பயணி..

ந்தப் புகைப்படங்களை எடுத்த நாள் இன்றும் நன்றாக நினைவிலிருக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மாடல் போட்டோகிராபர் தாமஸுடைய ஸ்டூடியோவில் எடுத்தது. அன்றைக்கு மட்டும் என் மேல் முன்னூறு பிளாஷ்களாவது விழுந்திருக்கும். காலை ஏழரை மணிக்கு ஸ்டுடியோவுக்குள் நுழைந்தவன் இரவு உணவுக்கு பின்பே வெளியே வந்தேன். கிட்டத்தட்ட பதினான்கு மணிநேரங்கள் ஒளிமழையில் நனைந்துகொண்டிருந்தேன். வீட்டுக்குச் சென்று பொத்தென்று மெத்தையில் விழுந்து அப்படியே தூங்கிவிட்டேன்.
இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு மாடல் போட்டோகிராபர் இருக்கிறார். அப்போதெல்லாம் நிறைய பேர் கிடையாது. சென்னை மாநகரில் மொத்தமாகவே ஒரு பத்து பேர்கூட இருக்கமாட்டார்கள். அப்போதே வெங்கட்ராம் மற்றும் தாமஸ் ஆகியோர் பிரபலமானவர்கள். இன்றைக்கும் வெங்கட்ராம்தான் மணிரத்னத்தின் ஆஸ்தான போட்டோகிராபர். அவருடைய ஸ்டூடியோவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். என்னுடைய நண்பர் பாபு அங்குதான் தன்னுடைய போர்ட்போலியோவை எடுத்துக்கொண்டார். நான் தாமஸிடம் சென்றுவிட்டேன். இன்றைக்கு நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு தாமஸ்தான் போட்டோகிராபர். ஸ்ரீகாந்த் மட்டும் எனக்கு நினைவில் இருக்கிறார். ஏனெனில் பல விளம்பரங்களில் மாடல் தேர்வுக்கு என்னோடு அவரும் வரிசையில் அமர்ந்திருப்பார். இன்றைக்குக்கூட பல நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கும் போது எனக்குள் புன்னகைத்துக்கொள்வேன். சமீபத்தில்கூட தேவி திரைப்படத்தில் ஒரு முகத்தைப் பார்த்தேன்.
எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு கெல்லீசில் இருக்கும் துணிக்கடை ஒன்றின் விளம்பரப் பலகைகளுக்காக. நானும் என் நண்பர் பாபுவும் மட்டுமே மாடல்கள். உதயநிதி ஸ்டாலினும் - கிருத்திகாவும் அப்போதுதான் ஒரு விளம்பர நிறுவனத்தை துவங்கியிருந்தார்கள். அவர்களுடைய விளம்பர நிறுவனத்துக்கும் அதுதான் முதல் வாய்ப்பு. உதயநிதி காரை ஒட்டிக்கொண்டு செல்ல, கிருத்திகா, நான், பாபு அனைவரும் அமர்ந்துகொண்டு வடக்கு உஸ்மான் சாலையிலிருந்த ஒரு ஸ்டுடியோவுக்கு சென்ற போது பேசியதெல்லாம் இன்னும் நினைவுக்கு வருகிறது. இருவருமே புகைப்படப் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். இருவருமே எளிமை விரும்பிகள். கெல்லீசில் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய விளம்பர பலகையில் நானும் பாபுவும் நின்று கொண்டிருந்ததை இரவு பன்னிரண்டு மணிக்குச் சென்று பார்த்து இருவரும் நார்சிஸ்ட்டிக்காக ரசித்துக்கொண்டிருந்தோம். சேத்துப்பட்டிலும் இன்னொரு பெரிய விளம்பரப் பலகையை வைத்திருந்தார்கள். அதன் பிறகு அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்றுவிடுவோம். கடை முழுவதும் எங்கள் முகங்கள்தான். அங்கே ஒருமுறை எங்களுக்குத் துணிகளை வாங்கிக்கொண்டோம். துணிப்பையிலும் நாங்கள் புன்னகைத்துக்கொண்டிருந்தோம். ஒரே சிலிர்ப்பாக இருந்தது.
அப்போது ஒட்டுமொத்த சென்னைக்கும் மூன்றே மாடல் ஒருங்கிணைப்பாளர்கள்தான் இருந்தார்கள். லட்சுமி, பிஜு, இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது. அவரும் ஒரு பெண்மணிதான். எல்லோரிடமும் என்னுடைய போர்ட்போலியோவைக் கொடுத்திருந்தேன். அடிக்கடி விளம்பரத் தேர்வுக்குச் சென்றுவிடுவேன். எனக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கியது லட்சுமி மேம்தான். அருமையான பெண்மணி.
பாண்டா விளம்பரத்துக்கு நடிகர் விவேக்குடன் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பல மாடல்களில் நானும் ஒருவன். விவேக்கும் நாங்களும் நேர்காணலுக்காக வரவேற்பறையில் காத்திருப்பது போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும். சந்தோஷ் சிவன் அவர்கள்தான் ஒளிப்பதிவாளர். மீண்டும் சிலிர்ப்பு. சந்தோஷ் சிவன் என்னை லென்சினூடாகப் பார்த்துக்கொண்டிருப்பார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
