சின்ன விஷயங்களின் மனிதனுடன்..

'ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். 
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய 'சின்ன விஷயங்களின் மனிதன்' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? 

புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்:

"யானையைக் கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து."

எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்!

இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனையும் இந்த மண்புழுக்களே! நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவைகள் இந்த யானைகள்! அதைப் பற்றிய கவலை அவருக்கு இருந்திருக்கலாம்.

யானைகளுக்கிடையே நெளியும் மண்புழுவைப் பற்றி யோசிக்கும் போது நான் ஏற்கனவே எழுதியிருந்த 'அமைதியின் சத்தங்கள்' நினைவுக்கு வருகிறது. வண்ணதாசனின் அந்த மண்புழுவை நான் இப்படியெல்லாம் பார்க்கிறேன்:

இரைச்சல் விழுங்கிய இசையின் அமைதி..
பெரும்கூட்டத்தில் சிக்குண்ட தனிமைவிரும்பியின் அமைதி..
மூடத்தனங்களுக்கு இடையே மேதைமையின் அமைதி..
இருளுக்குள் ஒளிந்துகொண்ட ஒளியின் அமைதி..
ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே அடக்கமானவனின் அமைதி..
உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே ஒடுக்கப்பட்டவனின் அமைதி..
துரோகிகளுக்கு இடையே தூயநட்பின் அமைதி..
பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட உண்மையின் அமைதி..
குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே நிறைகுடத்தின் அமைதி..
இயந்திரங்களுக்கிடையே இயற்கையின் பேரமைதி..
வெட்டிப்பேச்சுகளுக்கிடையே உழைப்பின் அமைதி..
ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே எளிமையின் அமைதி ..

இப்படிப் பல யானைகளின் சத்தங்கள் என்றைக்கு செவிப்பறையை கிழித்து நம்மை செவிடனாக்குகிறதோ, அன்றைக்குத் தான் நமக்கு அத்தனை அமைதிகளின் சத்தங்களும் தெளிவாகக் கேட்கத் தொடங்கும். அப்போதுதான் அமைதி கிட்டும். அவர் மண்புழுவைக் கண்டு அமைதியடைகிறார்.

நான் பலரிடம் அவரை அறிமுகப்படுத்துவதற்காக பலமுறை கூறிய இந்த வரிகளை கடந்தவாரம் அவரிடமே நடுக்கத்தில் தவறாகக் கூறிவிட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. அவரே அதை சரிசெய்தார். இருப்பினும், வேறொர் சமயத்தில் இந்த வரிகளின் தாக்கத்தில் நான் எழுதிய வரிகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உரக்கச் சிரித்து அங்கீகரித்தார். என் புத்தகத்தையும் பெற்றுக்கொண்டு 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று கூறினார். அவரிடம் பகிர்ந்து கொண்ட வரிகள்:

"நரிகளின் நடமாட்டம் கூட நாட்டில் பெருகிவிட்டது; ஆனால் நாய்களைத்தான் காணமுடிவதில்லை." 
(எண்ணத்தூறல்)

நான் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'சின்ன விஷயங்களின் மனிதன்' புத்தகத்திலிருந்து சில வரிகள் :

"... சாரல் விழுகிற இந்த தினத்தின் காலைக்கு யாரும் சாட்சியம் அளிக்கத் தயாராக இல்லை. யோசனையும் வருத்தமும் எனக்கு. வழக்கமாக வருகிறவர்கள் கூட நடையை ஒத்திப் போட்டிருந்தார்கள். சாரலில் நனைந்துவிடுவார்களாம். இத்தனை நாட்கள் வெயிலில் உலர்ந்தவர்கள் இதில் சற்று நனைந்தால்தான் என்ன? காற்றில் தலை கலையக் கூடாது என்று நினைப்பவர்கள் தானே நாம் எல்லாம்.
இந்த இடத்தில்தான் அவர் மேலும் முக்கியமானவர் ஆகிறார். அதே வேகம்தான். ஆனால் அந்த அம்புப் பாய்ச்சல் இல்லை. வேறு வேறு ராகங்களில் ஒரே பாடலை இசையமைக்க அவருக்கு முடியும் போல. தனக்கு முன் இருக்கும் செம்மண் வெளியில் விழும் அத்தனை சாரல் துளியையும் மிச்சமிருக்கும் தன்னுடைய வலதுகையில் வாங்கிவிடும் மெய்மறப்பில் இருந்தார். தன்னுடைய வலது கையை மலர்த்தி, விழுகிற ஒவ்வொரு துளியையும் வாங்குகிற முயற்சியில் உயர்த்தியும் தாழ்த்தியும் ஏந்திக்கொண்டே போனார்.
நான் நம்புகிறேன், அவருக்கு ஒரு கை அல்ல. ஆயிரம் கைகள். நான் நம்புகிறேன் , அவர் எல்லாச் சாரல் துளியையும் உள்ளங்கையில் வாங்கியிருப்பார்.
நான் நம்புகிறேன், எல்லோர்க்கும் அல்ல, அவருக்காகவே இன்று பெய்தது இந்தச் சாரல் மழை."

