தீபாவளி - ஒரு FLASHBACK...


தீபாவளி அன்று மாலை, லூவன் நகரில் இருக்கும் நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து.

ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது.

குறிப்பு: இதற்குப் பின்வரும் பகுதியைப் படிப்பதற்குப் முன்பு, சில மணித்துளிகள் நீங்களும் கண்களை மூடி, உங்கள் சிறுவயது (12-14) நாட்களை எண்ணிப் பார்க்க முயலவும்; பின்னர் அதே மனநிலையில் இந்த விடுகையைத் தொடர்ந்து வாசிக்கவும்.

அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. (இப்போதும்  அப்படித்தான் - என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.)

என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், இரண்டு சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயார் சொன்னார். ஆகையால் அந்த நாளில், பெரும்பாலும் அவர் மௌனமாகவோ அல்லது தியான நிலையிலோ தான் இருப்பார்.

இது எங்களுக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவரது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாங்களும் தீபாவளி கொண்டாட விரும்பியதில்லை - கொண்டாடியதில்லை. "பட்டாசு வேண்டும், புத்தாடை வேண்டும்" என்று நானோ, என் தம்பியோ கேட்டதே இல்லை. இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்?

இருந்தாலும், நாங்கள் சிறுவர்களாதலால், மற்ற சிறுவர்கள் சரவெடிகள் வெடிப்பதையும், மத்தாப்பூக்கள் கொளுத்துவதையும் பார்க்கும்போது மனம் "நமக்கும் கிடைக்காதா?" என ஏங்கும். "பரவாயில்லை, மத்தாப்பூ மட்டுமாவது வாங்கலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?" என்று எனக்கு சிறிது மனது மாறினாலும், "வேண்டாம்!," என்று மறுத்துவிடுவான் என் தம்பி. அவ்வளவு sincerity -யும், பெருந்தன்மையும், புரிதலும் அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு இருந்தது ஆச்சர்யமான விஷயம் தான்.

தீபாவளி நாளன்று வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவோம். எங்கள் எதிர் வீட்டு நண்பன் ரமணி வண்ண வண்ண வெடிகளாய் வெடித்து மகிழ்வதை நாங்கள் இருவரும் மாடிப்படியில் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

அதற்கு பின்னால் நாங்கள் செய்ததை இன்று நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

என் பக்கத்து வீட்டு நண்பன் ஒருவன், "நீங்க வெடிக்கலையா….? ஏ…ன்? எதற்கு…?" என்று ராகத்தோடு கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுவான். அதனால், அவன் எழுவதற்கு முன்னரே, எதிர்வீட்டு வாசலில் இருக்கும் வெடித்த காகிதக் குவியல்களையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு விடுவோம்.  

பட்டாசு வெடிப்பதை  விட, இந்த விளையாட்டு தான் எங்களுக்குப் பேரானந்தமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

விடிந்ததும் நம்ம பக்கத்து வீட்டுத் தலைவர் சரவெடி கிளப்புவார். வழக்கம் போல வந்து கேள்விக்கணைகளை தொடுப்பார். "அதெல்லாம் நாலு மணிக்கே வெடிச்சாச்சு!" என்று ஒரு கதையை அள்ளி விட்டுவிடுவோம். அவனும் அதை நம்பி சரவெடியில் மீண்டும் மும்முரமாக இறங்கி விடுவான்.     

அப்போதெல்லாம் என் மனதை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. தெருவில் சரவெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தால் போதும், ஒரு குறவர் இனச் சிறுவர் கூட்டம் எங்கிருந்தாலும் ஓடி வந்து அதை ரசிக்கும். ஒரு நீண்ட சரவெடியை கொளுத்தும் போது, எல்லா வெடிகளும் வெடிக்காது. ஒன்றிரண்டு வெடிகள் தப்பிப் போயிருக்கும். சரவெடி ஓய்ந்ததும், அந்தச் சிறுவர்கள் தப்பிய வெடிகளையெல்லாம் தேடியலைந்து பொறுக்கியெடுத்து வெடித்து மகிழ்வார்கள்

அவர்கள் என்னவோ சந்தோஷித்துக் கொண்டிருந்தாலும், அவ்வாறு அவர்கள் தேடித்திரிவதைப் பார்க்க பாவமாகவும், சிறிது விந்தையாகவும் கூட இருக்கும். எனக்கும் அவர்களைப்போலவே பட்டாசு கிடையாது தான். ஆனால், அது போதாமையினாலோ, இல்லாமையினாலோ அல்ல என்கிற புரிதல் எனக்கு இருந்தது. அவர்களுக்குத் தருவதற்காகவாவது கொஞ்சம் பட்டாசு வாங்கினால் நன்றாக இருக்குமே என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்.

அதிலும் பார்த்தீர்களேயானால், அவர்கள் பொறுக்கியெடுத்த வெடிகள் பலவற்றில் திரிகளே இருக்காது. இருந்தாலும் விடாமல் அவற்றையெல்லாம் பிய்த்தெடுத்து, உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் சேகரம் செய்து கொண்டு போய் மொத்தமாகக்  கொளுத்திக் குதூகலிப்பார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் - 'குகன்'.

அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது.

அவர்களுடைய வாழ்க்கைமுறையே வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சு வழக்கில் அவர்களை நாம் "குருவிக்காரங்க" என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை - எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதுமே ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை

என்னுடைய வாழ்க்கையும்  'கொஞ்சம்' சுதந்திரமானது தான். நான்கு மணிக்கு பள்ளி விட்டால், நான்கு பதினைந்திற்குள் வீட்டில் இருக்க வேண்டும். என் சுதந்திரம் அந்த அளவில் இருந்தது.

