உண்மையைத் தேடி..

ரு சமூகத்திலிருந்து உருவாகி வரும் கலைப் படைப்புகளின் செயற்கைத்தனத்துக்கும், அந்த சமூகத்தின் செயற்கைத்தனத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. செயற்கைத்தனங்களே  யதார்த்தமாகிவிட்ட தோற்றத்தைத் தரும் உணர்திறனற்ற சூழலிலிருந்து உன்னதமான கலையை உருவாக்குவதற்கான அக தரிசனங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.

எதிலுமே விதிவிலக்குகள் உண்டு என்றாலும், யதார்த்த வாழ்க்கையிலிருந்தே யதார்த்தமானதொரு படைப்பை எளிதாக உருவி எடுக்க முடியும். மாறாக செயற்கைத்தனங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சமூகத்திலிருந்து பிறக்கும் கலைப் படைப்புகளும் செயற்கைத்தனமாக இருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது. உதாரணத்துக்கு சத்யஜித் ரே சென்னையில் இருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் ஒரு நாள் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த அனுபவத்தைக் கொண்டு அவர் என்ன திரைப்படம் எடுத்துவிட முடியும்? தரமான ஒரு குறும்படம்கூட எடுக்க முடியாது.

உண்மையும் உணர்திறனும் அற்றுப் போனதொரு சூழல் அது. முகநூலுமே அப்படிப்பட்டதுதான். தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தின் பின்னணியில்தான் "முடி" சிறுகதையை எழுதினேன். ஆனால் குறிஞ்சிமலர் போன்று செயற்கைத்தனங்களுக்குள் சிக்கிக் கொள்ளாத சில யதார்த்தமான மனிதர்களுடனான சந்திப்பினாலேயே அது சாத்தியமானது. அதற்காக அஃதொரு சிறந்தத படைப்பு என்று சொல்கிறேன் என்பதில்லை. நான் எழுதியதில் சுமாரான கதை அது.

இன்னொரு கதையும் எழுதினேன். அதில் எனக்கே திருப்தியில்லை என்பதால் வெளியிடவில்லை. சுவாரசியமற்ற ஐ.டி வாழ்க்கையின் செயற்கைத்தனங்களாலும் போலித்தனங்களாலும் இருத்தலியல் நெருக்கடிக்கு ஆளான மனிதனுக்கு ஒரு அக தரிசனம் கிடைக்கிறது. மரணிப்பதற்குள் ஒரே ஒரு மகத்தான திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற பேராசைக் கொண்ட அவன் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஒரு திரைப்படமாகக் கருதி நடிக்க முடிவெடுக்கிறான். கதையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி போன்ற ஆசான்கள் கனவுக் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஒருவகையில் தன்னையும், தன் மீது திணிக்கப்பட்ட அத்தனை நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் உடைத்து, தன்னுடைய போலி முகத்திரையைக் கிழித்தெறிந்து, தன்னுடைய உண்மையான முகம் எது என்பதை அகக் கண்ணால் தரிசித்துவிட்ட மனிதனுக்கு, அந்த தரிசனத்துக்குப் பிறகான லௌகீக வாழ்வென்பது நிச்சயம் நடிப்பாக மட்டுமே இருக்க முடியும். அதை நேர்மையாகவும் இயல்பாகவும் செய்வதன் மூலமாகவே அவன் குறைந்தபட்ச ஆத்ம திருப்தியடைய முடியும்.

ஒரு முறை மூன்று மணிநேர ப்ளாஸ்டிக்ஸ் நடிப்புப் பயிற்சிக்குப் பிறகு தரையில் அமர்ந்து என்னுடைய நடிப்பு ஆசான் இயக்குநர் கிறிஸ்டோபரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, "ஸ்டூடியோவில் மட்டும்தான் நான் நடிக்காமல் இருக்கிறேன் கிறிஸ்டோபர்" என்றேன். அவர் மெல்லிய  புன்னகையை ஈந்துவிட்டு, "உண்மையான கலைஞர்கள் எல்லோருமே இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

ஒரு மகத்தான கலைஞன்கூட செயற்கைத்தனம் நிறைந்த சூழலில் உன்னதமான கலைப் படைப்பைத்  தந்துவிட முடியாது என்பது என் எண்ணம். இது ஒரு கருதுகோள்தான். இதன்மீது உரையாடல் நடத்தலாம். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அவை படைப்புகளிலும் பிரதிபலிக்கும். எது முதலில் நிகழவேண்டும் என்பது "கோழியா? முட்டையா?" சர்ச்சையைப் போன்றதுதான். பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை படைப்பாளிகளுக்கு கதைத் தேடல் அவசியமாகிறது. கதைத் தேடல் என்பதைவிட தரிசனங்களுக்கான தேடல் என்பதே சரி.

கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டாலும், முரண்நகையாக கடவுள் தரிசனத்துக்குக் கோவிலுக்கு செல்லும் பக்தர்களைப் போன்று, சுற்றியிருப்பவை எல்லாம் கதைகளே என்று எல்லாவற்றையும் கலைக் கண் கொண்டு பார்த்தாலும், செயற்கைத்தனங்களை விட்டு விலகி யதார்த்த வாழ்க்கையைத் தேடிச் செல்லும் படைப்பாளிக்கே மகத்தான படைப்புகளை உருவாக்கத் தேவையான அக தரிசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவேதான் சில படைப்பாளிகள் அடிக்கடி பயணப்படுகிறார்கள் போலும். உண்மையைத் தேடிச் செல்லும் பயணங்களவை என்பேன்.

அசோகமித்திரனுக்கு அத்தகைய பயணங்கள் தேவைப்படவில்லை. "நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது.." அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்திருக்கிறது. அதை அப்படியே சிறுகதையாக்கிவிட்டார். ஆனால் அதுபோன்ற தரிசனங்கள் நிறைந்த வாழ்க்கை எல்லோருக்குமே வாய்ப்பதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..