இதே புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கட்டுரைகள் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவை. 
  • ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை
  • இப்பொதும் கூட
  • பின்னிக்கொள்ளும் விரல்கள்

இந்த மூன்று கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றுமே வெவ்வேறு கணங்களில் அவர் கண்களில் பட்ட புகைப்படங்களைப் பற்றிய அவருடைய பார்வையை தெரிவிப்பவை. அவற்றில் 'ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை' கட்டுரையில் அவர் பேசியிருக்கும் புகைப்படத்தை மட்டும் இங்கே தருகிறேன்:  

குருதேவ் ரபீந்திரனாத் தாகூரை ஹெலென் கெல்லர் நியூயார்க்கில் சந்தித்தபோது எடுத்த படம். இதில் என்ன விந்தை இருக்கிறது. இது போன்ற எத்தனையோ புகைப்படங்களை அன்றாடம் செய்தித்தாள்களிலும், முகநூலிலும், புத்தகங்களிலும் கடந்து சென்று கொண்டுதானிருக்கிறோம். இந்தப் புகைப்படத்தை யாரிடமாவது காண்பித்து, 'உனக்கு என்ன தோன்றுகிறது?' என்று கேளுங்கள். பிறகு, மேலே நான் குறிப்பிட்டுள்ள அவருடைய கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நம்முடைய யானைப் பார்வையும், அவருடைய மண்புழுப் பார்வையும் தெளிவாக விளங்கிவிடும். ஒரு பார்வையாளன், குருதேவ், ஹெலென் கெல்லர் என்று ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் மூன்று நிமிடங்களில் மூன்று வாழ்க்கை வாழ்ந்து முடிக்கிறார். தாகூரின் தாடி இழைகளில் எழுதப்பட்டிருக்கும் தாகூரை ப்ரெயில் வாசித்து நகர்கின்றன ஹெலென் கெல்லெரின் கைகள். வாழ்க்கையின் சிறிதினும் சிறிதான விஷயங்களை; நுணுக்கங்களை ப்ரெயில் வாசித்து நகர்கிறது வண்ணதாசனின் பார்வை. தாகூரைப் போலவே வாசிக்கப்படும் நேரத்தின் பூரண அதிர்வில் நிற்கிறது வாழ்க்கை. 

புகைப்படங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்குக் கூட உயிர் கொடுக்க முயற்சிக்கும் அவருடைய பரிவும், மென்மையும், அவரால் கல்லைக் கூட எழுத்தின் மூலம் நடக்க வைக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. 'காற்றாகவும்' கட்டுரைக்கும் ஒரு புகைப்படமே தூண்டுதல். 

அசோகமித்திரன் புகைப்படம் ஒன்றைப் பற்றிய 'பின்னிக் கொள்ளும் விரல்கள்' கட்டுரையும் அப்படியே. கணையாழி இதழில் அசோகமித்திரனின் கட்டுரையுடன் வெளியான அந்தப் புகைப்படம் பற்றி அவர் எழுதியிருப்பவை:

"கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் அவருடைய புகைப்படம் அவ்வளவு நேர்த்தி மிக்கது. சமீபத்திய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  அவர் உடையைப்
பார்க்கையில் வெளிநாட்டில் எடுத்ததோ என யோசிக்க வைக்கிறது.  இங்கு,
அத்தனை பெரிய பித்தான்கள் உள்ள ஒர் மேல் கோட்டை அணிய அவரை
நிர்ப்பந்திக்கிற பருவ நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மெல்லிய ஏணியின் படியில் வலது கையையும், இடுப்பில் அவரது இன்னொரு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறார். அவர் வாழ்வின்
மொத்தக் காலமும் அவரின் காலணிகளுக்குக் கீழ் இருப்பதை, கண்களும்
அவருடைய சற்றே ஒதுங்கிய இடது கன்னமும் சொல்கின்றன. எந்தக்
கலையின் கீழும் வரமுடிகிற ஒரு முதிர்ந்த கலைஞன் போல இருக்கிறார்.
அசோகமித்திரனாக மட்டும் அல்ல,    இப்போதுதான்  இசைக்கோர்வை ஒன்றிற்கான குறிப்புகளை எழுதிவிட்டு வந்த இசைமேதையாக,  அல்லது
சர்வதேசப் பரிசு ஒன்றைப் பெறுவதற்கு முன் அலுப்பாக,  நேர்காணல்
நிமித்தமான ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் அயல்திரைப்பட இயக்குநராக,
புகை பிடிப்பதற்கு அல்லது ஒரு மிடறு அருந்துவதற்காக ஸ்டுடியோவை
விட்டு விலகி வந்து, தன் சினேகிதியை எதிர்பார்த்து நிற்கும் ஓவியனாக 
எல்லாம் உருவகித்துக் கொள்ள முடிகிறபடி அவருடைய புகைப்படம் ஒரு உலகீய அடையாளத்துடன்  இருக்கிறது."

'சின்ன விஷயங்களின் மனிதன்' என் முதல் புத்தகத்தைக் கையில் ஏந்தி நின்ற காட்சியைப் படம் பிடித்துவைத்திருக்கிறேன் என் வரிகளை அங்கீகரித்த அவரின் சிரிப்போடு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று நானும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவரது புன்னகையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.  
கருத்துகள்

  1. அருமையான கட்டுரை...
    திரு. வண்ணதாசன் அவர்களின் எழுத்துக்கு வசீகரிக்கும் தன்மை அதிகம்.... அருமை..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்