ஒரு சனிக்கிழமை ஹிந்து நாளிதழில் மாடல் கார்னர் பகுதியில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆனால் அதில் ஒரு சின்ன குழப்பம். என்னுடைய எண்ணுக்கு பதிலாக என் நண்பன் கார்த்திக்கின் எண்ணைக் கொடுத்துவிட்டிருந்தேன். அவ்வளவுதான் அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு அவனுக்கு அழைப்புகள் இரவு பகலாக வந்தவாறு இருந்தது. அவன் சென்ற மாதம்கூட அதற்காக முகநூலில் என்னுடைய பதிவொன்றின் பின்னூட்டத்தில் திட்டி இருந்தான்.
பி.எஸ்.என்.எல் செல்-ஒன் விளம்பரத்தில்தான் முதன்முறையாக ஒரு முக்கியமான மாடலாக, நாயகனாக நான் அறிமுகமானேன. நாயகியோடு அமர்ந்துகொண்டு, கெத்தாக மெட்ராஸ் பாஷையில் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்.ஆர். ஒருவரை கிண்டல் செய்து பேசுவதாக காட்சியமைத்திருந்தார்கள். தமிழ் புத்தாண்டு அன்று அந்த விளம்பரத்தை தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பித்தார்கள். அன்றைக்குக் கேரளாவில் இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை. என் தந்தை அதைப் பதிவு செய்து வைந்தித்திருந்தார் என்று நினைக்கிறேன். பின்னாளில் அதே செல்-ஒன் விளம்பரம் மீண்டும் எடுக்கப்பட்ட பொழுது தீபிகா படுகோனேதான் நாயகி.
விளம்பரம் எடுக்கும் நாட்களில் இடைவெளிகளில் டெக்னீஷியன்கள் செய்வதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருப்பேன். அந்த நாட்களில் திரைப்படங்களை விடவும் விளம்பரங்கள் மிகவும் ப்ரொபெஷனலாக எடுத்தார்கள் என்பது என்னுடைய எண்ணம்.
பிறகு பாலா படங்களின் தயாரிப்பு நிர்வாகி ஒருவரின் நல்ல நட்பு கிடைத்து, அவர் மூலம் திரைப்பட உலகுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது. மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நேராக அசோக்நகரிலுள்ள பாலாவின் அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். நந்தாவுக்கும் பிதாமகனுக்கும் இடைப்பட்ட காலகட்டம். கஞ்சா கருப்பு பாலாவின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகள் செய்துகொண்டிருப்பார். எங்களுக்கு தேநீர் போட்டுக்கொண்டுவந்து கொடுப்பார். பாலாவை அங்கிருக்கும்போது நிறைய முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய புகைப்படங்களை அவரிடம் நேரிலேயே கொடுத்திருக்கிறேன். "அடுத்து பிதாமகன் படம் எடுக்கப் போகிறார்கள் நிச்சயம் அதில் நீ ஏதாவதொரு பாத்திரத்தில் நடிப்பாய்" என்றார் என்னுடைய நண்பர். வார இறுதிகளில் அவரோடுதான் வடபழனியில் சுற்றிக்கொண்டிருப்பேன். நல்ல மனிதர்.
அவர் மூலமாக நடிகர் பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குனர் ஒருவரின் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த சமயம் அது. அதே சமயம் அஜித் திரைப்படம் ஒன்றுக்காக அவருடைய தம்பியின் கல்லூரி நண்பனாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. மாடல் கோ-ஆர்டினேட்டர் லட்சுமியும் பஜாஜ் விளம்பரம் ஒன்றுக்கு அழைத்திருந்தார். அதிலும் தேர்வு ஆகியிருந்தேன். நடிகர் விவேக்கும் நானும் மட்டுமே மாடல்கள். அத்தனையையும் கைவசம் வைத்திருந்த அந்த நேரத்தில், அத்தனையையும் ஒரே இரவில் விட்டு வெளியே வந்தேன்.
எண்ணையும் மாற்றிவிட்டேன். அத்தனை மாதங்களாக ஒரு நீர்க்குமிழியாக காற்றில் மிதந்தபடி திரிந்துகொண்டிருந்தேன். அதில்தான் எத்தனை வண்ணங்கள். ஆனால், ஒரே நொடியில் என்னை அழித்துக்கொண்டு துளிகளாய் விழுந்தேன். ஏன் என்ன என்பதெல்லாம் பிறிதொருநாளில் எழுத வேண்டும். லட்சுமிகூட வேறொரு நண்பரிடம் "நல்ல பையன் அவன். ஆனா ஏன் நடித்த விளம்பரங்களுக்கு வந்து இன்னும் பணத்தைக்கூடப் பெற்றுச் செல்லவில்லை" என்று கேட்டிருக்கிறார். அந்த நண்பர் அதை ஓரிரு வருடங்களுக்கு முன்புதான் தெரிவித்தார்.
