மாயபுரி

(சிறுகதை)

நான் எங்கோ வட இந்தியாவில் இருக்கிறேன். எந்த மாநிலம் என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தெருமுனையில் வைக்கப்பட்டிருக்கும் இருபதடி உயரப் பதாகை ஒன்று அந்த ஊரின் பெயர் மாயாபூர் என்று எடுத்துச் சொல்லுகிறது. ஊரே கோலாகலமாக இருக்கிறது. ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, தெரு முழுதும் சிவப்புக் கம்பளம் விரித்து வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அந்த ஊருக்கு உரையாற்ற வருகிறாராம். காதை செவிடாக்கும் அளவுக்குக் கோஷங்கள், பட்டாசு வெடிச்சத்தங்கள் எல்லாமும் கேட்கிறது. ஆனால் யாரையுமே அங்கு காணமுடியவில்லை. ஊரே வெறிச்சோடிப் போயிருக்கிறது. திருவிழாக்கோலம் பூண்ட ஊரில் திடீரென்று ஒரு கலவரம் வெடித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தைத் தருகிறது. பிறகு இந்தச் சத்தங்கள் மட்டும் எங்கிருந்து வருகின்றன என்று மோடி உரையாற்றப் போகும் அரங்கத்துக்கு வெளியே நின்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்போது தொலைவில் ஒருவர்  ஜீப்பில் நின்றபடி கையசைத்துக்கொண்டே வருவது தெரிகிறது. அவர் மோடியேதான். பிரதமர் தனியாக வந்துகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி யாருமே இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள்கூட இல்லை. எதற்கு அவர்கள்? இதுதான் மனிதர்களே இல்லாத ஊராக இருக்கிறதே. இங்கு என்ன பாதுகாப்பு வேண்டிக் கிடக்கிறது. எப்போதும் போல் புன்னகை ஏந்திய முகத்துடன் வரும் மோடி, தெருவின் இரு புறங்களையும் பார்த்துக் கையசைத்துக்கொண்டும், வணக்கம் செலுத்திக்கொண்டும் வருகிறார். ஆனால் தெருவின் இருபுறங்களிலும் யாருமே இல்லை. அவருடைய ஆதரவாளர்களின் கோஷங்களும், ஆரவாரங்களும் மட்டும் உரக்கக் கேட்கிறது.

என் கண்களில் ஏதேனும் கோளாறா என்றால் அதுவுமில்லை. மோடி தெரிகிறாரே. அந்தப் புன்னகை, அந்த உடை, அலங்காரத் தோரணங்கள், சிவப்புக் கம்பளம் என்று எல்லாம் தெரிகிறதே. ஆனால் யாருமில்லாத ஊரில் யாருக்குத்தான் மோடி கையசைத்துக் கொண்டிருக்கிறார்; புன்னகை வீசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை விழாவுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறாரா? ஒத்திகைக்காக எல்லோரையும் அப்புறப்படுத்திவிட்டார்களா? ஆனால் இந்தச் சத்தங்கள் மட்டும் எங்கிருந்து வருகிறது. ஸ்பீக்கரிலிருந்து வருகிறதா? பிரதமரை வைத்துக்கொண்டேவா ஒத்திகை பார்ப்பார்கள். ஒன்றும் புரியவில்லை.

மோடியின் ஜீப் எனக்கு வெகு அருகே வந்துவிடுகிறது. என்னைப் பார்த்ததும் புன்னகைக்கிறார் பிரதமர். திடீரென வண்டியை நிறுத்தச் சொல்லி கைகாட்டுகிறார். ஆனால் அங்கு ஓட்டுநரே இல்லை. வண்டி இவ்வளவு நேரமும் தானாகவே ஓடிக்கொண்டு வந்திருக்கிறது. எனக்கென்னவோ அப்போது மோடி ஒரு மாயாவியைப் போல் தெரிகிறார். இந்த ஊருக்குள் இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே என்று நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கும் வேளை, மோடி ஜீப்பிலிருந்து இறங்கி விடுகிறார். புன்னகைத்துக்கொண்டே இரண்டு கைகளையும் தூக்கியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். என்னை அணைத்துக்கொள்ளப் போகிறாரா, அல்லது கழுத்தை நெரித்துக் கொன்றுவிடப் போகிறாரோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்தான் நாள்தோறும் உறவுகளிடமும் நண்பர்களிடமும் அவரை விமர்சித்துக்கொண்டே இருக்கிறேனே. அதெல்லாம் இவருக்குத் தெரிந்துவிட்டதா? என் உடலும் உள்ளமும் அளவுக்கு அதிகமாகவே நடுங்குகிறது. அங்கிருந்து எப்படியாவது ஓடிப் போய்விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஓடலாம் என்று திரும்பிய போது, "மாதவன் ஜி" என்று மோடியின் குரல்.

