சிறப்பு தொகுப்புகள்

Monday, April 17, 2017

இந்தியா குறித்த ஏளனம்…

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'இந்தியா குறித்த ஏளனம்..' பதிவுக்கு நான் எழுதிய கடிதம் - அவருடைய தளத்தில்.

http://www.jeyamohan.in/91987#.WPRra9J97IV

என்னுடைய கடிதம்:
அன்பு ஜெயமோகன்
‘இந்தியா குறித்த ஏளனம்..’ கடிதத்தைப் பார்த்தேன். பிரகாஷ் எந்த நாட்டில் வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய பின்னணியிலிருந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறியதில் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சீனர்-ஜப்பானியர்களைக் குறித்த பார்வை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்தான். இவர்கள் நல்ல வெளிநாட்டுக்காரன் கெட்ட வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பார்த்தாலும் அதற்குக் காரணம் சீனர்கள் நடந்துகொள்ளும் விதம் காரணமாக இருக்கலாமே ஒழிய, பிறிதொரு காரணம் இருப்பதாய்த் தெரியவில்லை.
மேலும், இந்திய உணவைப் பார்க்கும்போது அவர்கள் அருவெறுப்படைவது பற்றி எழுதியிருந்தார். அதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து முற்றிலும் மறுக்கிறேன். எனக்கு உள்ளூர் நண்பர்கள் அதிகம். முதல் முறையாக இந்திய உணவை சுவைப்பதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். அதற்கு காரணம் இந்திய உணவு சற்று காரசாரமாக இருக்கும் என்று அவர்கள் அறிந்து வைத்திருப்பதால்தானே தவிர வேறெந்த அருவருப்பு உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துக்கொள்வதையெல்லாம் நான் நிச்சயமாகக் கண்டதில்லை. எனக்கே முதன்முதலில் ஐரோப்பிய உணவுகளை பார்ப்பதற்கு, “என்னடா சாப்பாடு இது?” என்று தோன்றும். ஆரம்ப நாட்களில் விருந்துக்குச் செல்லும்போதெல்லாம் என் மனைவியிடம் வீட்டுக்கு வந்து இன்னொருமுறை சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறேன். இதெல்லாம் உணவு பழக்கப்படும் வரைதான்.
என் அநுபவத்தில் ஒருமுறை இந்திய உணவை சுவைத்தவர்கள் யாரும் மறுமுறை அப்படி முகம் சுழிப்பதில்லை. என்னுடைய நண்பர்களில் இந்திய உணவின் சுவைக்கு அடிமையானவர்கள் அதிகம். பல நேரங்களில் இரண்டு டப்பர்வேர்களில் மதிய உணவு எடுத்துச் சென்றிருக்கிறேன். உணவுக்காகவே என் வீட்டுக்கு வருபவர்களும் உண்டு. கேட்டன் என்றொரு நண்பன் இருக்கிறான். புதன்கிழமையன்று அவர்கள் வீட்டில் ப்ரியா சமைக்கும் உணவுதான். கடந்த எட்டு மாதங்களாக ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறான். அதற்கு பணமும் தந்து ப்ரியாவின் உணவுக்கு வாடிக்கையாளராகவே மாறிவிட்டான். கடந்த மாதம் கூட என்னுடைய அணியிடம் எங்கு விருந்துக்கு செல்லலாம் என்று கேட்டபோது அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ‘ஹிமாலயன் உணவகம்’.
பெல்ஜியத்தில் எந்த இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும் அங்கு இந்தியர்களை உள்ளூர் கூட்டம்தான் நிரம்பி வழிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட வைரத்துக்குப் பெயர் போன ஆன்ட்வெர்ப் நகரத்துக்கு நண்பனின் திருமணத்துக்கு உடை வாங்குவதற்காக சென்றிருந்த போது, இரவு உணவுக்கு ‘ஆகார்’ உணவகத்துக்குச் சென்றிருந்தோம். உணவகத்தில் அமர இடமே இல்லை. நாங்கள் மட்டுமே இந்தியர்கள். நீங்கள் பெல்ஜியம் வரும்போது நிச்சயம் உங்களை அங்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டுகிறேன். அவ்வளவு ஏன், பல சமயங்களில் நாங்கள் அவர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று இந்திய உணவைச் சமைத்திருக்கிறோம். நேற்று என் நண்பர் ஒருவருக்கு இந்தியாவில் திருமணம். அவருடைய பெல்ஜியம் பெண் நண்பர்கள் இந்திய திருமணத்தைப் பார்க்கவும், திருமண விருந்து உண்ணவும் இந்தியா சென்றிருக்கிறார்கள்.
உங்களுடைய பதிலில் பல விஷயங்களை ஆழமாக அணுகி பேசியிருக்கிறீர்கள்.
“பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும்.”, “ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?” – இவற்றை எல்லாம் நானே எழுதியது போலவே உணர்கிறேன். என்னுடைய கருத்தும் அஃதே. இன்றைய மிகை ஊடகச் சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது. Peak Negativity.
உங்கள் கட்டுரையில் நான் பார்த்தவுடன் திடுக்கிட வைத்தது, நீங்கள் “வெள்ளையனின் பொறுப்பு” (Whiteman’s Burden) பற்றி எழுதியிருந்த பகுதி. நீங்கள் டாக்டர்.யூவல் நோவா ஹராரி எழுதிய ‘Sapiens – A Brief History of Humankind’ புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் மூன்று பத்திகளில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே எழுதியிருக்கிறார், நீங்கள் குறிப்பிட்டிருந்த ருட்யார்டு கிப்ளிங் வரிகளோடு. அதற்கு மேலும் சென்று, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வங்காளம் எவ்வளவு வளமான பகுதியாக இருந்தது என்பதில் ஆரம்பித்து, பிறகு அவரிகளுடைய பொருளாதாரக் கொள்கைகள் எப்படி வங்காள பஞ்சத்துக்கு வித்திட்டது என்பதை வரை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பை 2011-இல் ஹீப்ரு மொழியிலும், ஆங்கிலத்தில் 2014-இலும் வெளியிட்டிருக்கிறார்கள். உங்களின் ‘இந்தியா குறித்த ஏளனம்..’ பதிவை 2010-இல் எழுதியுள்ளீர்கள். ஆனால், ‘Sapiens was a top ten bestseller’. ஒரு மில்லியன் பிரதிகளாவது இதுவரை விற்கப்பட்டிருக்கும். சாரு நிவேதிதா அவர்களின் அறச்சீற்றத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பேசாமல் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிக்கலாம். தமிழர்களின் தமிழ் மொழி மீதான தாழ்வு மனப்பான்மையும், ஆங்கில மோகமும், வாசிப்பில் நாட்டமின்மையும் பெரும் சோர்வைத் தருகிறது. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ‘வாசியுங்கள்.. வாசியுங்கள்..” என்று கூறி சலிப்படைந்துவிட்டேன்.
பிரகாஷ் கூறியவற்றுக்குப் பின்னால் வேறொரு காரணமம் இருக்கிறது. அது நம்முடைய இந்தியர்கள் பழகும் விதம்.
மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மற்றும் மதப்பரப்புநர்கள் உருவாக்கியதாக சித்திரங்களை பற்றி விளக்கியிருந்தீர்கள். ஆனால் இன்றைக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலும் கணிசமான அளவு இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் அவர்களது பங்கு என்ன? அவர்களால் இந்த சித்திரத்தை மாற்றி அமைக்க முடியாதா? அதற்கான பொறுப்பு என் போன்றவர்களுக்கு இருக்கிறதல்லவா?
தற்சயலாக நிகழ்ந்த ஒன்று. மூன்று நாட்களுக்கு முன்புதான் இதுபற்றி எழுதியிருந்தேன். வெளிநாடுகளுக்கு குறைந்த காலமோ, நீண்ட காலமோ பெரும் இந்தியர்களுக்கு நான் எழுதிய உதவிக்குறிப்புகள் இவை. நம் மீதான விமர்சனத்தையும் உள்ளடக்கியது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இனி.. நான் எழுதியது:
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு.. சில வார்த்தைகள்.. சில சிந்தனைகள்..
எனக்குள் மானுடப்பற்று பெருகிய நாளிலிருந்தே தேசப்பற்று அருகிவிட்டது. திறந்த மனத்துடனான பரந்த வாசிப்பும் அதற்கு ஒரு காரணம். “மானுடமா? தேசமா?” என்று கேட்பதெல்லாம் சிறு குழந்தையிடம், “உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?” என்று கேட்டு அதன் கற்பைப் பரிசோதிக்கும் சிறுபிள்ளைத்தனம். ‘வசுதைவ குடும்பகம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற ஒருலகச் சிந்தனைகள் எல்லாம் கற்பனாவாதம் என்றால், தேச எல்லைகள் மட்டும் இயற்கையிலேயே அமைந்தவையா என்ன? சிரியாவைச் சேர்ந்த ஐயாயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு பெல்ஜியத்துக்கு வருவதற்கு கடந்த வெள்ளியன்று விசா கிடைத்திருக்கிறது. கட்டிப்பிடித்து முத்தமிடவேண்டும் போலிருக்கிறது இந்த அரசாங்கத்தை. முகத்தில் குருதி வழிய அதிர்ச்சியும், குழப்பமும், பயமும் கலந்த முகத்துடன் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து நெஞ்சம் படபடத்து கண்ணீர் விடுவதற்கு நான் சிரிய தேசத்தவனாக இருக்கவேண்டுமா என்ன? எனக்குள் இருக்கும் தந்தையுணர்வே போதுமானது.
தேசங்களைப் பற்றிய என்னுடைய பார்வை ஒருபுறமிருந்தாலும், அதே சமயம், வெளிநாடுகளில் வாழும் என் போன்றவர்களின் தவறுகளுக்காக எங்கள் மீது எறியப்படும் கல், நான் சார்ந்த தேசத்தில் வாழும் அனைவரின் மீதும் விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இதுகுறித்து என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பணியிலும் வெளியிலும் இவற்றை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்:
தாழ்வு மனப்பான்மையை ஒழியுங்கள்..
பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான காரணம் உங்கள் அறிவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதற்காகவே. தேவை அவர்களுக்குத்தான். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உங்களுடைய தீர்வுகள் தேவை. பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எனவே உங்கள் மீதும் உங்கள் அறிவின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதே நம்பிக்கை வைக்காமல், உலகத்தின் எந்தக் கடவுளை நீங்கள் வழிபட்டாலும் அதனால் துளி உபயோகமில்லை. ஏதோ அவர்கள் தயவில் நீங்கள் இங்கு வந்து வாழ்வது போல் நடந்துகொள்வதைப் பார்க்கும்போதெல்லாம் சற்று வருத்தமாக இருக்கிறது.
விவாதம் புரியுங்கள்..
“இந்தியர்கள் ஏன் ஆமாம் சாமிகளாக இருக்கிறார்கள்?” என்றும், உடனே “ஆனால் நீ அப்படியில்லை.” (எல்லோரிடமும் இப்படித்தான் சொல்வார்களாக இருக்கும்) என்று இங்குள்ளவர்கள் கூறும்போதெல்லாம், “இதற்கு முன்பு எத்தனை இந்தியர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். சென்னைக்குச் சென்று நீங்கள் கூறும் விலைக்கு ஆமாம் சாமி போடும் ஆட்டோக்காரர்களை முதலில் எனக்குக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நாம் பேசலாம். இங்கு வருபவர்களெல்லாம் பெருநிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள். எனவே நீங்கள் கூறுவதெல்லாம், அந்தப் பெருநிறுவனங்களுக்கான குணாதிசயமாகத்தான் இருக்கவேண்டும். நான் அப்படி இல்லை என்று நீங்கள் கூறும்போதே இந்தியாவில் அப்படி இல்லாமல் இருப்பதற்கும் சாத்தியமிருக்கிறது என்பதை நம்புங்கள்” என்று விவாதித்திருக்கிறேன். மேலும் இது நான் இதற்கு முன்பு நான் கூறிய தாழ்வு மனப்பான்மையையும், தன்னம்பிக்கையும் சார்ந்த விஷயம் என்பதை உணருங்கள்.
பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் காணப்படும் அதிகாரப் படிநிலை அமைப்பு என்பது இந்தியச் சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இலக்கியத்தை வாசித்தால் நம்முடைய பேராசான்கள் துணிவையே பேசியிருக்கிறார்கள். நம் பெரியவர்கள் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றுதானே நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு என் தந்தை எந்தக் காலத்திலும் யாருக்கும் அடங்கி நடந்து நான் பார்த்ததில்லை. தனக்கு எது சரி, நியாயம் என்று படுகிறதோ அதைத்தான் செய்திருக்கிறார். அதனால் அவர் இழந்ததுதான் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக அவர் கவலைப்பட்டும் நான் பார்த்ததில்லை. நானுமே அவருடனான விவாதங்களின்போது அவரின் இது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறேன். எங்களுடைய விவாதங்களையெல்லாம் பார்த்தீர்களேயானால் மிரண்டு விடுவீர்கள். இப்படியெல்லாம் தந்தையும் மகனும் விவாதம் செய்ய முடியுமா என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் மனதுக்குள் அவரை ரசிக்கவே செய்திருக்கிறேன். இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் வந்து பணி புரியவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எல்லா இந்தியனும் தலையாட்டுபவனில்லை என்று அப்போதாவது இவர்களுக்கும் புரியட்டுமே.
