நிலவு தேவதை

Rotterdam Film Festival : Jerome, Nilavazhagan, Arun Karthick, Madhavan. 

பிம்பங்கள் பற்றி நண்பர் நிலவழகன் சுப்பையா ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதைப் பற்றி பேசுவதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. ஜெர்மனியில் வசித்து வரும் அவர் ஒரு திரைப்பட ஆர்வலர். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு வாட்சேப்பிலும் முகநூலிலும் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தாலும், ஒரு நாள் தொலைபேசி வழியே பேசிய பிறகே நெருக்கமானோம். என்னுடைய மகன் சாயின் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். குறிப்பாக "பைசைக்கிள் தீவ்ஸ்" திரைப்படம் பற்றிய அவனுடைய காணொளியைப் பார்த்துவிட்டு அழைத்திருந்தார்.

நீண்ட நேரம் அவனுடைய எல்லா காணொளிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. பைசைக்கிள் தீவ்ஸ் காணொளியை பல நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். சிலர் பாராட்டினார்கள். சிலர் பதில்கூட சொல்லவில்லை. அதில் எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் இஃதொன்றும் புதிதில்லை. பொதுவாகவே குழந்தைகள் மீது இந்தியர்களுக்கு ஒரு அலட்சியப் போக்கு உண்டு. குழந்தைகளுக்காக எத்தனைத் திரைப்படங்கள் வருகின்றன? குழந்தைகளுக்காக எத்தனை புத்தகங்கள் வெளிவருகின்றன? சமூகம் சீரழிகிறதே எனும் வெற்றுப் புலம்பல்களை மட்டும் பரவலாகப் பார்க்க முடிகிறது. மற்றபடி பெற்றோர்களுக்கு குழந்தைகள் மதிப்பெண் குவிக்கும் இயந்திரங்கள் மட்டுமே. பொறுப்புணர்வு சிறிதுமற்ற நம் சமூகத்துக்கோ அவர்கள் வெறும் நடமாடும் பொருட்கள். அவ்வளவே. சமூகத்தை மாற்றக் கிளம்பியிருக்கும் போலிப் புரட்சியாளர்கள் அவரவர் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலே போதுமானது. ஆனால் அதற்கெங்கே நமக்கு நேரமிருக்கிறது. உலகையே தோளில் தாங்க வேண்டிய அரும்பணி நமக்கு இருக்கிறதே.

நிலவழகன் அவனது அனைத்து காணொளிகளையும் ஒரு நொடி விடாமல் பார்த்திருக்கிறார். அவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். அவனுடைய அறிவுத் திறத்தைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவன் தன்னுடைய குழந்தைமையை தொலைத்துவிடக் கூடாது என்கிற அக்கறையுடன் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் பலவற்றைப் பரிந்துரைத்தார். அதைச் சொன்ன விதம்கூட என்னை வெகுவாகக் கவர்ந்தது. மிகுந்த கவனத்துடனும் அடக்கத்துடனும் வார்த்தைகளை தேர்வு செய்து "நீங்கள் நிச்சயம் நான் சொல்லப் போகும் திரைப்படங்களை அவனுடன் பார்த்த்திருப்பீர்கள். இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் அவனுடைய வளர்ச்சியை அருகே இருந்து கவனிக்க விரும்புகிறேன்." என்று அக்கறையுடன் பேசினார்.

எங்களை மியாஸாகியின் கனவுலகுக்குள் கூட்டிச் சென்றது அவர்தான். மேலும், தன்னுடைய நண்பர் டாம் லீஸாக்கை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் சாய் பார்ப்பதற்காக குழந்தைகளுக்கான திரைப்படப் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைத்தார்கள். அவற்றில் பெரும்பாலான படங்களை நாங்கள் பார்த்திருக்கவில்லை. சில படங்கள் எங்கள் பட்டியலில் ஏற்கனவே இருந்தவை. ஒருமுறை காரில் சென்று கொண்டிருக்கும்போது, "நிலவழகன் மாமா அன்றைக்கு நம்மை அழைக்காமல் இருந்திருந்தால் எனக்கு மியாஸாகி பற்றி எதுவுமே தெரிந்திருக்காது அல்லவா? ஆனால் இன்றைக்கு அவர் என் வாழ்க்கையில் முக்கியமானதொரு அங்கம்" என்றான் சாய். அப்போது அவனிடம் நான் ஆங்கிலத்தில் சொன்னதை அன்றே முகநூலிலும் பகிர்ந்திருந்தேன்.

"சிந்தையில் தெளிவும்
நோக்கங்களில் உண்மையும்
செயல்களில் தீவிரமும்
நீங்கள் கொண்டிருந்தால்
தேவதைகள் உங்களைச் சூழ்வார்கள்.
இது சத்தியம்."

வெண்ணிற ஆடை அணிந்துகொண்டு வானில் பறந்து கொண்டிருக்கும் தேவதைகளைப் பற்றி நான் சொல்லவில்லை. அத்தகைய தேவதைகளின் மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை. நம் மீதான அன்பின் பொருட்டு அக்கறையுடன் நமக்கு வழிகாட்டும் அறிவாளிகளும் ஆசான்களுமே நமக்கான தேவதைகள். அப்படித்தான் ஒரு நிலவு தேவதை தானாகவே வந்து எங்களை கனவுலகுக்குள் கூட்டிச் சென்றது.  