அவன் எனக்கு நண்பனான பின், நான் நிறையவே மாறிவிட்டிருந்தேன். அவனோடு வேட்டையாடச் சென்றேன், தெருவில் கோலி எல்லாம் விளையாட ஆரம்பித்தேன். அவன் கூடாரத்திலெல்லாம் (அதுதான் வீடே!) அவனுடன் அமர்ந்து  உணவருந்தி மகிழ்ந்தேன். அந்த கூடாரத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை முறையைப் பற்றியும் எழுதினால் நிச்சயமாக ஒரு இடுகை பத்தாது. ஒரு புத்தகமே எழுதவேண்டும்.    
    
அவன் செய்வதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறேன். அந்த ரசனைதான் இன்றுவரை என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்.

அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆரம்பத்தில் ஏனோ என் தாயார் விரும்பவில்லை. அவனையும் எங்களுக்குச் சமமாக  நடத்தவேண்டும் என்று அவனது அங்கீகாரத்திற்காக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்தினேன். அது வேலைக்கு ஆகாததால் பிறகு, காந்தீய வழியில் உண்ணாவிரதமெல்லாம் இருந்ததுண்டு. ஆனால், வெகு விரைவில் அவன் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். எல்லோருக்கும் அவனைப் பிடித்துப்போய் விட்டது.

அவனோடு சேர்ந்து நான் கோலி விளையாடியது மாறி, அவன் எங்களோடு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவ்வளவு ஏன்? அந்த சமயத்தில் பிரபலமான PACMAN, PARATROOPER போன்ற விளையாட்டுக்கள் எல்லாங்கூட, எங்கள் வீட்டு கணிப்பொறியில் விளையாட ஆரம்பித்தான்.

பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த அவன், என் தந்தையின் உதவியோடு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்தான். அந்த வயதிலேயே எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எதைச் சொன்னாலும் அப்படியே 'பற்றிக்கொள்ளும் அவனது திறம்' என்னை வியக்க வைக்கும்.

இவையெல்லாம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு சமயத்தில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால், அவர்களின் கூடாரங்களெல்லாம் அகற்றப்பட்டன. 'சிறகடித்து பறக்கும் சுதந்திரப் பறவைகளின் வாழ்க்கை" என்று நான் கருதிய அந்த நாடோடிகளின் வாழ்க்கையில் இருந்த சிரமங்களும், சிக்கல்களும், அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

நாமெல்லாம் இன்று Wi-fi சமிக்ஞைகள் சில நொடிகள் வரவில்லையென்றால் கூட பொறுமையிழந்துவிடுகிறோம். ஆனால்,  படுக்கைகளையும், பொருட்களையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து போன அந்த நாடோடிக்கூட்டத்தின் வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!.

அதன்பிறகு, அவனை சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்து போனது என்னவோ என் நண்பன் தானே ஒழிய, எங்கள் நட்போ அல்லது அந்த நட்பின் மூலம் கிடைத்த அனுபவமோ அல்ல!

இல்லையென்றால், கிட்டத்தட்ட பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால், இருபது வருடங்கள் கழித்து அவனைப்பற்றி எண்ணி, எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். இன்னும் சொல்லப் போனால், எதையெதையோ உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்த எனக்கு, எனது இரண்டாவது இடுகை இதுவாகத்தானிருக்கும் என்பது நேற்றுவரை தெரியாது.

இணையவெளியில் இதனைப் பதிவுசெய்து, உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த நட்பும், அனுபவமும் சாஸ்வதம் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். அதேபோல, இரைச்சல் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலில், இதுபோன்ற பதிவுகள் மனதிற்கு சிறிதளவேனும் இனிமை தரும் என்றும் நம்புகிறேன்.

இன்றைக்கு அது போன்ற ஒரு நட்போ அல்லது எனக்கு அப்போதிருந்த மனநிலையோ கோடி கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

மீண்டும் வருமோ அத்தினங்கள்?

அத்தினங்கள் ஒவ்வொன்றும்
ரத்தினங்கள்!
உயிர்த்து எழுமோ,
மரித்த தினங்கள்?

இன்னும் நிறைய...

ரசிப்போம்... ருசிப்போம்...              


கருத்துகள்

 1. Very Good... lot of memories, especially: - Burst cracker papers, etc.

  But in these blog, i was really impressed with that Kuruvi Kaara Paiyan... It reminds us that God has us given many things (probably due to our parents Karma or our previous janma Karma) which are not sure whether we are eligible, but we should give back something to the society... If @ all not for Service, atleast for our kids and our next generation of life!

  Kudos Madhavan!

  பதிலளிநீக்கு
 2. Moments are temporary, but memories are forever ....
  அத்தினங்கள் மரித்துப்போயிருந்தாலும் அவற்றின் நினைவுகள் ரத்தினமாய் ஒளிவீசிகொண்டு தானே இருக்கிறது ...
  நம் வாழ்வை லேசாக்கி நம்மையும் இளமையுடன் இருக்கச்செய்வது இத்தகைய நல்ல நினைவுகளே ....
  பகிர்தலுக்கு நன்றிகள் பல...
  ரசிக்கவும் ருசிக்கவும் ஆவலாக இருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 3. Madha i got the chance to read today.. Impressive.. U have amazing language + expressions.. Keep it up..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்