நான் சொல்ல வந்த செய்தி இதுதான். விவாதியுங்கள். அடக்கமாக நடந்து கொள்வதற்கும், அடங்கிப் போவதற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் நான் காண்பது அடக்கத்தையல்ல, அடங்கிப்போவதையே. ஒருவேளை இந்தத் தலைமுறைக்கே உரிய தாழ்வு மனப்பான்மையையும் பிற பலவீனங்களையும் இந்தப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றனவோ என்னவோ. நிறுவனங்கள் மட்டுமல்ல. அதிகாரப் படிநிலை அமைப்பில் உங்களுக்கு மேல் ஒரு தன்னம்பிக்கையற்றவர் தலைவராக, மேலாளராக அமர்ந்திருப்பார். அவரின் ஒரே பலமே உங்களின் இந்த பலவீனமாகதான் இருக்கும். அவர் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வார். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்முடைய பலவீனம் இன்னொருவனுக்கு பலம். ஆனால் அதுபற்றி பயம் கொள்ளவேண்டாம். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். துணிவு தானாக பிறக்கும். (பலமுறை சொல்லிவிட்டேன். இருந்தாலும் இன்னொருமுறை வேண்டிக்கொள்கிறேன், ‘புத்தகங்கள் வாசியுங்கள்’. அது எல்லா இடத்திலும் உங்களுக்கு கைக்கொடுக்கும்.)
புன்னகையை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்..
யாரென்றே தெரியவில்லை என்றாலும்கூட, உள்ளூர்க்காரர்கள் ‘eye contact’ ஏற்பட்டுவிட்டால் உடனே புன்னகைப்பார்கள். அந்த சமயங்களில் இந்தியர்கள் தலையைத் திருப்பிக்கொள்வதை கவனித்திருக்கிறேன். இதனால் இந்தியர்கள் இறுக்கமானவர்கள் என்கிற பார்வை வந்துவிடும். Smile is contagious. So, Please practice it.
கம்பீரமாக நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்..
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் திமிர்ந்த ஞானச் செருக்கு” – இவற்றையெல்லாம் மாதர்களுக்கு மட்டும் சொல்லவில்லை பாரதி. எல்லா மாந்தர்களுக்கும்தான்.
மீண்டும், விவாதம் புரியுங்கள்…
எனக்குச் சற்றும் பிடிக்காத இன்னொரு விஷயம். இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் அவர்களுக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது. இந்தியாவில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு ஆயிரம் காரணங்களும் இருக்கிறது. நானுமே இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைச் சொல்லி வருந்தி இருக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்களாக நான் அறிந்திருப்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். அதே சமயம் அவர்கள் தேசத்தில் இருக்கும் பிரச்சினைகளையும் துணிவுடன் எடுத்துரையுங்கள். உதாரணத்துக்கு, இங்குள்ள சமூக பாதுகாப்பு அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அதே சமயம், இந்தியாவில் சமூகப் பாதுகாப்பே இல்லை என்று இவர்கள் கூறும்போதெல்லாம், இந்தியாவின் குடும்ப அமைப்பைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லி, இங்கு அம்மாவையும் அக்காவையும் சந்திப்பதற்குக்கூட ஒப்பந்தம் செய்துக்கொள்ளவேண்டியதன் அவலத்தையும் விமர்சியுங்கள்.
விவாதியுங்கள். விவாதிப்பதற்கு சில சிந்தனைகள். இப்படித்தான் நான் அவர்களுடன் விவாதிக்கிறேன்:
இந்தியாவில் வசதியான சகோதரன், தன்னைவிட வசதி குறைந்த சகோதரனுக்கு வேண்டியதைச் செய்து உதவுகிறான். உதவியே ஆக வேண்டும்!! அதையேத்தானே இங்குள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்பு செய்கிறது? அரசாங்கத்துக்கு மட்டும் இவற்றையெல்லாம் செய்வதற்கான வசதி வானிலிருந்தா விழுகிறது. நீங்கள் முகமறியாதவர்களுக்கு செய்கிறீர்கள். இந்தியாவில் உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் செய்துகொள்கிறார்கள். இங்கே அது விதியாக இருப்பதால் அதற்குட்பட்டு நடக்கிறீர்கள். அங்கே அது அடிப்படை அறமாக இருப்பதால் அறத்துக்குட்பட்டு நடக்கிறார்கள். எது சரியென்பதைக் காலம்தான் எடுத்துச் செல்லும். எத்தனை காலத்துக்கு அரசாங்கம் இவற்றை செய்ய முடியும்? கிரீஸில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? நம்முடன் என்றைக்கும் துணை வரப்போவது மானுடம் மட்டுமே. அரசாங்கங்கள் அல்ல. எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் அரசாங்கங்களும், தேசங்களையும்விட மானுடத்தை மதிக்கிறேன்.
கலாச்சார ஒற்றுமைகளைக் காணுங்கள்..
ஐரோப்பாவிற்கு வந்த புதிதில், இங்கிருக்கும் இந்தியர்களும் சரி, ஐரோப்பியர்களும் சரி அடிக்கடி பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய புத்தக முன்னுரையில்கூட எழுதியிருக்கிறேன். சமீபத்தில் பெல்ஜியத்தின் புகழ்மிக்க கல்லூரி ஒன்றில் உரை நிகழ்த்தியபோது கூட இதைப் பற்றி மாணவர்களிடம் பேசினேன்.
“பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது. பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது மனிதர்களை மேலும் பிரிக்கவே செய்யும். வெங்காயமாவது, பனிப்பாறையாவது.. கண்ணுக்குத் தெரியும் வேறுபாடுகளைவிட, மறைந்திருக்கும் ஒற்றுமைகள் மூலமாகவே சக மனிதர்களிடம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும், அவர்கள் எந்த தேசத்தவர்களாயினும்.”
என்னுடைய உரை முடிந்த பிறகு மாணவர்களிடம், அவர்கள் இந்த உரையிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்று கேட்ட போது, பெரும்பாலான மாணவர்கள் “Cultural Similarities instead of Cultural Differences” மற்றும் “Cultural Surprises instead of Cultural Shocks” போன்றவை புதிய சிந்தனைகள். கேள்விப்பட்டதில்லை. அவற்றையே எடுத்துச் செல்ல விரும்புகிறோம் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த ஒட்டுமொத்த உரையிலும் அந்தப் பகுதி மட்டுமே என்னுடைய சுய சிந்தனை. நான் கண்டடைந்த தரிசனம்.
உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்..
