பொறாமை எனும் நஞ்சு..


டந்த வாரம் நான் எழுதிப் பதிவிட்டிருந்த "புறங்கூறாமை எனும் அறம்" பதிவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வழியாகவும் பல நண்பர்கள் பாராட்டிச் செய்தி அனுப்பி இருந்தார்கள். ஒரு சிலருக்கு உடனே பதிலனுப்பிவிட்டேன். ஆனால், தொடர்புகொண்ட அனைவருக்குமே உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் எடுத்து பதில் அளிக்க விழைவதும் ஒரு காரணம். 

ஒரு சிலர், "சுய மேன்மை" (personal excellence) சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதுதான் சிறந்தக் கட்டுரை என்றார்கள். உண்மையிலேயே மனநிறைவு அளிக்கும் சொற்கள் இவை. நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவாயினும், அதை ஒரு வசைக் கட்டுரையாகவும் பலர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால் அதற்கு மாறாக, வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் எனக்கு உவகையளிப்பதாகவே உள்ளது;  மனதில் நம்பிக்கைப் பிறக்கிறது; புத்தொளி பாய்ச்சுகிறது.

என்னையும், என்னுடைய செயல்களையும் தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன். எதைப் பற்றி எழுதினாலும், அது ஒரு சிலருக்கு சுவாரசியமாகவும், வேறு சிலரை சங்கடப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் ஒரு வரிகூட எழுத முடியாது. இயந்திரத்தனம் நிறைந்த இவ்வாழ்க்கையில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரே ஒரு செயலையாவது ஆத்மதிருப்திக்காக மட்டுமே செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத்து எனக்கு அப்படியான ஒன்று. எழுத்து நான் என்னுடனேயே பேசிக்கொள்வதற்கும், என்னைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வழிவகை எனலாம். அதுவே மற்றவர்களுக்கும் அவர்களைப் பற்றி உணர்ந்துகொள்வதற்கு உதவுகிறது எனும்போது என்னுடைய எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தம் கிடைத்துவிடுகிறது.  

ஒரு தோழி, "என் குடும்பத்துப் பெரியவர்கள் பலர் எந்நேரமும் வம்புப் பேச்சில் ஈடுபட்டு, என்னையும் அதில் ஈடுபடுத்த முனைகிறார்கள். அதற்கு மறுத்தால் என்மீது கோபம் கொள்கிறார்கள். நீங்கள் கூறியிறுப்பது போலவே என்னுடைய பழைய தவறுகளைச் சுட்டிக்காட்டி, எனக்குள் குற்றவுணர்வு ஏற்படுத்த முயல்கிறார்கள். எனக்கு இப்போது  மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நான் தனியள் இல்லை. என்னைப் போலவே இன்னொரு மனிதரும் இதற்காகவெல்லாம் போராடிக்கொண்டிருப்பதை அறிவது எனக்கு ஊக்கமூட்டுவதாக அமைகிறது." என்றார். 

அதற்கு நான், "குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, நம் மூத்தோர்களுக்கு உண்மையைவிடப் பணிவின்பாலான காதல் அலாதியானது. So called பணிவன்பர்கள் முதுகுக்குப் பின்னால் சென்று அவர்களைப் பற்றி எதைப் பேசினாலும் அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால், அவர்களுக்கு முன்னால் பணிவு பழகுவது அவசியம். Irony, isn't it? இதற்கான காரணம் எளிமையானது. மனிதர்கள் பொய்களுக்குப் பழகிவிட்டார்கள். அவ்வளவே. நல்லவேளை, நீங்களாவது தெளிந்துவிட்டீர்கள் என்று மனநிறைவு கொள்ளுங்கள்." என்று பதிலளித்தேன்.

வாசு அவர்கள், "பலமுறை வாசித்துப் பார்த்தேன். புறங்கூறாமையை வெப்பவியக்கவியலோடு ஒப்புமைப்படுத்தியிருந்தது சிறப்பு. இப்போதைய சமூக மனநிலைக்குத் தேவையான ஒன்று. என்னை மிகவும் யோசிக்கச் செய்தது இந்தப் பதிவு. மீண்டும் பலமுறை வாசிப்பேன். மாற்றங்கள் மனங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்" என்றார். 