என்னைத்தான் அழைக்கிறார். அடுத்தக்கணம் அத்தனை ஆரவாரங்களும் அடங்கிவிடுகிறது. துளிச் சத்தம் கேட்கவில்லை. மோடியின் குரல் தெளிவாகக் கேட்கிறது. என்னை நெருங்கி வந்து இறுக அணைத்துக்கொள்கிறார். அவர் மீது புத்தம் புதிய ஆடையின் வாசம் வருகிறது; கூடவே நறுமணமும் வீசுகிறது.

"நலமாக இருக்கிறீர்களா?" என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் இந்தியில் பேசுவது எனக்குத் தமிழில் கேட்கிறது. அவர் நிச்சயம் இந்திதான் பேசுகிறார். அது எனக்குக் கேட்கவும் செய்கிறது, ஆனால் அது என் காதுகளுக்குள் நுழையும் போது தமிழாக மாறிவிடுகிறது. இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை. ஆனால் அது அப்படித்தான் நிகழ்கிறது. நானும் அவருக்குத் தமிழில்தான் பதில் சொல்கிறேன். அது அவருக்கு இந்தியாகவே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, "சரி. உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி மாதவன் ஜி. நேரமாகிவிட்டது.  நான் மேடைக்குப் போக வேண்டும். நாம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?" என்று என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால் புகைப்படம் எடுப்பதற்கு அங்கு யாருமே இல்லை.

"செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமே.. உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லையா?" என்று அவரே யோசனை கூறுகிறார்.

அப்போது அவருக்கருகே யாரோ, "சார், புகைப்படத்துக்கு இப்போது நேரமில்லை. மேடைக்குப் போக வேண்டும்." என்று கூறுகிறார்கள்.

அதுவும் தமிழாக்கப்பட்ட இந்தியாகவே என் காதுகளுக்குள் நுழைகிறது. அவரும் அதைத் தலையசைத்தபடி  கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரருகே யாருமே இல்லை. நான் என்னுடைய கைப்பேசியை எடுத்து செல்ஃபி மோடுக்கு மாற்றி விட்டு, போட்டோ எடுப்பதற்காக கைப்பேசித் திரையை இருவரும் பார்க்கிறோம். ஏனோ நாங்கள் இருவருமே என்னுடைய கைப்பேசியில் தெரியவே இல்லை. ஆனால் விந்தையாக ஐந்தாறு பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் கடுகடுத்த முகத்துடன் தெரிகிறார்கள். எனக்கு ஆச்சர்யமாகப்  போய்விட்டது. இடதுபுறம் திரும்பி மோடியைப் பார்க்கிறேன். அவர் இன்னும் கேமராவையே பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை அவருக்கு மட்டும் எல்லாம் ஒழுங்காகத் தெரிகிறதா? எனக்குத்தான் இந்தப் பிரச்சினையா? அவரிடமே கைப்பேசியைக் கொடுத்து, "நீங்களே செல்ஃபி எடுக்கிறீர்களா?" என்று கேட்கிறேன். "அது முடியாது!" என்று யாரோ உரக்கக் கத்துகிறார்கள். பாதுகாப்பு அதிகாரியாக இருக்குமோ என்று கைப்பேசியைப் பார்க்கிறேன். அவரேதான். பரவாயில்லை. இங்கு கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது. செல்ஃபி கேமரா!

என்னுடைய கைப்பேசியில் எல்லோரும் தெரிகிறார்கள். கைப்பேசியை சற்று திருப்பிப்  பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் அத்தனை பேருமே அதில் தெரிகிறார்கள். சுற்றி நடக்கும் அத்தனையும் இப்போது தெரிகிறது. கைப்பேசிக்குள்தான் நிஜமான உலகமே இருக்கிறது என்பது அப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பிக்கிறது. நான் இதுவரை பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் ஏதோவொரு மாயத்திரையால் மறைக்கப்பட்டு எஞ்சிய காட்சிகளே என்றும் புரிந்து கொள்ளமுடிகிறது.

நான் கேமராவைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த மோடி. "பனோரமிக் மோடில் புகைப்படம் எடுக்கிறீர்களா மாதவன் ஜி?' என்று கேட்கிறார். அவருக்குத்தான் என் பிரச்சினைத் தெரியாதே.