குறிப்பாக ஐரோப்பாவிற்கு வருபவர்கள் நிச்சயம் செய்ய வேண்டியதொரு விஷயம். இந்த தேசத்துக்குச் செல்கிறீர்களா, அந்த தேசத்து மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்களோடு எளிதில் இணைத்துக்கொள்ளவும், அந்தச் சமூகத்தில் விரைவில் ஒரு அங்கமாகவும் இது மிகவும் உதவும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் வியாபாரத்துக்கும் அது மிகவும் அவசியம். இந்தியாவில்தான் ஆங்கிலம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ஆங்கில மோகமும், தம் மொழியின் மீதான தாழ்வு மனப்பான்மையும் எல்லா இந்திய மொழிகளையும் கொன்றழித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை. என்னதான் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் நீங்கள் இரண்டாம் தர குடிமகன்தான். அதுவும் நான் வசிக்கும் பெல்ஜியத்தில் மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரியாமல் குடியுரிமை கூடப் பெறமுடியாது. எப்படியிருந்தாலும் அயல் மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே. என் மகனின் டச்சு மொழிப்புலமைப் புலமை பற்றி இங்குள்ள ஆசிரியர்களே வியக்கிறார்கள். நான் அவனுடைய தமிழாசிரியர் என்கிற முறையில், பிற்காலத்தில் அவன் தமிழ் மொழிப புத்தகங்களை டச்சு மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவனும் உறுதியளித்திருக்கிறான். நம்மைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவைக்கக்கூட அவர்கள் மொழியை நாம் கற்றாக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. என் அணியில் உள்ள நண்பர்கள் அவ்வப்போது வந்து தமிழ் மொழி வார்த்தைகளைக் கேட்டுது தெரிந்துகொள்கிறார்கள். இது நான் அவர்கள் மொழியின் மீது காட்டும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது.
உள்ளூர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும், தங்களுக்கு வேண்டிய இந்தியாவை தாங்களே அங்கு உருவாக்கிக்கொள்வார்கள். இந்தியக் குழு மற்றும் அதற்குள் தமிழர்கள், தெலுங்கர்கள், வட இந்தியர்கள், என்று உப குழுக்களை உருவாக்கிக்கொள்வார்கள். அதில் தவறில்லை. நம் தேசத்தை விட்டு வெகுதொலைவு வந்து வேறோர் தேசத்தில் இருக்கும்போது இன்னொரு இந்தியனைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்கத்தான் செய்யும். எனக்கும் அப்படியே. அப்படித்தான் பல புதிய இந்திய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். இன்றைக்கு என்னுடனிருக்கும் நெருங்கிய இந்திய நண்பர்களை அவ்வாறே பெற்றேன். ஆனால், பெரும்பாலான இந்தியர்களுக்கு அதைத் தாண்டி வேறெதுவும் இருக்காது.
உதாரணத்துக்கு உள்ளூர் செய்தித்தாள்களைக்கூட வாசிக்கவே மாட்டார்கள். உள்ளூர் நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே உள்ளூர்க்காரர்களை வீட்டுக்கு அழைத்தால், பெரும்பாலும் அவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, வியாபார காரணங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட நட்புகளாகவோ இருப்பார்கள். உள்ளூர் நண்பர்களுடன் பழகி, அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளவும், இணைத்துக்கொள்ளவும் பெரும்பாலும் முயல்வதே இல்லை.
இங்கு ‘பெரும்பாலான’ என்கிற பதத்தை அடிக்கடி உபயோகிக்கிறேன். அதற்குக் காரணம் எவற்றையும் பொதுமைப்படுத்த நான் விரும்புவதில்லை. எதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள்.
சிக்கனத்துக்கும் கஞ்சத்தனக்குமான எல்லைகளை உணருங்கள்..
‘இந்தியர்கள் கஞ்சர்களா?’ என்று ஒருமுறை என் நண்பனொருவன் கேட்டான். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. இத்தனைக்கும் உண்மையில் இவர்கள்தான் சிக்கனமானவர்கள். அவ்வளவு எளிதாகச் செலவு செய்துவிட மாட்டார்கள். அது நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒன்றுகூட. ஆனால் அவன் அப்படிக் கேட்டதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் ஆடம்பரங்களுக்கெல்லாம் வாரி இறைத்துச் செலவு செய்யும் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் மட்டும் திடீரென்று சிக்கன சிகாமணிகளாகி, அத்தியாவசிய செலவு செய்வதற்குக்கூட ஐந்து முறை யோசிப்பார்கள். சிக்கனமாக இருப்பது நல்லதுதான்.
ஆனால் இந்தியாவில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்கள்கூட இங்கு வந்தால் ஐந்து யூரோ (400 ரூபாய்) போன் ரீசார்ஜ் அட்டையை வாங்குவதற்குத் தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஏனிந்த முரண்? எனக்கு நெருங்கிய இந்திய நண்பர் ஒருவர் இங்கு வந்திருந்தபோது தினமும் உணவகத்துக்குச் சென்று செலவழிப்பதைக் நையாண்டி செய்து அவரை அவமானப்படுத்திவிட்டார்கள். பிறகு அவரும் டிராகுலா கடித்த கதையாக மாறிவிட்டார். எனவே சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்குமான எல்லைகளை உணருங்கள்.
முக்கியமாக சாலை விதிகளை கடைப்பிடியுங்கள்..
அந்நியர்களை எப்பொழுதுமே ஆறு கண்கள் அதிகமாகவே நோட்டமிடும் அறிக. இது எந்த நாட்டிலும் நடப்பதுதான். எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் பெரிதுபடுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. அப்போதெல்லாம் “யாரிந்த மனிதன் இப்படி எல்லாம் நடந்துகொள்கிறான்” என்று யாரும் நினைக்கப் போவதில்லை. “இந்த இந்தியர்களே இப்படித்தான்” என்றுதான் பேசுவார்கள். ஏனெனில் சாலைகளைப் பொறுத்தமட்டிலும் நமக்கிருக்கும் குடிமை உணர்வை உலகமே அறியும். அதை உலகமே கிண்டல் செய்துகொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்குச் சென்று திரும்பும் இந்த ஊர் மனிதர்கள் சாலைகளில் நம்முடைய ஒழுங்கைப் பற்றிச் சொல்லி கிண்டல் செய்யும்போதும், நான் நாணிக் குறுகவே செய்கிறேன். அந்த சமயத்தில் என்னால் அதிகம் விவாதிக்கவே முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றி நமக்கென்ன கவலை. நமக்கு தேசப்பற்று என்றால் தேசியகீதத்தை அவமானப்படுத்தாமல் கேட்டுக்கொண்டு தேசியக்கொடிக்கு முன்பு விறைப்பாக நின்று வணக்கம் செலுத்தவேண்டும். அதுபோதும்.
இவையெல்லாம் என்னுடைய அறிவுரைகளல்ல. உதவிக்குறிப்புகள் மட்டுமே. உதவக்கூடும் என்று நினைத்தால், நடைமுறைப்படுத்துங்கள். இன்னும் சில முக்கியமான உதவிக்குறிப்புகளும் இருக்கின்றன. விரைவில் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன்.
இறுதியாக, இன்னொரு முக்கியமான விஷயம். இவற்றையெல்லாம் வெளிநாட்டில் மட்டுமல்ல. எங்கிருந்தாலும் பின்பற்ற முயற்சிக்கவும்.
அன்புடன்,
மாதவன் இளங்கோ
பெல்ஜியம்


