கற்றலே வாழ்க்கை

ன்று உலக புத்தக தினம்.
காலை எழுந்தவுடன் என் மகனிடம், 'இன்று உலக புத்தக தினம். நாம் இருவரும் ஒன்றாக புத்தகம் ஒன்றை வாசிக்கலாமா?' என்று யோசனைதெரிவித்தேன்.
குதூகலத்துடன், 'என்ன புத்தகம்? என்ன புத்தகம்?' என்று கேட்டான்.
'நீ போய் உன் அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா.' என்றேன்.
அவன் தேர்ந்தெடுத்த புத்தகம் 'ரிச்சர்ட் டேவிட் பாக்' எழுதிய 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' என்கிற புத்தகம். சிறப்பான இந்நாளில் வாசிப்பதற்கு எத்தனை பொருத்தமானதொரு புத்தகம். இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் சிறுவயதில் தன்னுடைய கையொப்பமிட்டுப் பரிசளித்த புத்தகம்.


சிறுவயதில் நானும் என் தம்பியும் ஒன்றாக வாசித்த புத்தகம். இன்றைக்கு அவன் சுருங்கி என்னுடன் வாசித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.
ஆனால் என்ன, ஒரு பத்தி படிப்பதற்குள் ஓராயிரம் கேள்விகள், கிளைக் கதைகள். மகாபாரதத்தை வியாச முனி சொல்லக் கேட்டு எழுதியபோது நிச்சயம் விநாயகர் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
'பறப்பது என்பதே இரையைத் தேடுவதற்காக மட்டும்தானா? வெறும் எலும்பும் இறகுகளும் மட்டுமா நான்? மந்தைகளோடு சேர்ந்து சதா இரைக்காக சண்டையடித்துக்கொண்டு இருப்பது மட்டுமா வாழ்க்கை?' என்று தனக்குத்தானே கேள்விகளை எழுப்பிக்கொண்டு, தன்னுடைய தீவிர பயிற்சியின் மூலம், புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு, 'வாழ்வதும் பறப்பதும் உணவுக்காகவே' என்று அறிவுறுத்திய பெற்றோர்களுக்கே சவாலிடும் வகையில் அன்றாடம் புதிய முயற்சிகளை செய்துகொண்டு, அந்தக் கூற்றை மாற்றி 'வாழ்வது கற்பதற்காகவே' என்பதை உணரவைத்த 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன்' என்கிற கடற்பறவையின் கதையைத்தான் என் மகனுடன் புத்தக தினத்தில் வாசித்தேன்.
இப்போது சொல்லுங்கள், எத்தனை பொருத்தமான புத்தகம்?
'கற்றலே வாழ்க்கை.'
வாசிப்போம். கற்போம். வாழ்வோம்.

நாடு கடந்த கலை

முந்தைய குறிப்பில் மகனுடன் இன்று வாசித்த 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' புத்தகம் பற்றி எழுதியிருந்தேன். தற்போது அருண் எழுதியுள்ள 'நாடு கடந்த கலை' என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஐரோப்பிய, ஆசிய நாட்டு படைப்பாளிகள் எடுத்துள்ள குறும்படங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார். 1936-ஆம் ஆண்டில் லண்டனில் எடுக்கப்பட்ட Night Mail ஆவணப்படத்திலிருத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த Meals Ready குறும்படம் வரை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்ற சில குறும்படங்களைப் பற்றிய பதினைந்து கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில், பெல்ஜியம் நாட்டு குறும்பட இயக்குநர் Guido Thys இயக்கியுள்ள Tanghi Argentini படத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். வாசித்து முடித்துவிட்டு புத்தகம் பற்றி எழுதுகிறேன்.


‪#‎WorldBookDay‬

(முகநூல் பதிவு: 23 ஏப்ரல் 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..