பிம்பங்கள் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன். பிம்பங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். என் மகனிடம், "நீ என்னைப் பற்றி வருங்காலத்தில் எழுதுவதாக இருந்தால் அது என்னுடைய 'WART AND ALL' உருவத்தைச் சித்தரிப்பதாக இருக்க வேண்டும்" என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆலிவர் க்ராம்வெல் தன்னுடைய ஓவியத்தை வரைய முயன்ற சர் பீட்டர் லீலிக்கு அப்படித்தான் அறிவுறுத்தினார். ஒரு போட்டோஷாப் செய்யப்பட்ட உருவத்தை அவர் விரும்பவில்லை. தன்னுடைய உருவம் மருக்களுடனும் பருக்களுடனும் இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆங்கில ஓவியக் கலையிலேயே தத்ரூபமாக வரையப்பட்ட மரு ஆலிவர் க்ராம்வெல்லினுடையதுதான் என்று கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பிரபல ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், திரைப்படங்கள் வழியாக நமக்குக் கிடைப்பதெல்லாம் அவர்களுடைய போட்டோஷாப் செய்யப்பட்ட சித்தரிப்புகளே. அவர்களில் பலர் "ப்ராண்டுகளாகி" இன்றளவும் அரசியல்வாதிகளாலும், மதவாதிகளால் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதில் சிலர் புனித அந்தஸ்த்தையும் பெற்று விட்டார்கள். அத்தகையோரின் சிலைகளைத்தான் உலகெங்கும் காண்கிறோம். அவ்வளவு எளிதாக அந்தப் புனிதர்களை நாம் விமர்சித்துவிட முடியாது.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்பது இந்தப் பேரண்டத்தில் இல்லவே இல்லை என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். அப்படி ஒரு புனிதம் இருக்குமானால் அது நிச்சயம் இயற்கைக்கு எதிரானதாகவே இருக்கக் கூடும். எனவே விமர்சனம் எனும் பெயரால் பிம்பங்கள் அன்றாடம் இங்கே உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அதேசமயம் தன்னுடைய போலி பிம்பத்தைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு, அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொண்டு, இன்னொருவரின் பிம்பத்தை உடைப்பதில் தங்கள் தீரத்தைக் காட்டுபவர்கள் என்னளவில் வெறும் போலிகள்; பாசாங்குக்காரர்கள். "நீங்கள் நினைப்பது போல் நான் நிரம்பக் கற்றவனில்லை. நிரம்பப் பேசுகிறவன். பிம்பங்களைத் தாண்டிய இடத்திற்கு செல்லவேண்டும்" என்று நிலவழகன் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்கிறார். இப்படித் தங்கள் பிம்பத்தைத் தாங்களே   உடைக்க முயல்பவர்களே என்னளவில் உண்மையில் வலிமையானவர்கள்.

முகநூல் சதா சர்வ காலமும் நம்மை தராசுத் தட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. ஆயிரக்கணக்கான விமர்சகர்கள். பெரும்பாலானோர் நிச்சயமாக போலிகள்; அனுபவ அறிவு அற்ற  கருத்தியல்வாதிகள். கவனமாக இருக்க வேண்டும். நான் உட்பட எண்ணற்றவர்கள் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களே. அறிவு பேசப்படக் கூடாது. காண்பிக்கப்பட வேண்டும். அப்படி நாம் காண்பிக்க முயலும்போது சில அதிமேதாவிகள் தங்கள் அளவுகோலைத் தூக்கிக் கொண்டு வருவார்கள்; விமர்சிப்பார்கள்; பரிகாசம் செய்வார்கள்; கசப்பைக் கக்குவார்கள். அத்தகைய விமர்சகர்களையும், பார்வையாளர்களையும் புறம் தள்ளிவிட்டு, நம் மீது அக்கறை கொண்ட அறிவாளிகளின் சொல் கேட்டு, கற்று, தாங்கள் நேசிக்கும் கலைக்கு மட்டும் தங்களை அர்ப்பணிப்பு செய்வார்களேயானால் நிலவழகன் போன்ற இளைஞர்களால் உன்னதமான கலைப்படைப்புகளைத் தர முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நம்மாழ்வார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதில் "இறையவர்" என்பதை நீக்கி விட்டு "கலையது" என்று போட்டுப் பாருங்கள், நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்.

அவரவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவுஇலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

அளவில் சிறிதாயினும் ஒவ்வொரு வட்டமும் அதனளவில் முழுமையானதே. கலையும், கலைஞனும்கூட அப்படித்தான். அவரவர் கலையதில் குறைவிலர்.

உலகின் உன்னதமான படைப்புகளை அவை வெளிவந்த நேரத்தில் விமர்சித்த எவருடைய பெயரும் இன்று எவருக்கும் நினைவிலில்லை. இன்னும் சொல்லப் போனால், சங்க காலப் பாடல்கள் எழுதிய படைப்பாளிகளின் பெயர்கூட காணாமல் போய்விட்டிருக்கிறது. எழுதியவர் யாரென்று தெரியாததால் அவர்தம் பாடல் வரிகளைக் கொண்டே பெயர் சூட்டியிருக்கிறார்கள், உதாரணம்: அணிலாடு முன்றிலார். படைப்பே படைப்பாளியின் அடையாளமாகி விட்டிருக்கும் அற்புதத் தருணம். படைப்பின் வலிமை இது. படைப்பு மட்டுமே இங்கு நிலைத்து நிற்கும். அத்தகைய படைப்பைக் கொண்டு வாருங்கள். கொண்டாடுவதற்கு ஒற்றைப் பார்வையாளனாகவேனும் நான் இருப்பேன்.  



உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள், நிலவழகன்! நீங்கள் சிறப்பான முறையில் ஆங்கிலத்திலும்  எழுதக் கூடியவர். இருந்தாலும் தமிழில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்; முதலில் அதற்கே என்னுடைய பாராட்டுகள். எக்காரணம் கொண்டும் எவர் பொருட்டும் அதை நிறுத்திவிட வேண்டாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..