Sunday, November 13, 2016

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய "முடி" சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்: 
.............................................................................

முடி” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது. 

முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்கள் மொழி நடை மிக வித்தியாசமானதாய் புலம்பெயர் இலக்கியங்களுகென்றேயான ஒரு சிறப்பும், உடன் தெளிவான நீரோட்டம் போன்ற ஒழுங்குடன் இருக்கிறது. 

கதைத்தொடர்ச்சி எங்கும் அறுபடவேயில்லை, இடை இடையே  கதைமாந்தர்கள் பலரை அறிந்து கொள்ளும் போதும் பணிச்சூழல் மாறுபாடுகளைக் குறிப்பிடும் போதும், flashback சொல்லப்படும் போதும், அலுவலகத்தின் hierarchy விவரிக்கப்படும் போதும், எங்கும் கதை jump ஆகி பல இடங்களுக்கு சென்று பின்னர் மூலக்கதைக்கு வராமல், ஒரு மரத்தின் தண்டிலிருந்து அதன் பல கிளைகளைப் பார்ப்பது போல மூலக்கதையுடன் ஒத்திசைந்து வரும் பல கிளைகளை தொந்தரவின்றி  வாசிக்கவும் பின் தொடரவும் முடிகிறது. தேர்ந்த எழுத்தாளரென்று தெரிகிறது. நிறைய எழுதுவீர்களா? முடிந்தால் அனுப்புங்கள்.

கதையில் மையமுடிச்சு மோகனின் தலைமுடி கொட்டும் பிரச்சினையைக் குறித்தே எனினும் கதையின் ஊடே அந்த நாட்டின் பல அம்சங்களை மேலொட்டமாக, எனினும் குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். கடினத்தன்மை கொண்ட தண்ணீர், உணவகங்கள்,  (அவற்றின் பெயரிலிருந்தே அவை இந்திய உணவகங்கள் என்று தெரிகிறது) தொடர்ந்து போனால் ஏற்படும் அதிக செலவுகள், புதன்கிழமைகளில் பள்ளி நேரங்கள், பெண்கள் அதற்கேற்ப அவர்கள் வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளுதல், மோகனின் அலுவலகத்தில் இருக்கும் பணி தொடர்பான சிரமங்கள், வசதிகள், சலுகைகள் (வீட்டில் இருந்தபடியும் கென்டில் இருந்தபடியும் வேலை செய்வது, உணவிற்கான food allowance, காப்பகங்களுக்கான பெருஞ்செலவுகள், ரெடிமிக்ஸிலும்  உறைஉணவிலும் ஓடும் வாழ்க்கை வண்டி, நீளமான நகரதின் பெயர், மலைமேல் அமைந்த இன்னோர் நகரம், அதற்கு செல்லும் தூரம், பார்ட் ஒரு இறை நம்பிக்கை இல்லாதவர்,  அதனாலேயே தேவாலயத்தில் சடங்குகள் நடக்கவில்லை என ஒரு சின்னஞ்சிறு கதையில் அயல்வாழ்வின் எத்தனை தகவல்களைச் சொல்லி இருக்கிறீர்கள்?

