ஏற்புரையிலிருந்து..

அம்மாவின் தேன்குழல் புத்தக வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய ஏற்புரையில் இருந்து ஒரு பகுதி:


இது ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஏற்புரை என்பதால், ஒரு கதை சொல்லி என்னுடைய ஏற்புரையைத் தொடங்க இருக்கிறேன். 

இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெரியவர் சாலையோரக் கடை ஒன்றின் சுவரை ஒட்டி இன்னொரு சுவரெழுப்பி, மேடை அமைத்து தேநீர்க்  கடை ஒன்றை நடத்தி வந்தார். அங்கு அன்றாடம் பல வாடிக்கையாளர்கள் தேநீர் பருக வருவார்கள். வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர்கள். அந்தத் தாத்தாவும் எப்போதும் வெள்ளை ஜிப்பா அணிந்து பார்ப்பதற்கு ஒரு இசுலாமியரைப் போலவே இருப்பார். உருது மொழியிலும் சரளமாகப் பேசுவார். அங்கு வரும் இசுலாமியப் பெரியவர்கள் சிலர், 'எல மாத்தி டீ போடு பாய்!' என்று கேட்பார்கள். சில சமயம் அதற்குச் சம்மதித்து புது இலையில் தேநீர் போட்டுக் கொடுப்பார். சில சமயம் 'இப்போதான் மாத்தினேன் பாய்' என்று கூறி மறுத்துவிடுவார்.

அந்தத் தாத்தாவுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் பேரன் ஒருவன் இருந்தான். அவன் மாலைவேளைகளில் பள்ளி விட்டவுடன் நேராக அவனுடைய தத்தாவின் தேநீர்க் கடைக்குத்தான் வருவான். அவனது பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் ஆதலால் மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்தக் கடையில்தான் அமர்ந்திருப்பான். அந்தக் கடையில் இருந்த மேஜை ஒன்றின் மீது அவன்  அமர்ந்திருக்கும் அத்தனை நேரமும் அவன் தன்னை  ஒரு மகாராஜாவாக உணர்வான். அப்படித்தான் அவனுடைய தாத்தா அவனைப் பார்த்துக் கொண்டார். மூன்று மணிநேரத்தில் குறைந்த பட்சம் மூன்று கோப்பை தேநீராவது அவனுக்குக் கொடுக்கப்படும். அத்தனையும் 'இலை மாற்றிய' பின்பு போடப்பட்ட முதல் தேநீராக இருக்கும் - அவன் கேட்காமலேயே. அந்த இரண்டு, மூன்று மணிநேரங்களுக்குள்ளாகவே சாலைக்கு மறுபுறம் இருந்த பேக்கரியிலிருந்து அவனுக்கு வரிக்கியும், கேக்கும், பிஸ்கட்டுகளும் ஒன்றடுத்து ஒன்றாக தருவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். சில சமயம் பழரசம் கூட கிடைக்கும். எனவே அவன் தன்னை ஒரு மகாராஜாவாக உணர்வான். இறுதியாக அவன் வீட்டுக்குச் செல்லும் போது அவனுக்கு நாலணா கொடுத்து 'உன் உண்டியில போடு' என்று கொடுத்தனுப்புவார் - தினமும்! இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு நான்காவது படிக்கும் சிறுவனுக்கு நாலணா பெரிய பணம். 

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பள்ளி விட்டு வழக்கம் போல் கடைக்கு வந்துகொண்டிருக்கும் போது, தொலைவில் அவன் கண்ட காட்சி அவனுக்குப் பேரதிர்ச்சி தந்தது. சாலை விரிவாக்க பணிகளின் காரணமாக அவனுடைய தாத்தாவின் தேநீர்க் கடை இடித்து நொறுக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் அவனுடைய அரண்மனை இடிந்து நொறுங்கி வெறும் செங்கற்களாக இறைந்து கிடந்ததை கண்டதும் நிலைகுலைந்து போனான். அவனுடைய தாத்தாவும் இன்னொரு இசுலாமியப் பெரியவரும், இறைந்து கிடந்த செங்கற்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள்.