"ஆமாம்" என்று நான் மழுப்புகிறேன்.

"எனக்கும் அது மிகவும் பிடிக்கும். என்னுடைய போனில்கூட அந்த வசதி இருக்கிறது. ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. தவிர பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்கிறார்கள்.” என்கிறார்.

இப்போது அவருடைய முகத்தைப் பார்க்கிறேன். ஏனோ பாவமாக இருக்கிறது.

செல்ஃபி எடுக்க மீண்டும் முயற்சி செய்கிறேன். இந்தமுறை அதிசயமாக நாங்களும் தெரிகிறோம். எங்களுக்குப் பின்னால் பாதுகாப்பு அதிகாரிகளும், அவரைப் போன்றே கோட்டி அணிந்த சில மனிதர்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். மோடியைத் தவிர மற்ற எல்லோருமே ஏனோ உக்கிரமாகத் தெரிகிறார்கள். புகைப்படத்துக்காகவாவது அவர்களை சிரிக்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. எதற்கு வம்பு, ஒருவேளை அவர்கள் அனைவருமே என் மேல் அதீத கோபத்தில் இருக்கவேண்டும். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் மோடி ஏன் இவர்களோடெல்லாம் சகவாசம் வைத்துக்கொண்டுத் திரிகிறார். புன்னகையற்ற மோடியும் ஒருவேளை இவர்களைப் போலவே பயங்கரமாகத் தெரியக்கூடும். மோடியைப் போன்றே நானும் புன்னகையை முகத்தில் ஏற்றிக்கொண்டு கைப்பேசியை மூன்று முறை அழுத்துகிறேன்.

"மிக்க நன்றி மாதவன் ஜி. நீங்கள் நிச்சயம் என் வீட்டுக்கு வரவேண்டும். நாம் மீண்டும் சந்தித்து உரையாடவேண்டும்." என்று கூறிவிட்டு மோடி அரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். நான் கைப்பேசியில் எடுத்த புகைப்படத்தைப் பார்க்கிறேன். அதில் மோடியின் முகமே தெரியவில்லை. நானும் பாதுகாப்பு அதிகாரிகளும் மட்டும் தெரிகிறோம். அவருடன் இருந்த அந்தச் சிடுசிடு ஆசாமிகளும்கூடத் தெரியவில்லை. இது என்ன விந்தை என்று, மோடியிடம் மீண்டும் ஓடுகிறேன்.

மோடியோ, "கியாஹுவா மாதவன் ஜி?" என்று கேட்ட அடுத்த நொடி என்னுடைய காதில் 'கொய்ங்ங்ங்ங்' என்று சத்தம் ஓங்கி ஒலிக்கிறது. நான் காதுக்குள் ஆள்காட்டி விரலை விட்டு ஆட்டுகிறேன்.

"என்ன ஆச்சு மாதவன் ஜி? ஏதாவது பிரச்சினையா மாதவன் ஜி?" என்று கனிவுடன் மோடியின் குரல் மீண்டும் தமிழில் கேட்கிறது. ஆனால், இந்த 'ஜி' என்கிற வார்த்தை மட்டும் ஏன் தமிழில் கேட்கமாட்டேன் என்கிறது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒருவேளை அது தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

"இன்னொரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?" என்று அவரிடம் கேட்கிறேன். ஆனால் நான் ஏன் ஒரு அதட்டலுடனேயே மோடியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நாட்டின் பிரதமருடன் இப்படியெல்லாம் பேசி நடந்துகொள்ளும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கவேண்டும்.

அவரோ புன்னகை மாறாமல், "கண்டிப்பாக." என்கிறார்.

அப்போது, "மோடி ஜீ..." என்று அருகே யாரோ பொறுமையிழந்து கத்துவது கேட்கிறது.

"ஒரு நிமிடம்." என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் மோடி.

நான் மீண்டும் மூன்று முறை அழுத்தி செல்ஃபி எடுத்துவிட்டு, உடனே போட்டோவைப் பார்க்கிறேன். மூன்று போட்டோக்களிலும் மோடி இருக்கிறார் ஆனால் நானில்லை. 'இது என்னடா விநோதமானக் கோளாராயிருக்கிறதே. இதே கைப்பேசியில்தானே இத்தனை நாளும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு மட்டும் என்ன ஆயிற்று..' என்று யோசித்துக்கொண்டே தலையை நிமிர்த்தியபோது, என்னெதிரே என் மனைவி புன்னகையுடன் நின்றுகொண்டிருக்கிறாள்.

