அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு..

அம்மாவின் தேன்குழல்: அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு - எழுத்தாளர் ஜோ டி குருஸ்


ரு காலத்தில் ஜமீன்தார் பிள்ளைகளுக்கும் அதன் பின்னான காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே கிடைத்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு 90களில் நமது அடித்தள மக்களின் பிள்ளைகளுக்கும் மென்பொருள் துறைமூலம் வாய்த்தது. சமுதாயத்தின் மேலடுக்குகளில் உள்ளவர்களும் பயணித்தார்கள் ஆனால் வழக்கம்போலவே கிடைத்த வாழ்வைத் தூய்த்தார்களே அல்லாது புலம்பெயர் வாழ்வை, அதன் சூழலை, பொருளாதாரச் செழுமையை, சிக்கல்களை அதன் நிகழ் தருணங்களில் கிடைக்கும் தரிசனங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்ததில்லை. தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டுமே என்ற அவர்களின் வழக்கமான இயல்பு.

அக்கறையான நமது பிள்ளைகள் புலம் பெயர்ந்தபோது அந்த வாழ்வுசார் புரிதலும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு மின்னெலென பளிச்சிடும் தரிசனங்களும் அதன் சுவராஸ்யங்களும் தமிழுக்கு கொடையாக கிடைத்துவிடுகின்றன. அப்படியானதொரு கொடையாகத்தான் தம்பி மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன்குழல் என்ற இந்தத் தொகுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாசிக்கக் கிடைத்த போதே பதிவிட எண்ணியிருந்தேன், பல்வேறு சூழல்களால் தாமதமாகி விட்டது.

தரிசனங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது ஒரு கொடுப்பினை.

அக்கறையான ஒரு தலைமுறையின் செயல்பாடுகள் அதன் அடுத்த தலைமுறையில் நிச்சயம் பிரதிபலிக்கிறது. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் தருவது போல… அந்தக் காலத்திலேயே பாடத் திட்டத்துக்கு அப்பாற்பட்டு என்னை பட்டினப் பாலையையும், மதுரைக் காஞ்சியையும், அகநானூற்றையும், புறநானுற்றையும் நாலடியார், திருக்குறளோடு படிக்கச் செய்த அய்யாவை நினைக்காமல் தொடர்ந்து இந்தத் தொகுப்பை என்னால் வாசிக்க இயலவில்லை.

தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பதிவும் தம்பியின் வாசிப்பு எவ்வளவு ஆழ அகலமானது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது.

சென்னை ராயபுரத்தில், தென்னைமரங்கள் சூழ்ந்த தனது வீட்டை விற்ற ஒரு தெக்கத்திக்காரர்; அந்த இடத்தை வாங்கியவர், தான் ஆசை ஆசையாய் வளர்த்தெடுத்த தென்னம்பிள்ளைகளை வெட்டப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் ஓடோடிப்போய் தான் விற்ற விலையை விடவும் அதிகமாகக் கொடுத்து இடத்தை மீட்டுக் கொண்டார். என் கண்முன்னால் நடந்த சம்பவம் இது.

இந்தப் பதிவை எழுதும் போதே மனம் பாடாய் படுத்துகிறது. காரணம், இப்படிப்பட்டவர்கள் வாழும் இதே மண்ணில்தான் அங்கெங்கினாது எங்கும் தென்னம் பிள்ளைகள் இன்று கொண்டை முறிந்து காய்ந்து கிடக்கின்றன. பயணங்களில் மொட்டையாய் நிற்கும் தென்னைகளைப் பார்க்கும்போதெல்லாம் பரிதவிப்போடே கடந்து போகிறேன். இது நமது வாழ்வாதாரங்கள் படுகுழிக்குள் போனதன் குறியீடு. காக்கத் தவறிவிட்டோம். வரலாறு காணாத வறட்சி என்று அரசியல்வாதிகளும், ஆட்சியிலிருப்போரும் பிதற்றினாலும் அக்றையற்ற இந்தத் தலைமுறையின் செயல்பாடுகளே இதற்கான காரணம். தொகுப்பில் முத்தாய்ப்பாய் இருக்கும் அம்மாவின் தேன்குழல் சிறுகதை, தாய்மையைப் போற்ற மறந்த அறப்பிறழ்வு மட்டுமல்ல, நிகழ் சூழலில் தாய் மண்ணையே பேண மறந்த சீரழிவின் உச்சகட்டக் குறியீடு.

முன்னுரையில் இருந்தாலும் ஹெரண்டின் சைக்கிள் சீமாட்டி என்னையும் வெகுவாய் பாதித்தாள். தேச எல்லைகள் கடந்து, மொழி கடந்து, கொண்டாடும் நம்பிக்கைகள் கடந்து உண்மையான மனிதர்களின் வாழ்வும் உணர்வுகளும் அவர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றுபோலவே இருக்கின்றன. சக மனிதனின் சுக துக்கத்தை அதே அலைவரிசையில் புரிந்து கொள்வது பக்குவம். ஆனால் இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்கள் சுயநலம் சார்ந்தே எல்லோரையும் இயங்க வைக்கிறதே எனக் கவலையாய் இருக்கிறது.
எந்தத் துறையாய் இருந்தாலும் அவமானங்களும், அலட்சியங்களும்தான் அடி உரம்.  எத்தனையோ ஆளுமைகளை இம்மண்ணில் உருவாக்கிய சமூக ரகசியம் அது. எல்லோருக்குமா தான் பார்த்ததை, ரசித்ததை, ருசித்ததை தத்துவார்த்த சுயவிசாரணையோடு பதிவிடத் தோன்றுகிறது! பாரதியின் பாணியில் சொல்வதானால் அது கருதுவது. கற்று, கேட்டுத் திரளும் ரஸவாதம்.