கதையின் மையப்பிரச்சனையாகிய முடி கொட்டுதல் படிக்க படிக்க எனக்கெ முடி கொட்டுவது போல மிகத் தீவிரமாக மனதில் பதிந்துவிட்டது. படிக்கும் போதே மனதில் நான் அதற்கான தேர்வுகளை யோசித்தவாறு  இருந்தேன், (மொட்டை அடிச்சுக்கலாமில்ல?, எர்வாமாட்டினுமா உதவலை செக்கில் ஆட்டின தேங்காயெண்ணை? இத்யாதி.,)

ஆங்காங்கே தென்படும் உங்களின் பகடிகளும் அருமை. கொன்றொழித்த வார இறுதிகள் எனும் வாக்கியதில் தென்படும் இழந்த வார இறுதிகளின் ஆவேசம், குதிரைவால் முடி என்பதில் தெரியும் ஆற்றாமை, மின் தூக்கியில் முப்புறமிருந்தும் காணக்கிடைக்கும் 300 சொட்டைகளின் தரிசனத்தில் தென்படும் இயலாமையும் வேதனையும், அய்யனார் சிலை போல மாறாமல் பிரம்மாண்டமாய் அதுவும் இளித்தபடி அமர்ந்திருக்கும் அசல், flash பிரச்சினை ஆகுமளவிற்கான பளபளக்கும் சொட்டை
// சர்வாதிகார மனப்பாங்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை  கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?// எனும் சுயவிளக்கத்தின் மூலம் தெரியப்படுத்தும் உயரதிகாரியின் குணாதிசயங்கள்.

'அமேசானின் எர்வாமாட்டினும், ஐம்பதிற்கும் மேலான செல்ஃபியும்', இந்தத் தலைப்பிலெயே இன்னுமொரு கதை எழுதலாம் போலிருக்கிறது. இப்படி அள்ளி வீசியிருக்கிறீர்கள். உங்களின் பகடிகளை மிக மிக இயல்பாக போகிற போக்கில்.
ரசித்துப் படித்தேன். எப்போதும் பதற்றமாகவும் தொட்டால் விரிஞ்சிக்கண்ணணாகவும் எரிச்சலூட்டுபவராகவுமே சித்தரிக்கப்பட்ட பார்ட், கதையின் இறுதியில்  அந்த குணங்களுகெல்லாம் கான்சரில் பாதிக்கப்பட்ட அழகிய மனைவியின் கணவராக காட்டப்படுகையில்  தோன்றும் அவர் மேலான வெறுப்பு எந்த தயக்கமும் இன்றி உடன் குற்ற உணார்வாகிறது நமக்கும் மோகனுக்கும்.

மோகனுக்கு உள்ளுரவும் அவர் மீது நன்றி உணர்வே மேலோங்கி இருந்திருக்கிறது. அதனால்தான் அவன் வேறு தளத்திற்கு மாறாமல் அங்கேயே இருந்திருக்கிறான். பெரும்பாலான இந்தியர்களை போலவே மோகனும் நடுநிலைமைஉள்ளவனாகவே இருக்கிறான். கஷ்டத்திலும் உதவிகளை மறக்காமல், வெளிப்படியாக கோபத்தயும் வெறுப்பையும்  காட்டமுடியாமல், அமோரைப் போல தப்பித்துக்கொள்ளாமல் இப்படி இந்தியனாக இருக்கிறான்.

பார்டின் மனைவி இறந்த செய்தி அறிந்தபின் மோகன் மனதில் அசைபோடும் விஷயங்கள் எல்லாமே நாம் அவனிடத்தில் இருந்தால் நிச்சயம் செய்திருக்கும் விஷயங்களே. அப்படியா? இப்படி இருக்குமா? அப்படியெல்லம் இருக்காது.. என்று மனக்குதிரையை தட்டி விடுவதெல்லாம் மிக உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறீர்கள்.

இறந்த பெண்னின் புகைப்படத்தைப் பார்த்து மோகன் நினைப்பதெல்லம் சாதாரணமாய் நாமெல்லாருமே துக்க வீட்டில் நினைப்பதுதான். ஆனால் அழுது சிவந்த கண்ணும் மூக்குமாய் மூன்று சின்னக்குழந்தைகள் அவரருகே நின்ற அந்த கணத்தில் நான் ஓடிப்போய் பார்ட்டைக்க்கட்டிக்கொண்டு கதறிவிட்டேன். ஒரு நொடியில் என் குற்ற உணர்வனைத்தும் மாளாத்துயரமாகியது
மோகனைக்கட்டிக்கொண்டு கதறி நடந்தவற்றிற்கெல்லாம் பார்ட் மன்னிப்பும் கேட்பது மிக நெகிழ்வான தருணம். அந்த பெண் கான்சரில் இற்ந்தாள் என்பதையும் சிகிழ்சையில் முடியனைத்தும் இழந்திருக்கிறாள் என்பதையும்சொல்லாமல் விட்டதும் கதையின் பலம்.

மோகனுக்கு இப்பொது தன் முடி இழப்பு எனும் கோடு, கான்சர் எனும் வலிமிகுந்த உயிரைப் பறிக்கிற உற்றவர்களை துயரப்படுத்துகிற ஒரு வியாதியாகிய பெரும் கோட்டின் முன்னாலான சின்னஞ்சிறு கோடாகிவிட்டது.

