எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

முதலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

இனி இந்தக் கட்டுரையில் நான் எழுதி இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.  
'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிட்டஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செல்லப்பட்டுவிடும். அந்த அளவில்தான் டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் கொடுமையான அந்தச் சத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் இறந்தே தீரவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, அவர்களின் அனுமதி பெற்றுக்கொண்டு, மடிந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்து விட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டேன். 
டின்னிட்டஸ் பிரச்சினையின் கொடூரத்தையும், என்னுடைய போராட்டத்தையும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும். இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி Euthanasia (=கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது.
ஒரு விழிப்புணர்வுக்காக இதைப் பற்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று 'அன்பே வா' திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் ஒரு வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிட்டஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த மாபெரும் அரக்கன் இந்த டின்னிட்டஸ். அதனுடனான என் அனுபவங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் எழுத இருக்கிறேன். 
தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சரோடு போராடுவது என்பது எத்தகையது என்று தெரியாது. பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொண்டதோடு சரி. அதை 'முடி' சிறுகதையிலும் பதிவு செய்திருக்கிறேன். டின்னிட்டஸ் கேன்சர் போல் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதல்ல. ஆனால், நிச்சயம் வாழ விடாமல் செய்யும் அளவுக்கு மோசமானது. அந்த அளவில், இதுவுமே உயிர்கொல்லிதான். இந்தச் சத்தங்களோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான துன்பம் வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய சிறுகதை ஒன்றுக்கு 'அமைதியின் சத்தம்' என்று தலைப்பு வைத்திருந்தேன். அந்தக் கதை டின்னிட்டஸோடு தொடர்புடையது அல்ல. ஆனாலும் அமைதியின் சத்தம் எவ்வளவு துன்பகரமானது என்பது எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை. 
எப்படியோ இந்த டின்னிட்டஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நம்மூரில் எல்லாம் என்னைப் போன்ற சாதாரணனுக்கு இலவசமாக இத்தகைய வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. வசதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும் அப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதுவும் உண்மை. Especially, on human aspects. 
டின்னிட்டஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ, 'அதெல்லாம் ஒன்னுமில்லடா..' என்று கூறிய போதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. என் தந்தையாரும் அப்படியே. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; யோகா தெரபிஸ்ட்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து ஒரு சில யோக முறைகளை பயிற்சி செய்து வந்தேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த டீ குடிப்பதையே நிறுத்தி விட்டு, கிரீன் டீக்கு மாறினேன். எப்போதும் எதிலாவது என்னை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது என்று முடிவுசெய்தேன். சோம்பேறித்தனத்தை 'டின்னிட்டஸ் அரக்கன்' தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதை அறிவேன். எந்தப் பிரச்சினையையும் தலைக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் ஏற்படும் தனிமையும் அவனுக்குச் சாதகமானதுதான். வாழ்க்கையைக் கொண்டாடுவதால் மட்டுமே அவனைத் துரத்த முடியும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை, நான் செய்வதையெல்லாம் செய்ய விட்டு, அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் என்னை கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், என் மருத்துவரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.
டின்னிட்டஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பழைய அமைதி வேண்டுமென்கிறார்கள். அதிலும் ஐரோப்பியர்கள்  சும்மாவே அமைதி விரும்பிகள் ஆயிற்றே. அர்த்தமற்ற அமைதியின் மீது அவர்களுக்கு அப்படி என்னதான் காதலோ? ஆனால் டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேண்டுகின்ற அமைதிக்கு நிச்சயம் சாத்தியமே இல்லை என்பதே வலிமிகுந்த உண்மை. எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் நான் அதைக் கண்டுகொள்வதில்லை. போராடுவதற்கு மனதை வலிமையாக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.
ஆனாலும் மனவலிமை அற்ற இவர்களுக்கு இதையெல்லாம் புரிய வைப்பதில் சற்று திணறிக்கொண்டிருக்கிறேன். இருந்த மனவலிமையையும் டின்னிட்டஸ் அரக்கன் தின்றிருப்பான் என்பது எனக்குத் தெரியும். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் என் பெல்கிய நண்பன் ஒருவனை 'ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா' என்று தீர்வு சொன்னேன். இந்திய நகரங்களின் உள்ளமைந்த இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் அல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள். இங்கிருக்கும் இரண்டு நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டதால் என்னை இவர்கள் ஒரு கடவுளாகவே பார்க்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.
ஒருபுறம் சாகாத் துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் யுதனேசியா முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் கேபியிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? அவரை வாழ வைத்திருக்க முடியுமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த அன்று இரவு எனக்குத் உறக்கமே வரவில்லை. 
எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன். 
இயற்பியலாளர் 'ஸ்டீபன் ஹாக்கிங்' பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இருபத்தோரு வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும் செயலிழந்து போனது. "இன்னும் இரண்டு வருடங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார்" என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனராம். ஆனால்,  ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால், தயங்காமல் அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன். இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது - எதற்கு இப்படி விவரித்துக்கொண்டு - அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவருக்குப் பிடித்தமான குரலை  அவரே தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு.