ஆங்கில இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதில் பதிந்துபோன லண்டன் மாநகரின் பிக்காடிலி சர்க்கிள் போல லூவன் நகரத்தின் புனித யாக்கோபு சதுக்கமும் என் நினைவுகளில் இருக்கும். நாற்பது வருடங்களுக்கு மேலாய் செளகுலே கப்பல் நிறுவனத்தில் பணிசெய்து உலகை எத்தனையோ முறை கப்பலில் வலம்வந்த எங்க அய்யாவுக்கு சிறிது போதை ஏறினால் வந்து விழும் முதல் வாக்கியம் ‘’உலகிலேயே அழகான பெண்கள் ருமேனியர்கள்.’’ என்றாவது ஒருநாள் எனக்கும் லூவன் போய் அங்கு ஃப்ரீட்யெஸ் சாப்பிட ஆசை இருக்கிறது.

ஒருசாராருக்கு மட்டுமே கல்வி என்ற நிலைமாறி, கல்வி எல்லோருக்குமாகி பின் அதுவே வசதி வாய்ப்புள்ளவனுக்குமட்டும் என்ற நிலையைத் தொட்டிருப்பது இன்றையை காலகட்டத்தின்  பெரும் அவலம். தற்கொலை தீர்வல்ல. ஆனால் அந்தச் சூழலுக்கு ஒருவனைத் தூண்டும் இன்றைய பேராசை வாழ்வின்மீது உணர்வுள்ளவர்களுக்கு பெருங்கோபம் வருவது இயல்புதானே..!

லூவன் நகரின் கபுனேசர் பேருந்து நிறுத்தத்தில் நடந்தது வர்க்க வெறி. யாரோ ஒருவனுக்கு ஏற்படும் உடல் வலி, மனவலி நம்போன்ற உணர்வுள்ளோரை நொடியில் பதற வைத்துவிடுகிறது. அதுவே மற்றொரு சாராருக்கு கண்முன்னே காணக்கிடைத்த கேளிக்கையாகிவிடுகிறதல்லவா! கண்களை மூடி அலிஜாண்ட்ரோ கொன்சால்வசின் பிராட் பிட் நடித்த பாபேல் திரைப்படத்தை மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். உலக நாட்டாமையின் அதிகார வீச்சு அடித்தள மக்களின் வாழ்வில் நிகழ்த்தும் உக்கிரதாண்டவம்.
காலகாலமாய் நாடி நரம்புகளில் உரமேற்றிய நமது அறம் சார்ந்த வாழ்வை, அதன் விழுமியங்களை, தத்துவார்த்த சிந்தனகளை அந்நிய மண்ணில் நமது பிள்ளைகள் உணர்வது ஆனந்தமாய் இருக்கிறது. இது இன்றைய வாழ்வின் சவால்களில் உணர்வோடு இருந்து நமது பழம்பெரும் வாழ்வின் விழுமியங்களை அக்கறையோடு அதிரவிடும் செயல்.

தம்பி மாதவன் இளங்கோவுக்கு அன்பின் வாழ்த்து.

பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவனுக்கு நன்றி.

- 0 - 0 - 0 -


சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தேசிய கப்பல் வாரியத்தின் உறுப்பினருமான, எனது அன்புக்குரிய அண்ணன் ஜோ டி குருஸ் அவர்களிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தை வாசித்து விட்டு வார்த்தைகளற்றுக் கிடந்தேன். என்னுடைய நூலைப் பற்றி அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைக்கு "அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு" என்று தலைப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு நான் எழுதியிருக்க வேண்டிய வரி இது! இந்த அதிர்வு அடங்க பல நாட்களாகும் என்று அவருக்கு எழுதியிருந்தேன். தொகுப்பில் பெரும்பாலும் வாசிக்கப்படாத, வாசிக்கப்பட்டிருந்தாலும் பேசப்படாத கடைசிக்  கதையான 'புனித யாக்கோபு சதுக்கம்' வரை அவர் எழுதியிருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது; உவகையளித்தது. இதையெல்லாம் என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவர் செய்ய வேண்டிய தேவையில்லை. இத்தருணம் அவருடைய பெருந்தன்மை மட்டுமே என் மனதில் விசுவரூபமெடுத்து நிற்கிறது.     

இந்தக் கட்டுரையை என்னை ஊக்கப்படுத்தவே நிச்சயம் எழுதியிருப்பார். ஆனாலும், எனக்குள் இது ஒரு பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் அதிகம் எழுதவில்லை. எழுதியவற்றை வெளியிடவும் இல்லை. அறமற்ற செயல் என்றாலும், உண்மையில் அவருக்கு நான் நன்றியே சொல்லப்போவதில்லை. இனி என்னுடைய அடுத்த படைப்பின் மூலமாகவே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதைத்தான் அவரும் விரும்புவார் என்றும் நம்புகிறேன்.

- மாதவன் இளங்கோ

கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் அண்ணா... மிக அருமையான தலைப்பு... ஒவ்வொரு வரியும் நெகிழ வைத்தது... நீங்கள் இறுதியில் குறிப்பிட்ட படி தங்களின் அடுத்த படைப்பிர்காக ஆவலுடன் எதிர்பர்ர்த்து காத்திருக்கும் தங்கை...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் மாதவன். நீங்கள் மீண்டும் எழுத வந்ததிலும் இந்த அருமையான எதிர்வினையை வாசித்ததிலும் மிக்க மகிழ்ச்சி. அம்மாவின் தேன்குழல் நான் வாசித்திருக்கிறேன். இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. மறுக்க இயலா கசக்கும் உணமைகளைக்கூறும் கதையல்லவா அது? நீங்கள் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..