நல்ல கதை மாதவன். என்றும் நினைவில் இருக்கும் எனக்கு. ஜெயமோகன் அவர்கள் சில சமயம் கடுப்புடன், ”நான் 20 பக்கம் எழுதினால் விமர்சனம் 60 பக்கம் எழுதறாங்க..”  என்று சொல்வது போல, நீண்ட நெடும் விமர்சனமோ என்னவோ தெரியவில்லை. கதை மிக மிக அருமை மாதவன்.

ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

அன்பு ஜெயமோகன், 

அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள். 

"ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு"
..................................................................

ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.   

அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.  

அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இதில் அவர்களுடைய முடிவைப் பற்றியும், ரப்பர் தோட்டத்துக்குள் தடயமற்றுப் புதைந்து போன தந்தையாரின் வீட்டைப் பற்றியும் சொல்லும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது சற்று உணர்ச்சிவசப்பட்டேன். கட்டிலின் மீதமர்ந்து அவர் அஜிதனுடன் உரையாடும் காட்சிகளைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. நானும் என் தந்தையும் அருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அதிலும் தன் மகனிடம் அவன் அன்னைக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி பேசும் இடம் கொள்ளை அழகு. வருங்காலத்தில் என் மகனுக்கு அவன் அன்னையுடனான என் காதலைப் பற்றி சொல்லும் பொழுது அவன் இவ்விதமே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும். 

அவர் சிந்திக்கும், வாசிக்கும் காட்சிகள் நெருக்கத்திலிருந்தும், நடந்து செல்வது போன்ற காட்சிகள் தூரத்திலிருந்தும் அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் மீது அமர்ந்து ரஷ்யாவின் பனிப்பொழிவை கற்பனை செய்தபடி ரஷ்ய இலக்கியங்களை வாசித்தது பற்றி கூறிய இடம் என்னுடைய சிறுவயது நினைவுகளைக் கிளறியது. இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட ஒரு குளிர்காலத்தில் இரவு வேளைகளில் கட்டிலின் மீதமர்ந்து மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது தேநீர் போட்டுக் கொடுக்கும் என்னுடைய தாயைப் பற்றி எழுதினேன். 

அழகான இயற்கைக் சூழல், நீர்நிலைகள், கோயில்களின் பின்னணியில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள், இடையிடையே செருகப்பட்டிருந்த பொருத்தமான புகைப்படங்கள், இலையுதிர் காலத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்குப் பொருத்தமாக  விழும் இலைகள் என்று பேச்சுக்குப் பொருத்தமான காட்சிகள்,  நாயுடன் கொஞ்சி விளையாடுவது, இப்படி  இயல்பான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.  

ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஹரிதம் இல்லத்தில் குறைந்த ஒளியில் தன்னுடைய இசைக்குறிப்புகளை சரிபார்க்கும் ஒரு அமைப்பாளராகத் தெரிந்தவர், அதன் இறுதிக் காட்சியில் அவர் தட்டச்சு செய்யும் இசைப்பின்னணியில் வேளிர் மலையின் மீது தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்டபோது, தன்னுடைய இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பியானோ கலைஞராக எனக்குத் தெரிந்தார். 

பின்னணி இசை என்று எதுவும் சேர்க்காமல் விட்டதற்கு அஜிதனுக்கு நன்றி.   

ஜெயமோகனுக்கு இன்னும் நெருக்கத்தில் நான் இருப்பதாக என்னை உணர வைத்திருக்கிறது அஜிதன் தீட்டியிருக்கும் இந்த உயிரோவியம்.


