ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

சுஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை.

இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.  


இத்தனை பேர் பாராட்டும் கட்டுரையை எப்படி வாசிக்காமல் போனேன்? அந்தக் கட்டுரை தேசிகனின் தளத்தில் உள்ளது என்று அவரே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது 2005-ல் எழுதப்பட்ட கட்டுரை ஆயிற்றே, இன்னமும் அந்தத் தளத்தில் இருக்குமா என்று யோசித்துக்கொண்டே தேசிகனின் தளத்தில் தேடினேன். நல்லவேளை கிடைத்துவிட்டது.

அருமையான கட்டுரை. எழுபது வயதானவர்கள் மட்டுமல்ல, முப்பது வயதானவர்களும் வாசிக்கவேண்டியது. எனக்கு ஆச்சர்யமாகப் பட்டது என்னவென்றால், அவர் தெரிவித்திருந்த பல கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போயிற்று. குறிப்பாக மறுபிறவி பற்றி சொல்லியிருந்தது. எனக்கும் அதில் துளி நம்பிக்கைக் கிடையாது. தக்காளிச் செடியின் விதையைப் போட்டால் இன்னொரு தக்காளிச் செடி முளைக்கும் என்கிற அளவில்தான் எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை. அதனாலேயே என்னுடைய வாழ்க்கையை குதூகலத்துடன் வாழ விரும்புகிறேன். அதனாலேயே இந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். மறுபிறவிக் கவலைகளில் இந்த வாழ்க்கையை இழப்பதையும், இந்தப் பிறவி பிரச்சினைகளுக்கு முந்தைய பிறவி செயல்களோடு தொடர்புபடுத்திக்கொள்வதெல்லாம் என்னளவில் தேவையற்ற செயல். அதிலும் ஒரு நான்கு வயது குழந்தை படும் கஷ்டங்களுக்கெல்லாம், முந்தைய  பிறவியை காரணம் காட்டுவது என்பது என்னளவில் அட்டூழியமான செயல்.

அதே சமயம் , தக்காளிச் செடியிலிருந்து நாம் சிறிது வேறுபட்டவர்கள்தான். நாம் நம் மறுபிறவியை கண்முன்னே கண்டுகொண்டிருக்கிறோம். எப்படி? உதாரணத்துக்கு, என் மகனுக்கு திரைப்படங்களையே காண்பிக்காமல்தான் வளர்த்து வந்தேன். ஆனால், அவன் ஏழு வயதிலேயே சதா நடித்துக் கொண்டும், பாடல்களை எழுதிக்கொண்டும், இசையமைத்துப் பாடிக்கொண்டும், கதைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறான். இதை சர்வ சாதாரணமாக அவனுடைய முன்பிறவியோடு தொடர்புபடுத்திக்கொள்வது எளிது. ஆனால், அவையெல்லாம் நானிட்ட விதையன்றோ. என் கனவுகளும் உழைப்பும் என்னிடமிருந்து அவனுக்குச் சென்றிருக்கிறது. என்னிடமிருந்து மட்டுமல்ல என் மனைவியிடமிருந்தும். எங்கள் இருவரிடமிருந்து மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களிடமிருந்தும்.

இதனால்தான் எனக்கு மூலக்கூற்று உயிரியலின் சாத்தியங்களை அறிந்துகொள்ளும் ஆவல் பெருகிக்கொண்டே போகிறது. தகவல்கள் மூளையில் மட்டும் சேமிக்கப்படுவதில்லை; நம்முடைய ஒவ்வொரு செல்களிலும், ஜீன்களிலும் சேமிக்கப்படுகிறது. அந்த அளவில் நம்முடைய பிள்ளைகள்தான் நம்முடைய மறுபிறவிகள். அதை இந்த உடல் இருக்கும்போதே காணும் பாக்கியம் பெற்றவர்களன்றோ நாம்.