இன்றைக்கு இதை எழுதுவதற்குக் காரணம். கடந்த வாரம் நெருங்கிய நண்பரொருவர் என் மேலான அக்கறையின் காரணமாக, "நீ ஒரு எழுத்தாளன் எனவே நீ.." என்று எழுத்தாளனுக்குச் சொல்வதைப் போன்று அறிவுரை வழங்கினார். நான் வெறும் வாசகன் மட்டுமே. நிச்சயம் எழுத்தாளன் இல்லை. உண்மையில் எவராகவும் இல்லாமலிருப்பதையே நான் விரும்புகிறேன். ஒரு பெட்டிக்குள் என்னை அடைத்துக்கொள்வதில் விருப்பமில்லை. எல்லா 'இஸங்களையும்' திறந்த மனத்துடன் வாசிக்கவும், தெரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். அவற்றையெல்லாம் அசைபோட்டு எனக்கானதை எடுத்துக்கொள்கிறேன். இல்லாததை நாமே உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். நாம் சிந்திப்பவர்கள்தானே. அதனால் எந்த 'இஸ்ட்' ஆகவும் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. That way, I am a free thinker. என் சிந்தனைகள் என்னை வடிவமைக்கின்றன. புதுப்புது சிந்தனைகள் எழுந்துகொண்டு இருப்பதால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறேன். 'Inter-breeding Theory'-யை நம்பிக்கொண்டிருந்தவரை என்னை ஒரு ஹ்யூமனிஸ்ட்டாக எண்ணிக்கொண்டிருந்தேன். 'Replacement Theory'-யை தெரிந்துகொண்ட பிறகு, இப்படித்தான் வேறு இனங்கள் அழிக்கப்பட்டிருக்கலாமோ என்று அறிந்தவுடன், எந்த இஸ்ட்டாகவும் இருக்கவேண்டாம் என்று முடிவு கட்டினேன். We have to be open-minded, and constantly retrospect ourselves.
அதற்கு மேலும் என்னை எதற்குள்ளாவது அடைக்க விரும்புவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். நீர்க்குமிழியைக் கைகளால் தொட நினைப்பவர்களுக்கு என்ன கிடைக்குமோ அதுவே கிட்டும். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நல்ல நண்பர் என்னிடம், "ஏன் அதற்குப் பிறகு எதுவும் எழுதவில்லை? பரவலாக பேசப்படவில்லை என்பதாலா?" என்றும் கேட்டார். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். வெளியிலும் சிரித்தேன். "நான் அப்படிப்பட்டவனில்லை. நான் எழுத்தாளனே இல்லை. பிறகெங்கிருந்து ஏமாற்றம்." என்றேன். அவர் ஒருவேளை நான் சமாளிக்கிறேன் என்று நினைத்திருக்கலாம். ஆனால், எனக்குப் பிடித்ததையெல்லாம் நான் செய்யவேண்டும். எனக்கு வேண்டியதெல்லாம் அனுபவம் மட்டுமே. ஏனையவை ஏதாவது கிளைவிளைவாகக் கிடைத்தால் மகிழ்ச்சி. அதேசமயம் எதைச் செய்தாலும் அதில் என்னுடைய முழு உழைப்பைத் தருகிறேன். முழுமையான அர்ப்பணிப்புடன்தான் செயல்படுகிறேன். கற்றுக்கொள்ள முயல்கிறேன். பயிற்சி செய்கிறேன். அத்தனைக்குப் பிறகும் என்னுடைய படைப்பில் தரமில்லையென்றால், என்னுடைய திறன் அவ்வளவுதான் என்று அர்த்தம். வாசகர்களுக்கு வாய்த்ததும் அவ்வளவுதான்I'm just a travelin' soldier. I don't regret about my efforts going in vain, for I have gained good experience. That is more important. Let's put in our genuine efforts.
இது என் ஒரு முகம் மட்டுமே. இன்றைக்கு என்னோடு வாழ்பவர்கள் என் வாழ்வின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். இது எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட நம் எல்லோருக்குமே பொருந்தக்கூடியது. தற்சமயம் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையைப் பார்த்து உங்களுடைய முழு வாழ்க்கையையும் எடைபோடுவது என்பது, மிகக் கனமான ஒரு நாவலை எடுத்து, இடையே ஏதோ ஒன்றிரண்டு பக்கங்களை புரட்டி விட்டு, அதைப் பற்றி விரிவாக விமர்சனம் எழுதுவதில் என்ன நேர்மை இருக்கிறதோ அந்த அளவு நேர்மையுடன் அணுகுவது போன்றது அல்லவா?
ஒரு பயணி ஒருவன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறான். அது ஒரு நீண்ட நெடிய பயணம். எல்லா நிலையங்களிலும் இறங்குகிறான். ஒவ்வொரு நிலையமும் அவனுக்கு ஒவ்வொரு விதமாகத் தெரிகிறது. எனவே அவனும் ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு வேடமிட்டு பெருங்குதூகலத்துடன் செயல்படுகிறான். ஒரு நிலையத்தில் பாம்பாட்டியாகத் திரிகிறான். ஒரு நிலையத்தில் மாயக்காரனாக வித்தைக் காட்டுகிறான். ஒரு நிலையத்தில் அவனிடமிருந்த நிலக்கடலையை விற்கிறான். அங்கு அவனிடம் கடலையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அவனொரு மாயக்காரனென்று தெரியாது. ஆனால் அவனுக்கு மட்டுமே தெரியும். அவன் இவர்கள் நினைக்கும் யாருமில்லை. அவன் ஒரு பயணி மட்டுமே.
அவனைப்போன்றதொரு பயணியே நான். வெறும் பயணி மட்டுமே.