‘இவள் எப்போது இங்கு வந்.....’ என்று நினைத்து முடிக்கக்கூட இல்லை, "ப்ரியா ஜி......" என்று என் மனைவியிடம் ஓடிச்சென்று கைகுலுக்குகிறார் மோடி. எனக்கு எல்லாமே விசித்திரமாக இருக்கிறது. மோடிக்கு எப்படி என்னுடைய மனைவியைத் தெரிந்திருக்கிறது?

நான் வேகமாக என் மனைவியிடம் சென்று கைப்பேசிப் பிரச்சினையைப் பற்றி எடுத்துச் சொல்லி, செல்ஃபி கேமரா பிரச்சினையாக இருக்கலாம் என்று அவளைப் புகைப்படம் எடுக்கச் சொல்லிவிட்டு, மோடிக்கு அருகே சென்று கம்பீரமாக நின்று அவருடைய தோள் மீதே கைபோட்டுக் கொள்கிறேன். பின்னாலிருந்து யாரோ கடுகடுப்பதும், முணுமுணுப்பதும் கேட்கிறது. என் மனைவி புகைப்படம் எடுத்த பிறகு ஓடி வந்து மோடியிடம் அந்தப் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள். 

"மிக்க நன்றி பிரியா ஜி. இந்த போட்டோவை எனது வாட்சேப்புக்கு மறக்காமல் அனுப்பி விடுங்கள்." என்று கூறிவிட்டு துரிதமாக அரங்கத்துக்குள் நுழைந்து விடுகிறார் மோடி.

அதன் பிறகு என் மனைவி எடுத்த புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிடுகிறேன் நான். அந்தப் புகைப்படத்தில் மோடிக்கு அருகே என் மனைவி நின்றுகொண்டிருந்தாள். நான் அவளிடம் அதைக் காண்பித்து, "என்ன இது?" என்று கேட்கிறேன். அவளோ மர்மமாய்ப் புன்னகைக்கிறாள்.

நான் உடனே என் மனைவியின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அரங்கத்துக்குள் ஓடுகிறேன். அரங்கம் அதிர்ந்துகொண்டிருக்கிறது. பேரிரைச்சலுக்கு இடையே மோடி மேடையில் கம்பீரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்கிறது. நான் மோடியைப் பார்த்து "மோடி ஜி...." என்று உரக்கக் கத்துகிறேன். ஆனால் அந்த இரைச்சலில் அது அவருக்குக் கேட்க வாய்ப்பேயில்லை. அருகே இருந்த இருக்கையின் மீது ஏறுகிறேன். யாரோ ஆவென்று அலறுவது கேட்கிறது. நான் தடுமாறி விழுகிறேன். மீண்டும் எழுந்து எம்பிக் குதித்து என் கைகளை உயர்த்தி அசைத்து "மோடி ஜி......." என்று மீண்டும் உரக்கக் கத்துகிறேன். மோடி என்னைப் பார்த்து விடுகிறார். அடுத்தக்கணம் அந்த அதிசயம் நிகழ்கிறது.

மோடியின் உடலிலிருந்து இன்னொரு மோடி வெளியே வருகிறார். ஒரு மோடி ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருக்க, அவரருகே நின்றுகொண்டிருந்த இன்னொரு மோடி அங்கிருந்தபடியே குழப்பத்துடன் என்னைப் பார்த்து "என்ன ஆயிற்று?" என்பதுபோல் சைகை செய்கிறார். நான் என்னுடைய கைப்பேசியை உயர்த்தி பிரச்சினையை சைகை மூலம் நடித்துக் காண்பித்து விளக்குகிறேன். நல்லவேளை மோடிக்கு நான் கூறுவது புரிந்துவிடுகிறது. உடனே அவருடைய முகம் வாடிவிடுகிறது. திடீரென்று உக்கிரமாக பேசிக்கொண்டிருந்த ‘ஆக்ரோஷ’ மோடி, தன்னுடைய பேச்சை முடித்து விட்டு, அவர் அருகே நின்று கொண்டிருந்த யாரையோ அழைத்து, மேடையில் சோகமாக நின்றுகொண்டிருக்கும் மோடியைக் காண்பிக்கிறார். அடுத்த நிமிடம் அலறித் துடிக்கிறார் ‘அமைதி’ மோடி. நான் என்ன நடக்கிறது என்று என் கைப்பேசியைத் திருப்பி அதனூடே பார்க்கிறேன். ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த பெருங்கூட்டத்துக்கு இடையே இருந்த மேடையில் அகோரிகள் தோற்றத்தில் இருக்கும் சிலர் அமைதி மோடியைப் பிடித்துத் தூக்கி ஆக்ரோஷ மோடிக்கு உள்ளே  நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து மிரண்டு போன நான் அமைதி மோடியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று, கைப்பேசி வழியே பார்த்தபடியே கூட்டத்தை விலக்கிக்கொண்டு மேடையை நோக்கித் துரித கதியில்  செல்கிறேன். இந்தி மொழிக் கெட்ட  வார்த்தைகளெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு என் காதில் விழுந்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் , மூச்சு முட்டினாலும் மோடியைக் காப்பாற்றியே தீருவது என்கிற முனைப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

