எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - வாசகர் சந்திப்பு காணொளி


ந்து வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். உண்மையிலேயே அது அவருடைய மின்னஞ்சல்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு அவநம்பிக்கை. கடிதம் என் கண்ணில் பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அதை அனுப்பி இருக்கிறார். நான்தான் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு கடிதம் எழுதியிருந்தார். சென்னைப் புத்தக விழாவில் எனக்கு அறிமுகமான நண்பன் இளங்கோ கனடாவில் வசித்து வருபவர். அவருடைய தமிழ் எழுத்து நடைக்கு நான் ரசிகன். இளங்கோவின் முகவரியைப் பெற்று அவருக்கு என்னுடைய புத்தகத்தை அனுப்பி வைத்து, "எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் இதைத் தர முடியுமா?" என்று கோரிக்கை வைத்தேன். "புத்தகம் வந்து சேர்ந்தது. நிச்சயம் அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது தருகிறேன்" என்று உறுதியளித்தார். அதன் பிறகு இளங்கோவிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. புத்தகம் அ.முத்துலிங்கத்தை சென்றடையும்; அவர் அதை வாசிப்பார் என்றெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பையும் நான் வைத்துக்கொள்ளவில்லை.. ஒரு காலத்தில் அவருடைய தளத்துக்குச் சென்று வாசிப்பதை என்னுடைய அன்றாடச் சடங்காக வைத்திருந்தேன். ஆரம்பநிலை வாசகர்களுக்காக ஒரு நூல் பட்டியல் தயாரித்து அதைச் பல வருடங்களாகவே நண்பர்களிடம் பகிர்ந்து வந்திருக்கிறேன். அதன் இறுதியில் கட்டாயம் வாசிக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் முத்துலிங்கம் அவர்களின் தளத்துக்கான இணைப்பும் இருக்கும். அண்மையில்கூட நண்பன் முரளி அவனுடைய தாயாருக்காக கேட்டிருந்த பட்டியலிலும் அந்த இணைப்பைச் சேர்த்திருந்தேன். அந்த அளவுக்கு அவருடைய எழுத்தின் மீது ஒரு ஈர்ப்பு. அப்படி இருந்தும், அவருடைய மின்னஞ்சல் தெரிந்த நிலையிலும், அவருக்குக் கடிதம் எழுதி புத்தகத்தைக் இளங்கோவிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாகக்கூடச் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அந்த மேதை ஒரு நிறைகுடம். புத்தகத்தை வாசித்துவிட்டு இந்த எளிய வாசகனுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். பிறகே அவருக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன். அவருடைய பெரும்பாலான படைப்புகளை வாசித்து ரசித்ததைப் பற்றி எழுதியிருந்தேன். குறிப்பாக 'ஆயுள்' கதையைப் பற்றி சிலாகித்து நான் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு, "அந்தக் கதையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு நீ மட்டுமே எழுதியிருக்கிறாய்." என்று பதிலளித்திருந்தார். எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ பயணித்து, அது முடியும் இடம் ஒரு அதிர்ச்சிதான்; ஆச்சர்யம்தான். அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில், "அவை நிச்சயம் இருக்கும்" என்று ஒரு கவிதைகூட எழுதியிருக்கிறேன். பிறகு அது கவிதையே இல்லை என்றும் எழுதியிருக்கிறேன். அண்மையில்கூட ஆங்கிலத்தில் “Incubation does not mean Dormancy” என்று எழுதிப் பெருமையாக என் பெயரைப் போட்டுக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் அதுவும்கூட நான் பல வருடங்களுக்கு முன்பு வாசித்த அவருடைய நேர்காணலின் பாதிப்பு என்பது அவரும் நானும் மட்டுமே அறிந்த ரகசியம். அதனால் என்ன? ஆசான் சொத்து மாணவனுக்கே! அவருடைய படைப்புகளைப் பற்றி நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு புன்னகையை முகத்தில் ஏந்தியபடியே அவற்றை வாசித்து முடித்து விடலாம். தமிழ் எழுத்தாளர்களில் எனக்குப் பல ஆதர்சங்கள்; ஆசான்கள். அவர்களில் அ.முத்துலிங்கம் முக்கியமானவர்.

சனிக்கிழமையன்று நண்பர்களுடன் காட்டுக்குள் சென்று விட்டதால் இந்த நேரலையை தவற விட்டுவிட்டேன். நேற்று மாலை பெரிய திரையில் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய குரலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய ஐயா பெருமாள் ராசுவின் மென்மையான குரலைக் கேட்பது போலிருக்கிறது என்றாள் ப்ரியா. மொழிபெயர்ப்பு பற்றி அவர் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன். ஏற்கனவே அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். தமிழ் கவிதைகளை நண்பர்கள் சுந்தர், டிர்க், கூன் போன்றவர்களுடன் இணைந்து ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யத் துவங்கியிருப்பதும் அதன் பொருட்டே. “கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றான் பாரதி. எட்டுத் திக்கும் செல்பவர்கள் அங்கிருக்கும் செல்வங்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை திறம்படச் செய்கிறார்கள். உலக இலக்கியங்கள் சிறப்பாகவே மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழுக்கு வருகிறது. ஆனால், நம் கலைச் செல்வங்களை உலகெங்கும் கொண்டு போய் சேர்ப்பதற்குத்தான் ஆளில்லை. "தமிழ் படைப்புகளை டச்சு, பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்" என்கிற கோரிக்கையை என் மகனுக்கு வைத்திருக்கிறேன். தமிழறிந்த, ஐரோப்பிய மொழிவழிக் கல்வி பயிலும் அவன் போன்றவர்களாலே அது சாத்தியம். "நிச்சயம் எழுதுவேன் அப்பா" என்று உறுதியளித்திருக்கிறான். இப்போது இதை வாசிப்பவர்களில் சிலர் எள்ளி நகையாடலாம். ஆனால் அது நிச்சயம் நிறைவேறும். வாஷிங்டனில் நடந்த ஒரு விழாவில் "The Last King of Scotland" படத்தில் இடி அமீனாக நடித்த விட்டேக்கரை சந்திப்பதற்காக வரிசையில் நின்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் பற்றி அ.முத்துலிங்கம் நாட்குறிப்பு எழுதியிருந்தார். அதை வாசித்துவிட்டு உண்மையில் விட்டேக்கர் மேல்தான் எனக்குக் கோபம் வந்தது. திரைப்படங்களைத் தவிர்த்து எனக்கு விட்டேக்கர் பற்றி அப்படி ஒன்றும் தெரியாது. நான் விட்டேக்கரோடு கழித்த நேரத்தைவிட முத்துலிங்கத்தோடு வாழ்ந்த நேரம் அதிகம். நான் நிச்சயம் சந்திக்க வேண்டிய வெகுசில மனிதர்களின் பட்டியலில் விட்டேக்கர் இருக்கவில்லை. ஆனால் அ.முத்துலிங்கம் நிச்சயம் இருக்கிறார். அவரோடு புகைப்படம் எடுக்கவும், கைகுலுக்கிக் கொள்ளவும் நிச்சயம் அவருக்குப் பிடித்த - எங்கள் ஊர் கௌடன் கரோலஸ் - விஸ்கியோடு வரிசையில் நிற்பேன். எண்ணம் போல் வாழ்வு. எனவே, நிச்சயம் இந்த ஆசை நடந்தேறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது - பெல்ஜியத்திலோ, இந்தியாவிலோ, கனடாவிலோ அல்லது வேறு எங்காவதோ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..