ஔரங்கசீப் எனும் புதிர்!

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் பற்றி வாசிப்பது என்பது எனக்கு திகட்டாத ஒரு விஷயம். அவிழ்க்க முடியாத ஒரு புதிர் அவர்.


ஒரு புறம் பார்த்தால் - ஆட்சியைக் கைப்பிடிப்பதற்காகத் தன் உடன்பிறந்தவர்களுடனேயே போரிட்டவர்; இறுதியில் அவர்களைக் கொன்றவர். தான் மிகவும் நேசித்த மகள் செப்-உன்-நிசாவையே சிறையிலடைத்தவர். தந்தை ஷாஜஹானை வீட்டுக் காவலில் வைத்தவர். அவர் மறைந்த பிறகு அவர் விருப்பப்படி அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தலாம் என்று அவரது சகோதரி ஜஹானாரா அனுமதி கேட்டும், எளிய ஊர்வலம் போதும் என்று மறுத்தவர்.
மறுபுறம் - எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரம் அறவே பிடிக்காது. தாஜ்மகால் அவருக்குப் பிடிக்காமல் போனதில் பெரிய வியப்பில்லை. அரசாங்கப் பணத்தை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையாளர். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
அவருடைய தந்தையின் இறுதி ஊர்வலம் பற்றி கூறினேன். அவ்வளவு ஏன்.. தன்னுடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆலம்கீர் அவருடைய உயிலில் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் மீண்டும் வியப்பு வந்து தொற்றிக் கொள்கிறது. காபூலில் இருந்து தமிழகம் வரை பறந்து விரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமைக்குரிய பேரரசர், தான் தன் கைகளால் செய்த தொப்பிக்களை விற்றுக் கிடைத்த நான்கு ரூபாய்களையும் இரண்டு அனாக்களையும் கொண்டு தன் மீது போர்த்தப்படவேண்டிய கதரால் செய்யப்பட்ட கஃபன் துணியை வாங்கிக்கொள்ளவேண்டும். தன் கையால் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் பிரதிகளை விற்றுத் தான் பெற்ற 305 ருபாய் பணத்தில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். மேலும் தன்னுடைய உடலை ஆடம்பரங்களின்றி அடக்கம் செய்ய வேண்டும். தன் நினைவாக கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது, தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட கல் கூட வைக்கக்கூடாது என்று போகிறது உயில்.
உண்மையில் நான் அவரைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நெறியற்ற செயல். ஏனெனில் அவருடைய உயிலின் இறுதி வார்த்தையாக அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்: 'அல்லா யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூகக் கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.'
அவரது வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது என்பது அவரது இறுதி விருப்பம். இருப்பினும், அவர் பதவியேற்ற பிறகு தனக்கு அரசாங்கத்தில் பதவி அளிக்குமாறு வேண்டிய அவருடைய ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதத்தைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் என்று தோன்றியதால் எழுதினேன். ஏனெனில் இன்றைய ஆசிரியர்களும், ஆட்சியாளர்களும், மற்றவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய மடல் அது. குறிப்பாக மொழி மற்றும் கற்பிக்கும் முறை மீதான அவருடைய இந்த விமர்சனம் 350 ஆண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
இனி, அவர் தன்னுடைய ஆசிரியர் முல்லா சாகிப்பிற்கு எழுதிய கடிதம் :
கற்றவரே!
நீர் என்னிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கியப் பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன். நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது.
ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள்.
ஆஹா...! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு! எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? - உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின.. அந்த சாம்ராஜியங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழுந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனத்திற்கான, அவசியமான, முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்!
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்! சட்டம், மத வழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றை எல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்? என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத, மனத் திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தவித பயனுமே இல்லாத, புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை. நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான, இருள் அட ர்ந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். மேதாவிகளையும் கூட குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள்!
உங்களைப் போன்றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க, உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள். 'உங்களுகுத்தான் எல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்த பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அறிய தத்துவ ரகசியங்கள் புரியும்' என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால், அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி, துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால், நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால், இப்பொழுதும் சொல்கிறேன், இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டியிருப்பேன்.
எப்போதும் என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா? ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப்படையை எப்படி நடத்திச் செல்வது, என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட் டிருக்கிறேன். நிச்சயமாக உமக்கல்ல!
போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்.
.....................
ஆலம்கீர், தங்களைப் பற்றி எழுதியதற்காக என்னை மன்னிப்பீராக!

(முகநூல் பதிவு: 10 பிப்ருவரி 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்