தாத்தாவுக்கு அருகே ஓடிவந்தவன், 'என்னாச்சு தாத்தா?' என்று மூச்சிரைக்கக் கேட்டான்.

'இது நம்முடைய இடமில்ல. அதான் இடிச்சிட்டாங்க!' என்று கூறினார். ஆனால் அந்தச் சிறுவனால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; புரியவுமில்லை.

அவனது தாத்தாவின் முகத்தைப் பார்த்து மீண்டும் கேட்டான், 'ஏன் இது நம்முடைய இடமில்லை?' 

'இது அரசாங்க இடம். நமக்காக ஒரு இடம் இருந்திருந்தா இதை அவங்க இடிச்சிருக்கமாட்டாங்க' என்று கூறினார். 

'நமக்கு எப்படி எடம் வாங்கறது?' என்று அந்தச் சிறுவன் கேட்டுக்கொண்டே போனான்.

'அதுக்கு நீ முதல்ல பெரிய பையனா ஆகனும். நீ பெரியவனா ஆன பிறகு எனக்கு எடம் வாங்கித்தரியா? அதுல டீக்கடை கட்டுறேன்' என்றார் அந்தத் தாத்தா.

'உனக்கு ஒரு மிகப் பெரிய எடம் வாங்கி, அதுல ஒரு மிகப் பெரிய டீக்கடை கட்டித்தறேன்.' என்று தன்னிரு கைகளை விரித்துக் கூறினான். மிகப் பெரிய இடத்தில் சிற்றுண்டிச்சாலைக் கூட கட்டலாம். ஆனால் அவன் குழந்தைதானே!

அந்தத் தாத்தா வலியை மறந்து ஒரு கணம் சிரித்தார்.

'அந்தச் சிரிப்பும்,  இறைந்து கிடந்த செங்கற்களை அவர் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைக்கும் காட்சியும்' அந்தச் சிறுவனின் மனதில் உறைந்து போயிருந்தது.

அந்தச் சிறுவன் பள்ளிக்கல்வி முடித்தான். உயர்கல்வி பயில வெளியூர் சென்றான். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே அவனுக்கு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் சேர்வதற்கு முன்பே அவனுடைய தாத்தா காலமாகிவிடுகிறார்.

அவன் வடநாடு சென்று வேலையில் சேர்கிறான். முதல் மாத சம்பளம் வரும்போது அவனுக்குத் தாத்தாவின் நினைவு வருகிறது.  அவர் அவனுடைய தந்தைவழி தாத்தா. அவர் நினைவாக தாய்வழி தாத்தாவுக்கு அவர் கேட்ட ஒன்றை வாங்கித் தருகிறான். அதன் மூலம் சிறிது மனநிறைவு அடைகிறான். மீண்டும் தென்னகம் வருகிறான். வெளிநாடு செல்கிறான். தேநீர்க்கடை அல்ல, ஒரு சிற்றுண்டிச்சாலையே கட்டும் அளவுக்கு மனோபலத்தையும், நிதிபலத்தையும் அவன் பெற்றுவிட்டான். ஆனால், அவனுடைய தாத்தா அவனுடன் இல்லை. அதனால் அவன் வேறொரு முடிவு எடுத்திருந்தான். அதன் பிறகு அவனுக்குக் எதன் மூலமாவது கிடைக்கும் பெருமையும் ஆகட்டும், புகழும் ஆகட்டும், பெயரும் ஆகட்டும், அவற்றின் பெரும்பகுதி அவனுடைய தாத்தாவுக்கே சென்று சேர வேண்டும் என்பதுதான் அது. சாப்பிடும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று கூறிவிட்டு சாப்பிடுவார்களே அது போல. அத்தனையும் கிருஷ்ணனுக்கே என்பது போல. 

அத்தனையும் தாத்தாவுக்கே! அந்தத் தாத்தாவின் பெயர் - 

'மாதவன்'.

கருத்துகள்

  1. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/02/blog-post.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்