ஒருமுறை அவரிடம், "எப்படி இத்தனை வருடங்கள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?" என்று கேட்ட போது அவர் கூறியது, "While there is life, there is hope". அவருடைய இந்த வாசகம்தான் ஒரு காலகட்டத்தில் எனக்கு எல்லாமாயும் இருந்திருக்கிறது. நம் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை நமது நம்பிக்கையை மட்டும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானும் இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் எதற்கு என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது.
இறந்தால் இன்னொரு பிறவி இருக்கிறது என்கிற மூடத்தனத்தை ஒழித்தாலாவது கைவசம் இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையின் மீது மனிதர்களுக்குப் பற்று வருமா? அப்போதுதாவது வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாட ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுமா? ஓருடல். ஒரு பிறவி. காயமே இது மெய்யடா. மெய்யே மெய். அதில் எத்தனை பிரச்சினை இருப்பினும். 
பிரச்சினைகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். அவற்றைத் தொலைத்துவிடுங்கள். டின்னிடஸ் என்பதே ஒரு பிரச்சினைதான். ஆயினும் உங்கள் பிரச்சினைகளை எனக்கிருக்கும் டின்னிட்டஸாகப் பாருங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். நண்பனாக்கிக் கொள்ளுங்கள். ரசிக்க ஆரம்பியுங்கள். அதன் மீதே தியானம் செய்யத் தொடங்குங்கள். இறுதியில் ஒருநாள் அவை தொலைந்து போகும். அவை இருக்கும். ஆனால் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. பிறகென்ன, வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.
எல்லோருக்குமே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக  உதித்திருக்கும். உலகத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்சமல்லவே. 'செத்துத் தொலைப்பதற்கு பதிலாக வாழ்ந்துத் தொலைக்கலாம்' என்கிற வரி நினைவுக்கு வருகிறது. அநேகமாக வண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. வண்ணதாசன் நம்பிக்கைவாதிதான். ஆனால், எனக்கு இந்த வரிகள்கூட எதிர்மறையாகவே தெரிகிறது. அது என்ன தொலைப்பது? கொண்டாட்டத்துடனே வாழலாமே? நானும்கூட பல சமயங்களில் தவறான காரணங்களுக்காக, அற்ப விஷயங்களுக்காக 'என்ன வாழ்க்கை இது. செத்துப்போகலாம்' என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு சரியான காரணத்துக்காக வாழ விரும்புகிறேன். பெல்ஜியத்தின் சுகாதாரத் துறைக்கும், இந்தக் காணொளியை எடுத்த செய்தி நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கைத் தந்தது போல, டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கைத் தர விரும்புகிறேன். அதற்கேனும் இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். சாதாரணமாக அல்ல. பெரும் குதூகலத்துடன்.


கருத்துகள்

 1. First time I heard about this Bro, good to see that you overcame this and crafting hope those who suffered. God bless TK

  பதிலளிநீக்கு
 2. தற்கொலை முடிவு என்பது அபத்தமானது....
  செத்துத் தொலைக்கலாம் என்ற நினைவு அடிக்கடி வந்து வாழ்ந்த பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டால் அதன் பின் தற்கொலைக்காக எண்ணம் தோன்றாது....
  நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் இது பற்றி இதுவரை தெரியாது இந்த கட்டுரை மூலமாக தான் இப்போது தெரிந்து கொண்டேன் ...ஹாட்ஸ் ஆப் யூ..... அருமையான பதிவு... தன்னம்பிக்கை தரும் கட்டுரை

  பதிலளிநீக்கு
 4. Spreading confidence and happiness.You are really great..Thanks Madhavan for sharing this...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)