மேடைக்கு அருகே சென்று விடுகிறேன். ஆனால் அமைதி மோடி அதற்குள் ஆக்ரோஷ மோடிக்குள் முழுவதுமாக திணிக்கப்பட்டுவிடுகிறார். நான் வெறுத்துப் போய் தரையிலேயே அமர்ந்துவிடுகிறேன். அப்போது "மாதவன் ஜி…" என்று மீண்டும் மோடியின் குரல். மேடையைப் பார்க்கிறேன். மோடி என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். இது என்ன விந்தை. ஆக்ரோஷ மோடி எங்கே? இதில் எவர் நிஜம், எவர் பொய் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது எனக்கு. திடீரென்று அவர் யாராலோ இழுக்கப்படுவது போன்று அவராகவே பின்புறமாகச் செல்ல ஆரம்பித்தார். மீண்டும் கைப்பேசி வழியே பார்க்கிறேன். பாதுகாவலர்களும், மோடி கோட்டி அணிந்த சிலரும், அவர்களோடு சேர்ந்து புதிதாக வந்திருந்த இன்னும் சில கோட்டு அணிந்த கனவான்களும் அவரை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவரோ என்னைப் பார்த்து "மாதவன் ஜி.. மாதவன் ஜி.." என்று கதறியபடி சென்றுகொண்டிருக்கிறார். எல்லோரையும் உதறி விட்டு எப்படியாவது என்னிடம் வர முயன்று கொண்டிருக்கிறார். நானும் அவரிடம் செல்ல முயல்கிறேன். ஆனால் யாரோ என்னைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கிறார்கள். எனக்கு மூச்சு முட்டுகிறது. புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் செல்வது என்னைவிட அவருக்குத்தான் மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்க வேண்டும். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அடிப்படைத் தகுதியே எனக்கு இல்லை போலும் என்று நினைத்துக்கொள்கிறேன். இருந்தாலும் சிறிது நேரத்துக்கு முன்பு சிவப்பு கம்பளத்தில் கம்பீரமாக வந்த பிரதமரா இவர். இப்படி இழுத்துச் சென்று விட்டார்களே என்று வருத்தமாக இருக்கிறது. மோடியின் கடைசிக் கதறல்கள் என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அதற்குப் பிறகு, என்னுடைய காரை எடுத்துக்கொண்டு சிறிது நேரத்துக்குள்ளாகவே பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய வீட்டுக்கு வந்து சேர்கிறேன். வீடு திறந்திருக்கிறது. ஆனால் இந்த வீடு நிஜமாகவே என்னுடைய வீடுதானா? சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. வீட்டுக்கு உள்ளே நுழைந்தால், என்னுடைய அம்மா அங்கே இருக்கையின் மீது படுத்துக்கொண்டிருக்கிறாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். அம்மா எப்போது பெல்ஜியத்துக்கு வந்தாள்? பெல்ஜியத்தில் வீடு வாங்கியதிலிருந்து எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன். வரவே இல்லை. இப்போது எனக்கே சொல்லாமல் ரகசியமாக வந்து அமைதியாக படுத்துக்கொண்டிருக்கிறாள். எப்போதும் போலவே தனது வலதுகையையே தலையணையாக்கி  இருக்கிறாள். அம்மாவை மெதுவாகத் தட்டி எழுப்புகிறேன். கண்களைத் திறந்து என்னைப் பார்த்தவுடன் புன்னகைக்கிறாள்.

"எப்படா வந்தே?" என்று தூக்கக் கலக்கத்தில் கேட்கிறாள்.

"அத நான்தானே கேக்கணும். நீ எப்போமா பெல்ஜியம் வந்த? இங்க வரதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கா?" என்று அவளிடம் பொய்க்கோபம் கொள்கிறேன்.

"என்னடா பண்றது. எனக்கு வரணும்னுதான் ஆசை. ஆனா அப்பா விடணுமே. அவரப் பத்திதான் உனக்குத் தெரியுமே. நமக்கெல்லாம் அவருக்கு எங்க நேரமிருந்திருக்கு?" என்று படுத்துக்கொண்டபடியே என்னிடம் பேசுகிறாள்.

