"பறவைப் பெண்" - ஸ்விட்சர்லாந்தின் சகுந்தலை


சுவிட்சர்லாந்தின் "பெர்னீசிய ஓபெர்லாந்து" (உயர்நிலம்) மண்டலத்திலுள்ள ஆடெல்போடென்  என்கிற மலைகிராமம் சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிரசித்தி பெற்றது. இங்குதான் பனிச்சறுக்கு உலகக் கோப்பை போட்டியும் நடக்கிறது. கிராம மையத்தில் இருக்கும் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான 'எங்ஸ்ட்லிகெனை' பார்த்து ரசிப்பதற்கென்றே பிரத்யேகமாக மனிதன் உருவாக்கிய உப்பரிகைதான் இந்த மலைகிராமம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள் ஆடல்போடெனர்கள். அதை நான் மறுக்கப் போவதில்லை. அருவியை அருகே இருந்து பார்க்கவேண்டுமென்றால் இரண்டு மணிநேரம் நடந்துதான் செல்லவேண்டும். அதற்காகவே நடைபாதையையும், பிரத்யேகமாக பாலங்களையும் அமைத்திருக்கிறார்கள். எங்ஸ்ட்லிகென் ஆல்ப் மலை உருகித் தோற்றுவிக்கும் அருவியும், இன்னும் பல நீரோடைகளும் ஒண்றிணைந்து உருவாகும் எங்ஸ்ட்லிகென் நதி வளைந்து நெளிந்து பள்ளத்தாக்கில் ஓட, அதனுடன் இணைந்து கண்கவர் மலைப்பாதையில் காரோட்டிக்கொண்டு செல்வது என்பது என்னளவில் ஸென் நிலையைத் தரும் செயல். மேகங்களோடு சதா முட்டி மோதிக்கொண்டிருக்கும் அந்தப் பாரிய ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கிடையே பள்ளத்தாக்கில் சற்று உயர்வான பகுதியில் அமைந்த இந்தக் கிராமம் பனிச்சறுக்கு ஓய்வகங்களுக்கும், பண்ணைக் குடிசைகளுக்கும் பெயர்போனது. இந்தியச் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு கிராமம். 
"ஆடல்போடெனில் வாழும் ஃபோகெல்லிஸி" என்கிற நாட்டுப்புற பாடல் ஸ்விட்சர்லாந்து மக்கள் மட்டுமல்லாது, இங்கு பனிச்சறுக்கு விளையாட வரும் ஐரோப்பியர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமான பாடல். ஃபோகெல்லிஸி என்கிற பெண்ணைப் பற்றிய பாடல் அது. அவளைப் பற்றிய நாடோடிக் கதையை ஆடெல்போடெனில் யாரைக் கேட்டாலும் சொல்கிறார்கள். விவேகமுள்ள அந்தப் பெண்ணின் வரலாறு எனக்கு சுவாரசியமாகப் பட்டதால் அதைத் தமிழில் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்தக் குறுங்கட்டுரையை என்றாவது யாராவது வாசிக்கக் கூடும். வாசிப்பவர்களில் எவரேனும் ஆடெல்போடென் செல்ல நேரும்போது நினைவுகூர்ந்தால் மகிழ்ச்சியடைவேன். 
ஆடல்போடெனுக்கு அருகேயுள்ள பூட்சி பள்ளத்தாக்கில் ஒரு சிறிய மலைக்குடிசையில் கனிவான முகம் கொண்ட லிஸி என்கிற பெண் தனியாக வசித்து வந்தாள். தனியாக வாழ்வதற்கும் தனிமைக்கும் கடலளவு வித்தியாசமிருக்கிறது. பெருங்கூட்டத்துக்கு மத்தியிலும் தனிமையை உணர்ந்தவர்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும். தனியளாக வாழ்ந்து வந்த லிஸி என்றுமே தனிமையை உணர்ந்ததில்லை. ஊர் மக்களோடு பழகுவதற்கு அவளுடைய கூச்ச சுபாவம் தடையாக இருந்தாலும், காட்டு விலங்குகளுடன் சகஜமாக பழகக் கூடியவளாக இருந்தாள். தன்னுடைய உணவை விலங்குகளுடன் பகிர்ந்துகொண்டு கிட்டத்தட்ட விலங்குகளைப் போலவே வாழ்ந்து வந்தாள். 
