருவங்களும் மீசையும் கொண்டிருந்தான். கண்கள் சிவந்திருந்தன. சதைப் பிடிப்பான அவனது பெரிய மூக்கைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. அந்த மூக்கின் வாளிப்பு அவனுக்கு வெறுக்கத்தக்க ஒரு குரூரத் தன்மையைத் தந்தது. அவன் சில கணங்கள் என்னை ஏறிட்டுப் பார்த்த பின் என்னை அழைத்து வந்த அதிகாரிக்கு சமிக்ஞை செய்தான். உடனே, காவலாளிகள் என்னை வெளியே இழுத்து வந்தார்கள். பின், ஒரு பெரிய முற்றத்தைக் கடந்து என்னைக் காவல் நிலையத்தின் பின் கட்டிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முற்றத்தில் 10, 12 காவலாளிகள் அரைக்கை பனியனும், கால்சட்டையும் அணிந்தபடி அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பின்கட்டில் இருட்டாகவும், குறுகலாகவும் இருந்த அந்த அறைக்குள் என்னை அடைத்தார்கள். அறைக்குள் ஒளி மங்கிய மின்விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
பதினைந்து இருபது நிமிடங்கள் கழித்துக் கதவு திறக்கப்பட்டது. சதைப்பிடிப்பான மூக்குடைய அந்த அதிகாரியும் மூன்று காவலாளிகளும் கைகளில் லத்திகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் அந்த சதைப்பிடிப்பான மூக்குடைய அதிகாரி தன் லத்தியால் என் இடது முழங்காலில் ஓங்கி அடித்தான். நான் வலி தாளாமல் அந்தக் காலை மடக்கிக் கைகளால் பற்றித் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே மறுகாலின் முட்டியில் ஓர் அடி விழுந்தது. நான் கீழே சரிந்தேன். தலையைத் தரையில் குவித்தேன். திடீரென்று எல்லாம் நிசப்தமாகிப் போனது. மேலும் பல அடிகளை எதிர்பார்த்த நான் ஒன்றுமே நிகழாததை நினைத்துத் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அந்த அதிகாரி கையில் லத்தியை ஓங்கியபடி என்னைப் பார்த்து நின்றான். வெளிச்சமற்ற அந்த அறையில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவன் மீண்டும் தன் லத்தியைச் சுழற்றினான். இம்முறை என் தாடையில் விழுந்தது அடி. நான் அலறிக் கொண்டே முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டேன். தொடர்ந்து என் முதுகிலும் பிடரியிலும் தோள்களிலும் அடிகள் விழுந்தன. நான் கதறிக் கொண்டே இங்குமங்கும் நகர்ந்தபடி இருந்தேன். ஓர் அடி என் பாதத்தில் விழுந்தது. நான் முற்றாகத் தரையில் விழுந்தேன்.
என்னை அதுவரை அடித்தது அந்த அதிகாரி மட்டும்தான் என்பதை எப்படியோ அந்நிலையிலும் நான் உணர்ந்தேன். அந்த அதிகாரி அடிக்கும்போது எவ்வித ஆவேசப் பிதற்றலுமின்றி மெளனமாக என்னை அடித்துக் கொண்டிருந்தான். காவலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் நான் பலமுறை அடிபட்டதுண்டு. பொதுவாக, அடிக்கும்போது அவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக ஏதாவது பிதற்றிக் கொண்டே அடிப்பார்கள். தங்களது குரூரத்தின் உக்கிரத்தை நியாயப்படுத்தவும், சில சமயங்களில் தங்களது வன்மத்தின் விளைவாக தங்களுக்குள் ஏற்பட்ட அதீத அச்சத்தைப் போக்கும் முகமாகவும் பிதற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இவன் அப்படியிருக்கவில்லை. இவன் ஒரு மிருகத்தைப் போல எவ்விதக் குறுகுறுப்புமின்றித் தாக்கிக் கொண்டிருந்தான். இவன் பயங்கரமானவன் என்பதை நான் உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி அடிப்பதை நிறுத்திவிட்டு மெளனமாக நின்றான். நான் வலியால் துடித்தபடி கீழே கிடந்தேன். காவலாளிகளில் ஒருவன், என் உடைகளை முரட்டுத்தனமாகக் கழற்றி வீசினான். இவன் என்னை நிர்வாணமாக்கியவுடன் மற்ற இருவரும் அடிக்கத் துவங்கினார்கள். லத்தியால் என் தொடைகளில், புட்டத்தில், ஆடுதசையில், கைகளில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். முனகிக் கொண்டிருந்த நான் மீண்டும் அலற ஆரம்பித்தேன்.