"அவரு பெரிய பிரதம மந்திரி.. விடும்மா. நீ வர்றத பத்தி ஏன் எனக்குச் சொல்லவே இல்ல?”

“அங்க நம்ம வீட்டில இடமே இல்லை டா.. அதான் இங்க வந்து தூங்கிட்டு இருக்கேன்.”

"ஏம்மா என்ன ஆச்சு?" என்று கேட்கிறேன்.

"வீட்டில கீழே ஒரு ரூம் முழுக்க எல்லா சாமிகளையும், சாமியார்களையும் கொண்டு வந்து அடைச்சு வெச்சிருக்கார் உங்கப்பா. இன்னொரு ரூம்ல ஒரே காசு, கோப்பைகள், மெடல்களுமா நெரம்பிக் கெடக்கு. சரி, எனக்குன்னு இருக்கற கிச்சன்லயாவது தூங்கலாம்னு பார்த்தா, அங்க யாரோ புதுப்புது மனுஷங்களையா நிரப்பி வெச்சிருக்கார். அவங்கள்லாம் எந்த நேரமும் அவரை பத்தி எந்திரமா ஏதோ பாட்டு எழுதிட்டே இருக்காங்க."

"என்னம்மா உளறிட்டிருக்க? அப்ப மாடிலயாவது போயி இருக்கலாமே"

"மேல எந்த ரூமைத் திறந்தாலும் ஒரே நெருப்புடா. சுட்டெரிக்கிது. அனல் காத்து என்னை என்னமோ பண்ணுது. லைப்ரரில இருந்த புக்கெல்லாம் கூட எறிஞ்சி போச்சுன்னா பாத்துக்கோயேன். உனக்கு ரொம்ப பிடிக்குமே டால்ஸ்டாய், செகாவ்.. அவங்கெல்லாமே பத்திட்டு எரியறாங்க. பெரிய பெரிய மேதைகளோட புத்தகங்களாலே எரிஞ்சி கருகுது. நான் எந்த மூலைக்கு? அந்த வீட்ல இனி எனக்கு நடக்கக்கூட துளி இடமில்லடா." என்று புலம்புகிறாள்.

எனக்கோ அவள் கூறுவது எதுவுமே புரியவில்லை. அவள் பேச்செல்லாமே எனக்கு விந்தையாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

"சரி அதை விடும்மா. இந்த போட்டோவை பாரேன்.." என்று கைப்பேசியை எடுக்கும் போதுதான் என் மனைவியை மோடி அரங்கத்திலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. சரி அவளாகவேதானே அங்கு வந்தாள். அவளாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவாள். அவளுக்கும் இந்த சுதந்திரம் வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

அம்மா புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, "என்னடா இது. பிரதம மந்திரிய எல்லாம் நாங்க கனவுலதான் பார்ப்போம். அவரையெல்லாம் நெருங்கவே முடியாதே. நீங்க நேர்லயே பாத்துட்டு வந்திருக்கீங்க." என்று ஆச்சர்யப்பட்டு பேசுகிறாள். அவள் கண்களில் அப்போது அப்படி ஒரு பிரகாசம். 

"அது ஒரு பெரிய கதை மா.. அந்த ஊர்ல..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அம்மாவின் கைப்பேசி  அலறுகிறது. அம்மாவும் என்னுடைய கைப்பேசியின் அழைப்பொலியையே வைத்திருக்கிறாள் என்று நினைத்த பொழுது, அந்த அலறல் என்னை உலுக்கி எழுப்பிவிடுகிறது.

கண்களைத் திறந்து பார்த்தால் நான் என்னுடைய வீட்டின் இரண்டாவது மாடியில் இருக்கும் அலுவலக அறையில், ஓய்விருக்கையின் மீது படுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கைகளில் முரகாமியின் புத்தகம் ஒன்று. எப்போதும் போல் புத்தகம் படித்துவிட்டு அங்கேயே தூங்கிப் போயிருக்கிறேன்.

