ஒரு பேரிக்காய் மரத்தின் கதை


னிய மாலைப்பொழுதென்பது இதுபோன்றதாகத்தான் இருக்கவேண்டும்.
கனவுகளைப் பின்தொடர்ந்துச் செல்பவர்களை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஒரு சில தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு மன உறுதியோடு அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். மாறாக சமரசம் செய்துகொண்டு வாழ்பவர்களுக்கு ஒருவகையில் வாழ்க்கையே தோல்விதானே. பீனிக்ஸ் பறவைகள் அவர்கள். சுட்டெரிக்கப்படுவதும், சாம்பலாகி வீழ்வதும் மீண்டும் பறக்க விழைவதும் அவர்களுக்கு வாடிக்கை. இறகொடிந்து வீழ்ந்தாலும் மந்தைகளோடு உணவு தேடச் சென்றுவிடாமல், உயரப் பறக்கக் கிளம்பும் ஜோனதன் கடற்பறவைகள். பறத்தல் மட்டுமே அவர்களுக்கு முக்கியம்.
என்னுடன் பணிபுரியும்(ந்த) தோழி ஒருவருக்கு ஒரு பேரிக்காய் மரத்தின் மீது ஏற்பட்டக் காதல் அவரை எவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்குவதற்காக என் தோழியும் அவருடைய கணவரும், நாங்கள் பணிபுரியும் லூவன் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள். லூவன் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிற்றூர் ஒன்றின் தேவாலயத்துக்கு எதிரே இருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள். மிகப் பெரிய ஆனால் பழமையான வீடு அது. அவர்களை அந்த வீடு ஒன்றும் அவ்வளவு ஈர்க்கவில்லை. ஆனால் தோட்டத்தைப் பார்வையிடச் சென்றவர்களுக்கு அங்கு பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த பேரிக்காய் மரம் கண்ணில் தென்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இருவேறு வகையான பேரிக்காய் மரங்கள் என் தோழியின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மரத்தின் ஒரு கிளையில் சிவப்பு பேரிக்காய்களும், மறு கிளையில் பச்சை பேரிக்காய்களும் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர், அதுதான் இந்த பேரிக்காய் மரத்தின் சிறப்பு. அது செடியாய் இருக்கும்போதே ஓரிரு கிளைகளை வெட்டிவிட்டு சிவப்பு வகை பேரிக்காய் செடியின் கிளைகளை ஓட்ட வைத்திருக்கிறார்கள். இப்போது அது வளர்ந்து மரமாகி இருவகை பேரிக்காய்களையும் தந்துகொண்டிருக்கிறது என்றாராம்.
இதேபோன்றதொரு ஒரு செய்தியை என்னுடைய மைத்துனரின் தந்தையார் ஆத்தூரிலுள்ள அவருடைய மாந்தோட்டத்திற்குச் சென்றபோது என்னிடம் கூறியிருக்கிறார். ஒரே மாமரம் ஐந்தாறு வகை மாம்பழங்களைக் கொடுக்கும் வெவ்வேறு கிளைகளைக் கொண்டிருக்கும்.
இருவேறு பேரிக்காய்களைத் தரும் மரத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் என் தோழிக்கு என்ன தோன்றியதோ, இந்த வீட்டைத்தான் வாங்கவேண்டும் என்று கணவரிடம் கூறிவிட்டாராம். அவருக்கும், குழந்தைகளுக்கும்கூட இந்த மரத்தை அவ்வளவு பிடித்துப்போய்விட்டதாம்.
அவருடைய கணவர் ஒரு சுயமுன்னேற்றம் மற்றும் மேலாண்மைப் பயிற்சியாளர். அவர் ஒரு எழுத்தாளரும்கூட. சமீபததில்கூட '2015-இல் என் வயது பத்து' என்கிற புத்தகத்தை டச்சு மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். இன்றைய குழந்தைகளை எதிர்காலத்துக்கு எவ்வாறு தயார்படுத்துவதென்பதைப் பற்றிய குழந்தை வளர்ப்புப் புத்தகம்.
பெல்கியத்தில் புதிய வீடுகள் விலை அதிகம். அதுவும் லூவன் நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்வதும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனால் நகருக்கு வெளியே கிராமங்களில் தோட்டஞ்சூழ்ந்த பழைய வீட்டை வாங்கி, அவர்களுக்கு வேண்டியவாறு அவர்களே புதுப்பித்துக்கொள்வது வழக்கம். கட்டிடத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம். கொடுத்து மாளாது. ஒரு மணிநேரத்துக்கு ஐம்பது யூரோ கேட்பார்கள். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அதே கூலிதான். என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவருக்குத் தெரியாத வேலையே கிடையாது. என் வீட்டில் முடிக்கப்படாமல் இருந்த குளியலறை ப்ளம்பிங் வேலை, இரண்டு அறைகளின் கதவுகளுக்கான தச்சு வேலைகளை அவர்தான் வார இறுதிகளில் வந்து செய்து கொடுத்தார். அவர் நான் வேலைபார்க்கும் வங்கியில் திட்ட மேலாளார். இங்கே சிறுவயதிலிருந்தே தந்தையோடு இத்தகைய வேலைகளை செய்து பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள். உறவினர்களும், நண்பர்களும் பரஸ்பரம் உதவிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே பணக்காரர்கள் என்கிற பொது மனநிலை கொண்டிருந்த எனக்கு, ஆரம்பத்தில் இதெல்லாம் பெரிய விந்தையாக இருந்தது.
