"டூ மச்"

கேள்வி: "என்ன மாதவன்? இவ்வளவு அருமையான (தமிழ்) திரைப்படத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே? இந்த காலத்தில் அவசியம் பேச வேண்டியதைத்தானே பேசியிருக்கிறார்கள். நல்ல கதைத்தானே? உங்களின் எதிர்பார்ப்புதான் என்ன? திஸ் ஈஸ் டூ மச்."
பதில்: அவசியம் பேச வேண்டிய விஷயம்தான். இதில் உங்கள் கருத்தேதான் என்னுடையதும். நாம் இருவருமே காண விரும்புவது அலைகளைத்தான். அந்த அலைகள் எப்படி உருவாக வேண்டும் என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம்.
உங்களுக்கு சக்திவாய்ந்த புயலொன்று கடலில் உருவாக வேண்டும். கடல் கொந்தளிக்க வேண்டும். பெரும் சீற்றத்துடன் சுழன்று அடித்துக்கொண்டு அந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து அலைகளை உருவாக்க வேண்டும். கடலின் கொந்தளிப்பைப் பாருங்கள். சீறி வரும் புயலைப் பாருங்கள் என்று கூறுகிறீர்கள். இது போதாதா என்று கேட்கிறீர்கள்.
நான் பெரிதினும் பெரிது கேட்பவன். நான் காண விரும்புவது ஆழிப்பேரலைகளை. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் புயல்களுக்கு சுனாமிகளை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்று நம்புகிறேன். ஆழ்கடலின் அடித்தளத்தில் எவர் கண்களுக்கும் தெரியாமல் அதிர்ந்து சுனாமிப் பேரலைகளை உருவாக்கும் சர்வ வல்லமை பெற்ற பூகம்பங்களே நான் வேண்டுவது. உங்களுக்கு மேல்மட்ட சீற்றமும் கொந்தளிப்பும் போதுமானதாக இருக்கிறது. அது சீறும் போது நீங்களும் சீறுகிறீர்கள். அது கொந்தளிக்கும் போது நீங்களும் கொந்தளிக்கிறீர்கள்.
இத்தகைய அநுபவத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு கலைப் படைப்பு தேவையில்லை. ஊடகங்களில் வரும் செய்திகளே போதுமானது. ஊடகங்கள் காட்டும் செய்திகளில் மனக்கிளர்ச்சி கொள்பவர்களை, அதே ஊடகம் வெகு எளிதாக திசை திருப்பி மறக்கடிக்கச் செய்துவிடுவதில்லையா? அப்படியே இத்தகைய படைப்புகள். ஒவ்வொரு முறை நீங்கள் சீறும் போதும், கொந்தளிக்கும் போதும், நீங்கள் வேண்டும் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ அவர்களுடைய கருவூலங்கள் நிரம்பி வழியும்.
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆழமாக சிந்தித்து தெளிவான பார்வையும் அக்கறையும் கொண்ட படைப்பாளிகள் மேல்மட்டத்தில் கிளர்ச்சியடைவதில்லை. சமூகத்தை கிளர்ச்சியடைய வைத்து கருவூலத்தை நிரப்ப விரும்புவதுமில்லை. கண நேர கிளர்ச்சிகளால் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். இதயத்தின் ஆழத்தில் அமைதியாக தொடர்ந்து அதிர்ந்து நகர்ந்து அடித்தளத்தை ஆட்டி அசைக்கும் பூகம்பம் போன்றது அத்தகையவர்களின் படைப்புகள். அவற்றின் மூலமாகவே சமூகத்தில் நாம் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதுவே என் எண்ணம்; எதிர்பார்ப்பு. அண்ட் அஃப்கோர்ஸ் ஐ நோ திஸ் ஈஸ் டூ மச் பட்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..