இன்னொரு தோழி ஒருவர் "என்னுடைய நண்பர் தேவையில்லாமல் பொறாமை கொள்கிறார். அதை எப்படி எதிர்கொள்வது?" என்று சுய மேன்மை சார்ந்து எழுதியிருந்த கடிதத்துக்கு நான் அளித்த பதிலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:     

என்னைப் பொறுத்தமட்டில் பொறாமை என்பது "அறிகுறி" (symptom) மட்டுமே. தீர்க்கப்படவேண்டிய உண்மையான நோய் என்பது வேறு. நான் பயிற்சியளிக்கும் அணிகளிடம் அடிக்கடி அறிவுறுத்துவது; வலியுறுத்துவது - "அறிகுறிகளைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். அதிலிருந்து மூல காரணங்களை (root causes) நோக்கி நகருங்கள்." என்பதே. 

பொறாமைப்படுவதில் ஐந்து வகையான மனிதர்களை நான் காண்கிறேன்:

1. தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்கள் 
2. தன்னம்பிக்கை அற்றவர்கள் 
3. குறிக்கோளற்றவர்கள் (No goals, vision or meaning for life) 
4. போட்டி மனப்பான்மைக் கொண்டவர்கள் 
5. சோம்பேறிகள் 

நீங்கள் கூறும் மனிதர் இதில் ஏதோ ஒரு வகையைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். முடிந்தால் அவரிடமே பேசிப் பாருங்கள். அல்லது அவரது செயலைப் பொருட்படுத்தாதீர்கள். ஒவ்வொரு முறை உங்கள் மீது பொறாமை கொள்ளும்போதும், அவர் ஒரு துளி நஞ்சைப் பருகுகிறார். உண்மையில் அதற்காக அவருக்கு நீங்கள் கவலைப்படவேண்டும்; அவர்பால்  கருணை கொள்ளவேண்டுமே அன்றிச் சினம் கொள்ளலாகாது.

"Amongst all attainable excellence, there is NONE EQUAL to that of BEING FREE FROM ENVY towards others." என்றுரைக்கிறான் நம் தாத்தன். 

"விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின்."

எனவே, சுய மேன்மை எய்துவதற்காகப் போராடுபவர்கள் அடைய வேண்டிய முதல் மேன்மை "அழுக்காறு அற்ற தன்மையையே" என்பது என் எண்ணம். மேலே நான் குறிப்பிட்டுள்ள ஐந்து இயல்புகளிலும் சிக்கிக் கொள்ளாதவர்களுக்கு பொறாமை கொள்வதற்கான அவசியம் உண்டாகாது.

மாறாக -

"தனக்கென ஒரு தெளிவான லட்சியத்தை வகுத்துக்கொண்டு (3), அதற்காகக் கடினமாக உழைத்துக் கொண்டு (5), தன்னுடைய முந்தைய நிலையை மட்டுமே தனக்கான போட்டியாகக் கருதி (4), பிறர் விதைக்கும் எதிர்மறை சிந்தைகளைக் கண்ணுற்றுத் துவண்டு விடாமல், தானும் முன்னேறி, தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் முடிந்த அளவுக்கு முன்னேற்றி (2), எவரையும் தனக்கு மேலானவர் என்றும், எவரையும் தனக்குக் கீழானவர் என்றும் கருதாமல் (1) தன்னுடைய வாழ்க்கையில் தான் நாயகன் என்பது போல, அவரவர் வாழ்க்கையில் அவரவர் நாயகர் என்று கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் பொறாமையின் நிழல்கூட விழ வாய்ப்பில்லை.

அப்படி ஒரு லட்சிய நிலையை நோக்கி நாம் பயணிக்கலாமே?

கருத்துகள்

  1. அருமை . வாழ்த்துக்கள்
    மனிதனின் திருத்தமுடியாத கீழ்மை குணங்கள் வெறுப்பு, பொறாமை, பேராசை, ( Hatred, Envy, Greedy) இவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதில்லை.
    நன்றி உணர்வு, பொறுப்பேற்கும் தன்மை , உரிமைகளைவிட கடமைக்கு முக்கியம் தருவோர் ( Gratitude, taking Responsibility for their actions, Preference to Duty than to their rights) வாழ்வில் தாழ்ந்து போவதே இல்லை
    Edit or delete this

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..