கணையாழியின் 34-ஆம் பக்கம்

விடுமுறை கழிந்து பெல்ஜியம் வந்து சேர்ந்தவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்: 

"கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது."

சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.  

'Kanayazhi of Feb carries an article on your short story collection' என்று எழுதியிருந்தவர் தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரலும், மூத்த கலை விமர்சகரும், எழுத்தாளருமான திரு. வெ.சா (வெங்கட் சாமிநாதன்). 
திரு.வெ.சா அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் 

கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று கணையாழி பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தபோது, வேறொருவர் என் கதைகளைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையைப் பற்றி எனக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், கட்டுரையின் தலைப்பையும், அதற்குக் கீழ் அவருடைய பெயரையும் பார்த்தவுடன் 'இனிய அதிர்ச்சி'! சிறிது நேரம் கழித்தே வாசிக்க ஆரம்பித்தேன். அருகே என் மனைவியும், நண்பன் அருணும் இருந்தார்கள். அவர்களும் உவகை அடைந்தார்கள்.  

"இப்போது பெல்ஜியத்திலிருந்து... ஒரு மாதவன் இளங்கோ" என்கிற தலைப்பில் 'அம்மாவின் தேன்குழல்நூலைஅறிமுகப்படுத்தி ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் புத்தக முன்னுரையில் நான் எழுதியிருந்த என் அனுபவக் குறிப்பு ஒன்றைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதே கட்டுரையில் வல்லமையைப் பற்றியும், வல்லமையில் எழுதிவரும் சக படைப்பாளிகளான பழமைபேசி, கே.எஸ். சுதாகர் போன்றவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். 

கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போது, ஒரு மழை நாளில் மாலைப்போழ்தில் சென்னையில் அவரைச் சந்தித்த தருணம் மறக்கவியலாது. எழுத்தாளர் திலீப் குமாரும் உடனிருந்தார். திலீப் குமாரைப் பார்த்து கைகுலுக்கிய அந்த நொடியிலிருந்தே என்னுடைய நியூரான்களில் அவரைத் தேடிக்கொண்டே இருந்தேன். அதை என் குழப்ப முக பாவனையிலிருந்தே நிச்சயம் அவர் ஊகித்திருப்பார். சட்டென்று சொல்வனம் இதழில் பார்த்த அவருடைய புகைப்படம் என் நினைவுக்கு வந்தது. அவருடைய வேறு எந்த புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை.  இத்தனைக்கும் அன்று காலைதான் அவரைப் பற்றி ஞாநி அவர்களின் இல்லத்தில் பேசிக்கொண்டிருந்தேன். ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியல் மூலமே அவருடைய சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது. சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவம் என்றும், அவருடைய 'தீர்வும்' ,'அக்ரஹாரத்தில் பூனையும்', 'கடிதமும்', நான் மிகவும் ரசித்த சிறுகதைகள் என்றும் அவரிடமே தெரிவித்தேன். 'மூங்கில் குருத்து' சிறுகதைக்கு கிட்டத்தட்ட என் வயது. (அவரது படைப்புகளைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்)

திரு. திலீப் குமார் அவர்களுடன்

சரி. இந்தக் குழப்பங்களில் இருந்து மீள்வதற்குச் சில நிமிடங்கள் ஆனது, அதற்குள் திரு. வெ.சா அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார். 'தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல்', 'கலை இலக்கிய விமர்சகர்', 'எழுத்தாளர்' என்று தான் ஏந்தியிருக்கும் அத்தனையத்தனை அடையாளங்களையும் உதறிவிட்டு, எனக்கும், என் மனையாளுக்கும் ஒரு நண்பனாகவும், ஒரு தாத்தாவாகவும் மட்டுமே தன்னைக் காட்டிக்கொண்டார். அத்தனை எளிமை. அத்தனை கனிவு. அவரிடம் என்னென்னவோ 'இலக்கியத்தனமான விஷயங்கள்??!!' எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதுவுமே பேசத் தோன்றவில்லை. அதுவும் கூட எனக்குப் பிடித்திருந்தது. வாசகனாக எழுத்தாளனை சந்திக்கச் சென்றவன், ஒரு பேரனாகத் திரும்பினேன். ஆமாம். என் தாத்தா இன்றிருந்தால் அவருடைய வயதிருக்கும்.  

என் மனைவி கூட, "இலக்கியவாதிகளைச் சந்தித்து விட்டு வந்தது போலவே தெரியவில்லை. நெருங்கிய உறவினர்களுடன், தந்தையுடன், தாத்தாவுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியோடு பேசிவிட்டு வந்தது போலிருக்கிறது" என்று கூறினாள். நானும் அவ்வாறே உணர்ந்தேன். உண்மையில் அவரை முதன்முறை சந்திப்பது போலவே தெரியவில்லை. அது ஒன்றும் விந்தையில்லை. ஏனெனில் அவரை வாசிக்கும்போது அவருடன் வாழ்ந்துகொண்டே, அந்த இடங்களுக்கெல்லாம் பயணித்தது போன்று, அந்த மனிதர்களைச் சந்திப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் - சி.சு.செல்லப்பா ஒரு வாமன அவதாரம் கட்டுரைத் தொகுப்பு. 'அவர் செல்லப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நுழையும் போது, செல்லப்பா அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மூட்டைக் கட்டிக்கொண்டிருந்ததாக' ஒரு இடம் வரும். உண்மையில் அந்தக் காட்சி என்னுள் உறைந்து போயிருக்கிறது. அவர்கள் இருவரோடும் மூன்றாவது ஆளாக, ஒரு சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்தற்கு முந்தைய நாள் வரை, அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவருடைய கருப்பு வெள்ளை உருவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இந்த மடலை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் அப்படியில்லை. என் தாத்தாவே நினைவுக்கு வருகிறார்.

நெகிழ்ச்சியாக இருக்கிறது. 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' புத்தகத்தை வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகனுக்கு அதன் நடுப்பக்கத்தில் கட்டுரை.

"...எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே..." என்று புத்தக முன்னுரையிலேயே அவர் அம்மாவின் தேன்குழலையும், அமைதியின் சத்தத்தையும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்தது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  

"இந்தக் கட்டுரையை நிச்சயம் நான் தொடர்ந்து எழுதுவதற்காக, எனக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டே எழுதியிருப்பீர்கள் என்பதை அறிவேன். 

ஆயினும், என்னளவில் இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருதும் ஆகும். 

இதன் மூலம் தாங்கள் மிகப் பெரிய பொறுப்பை என் தோள்களில் ஏற்றி வைத்திருப்பதாகவே உணர்கிறேன். நீங்கள் முதன்முதலில் என் கதையைப் பற்றி எழுதியதை இன்றும் என் இல்லத்தில் பாரதியார் புகைப்படத்துக்கு அருகே வைத்துள்ளேன். இந்தியாவிற்குச் சென்று வந்தவுடன் எழுத்தாளர் ஞாநி அவர்கள் வரைந்த, சற்றுப் பெரிய பாரதியார் படத்தை வைத்து மாற்றினேன். அதற்கருகே இந்தக் கோப்பையையும் வைத்துவிடுவேன்.

மிக்க நன்றி, ஐயா!"

கணையாழி பிப்ரவரி இதழை மேக்ஸ்டரில் வாங்கி வாசிக்கலாம்: http://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/84244

கணையாழி கட்டுரையின் ஒளிவருடிப் பிரதிகளையும் இங்கே இணைத்துள்ளேன். (நன்றி: அகநாழிகை பொன். வாசுதேவன்)
கருத்துகள்

 1. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்