அன்புடன், 
மாதவன் இளங்கோ 

நவம்பர் 3, 2016

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

சுஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை.
இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.
இத்தனை பேர் பாராட்டும் கட்டுரையை எப்படி வாசிக்காமல் போனேன்? அந்தக் கட்டுரை தேசிகனின் தளத்தில் உள்ளது என்று அவரே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது 2005-ல் எழுதப்பட்ட கட்டுரை ஆயிற்றே, இன்னமும் அந்தத் தளத்தில் இருக்குமா என்று யோசித்துக்கொண்டே தேசிகனின் தளத்தில் தேடினேன். நல்லவேளை கிடைத்துவிட்டது.
அருமையான கட்டுரை. எழுபது வயதானவர்கள் மட்டுமல்ல, முப்பது வயதானவர்களும் வாசிக்கவேண்டியது. எனக்கு ஆச்சர்யமாகப் பட்டது என்னவென்றால், அவர் தெரிவித்திருந்த பல கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போயிற்று. குறிப்பாக மறுபிறவி பற்றி சொல்லியிருந்தது. எனக்கும் அதில் துளி நம்பிக்கைக் கிடையாது. தக்காளிச் செடியின் விதையைப் போட்டால் இன்னொரு தக்காளிச் செடி முளைக்கும் என்கிற அளவில்தான் எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை. அதனாலேயே என்னுடைய வாழ்க்கையை குதூகலத்துடன் வாழ விரும்புகிறேன். அதனாலேயே இந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். மறுபிறவிக் கவலைகளில் இந்த வாழ்க்கையை இழப்பதையும், இந்தப் பிறவி பிரச்சினைகளுக்கு முந்தைய பிறவி செயல்களோடு தொடர்புபடுத்திக்கொள்வதெல்லாம் என்னளவில் தேவையற்ற செயல். அதிலும் ஒரு நான்கு வயது குழந்தை படும் கஷ்டங்களுக்கெல்லாம், முந்தைய பிறவியை காரணம் காட்டுவது என்பது என்னளவில் அட்டூழியமான செயல்.
அதே சமயம் , தக்காளிச் செடியிலிருந்து நாம் சிறிது வேறுபட்டவர்கள்தான். நாம் நம் மறுபிறவியை கண்முன்னே கண்டுகொண்டிருக்கிறோம். எப்படி? உதாரணத்துக்கு, என் மகனுக்கு திரைப்படங்களையே காண்பிக்காமல்தான் வளர்த்து வந்தேன். ஆனால், அவன் ஏழு வயதிலேயே சதா நடித்துக் கொண்டும், பாடல்களை எழுதிக்கொண்டும், இசையமைத்துப் பாடிக்கொண்டும், கதைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறான். இதை சர்வ சாதாரணமாக அவனுடைய முன்பிறவியோடு தொடர்புபடுத்திக்கொள்வது எளிது. ஆனால், அவையெல்லாம் நானிட்ட விதையன்றோ. என் கனவுகளும் உழைப்பும் என்னிடமிருந்து அவனுக்குச் சென்றிருக்கிறது. என்னிடமிருந்து மட்டுமல்ல என் மனைவியிடமிருந்தும். எங்கள் இருவரிடமிருந்து மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களிடமிருந்தும்.
இதனால்தான் எனக்கு மூலக்கூற்று உயிரியலின் சாத்தியங்களை அறிந்துகொள்ளும் ஆவல் பெருகிக்கொண்டே போகிறது. தகவல்கள் மூளையில் மட்டும் சேமிக்கப்படுவதில்லை; நம்முடைய ஒவ்வொரு செல்களிலும், ஜீன்களிலும் சேமிக்கப்படுகிறது. அந்த அளவில் நம்முடைய பிள்ளைகள்தான் நம்முடைய மறுபிறவிகள். அதை இந்த உடல் இருக்கும்போதே காணும் பாக்கியம் பெற்றவர்களன்றோ நாம்.
என்னுடைய 'பயணி' கட்டுரையை நேற்று வாசித்து விட்டு பாராட்டிய என்னுடைய நண்பர் மார்ட்டோ, "எப்படி மாதவன் இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்?" என்று ஒரு சுவாரசியமான கேள்வியை வாட்சேப்பில் கேட்டார். உண்மை என்னவென்றால் எனக்கும் அவையெல்லாம் மறந்து போயிருந்தது. ஆனால் வாசிக்கும் பொழுதோ, காரில் பயணிக்கும் பொழுதோ திடீரென்று மின்னல் போல ஒரு நினைவு வெட்டும். பிறகு நள்ளிரவின் அமைதியில் என்னுடைய டின்னிட்டஸை மறக்கடிக்கும், நினைவுகளையும் கிளற வைக்கும் நல்லதொரு இசையின் பின்னணியில், என் கடந்த காலத்தின் ஏதாவது ஒரு நாளில் நிகழ்ந்ததைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் பொழுது, அது சார்ந்த நினைவுகள் ஒரு மெல்லிய நீரோடையைப் போல சலசலத்துக்கொண்டே எனக்குள் ஓடுகிறது. அதை பின்தொடர்ந்துகொண்டே செல்கிறேன். அப்படிச் செல்லும் பொழுது தோன்றுவதையெல்லாம் எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரம் ஓடினால் நம்முடைய மரபணு நினைவகத்தில் இருப்பதைக்கூட கொண்டுவந்துவிடலாமோ என்னவோ. சில சமயங்களில் நினைவுகள் கிளைத்து வேறெங்கோவெல்லாம் சென்று விடும். அதில் தொலைந்து போகாமல் திரும்பி பிரதான நீரோட்டத்துக்கு வருவதற்குத்தான் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இப்போதும் சுஜாதா கட்டுரையில் ஆரம்பித்துவிட்டு எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறேனே, அது போன்று.
டி.என்.ஏ ரகசியத்தைப் பற்றியெல்லாம் 'சுஜாதா எழுபது' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். கடவுளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்த விஷயத்தில் நானும் அவர் கூறியிருந்த 'அக்னாஸ்டிக்' வகையறாதான். அதைத் தாண்டி சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூர்க்க நாத்திகத்தை நான் விரும்புவதில்லை. ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது, "எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விட மாட்டேன்". நமது நம்பிக்கைகள் நமக்கானவை, ஆனால் அவற்றை சதா மற்றவர்கள் மேல் விட்டு, அவர்களை சூடுபடுத்திக் கொண்டிருப்பது அவசியமுமில்லை; அதில் எனக்கு விருப்பமுமில்லை. என் தந்தையைப் போன்ற தேர்ந்தெடுத்த நபர்களிடம் மட்டுமே இதுபற்றி விவாதிப்பேன், கேள்வி எழுப்புவேன்.
நான் முதலில் வாசித்துக் கொண்டிருந்த கட்டுரை அவருடைய அம்பலம் இணைய இதழில் வந்ததாதலால், அம்பலம் தளத்தில் இப்போது என்னதான் நடந்துகொண்டிருக்கிறது பார்க்கலாம் என்று www.ambalam.com தளத்துக்குச் சென்றேன். "This site can’t be reached" என்று பதில் வந்தது. தளம் மட்டுமல்ல, "Sujatha can't be reached as well" என்கிற எண்ணம் தோன்றிய பொழுது திடுக்கென்று இருந்தது.
அதே நினைவுகளிலேயே தூங்கிப்போனேன். அந்த பாதிப்பில் எனக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்தது. அதில் நானொரு கிழவனாக மரணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி சில வெள்ளைக்காரர்கள் மரியாதையுடனும் கவலையுடனும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மனிதர் என்னுடைய படுக்கைக்கருகே அமர்ந்து என் வலது கையை தன்னுடைய கரங்களால் பற்றியபடி புன்னகைத்துக்கொண்டே, "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று தமிழில் கேட்கிறார். அதற்கு நான் கரகரத்த குரலுடன் "எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு.." என்று தெலுங்கில் தியாகராயரின் வரிகளை பதிலாகச் சொல்கிறேன். அதன் பிறகு என் உயிர் பிரிந்து விடுகிறது.
'சுஜாதா எழுபது' கட்டுரைக்கான இணைப்பு: http://sujathadesikan.blogspot.be/2005/05/blog-post_03.html

Monday, October 17, 2016

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

ஒரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.
Look at that! Exactly. Brilliant.


(முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)