ஏன் முதல் ஏடு வரை...


சிறிது குழப்பமான தலைப்புதான்.

என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த இடுகையைப் படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்குகிப்ளிங் முறை (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

அது என்ன 'கிப்ளிங் முறை' என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது.

Rudyard Kipling - எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய 'IF' என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF - உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

அவரது "The Elephant's Child" கதையில் வரும் I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

I KEEP six honest serving-men
 (They taught me all I knew);
Their names are What and Why and When
 And How and Where and Who.

நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், 'ஏன்?', 'என்ன?', 'எப்போது?', எங்கே?', 'எப்படி?' மற்றும் 'யார்?' என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.    

இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார்வினைசெயல்வகை’ அதிகாரத்தில் இன்னும் ஒருபடி மேலேசென்று விளக்கிவிட்டார்.

ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் - 'ஏன்?'. ஆனால், அதை விடாமல் 'ஏன்?', 'ஏன்?', 'ஏன்?', 'ஏன்?', 'ஏன்?' என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் - ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும்ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

"ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?" என்பதில் தொடங்கி "ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?" என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: "அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.  

ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் 'கேள்விகேட்டுப் பெறும் திறம்', அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

 •         குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்
 •         இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை - அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
 •          'கற்றலின் கேட்டல் இனிது' என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

இலக்கியமும், வரலாறும், அறிவியலும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

“அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

Wikipedia is a platform where the tacit knowledge that thousands of people carry in their heads is converted into explicit knowledge. AND this knowledge is made available to the whole world. However, It may not be complete.

நானும் ஒரு விக்கிப்பீடியன் என்ற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் அதனைப் பதிவு செய்கிறோம்.

ஆனால், விக்கிபீடியாவைக்கூட எந்த அளவிற்கு இன்று உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

இவையனைத்துமே 'நுனிப்புல் மேய்வது' போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது

வேறு என்னதான் வழி?

ஏடுகளையும், புத்தகங்களையும் வாங்கிப் படிக்கலாம்.

ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது

கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் - மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல - என் மனைவியே தான். வேண்டுமானால் அவரைத் திட்டிக்கொள்ளுங்கள் (இரகசியமாக).

இதற்கான காரணத்தைச் சொன்னால், அவளுடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனத் தென்படலாம். புத்தகக்கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

'யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற' வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களையும், ஏடுகளையும் வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள்எனது முதல் இடுகையில் நான் கூறியிருந்ததுபோல்வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’ பேசிவிட்டோம்!

வா..SEE ...! 

வாசிப்போம்! ரசிப்போம்! ருசிப்போம்!

கருத்துகள்

 1. இந்த பதிப்புக்கு தமிழில் கருத்து தெரிவிக்க முனயும்பொழுதுதான் எனது தமிழ் மொழி திறன் எந்த அளவுக்கு தாழ் நிலையில் உள்ளது என்பதை அறிந்தேன். நான் கருத்து தெரிவித்து முடிப்பதற்குள் நீங்கள் மற்றுமொரு பதிப்பை எழுதி முடித்தாலும் விந்தை இல்லை...
  நல்ல முறையில் எழுதி உள்ளீர்கள் !!!.. ஆம் , வாசிப்பு குறைந்து விட்டது ..அதுவும் தாய் மொழியில் வாசிப்பதென்பது மிகவும் குறைந்து விட்டது.... தாய் மொழியில் வாசிப்பது குறைந்ததால் நமது நாட்டில் (முக்கியமாக தமிழகத்தில்) அறிவியல் கண்டுபிடிப்பகளும் குறைந்து விட்டது...

  வாசிப்போம் !!!.. அதுவமல்லாமல் , வாசிப்பதை தெளிவாக வாசிக்க வேண்டும் மற்றும் வாசிபிக்கவும் வேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு...... இன்று மடிக்கணினி, கைப்பேசி, video games, tablets இத்யாதி இத்யாதிகளுடன் பொழுதை கழிக்கும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய மிக நல்ல பழக்கங்களுக்குள் முதன்மையானது புத்தகம் வாசிக்கும் / படிக்கும் பழக்கம். இதை நான் எனக்காகவே எழுதபட்டதாக உணர்கிறேன்....... நன்றி......

  "ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்துகிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில்அமர்ந்து வாசிப்பது போல் வராது."

  .......... உண்மை உண்மை

  பி.கு: அற்புதமான உவமைகள் கூறும் உங்கள் தர்மபத்தினிக்கும் என் வாழ்த்துக்கள் - எழுத அவகாசம் கொடுப்பதற்குத்தான் !

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

  http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு
 5. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  http://blogintamil.blogspot.in/2015/01/4_23.html

  Rudyard Kipling என்று படித்ததும் இங்கே வந்தேன். If கவிதையைத்தான் ரசிப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டே படித்தபோது அது அங்கே தென்பட்டது. மிக்க மகிழ்ச்சி.

  If you can meet with Triumph and Disaster
  And treat those two impostors just the same

  என்ற வியப்பான வரிகள் வரும் இந்தக் கவிதையில். இதுதான் விம்பிள்டன் கோர்டில் ஒரு கல் பலகையில் இருப்பதாக படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்!
  இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
  வாழ்த்துக்கள்!
  ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
  திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
  பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
  படைப்புகள் யாவும்.

  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

  பதிலளிநீக்கு
 7. நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்!! வாழிய நலம்!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்