சிறுவயதில் என்னுடைய எல்லாக் கனவுகளுக்கும் ஏதாவது ஒரு விளக்கத்தை சொல்வாள் அம்மா. பெரும்பாலும் அவை சுப பலன்களாகவே இருக்கும். ஒருமுறை தாத்தா இறந்துவிட்டதாகக் கனவு கண்டதைப் பற்றிச் சொன்ன போது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நம் வீட்டில் ஒரு திருமணம் நடக்கப்போகிறது" என்றாள். என் நண்பன் ஒருவன் இறந்து விட்டதாகக் சொன்னபோது, "கவலைப்படாதே. அவன் நீண்ட காலம் வாழ்வான்" என்றாள். "நான் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்து விட்டதாகக் கனவு கண்டேன்" என்று ஒருநாள் நள்ளிரவு விழித்துக்கொண்டு அழுதபோது, "பரவாயில்லை. பயப்படாதே. உனக்கு நிறைய செல்வம் வந்து விழுந்து குவியும், நீ சான்றோனாகப் போகிறாய். உன்னை மிகப் பெரிய அறிஞர்கள் எல்லாம் பாராட்டுவார்கள்" என்றாள். ஒருநாளும் அந்தக் கனவு கெட்டது என்று அவள் சொன்னதே கிடையாது. ஒரே ஒருமுறை மட்டும் பல் விழுந்தது போல் கனவு கண்டதைச் சொன்ன போது, "அதெல்லாம் ஒன்றுமேயில்லை." என்று கூறிவிட்டு, சிறிது நேரம் என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.

கனவுகளைவிட அம்மாவின் இதுபோன்ற விளக்கங்கள்தான் எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. இவற்றில் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், உண்மை இருக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. ஒருமுறை நான் கடுமையான காய்ச்சல் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்குக் காய்ச்சல் வந்தால் எதையாவது உளறிக்கொண்டே இருப்பேனாம். அன்றைக்கும் அதையே செய்திருக்கிறேன். அம்மாவிடம், "என்ன கனவு கண்டால் இந்தக் காய்ச்சல் உடனே குணமாகும்?" என்று கேட்டேன். அம்மா சிறிது நேரம் யோசித்தாள். ஏன் அன்றைக்கு மட்டும் வழக்கத்துக்கு மாறாக சற்று கூடுதல் நேரம் யோசித்தாள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவளுடைய மன வரைபடம் கனவுகளிருந்து விளக்கங்களையும் பலன்களையும் தேடுவது போல்தான் அமைந்திருக்கிறதோ என்னமோ. சற்று நேரம் கழித்து, "உனக்கு யாராவது பழம் கொடுப்பது போன்று கனவு கண்டால் காய்ச்சல் ஓடி விடும்" என்றாள். நானோ அம்மாவே எனக்குப் பழம் கொடுப்பது போல் நினைத்துக் கொண்டேயிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. அன்றைக்கு என்னுடைய கனவில் ஒளி வீசும் அழகான முகத்தைக் கொண்ட ஒரு தேவதை வந்து பழம் கொடுத்தாள். அதிசயம் என்னவென்றால் அந்த தேவதையின் முகம் என் அம்மாவைப் போலவேயிருந்தது. அம்மா இளம் வயதில் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் என் காய்ச்சல் குணமாகியிருந்தது.

அன்றுதான் கனவுகளின் மீதும், அம்மா கூறும் பலன்களின் மீதும் எனக்கு திடமான நம்பிக்கைப் பிறந்தது. கனவுலகுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிச்சயம் தொடர்பு இருப்பதாகவே தோன்றியது. ஆனால், எப்படி அம்மாவுக்கு மட்டும் கனவுகளைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். என் தந்தையிடமே ஒருநாள் இது பற்றிக் கேட்டுவிட்டேன். அவர் என்னைத் தன்னுடைய புத்தக அலமாரிக்கு அழைத்துச் சென்றார். சிக்மண்ட் பிராய்டு என்பவர் கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகமே எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்தார் அப்பா. அந்தப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன். ஒன்றுமே புரியவில்லை. அந்தப் புத்தகம் கனவுகளைப் போலவே குழப்பம் நிறைந்ததாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அம்மா புத்தக அறைக்குச் சென்று நான் பார்த்ததே இல்லை. நிச்சயமாக அவள் பிராய்டு புத்தகம் எல்லாம் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அம்மா மிகவும் எளிமையானவள்.