என் தோழியும் வீட்டை வாங்கிய பிறகு, புதுப்பிக்கும் பணிகளைத் துவங்குவதற்கு முன்பே தோட்டத்திலிருந்த பேரிக்காய் மரம் அவருடைய மனதில் புதிய சிந்தனை ஒன்றை விதைத்திருக்கிறது. 'ஒரே மரத்தில் இரண்டு பேரிக்காய்கள்!'. இவ்வளவு பெரிய வீடு. இதன் ஒரு பகுதியை நாம் ஏன் ஒரு அலுவலகமாக மாற்றக்கூடாது? தம் கணவரும் ஒரு பயிற்சியாளர். தானும் ஒரு பயிற்சியாளர். நாம் ஏன் இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியை இல்லமாகவும், மறுபகுதியை அலுவலமாகவும் மாற்றி வடிவமைக்ககூடாது? ஒரு கிளையில் இல்லம். மறு கிளையில் அலுவலகம என்று அங்கு ஏன் நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் பயிர்ச்சியளிக்கக்கூடாது? பயிர்ச்சியல்லாத காலங்களில் நிறுவனங்களுக்கும் மற்றவர்களுக்கும் அறைகளை வாடகைக்கு விட்டு இதர சேவைகளையும் வழங்கலாமே என்று பல எண்ணங்களை தூவியிருக்கிறது அந்த மரம். ஒரு கட்டிட வடிவமைப்பாளரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் கட்டுமான மதிப்பீடு எகிறி எங்கோ சென்றிருக்கிறது. இருவருமே மாத சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள். மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர். முடியாது என்கிற முடிவுக்கு வந்தாலும் அவர்களைத் தோட்டத்திலிருந்த பேரிக்காய் மரம் விடுவதாயில்லை. இரண்டு பேரிக்காய்களையும் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் கனவுதான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். எப்படியும் இந்தப் பழைய வீட்டை சீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எப்பாடுபட்டேனும் அலுவலகத்தையும் சேர்த்துக் கட்டிவிடவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, தங்களுடைய சிந்தனைக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துப் பல முதலீட்டாளர்களை அணுகியுள்ளார்கள். பக்கத்து தெருவிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பயிற்சி வகுப்புகளையும் எடுக்க ஆரம்பித்துவிட்டர்கள்.
அலுவலக வேலை, பயிற்சிகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள், முதலீட்டாளர்களைச் சந்தித்தல், கட்டிட வேலை, மூன்று குழந்தைகள் வளர்ப்பு என்று இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் அடைந்த அத்தனைத் துயரங்களையும் நானறிவேன். ஓரளவுக்குக் கட்டிடப்பணி முடியும் தருவாயில் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். எவ்வளவு காலம் என்று கேட்கவில்லை. ஒருமுறை நான் அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, 'மாதவன்ன்ன் ஹேய்ய்ய்' என்று குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தப் பெண் சைக்கிளில் அமர்ந்தபடி என்னை நோக்கி கையசைத்துச் சென்றார். அவருக்குப் பின்னே இரண்டு குட்டி சைக்கிள்களில் அவருடைய மகள்கள். அவரது உருவத்தையும், அணிந்திருந்த உடையையும் பார்க்கும்போது கட்டிட வேலையிலிருந்து பாதியில் வந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. எப்படித்தான் இதையெல்லாம் இவரால் நிர்வகிக்கமுடிகிறது? என்னுடைய குளியலறையில் ஒரு பத்து சதுரவோடுகளைப் பதிப்பதற்குள்ளாகவே முதுகெலும்பு உடைந்துவிடும் போலாகிவிட்டது எனக்கு.