லிஸிக்கு பறவைகளின் மீது அதீத காதல். பறவைகளுடன் பேசும் திறமையுடைய லிஸியுடன் ஆரஞ்சு நிற அலகு கொண்டதொரு பெரிய காகம் நெருங்கிப் பழகியது. அவள் தனியாக இருக்கும் போதும், காடுகளில் சுற்றித் திரியும் போதும் என்று எப்போது பார்த்தாலும் அவள் தலை மீது வட்டமிட்டபடி அவளுக்கு ஒரு பாதுகாவலனாக இருந்த அந்தக் காகம் அவள் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதனாலேயே ஊர் மக்கள் அவளை "ஃபோகெல்லிஸி" (ஃபோகெல் லிஸி - பறவை லிஸி) என்று அழைத்தார்கள். "ஃபோகெல்" என்றால் டச்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் "பறவை" என்று பொருள்படும். 
பறவைகளையும், விலங்குகளையும் தவிர்த்து, லிஸி மூலிகைத் தாவரங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். எளிமையான உடைகளையும் வலுவான காலணிகளையும் அணிந்துகொண்டு, மலைகளில் அலைந்து திரிந்து ஆல்பைன் மூலிகைகளை சேகரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். மூலிகைகளைக் கொண்டு அவளால் குணப்படுத்த முடியாத வியாதியே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஊர்மக்கள் அவளுடைய மூலிகை அறிவின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அரிதாகவே கிராமத்துக்குள் அடியெடுத்து வைக்கும் லிஸியின் மூலிகை அறிவைப் பாராட்டிய ஆடல்போடெனின் மருத்துவரே சமயங்களில் அவளைத் தன்னுடைய மருத்துவ குடிலுக்கு வரச் சொல்லி, நோய் நிவாரணிகளை உருவாக்குவதற்கு அவளுடைய உதவியைப் பெற்றுக்கொள்வாராம். அதனால் "பறவை லிஸிக்கு", "மூலிகை லிஸி" என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது. 
பறவைகள், விலங்குகள், மூலிகைகள் என்று இயற்கையையே தன்னுடைய வாழ்க்கையாகக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த லிஸி தன்னுடைய தொண்ணூறாவது வயதில் ஒரு அக்டோபர் மாதம் மலையின் மீது நடந்து செல்லும் போது வீசிய சூறைக்காற்றில் சிக்கிச் சமநிலை இழந்து, தொங்குபாறையிலிருந்து மயங்கி விழுந்து மரித்திருக்கிறாள். வழமை போல் அவளுடைய தலையின் மீது வட்டமிட்டுக்கொண்டிருருந்த காகத்தால் அவளுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. லிஸியின் உயிரற்ற உடலுக்கு மேல் வட்டமிட்டு வந்த காகம், சிறகுகளற்ற உயிரினம் போன்று அவளுக்கு அருகே இருந்த பாறையின் மீது விழுந்துத் தன்னை மாய்த்துக்கொண்டதாம். 
ஃபோகெல்லிஸியின் கதையை மழலையர் பள்ளி ஆசிரியரும், நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான ஆன்மேரி ஸ்டாஹ்லி-ரிச்சர்ட் எழுதி விளக்கப்படங்களுடன் கூடிய நூலாக வெளியிட்டிருக்கிறார். ஆடல்போடென் நகருக்குள் நுழைவதற்கான சுற்றுவளைப்பு வழியின் மையத்தில் ஃபோகெல்லிஸிக்கு பெரியதொரு மரச்சிலையை வைத்திருக்கிறார்கள். தன்னுடைய தலைக்கு மேல் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்து லிஸி பேசிக்கொண்டிருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட கலைப் படைப்பு அது. கிராமத்துக்குள் எங்கு சுற்றினாலும் லிஸி, அவளுடைய காகத்தைப் போன்றே நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறாள். உணவகங்கள், மருந்தகங்கள், விடுதிகள் என்று எங்கு பார்த்தாலும் அவள் பெயர்தான். அவ்வளவு ஏன் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வை-ஃபை கடவுச்சொல் "ஃபோகெல்லிஸிxxx". 
மலையிலிருந்து விழுந்து மரித்த பறவைப் பெண்ணும் அவள் நேசித்த பறவையும் ஊர் மக்களால் இவ்வாறு பலவிதங்களில் இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவதாலும், அவளுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நாட்டுப்புற பாடலின் மூலமாகவும், ஆன்மேரியின் நூலின் மூலமாகவும், என்னைப் போன்று ஓரளவுக்கு எழுதத் தெரிந்த பயணிகளின் மூலமாகவும் அழியாத நிலையை எய்தியிருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..