இந்த ஹாருகி முரகாமியின் குறுநாவலை வாசித்து முடித்தவுடன் எனக்கு கனவுலகிற்குள் சென்று விட்டு வந்தது போலிருந்தது. பால்ய காலத்தில் எனக்கு கதை, கனவு, நிஜம், மாயம் இவையெல்லாம் வெவ்வேறானவை இல்லை; எல்லாம் ஒன்றுதான். அம்மா சொல்லித்தான் எனக்கு, கனவு வேறு நிஜம் வேறு என்றே தெரியும். அதுவரையிலும் நான் அவை உண்மையிலேயே நிகழ்கின்றன என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். முரகாமியின் கதையை வாசித்துவிட்டு, நீண்ட சிந்தனைக்குப் பிறகு - அதுதான் இது, இதுதான் அது என்றெல்லாம் ஊகித்து, ஆய்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய விளக்கங்கள் சரிதானா, இப்படியெல்லாம் நினைத்துத்தான் முரகாமி எழுதினாரா என்பதெல்லாம் தெரியாது. நான்தான் வெறுமனே இதற்கெல்லாம் அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறேனா என்றால் அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை. முரகாமி சாதாரண ஆளில்லை. அப்படியெல்லாம் ஏமாற்றமாட்டார். ஆனால், எனக்கு அப்போது என் அம்மாவின் நினைவு வந்தது. அந்த கதையையே நான் கண்ட ஒரு கனவாக அம்மாவிடம் கூறியிருந்தால், அதற்கும்கூட ஒருவேளை மிக அழகாக எளிமையான விளக்கங்களைக் கூறியிருப்பாள் என்று தோன்றியது. இத்தனைக்கும் அவள் ஒரு இலக்கியவாதியோ, மேதையோ இல்லை. எளிமையானவள். அவள் வார்த்தைகளில் குழப்பங்களுக்கு என்றுமே இடமிருந்ததில்லை.

சிறுவயதில் என்னுடைய கனவில் தேவதையாக வந்த அதே அம்மா, இந்தக் கனவில் வயதான தேவதையாக வந்து களைப்புடன் தூங்கிக்கொண்டிருந்தாள். குழப்பம் மிகுந்த அவளுடைய பேச்சும், முகமும் பிராய்டின் புத்தகத்தை நினைவுபடுத்தியது. எளிமை அவளை விட்டு அகன்றுவிட்டிருந்ததை உணரமுடிந்தது. பல கனவுகள் உறக்கம் களைந்தவுடன் மறந்து போய்விடுகிறது. இதுபோன்ற சில கனவுகள்தான் நிஜமாகவே நடந்ததுபோல், விழித்த பிறகும் அப்படியே நினைவில் நின்று உறுத்திக்கொண்டே இருக்கிறது.

கனவுதானென்றாலும் ஒரு சிறிய சந்தேகம்; அற்ப ஆசை என்று சொல்லவேண்டும். கீழே இறங்கிச் சென்று வீடு முழுவதும் தேடிப் பார்க்கிறேன். அம்மாவைக் காணவில்லை.  அப்போதைக்கு அங்கே இருந்தாலும் கனவுக்கான பலனை அத்தனை எளிமையாக விளக்குவாள் என்று எனக்குத் தோன்றவில்லை. சமையலறையிலிருந்த என் மனைவியோ நான் செய்வது  புரியாமல் என்னை மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவள் ஏனோ எனக்கு அப்போது என் அம்மாவின் சாயலில் தெரிந்தாள். ஒருவித குழப்பத்துடனே குளியலறைக்குச் சென்று கண்ணாடியைப் பார்த்தேன். கண்ணாடியில் அதே குழப்பம் தோய்ந்த முகத்துடன் மோடி நின்றுகொண்டிருந்தார்.


கருத்துகள்

  1. ஆழ்மனதில் குவிந்திருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் கனவுகளாக வரும். அதை சிறுகதையாக நடித்தால் படிப்பவர்களுக்கு மர்மக்கதை போல் குழப்பங்கள் விரிந்து இறுதியில் புன்முறுவலோடு முடியும்.
    பெரிய கனவு ஒன்று சிறுகதை என்னும் தலைப்பில் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஆரம்பத்தில் அமர்க்களமான அமானுஷ்ய கதை என்று எண்ணி திகிலோடு படித்துக்கொண்டு இருந்தேன் ..
    மோடியை பற்றி விமர்சிப்பதாக கூறியபோது நிகழ்கால அரசியலை பேசப்போகிறீர்கள் என்று எண்ணினேன்.
    பின்னர் சிக்மென்ட் பிராய்டு பற்றி ஆரம்பித்தபோது மனோவியல் கதை என்று எண்ணினேன்.

    ஆனால் இது நல்லதொரு ஒரு அரசியல் பகடி.. அருமை..வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  3. இது புனைவா இல்லை நடந்ததா என தெரியவில்லை .. ஆனால் என்னை பொறுத்தவரையிலும் இது 'அவரால் சிறப்பான மாற்றம் பொது மக்களுக்கு வரும் என நம்பிக்கொண்டிருந்த" 100 கோடி இந்தியர்களின் தூக்கத்திலும் வரும் கனவு தான்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..