இன்று மாலை அவர்களுடைய அலுவலக கட்டிடத் திறப்பு விழாவும், புதுமனைப் புகுவிழாவும் ஒன்றாக நிகழ்தேறியது. நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய என் தோழி, 'முதலில் என் குழந்தைகளுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். குழந்தைகளே, Verbouw is gedaan. கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது. உப்ப்.. இனி உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன். மன்னித்து விடுங்கள்.' என்று கூறியபோது கைத்தட்டல்கள் சுவர்களில் எதிரொலித்து அந்தப் புதிய கட்டிடத்தை அதிரவைத்தது. ஒரு பெரிய சுமையைக் கீழே இறக்கி வைத்த என் தோழியின் முகத்தைப் பார்த்தபோது என் கண்கள் பனித்தது. இதே வீட்டிற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறேன். எத்தனை அழகான மாற்றம். மற்றவர்களுக்கு எப்படியோ... அந்தக் கட்டிடத்தையும், அழகிய அந்த அறைகளையும் பார்த்துக்கொண்டே சென்றபோது, அவற்றிற்குப் பின்னால் இருந்த அவர்களின் உழைப்பும், வலிகளுமே எனக்குத் தெரிந்தது. பிறரோடு தங்களை ஒப்பிட்டுக்கொண்டு வீணே பொறாமைப்படுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சிக்குப் பின்னாலும், வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வலிகளையும், உழைப்பையும் காண இயலாத பார்வையற்றவர்கள், இரக்கமற்றவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
விழாவில் எனக்காக சைவ பாஸ்தாவை ஏற்பாடு செய்திருந்தார் என் தோழி. நம்மவர்கள்கூட ஏன் நீங்கள் சைவி என்று கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிடுவார்கள். ஆனால் இங்கு ஒருநாளும் என்னுடைய பெல்கிய நண்பர்கள் ஏன் என்று கேட்டதில்லை. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை இவர்களிடமிருந்து நிச்சயம் கற்றுக்கொள்ளவேண்டும். இளங்குளிரான இந்த மாலைபோழ்தில் தோட்டத்தில் இதமாகத் தீமூட்டி, அதைச் சுற்றி அமர்ந்து உணவருந்திக்கொண்டே, அங்கே அரங்கேறிய நண்பர்களின் இசைக் கச்சேரியைப் பார்ப்பதற்கு சுகமாயிருந்தது.
'ட்வே-பேரென்-போம்' (Tweeperenboom, Twee = இரண்டு peer = பேரிக்காய் peren = பேரிக்காய்கள் boom = மரம்). இதுதான் இன்று துவக்க விழா கண்ட என் தோழியின் நிறுவனத்தின் பெயர். இல்லத்தின் பெயரும் அதுவே. குறிப்பாக இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் பொதுவான தோட்டத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் அந்த பேரிக்காய் மரத்தின் பெயரும் அதுவே. பெல்கியத்தில் தற்போது வசந்தகாலம். சிவப்பு, பச்சை நிற பேரிக்காய்கள் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். ஆனால், சிவப்பு, வெள்ளை நிறப் பூக்களைத் தாங்கி நின்றுகொண்டிருந்த அந்த மரம் எனக்குப் புதியதொரு உத்வேகத்தை அளித்தது.
விழாவுக்கு வந்திருந்த தோழியின் நண்பரொருவர் அந்த மரத்தைப் பற்றித் தான் டச்சு மொழியில் எழுதிய கவிதையை வாசித்தார். அதில் எனக்குப் பிடித்த வரிகள் சில :
ஒரு மரம்
அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது
அந்த மரம்.
மரங்கள் எவற்றைச் செய்யவேண்டுமோ
அவற்றைச் செய்வதற்காக.
அமைதியோடும் வலுவோடும்
இந்த உலகில் நின்றுகொண்டிருக்கிறது
சுட்டெரிக்கும் சூரியனைப் பற்றிய பயமில்லை
மழையைக் கண்டு அச்சமில்லை
சுழல்காற்றைக் கண்டு நடுக்கமில்லை
அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது
அந்த மரம்.
மரங்கள் எவற்றைச் செய்ய வேண்டுமோ
அவற்றைச் செய்வதற்காக.
...
இப்படிச் சென்றது கவிதை வரிகள்.
இந்த மரத்துக்கு என்று வரலாறு எதுவும் இதுவரை இருந்திருக்காது. மரம் அவர்களுக்குள் கனவை விதைத்தது. ஆனால் அவர்களோ மரத்துக்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். ஒரு கதையை எழுதியிருக்கிறார்கள். ஒரு வாழ்க்கையைத் தந்திருக்கிறார்கள். அந்த மரமும் இனி அங்கே வரப்போகும் அத்தனை பேருக்குள்ளும் கனவுகளை விதைக்கப் போகிறது.
நமக்கான கனவை நமக்குள் விதைப்பதற்கும் காத்திருக்கிறது நமக்கானதொரு மரம். அதை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும். கிடைக்காத பட்சத்தில் நடவேண்டும். அது சூழலுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லது.
கனவையும் விதைத்து, கனவை நனவும் ஆக்கிய இந்த 'ட்வே-பேரென்-போம்' அவர்களுக்குப் இருவகை பேரிக்காய் பழங்களை மட்டுமன்றி பல வெற்றிகளையும், அமைதியையும், மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும் நல்க வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

புகைப்படங்கள்:  

(முகநூல் பதிவு: 30 ஏப்ரல் 2016)

கருத்துகள்

  1. நல்லதொரு பகிர்வு.

    இந்தளவு சிறப்பாக இல்லாமல் போனாலும் நானும் ' ஒரு புளிய மரத்தின் கதை ' ஒன்றை எழுதியிருக்கிறேன்!

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்