(பயணம் தொடரும்..)

கருத்துகள்

 1. அருமை ... நீ வித்தியாசமான சிந்தனையாளன் ... எவ்வளவு கற்றுக் கொண்டு இருக்கிறாய்..??!!!! கற்றுக் கொள்ள விரும்புகிறாய்!!!! Superb..

  பதிலளிநீக்கு
 2. Super especially the last para....if iam right the 1st part is already in ammavin thenkuzhal...

  பதிலளிநீக்கு
 3. யதார்த்தமான பதிவு அண்ணா... கடைசியில் பயணியின் வெவ்வேறு வேடத்தை படிக்கும் பொழுது எனக்கு பிடித்த இன்னொரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது - "உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம். நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்"... தங்களின் அனுபவத்தை பகிரும் பொழுது, தங்களின் புகைப்படங்கள் உங்கள் அனுபவத்தை நாங்கள் காட்ச்சிபடுத்தும் அனுபவத்தை குடுக்கிறது.. அதை இந்த பதிவிலும் உணர்ந்தேன் ,ஞாநி இன் பதிவிலும் உணர்ந்தேன்... மகிழ்ச்சி ☺

  பதிலளிநீக்கு

 4. பயணி இதயத்தில் பயணிக்கிறார்!!! பதிவுகள் அருமை..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)