என்னுடைய 'பயணி' கட்டுரையை நேற்று வாசித்து விட்டு பாராட்டிய என்னுடைய நண்பர் மார்ட்டோ, "எப்படி மாதவன் இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்?" என்று ஒரு சுவாரசியமான கேள்வியை வாட்சேப்பில் கேட்டார். உண்மை என்னவென்றால் எனக்கும் அவையெல்லாம் மறந்து போயிருந்தது. ஆனால் வாசிக்கும் பொழுதோ, காரில் பயணிக்கும் பொழுதோ திடீரென்று மின்னல் போல ஒரு நினைவு வெட்டும். பிறகு நள்ளிரவின் அமைதியில் என்னுடைய டின்னிட்டஸை மறக்கடிக்கும், நினைவுகளையும் கிளற வைக்கும் நல்லதொரு இசையின் பின்னணியில், என் கடந்த காலத்தின் ஏதாவது ஒரு நாளில் நிகழ்ந்ததைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் பொழுது, அது சார்ந்த நினைவுகள் ஒரு மெல்லிய நீரோடையைப் போல சலசலத்துக்கொண்டே எனக்குள் ஓடுகிறது. அதை பின்தொடர்ந்துகொண்டே செல்கிறேன். அப்படிச் செல்லும் பொழுது தோன்றுவதையெல்லாம் எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரம் ஓடினால் நம்முடைய மரபணு நினைவகத்தில் இருப்பதைக்கூட கொண்டுவந்துவிடலாமோ என்னவோ. சில சமயங்களில் நினைவுகள் கிளைத்து வேறெங்கோவெல்லாம் சென்று விடும். அதில் தொலைந்து போகாமல் திரும்பி பிரதான நீரோட்டத்துக்கு வருவதற்குத்தான் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இப்போதும் சுஜாதா கட்டுரையில் ஆரம்பித்துவிட்டு எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறேனே, அது போன்று. 

டி.என்.ஏ ரகசியத்தைப் பற்றியெல்லாம் 'சுஜாதா எழுபது' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். கடவுளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்த விஷயத்தில் நானும் அவர் கூறியிருந்த 'அக்னாஸ்டிக்' வகையறாதான். அதைத் தாண்டி சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால்,  அதே சமயம் மூர்க்க நாத்திகத்தை நான் விரும்புவதில்லை. ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது, "எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விட மாட்டேன்". நமது  நம்பிக்கைகள் நமக்கானவை, ஆனால் அவற்றை சதா மற்றவர்கள் மேல் விட்டு, அவர்களை சூடுபடுத்திக் கொண்டிருப்பது அவசியமுமில்லை; அதில் எனக்கு விருப்பமுமில்லை. என் தந்தையைப் போன்ற தேர்ந்தெடுத்த நபர்களிடம் மட்டுமே இதுபற்றி விவாதிப்பேன், கேள்வி எழுப்புவேன்.

நான் முதலில் வாசித்துக் கொண்டிருந்த கட்டுரை அவருடைய அம்பலம் இணைய இதழில் வந்ததாதலால், அம்பலம் தளத்தில் இப்போது என்னதான் நடந்துகொண்டிருக்கிறது பார்க்கலாம் என்று www.ambalam.com தளத்துக்குச் சென்றேன். "This site can’t be reached" என்று பதில் வந்தது. தளம் மட்டுமல்ல, "Sujatha can't be reached as well" என்கிற எண்ணம் தோன்றிய பொழுது திடுக்கென்று இருந்தது.

அதே நினைவுகளிலேயே தூங்கிப்போனேன். அந்த பாதிப்பில் எனக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்தது. அதில் நானொரு கிழவனாக மரணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி சில வெள்ளைக்காரர்கள் மரியாதையுடனும் கவலையுடனும்  நின்றுகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மனிதர் என்னுடைய படுக்கைக்கருகே அமர்ந்து என் வலது கையை தன்னுடைய கரங்களால் பற்றியபடி புன்னகைத்துக்கொண்டே, "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று தமிழில் கேட்கிறார். அதற்கு நான் கரகரத்த குரலுடன் "எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு.." என்று தெலுங்கில் தியாகராயரின் வரிகளை பதிலாகச் சொல்கிறேன். அதன் பிறகு என் உயிர் பிரிந்து விடுகிறது.

'சுஜாதா எழுபது' கட்டுரைக்கான இணைப்பு:

கருத்துகள்

  1. அற்புதம், நண்பரே. மிக அழகாக, இயல்பாக, எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)