திடீரென்று ஒருவன் என் மார்பில் காலை வைத்து என் இரு கால்களையும் பற்றி உயர நிமிர்த்தினான். மற்ற இருவரும் என் உள்ளங்கால்களில் லத்தியால் அடித்தார்கள். உள்ளங்கால்களின் நடுப்பகுதியில் குறி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தேன். முன்னெப்போதை விடவும் உரத்து அலறினேன். என் அலறல் சப்தம் வெளியே தெருவின் சந்தடியையும் மீறிக் கேட்டிருக்க வேண்டும்.
என் உள்ளங்கால்களில் அடித்து ஓய்ந்த பின் என் கால்களைப் பற்றியிருந்தவன் அவற்றை மேலும் இறுகப் பற்றி என்னைக் குப்புறப் புரட்டினான். பின் மற்ற இருவர் என் இரு கால்களை அகட்டிப் பிடிக்க இவன் என் குதத்தில் லத்தியை ஏற்றினான். அடுத்த கணம் என் தொண்டை அடைத்தது. நான் விநாடிகளில் இறந்து விடுவேன் என்று பட்டது. கண்கள் இருட்ட ஆரம்பித்தன. இவன் மேலும் லத்தியை உள்ளே ஏற்றினான். பின் திடீரென்று வெளியே இழுத்துக் கொண்டான். இவற்றுக்குப் பின் நான் வலியால் பயங்கரமாகக் கத்தினேன். ஒருவன் என் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தரையில் ஓங்கிச் சாடினான்.
பிறகு, அவர்கள் என்னைக் காலால் உதைத்தார்கள். அவர்கள் மூவரில் ஒருவன் தவிர மற்ற இருவரும் வெறும் காலோடு இருந்தார்கள். அவர்கள் என் மார்பிலும் முதுகிலும் மாறி மாறி உதைத்தார்கள். என் முகம், கழுத்து என்று மேலும் உதைகள் விழுந்து கொண்டிருந்தன. நான் வலியால் நொறுங்கிக் கொண்டிருந்தேன்.
அவர்கள் ஒருவாறாக என்னை அடிப்பதை நிறுத்திய போது இற்றுப் போன கந்தல் துணியாய்க் கிடந்தேன். உடலே உருக் குலைந்து ஓர் அருவருப்பான திரவமாகி வழிந்து கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் போக ஆரம்பித்தார்கள். தங்கள் உடைகளைச் சரி செய்து கொண்டே தங்களுக்குள் பேசினார்கள். என்னை மிகக் கேவலமான வசைகளைக் கொண்டு திட்டினார்கள். போகும்போது பூட்ஸ் அணிந்தவன் திடீரென்று என்னை நெருங்கி ஓர் ஆபாசமான வசையைக் கூவிக்கொண்டே என் குறியில் எட்டி உதைத்தான். நான் அலறிக் கொண்டே பக்கவாட்டில் சரிந்தேன். பின், மயக்கமுற்றேன்.
எங்கும், நிசப்தமாக இருந்தது. இது போன்று முன்பும் பல சிறைகளில், நிசப்தமான இரவுகளை நான் கழித்திருந்தேன். எப்போதுமே சிறைக்கூடங்களின் நிசப்தம் பெரும் பயங்கரத்தை உள்ளடக்கியது. உடைவாளை உருவியபடி இருட்டில் மறைந்து நின்று தாக்கக் காத்திருக்கும் ஒற்றனைப் போன்றது அது.
..........
..........
திலீப் குமார் - 'கடவு' சிறுகதைத் தொகுப்பு - க்ரியா பதிப்பக வெளியீடு.

(முகநூல் பதிவு: 08 பிப்ருவரி 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்