'நோ ப்ராபளம்' - is that actually a problem?

ன்று மதியம் ப்ரசல்ஸ் மாநகரில் ஒரு இத்தாலிய பேருண்டிச்சாலையில் ஒரு ஐம்பது பேரோடு உணவருந்திக்கொண்டிருந்தேன். எனக்கு இடப்புறம் இரண்டு இந்தியர்களும், எனக்கெதிரே ஒரு சுவீடன் நாட்டுக்காரரும், துருக்கி தேசத்துப் பெண்ணொருத்தியும், எனக்கு வலப்புறம் பெல்கிய நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள். விவாதம் பிரெக்ஸிட்டில் தொடங்கி, இடையே செயல்திறன் மிக்க நாடு சுவீடனா? பெல்கியமா? என்றும் அதையொட்டியொரு அதிதீவிர வாக்குவாதம், பின்னர் கால்பந்து போட்டியென்று எதையெதையோ பேசிக்கொண்டிருந்தபோது, நான் எனக்குள் நேற்றிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்றான இஸ்தான்புல் தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி பேச ஆரம்பித்த அடுத்த கணம், எனக்கு அருகே இருந்த இந்தியர் மிகுந்த கவலையோடு, நான் அடுத்த வாரம் டர்கிஷ் ஏர்லைன்ஸில் இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக இந்தியா செல்வதாக இருந்தது. இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார். எதிரே இருக்கும் பெண்மணி துருக்கி தேசத்தைச் சேர்ந்தவள் என்று அவருக்குத் தெரியாது. அவளுடைய கணவர் ஒரு பெல்கியர். நண்பரின் புலம்பலைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன். அவளுக்கோ கடுங்கோபம். 'துருக்கி ஒன்றும் பெல்ஜியம் போன்ற நாடு இல்லை. மூன்றே நாட்களில் விமான நிலையம் இயங்க ஆரம்பித்து விடும். பார்' என்றாள். அவளுடைய கோபத்துக்கான காரணத்தைக் கேட்டதும் எனக்கு இரண்டு மடங்கு அதிர்ச்சி. இவர்களது மனிதநேயத்தைக் கண்டு விக்கித்துப் போய் அமர்ந்திருந்தபோது, இதுபோன்றதொரு இயந்திர மனநிலையைப் பற்றி சுஜாதா எழுதிய 'நோ ப்ராபளம்' சிறுகதைதான் நினைவுக்கு வந்தது.
உடனே மூன்று நாட்களாக எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது.
'நோ ப்ராபளம்', இந்தியாவில் இருக்கும்போது வாசித்ததொரு எளிமையான சிறுகதை. அவர் அதில் பேசியிருந்த அறம் எனக்குப் புரிந்தாலும், இப்போது எனக்கு அதைப்பற்றி வேறுவிதமான எண்ணங்கள் தோன்றி உறுத்துகின்றன. இன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் புத்தகத்தை எடுத்து அந்தச் சிறுகதையை வாசித்தேன்.
ஜெர்மனியின் ம்யூனிக் நகருக்கு வந்திருக்கும் ராஜனை (அவரேதான். ரங்கராஜன்) விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அழைத்துப் போக வருகிறாள் ஒரு ஜெர்மானியப் பெண். போகும் வழியில் ஒரு விபத்தின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு அங்கே சிக்கிக்கொள்கிறார்கள். விபத்து நடந்த இடத்தை நெருங்கியவுடன், அங்கு அவர் காண்பதைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் சுஜாதா :
.......
நீல வானத்தில் ஒரு தட்டாம்பூச்சி போல படபடவென்று சிறகடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் இறங்கியது. அதன் தலைவால் சக்கரங்கள் கீச்சுக் குரலில் சுழல, அதன் காகில்ஸ் அணிந்த பைலட் கீழே எட்டிப் பார்த்துக்கொண்டு, செங்குத்தாக விபத்துக்கு காருக்கு மேலே அணுகி, சுமார் இருபதடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினான். ஹெலிகாப்டரினின்றும் ஒரு கம்பிக்கு கொக்கி இறங்கி இறங்க, அதில் ஒரு ஸ்ட்ரெச்சர் தொட்டில் அமைத்து, அந்த இரண்டு உடல்களையும் ஏற்றினார்கள்.
திடுக்கிட்டேன். ஒரு கணம், விபத்தில் இறந்துபோயிருந்த அந்த இரண்டு பேரின் முகங்கள் தெரிந்தன. முகமா அது! கசாப்புக்கு கடை வெட்டுப்போல ரத்தக் குதறல்!
உடைகளிலிருந்து ஒரு ஆண், ஒரு பெண் என்று தெரிந்தது. வெள்ளை வெளேர் என்று துணி போட்டு உடல்களை மூடினார்கள். துணிகள் உடனே ரத்த நிறமாக மாறின. உடல்கள் இரண்டையும் ஹெலிகாப்டர் தான் வயிற்றில் வாங்கிக்கொண்டு அந்தக் கொக்கி மறுபடி கீழே இறங்கியது. இப்போது அந்தக் கொக்கியில் திறமையாகக் கம்பிகளும், வயர்களும் பொருத்தினார்கள். காரின் நான்கு மூலைகளிலும் மாட்டினார்கள். கீழே இருப்பவன் கட்டை விரலைக் காட்ட, ஹெலிகாப்டர் மெல்ல மேலே புறப்பட, கார் சற்று நேரம் அபத்தமாக அந்தரத்தில் தொங்கி, மேலே ஏறி, மரங்களின் உச்சியைக் கடந்து, ஒரு கோணத்தில் இன்னும் மேலேறி, ஒரு நிமிஷத்தில் நீலவானின் பின்னணியில் சின்னதாகி மறைந்தது. அதே சமயம் சாலை ரத்தத்தை ஒரு ராட்சச ஹொஸ்னஈர்த் துடைப்பம் துப்புரவாக அலம்பிவிட்டது.
நாங்கள் அந்த இடத்தைக் கடக்கும் போது சாலை குளித்துச் சுத்தமாகிவிட மறுபடி நாங்கள் எல்லோரும் வேகம் பிடித்தோம்.
"எப்படி?"
"ஐம் சாரி. வெரி ஸாரி" என்றேன்.
"எதற்கு வருத்தப்படுகிறீர்கள்? பத்து நிமிஷம்தான் தாமதம்! எவ்வளவு சீக்கிரம் சாலை திறக்கப்பட்டது பார்த்தீர்களா? சாலையின் ஒவ்வொரு கிலோமீட்டரிலும் டெலிபோன் இருக்கிறது. செய்தி போய், போலீஸ் வந்து, ஹெலிகாப்டர் வந்து, எவ்வளவு துரிதம்? எவ்வளவு சுத்தம் பார்த்தீர்களா? நோ ப்ராபளம்!"
"ஆம். இந்த மாதிரி எல்லாம் எங்கள் நாட்டில் கிடையாது." என்றேன்.
"இந்நேரம் அந்த இரண்டு பேரையும் கம்பியூட்டர் அடையாளம் கண்டுபிடித்திருக்கும்." என்றாள். ஏன் மார்ச்சுவரிக்கு எடுத்துக் போய் போஸ்ட் மார்ட்டம் செய்து புதைத்துக்கூட இருப்பார்கள் என்று தோன்றியது. சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.
.......
இந்தச் சிறுகதையில் சுஜாதா விமர்சித்திருப்பது இவர்களின் இயந்திரத்தனமான மனநிலையை என்றாலும் கூட, இந்த அமைப்பில் அவர் பார்க்க மறந்த அல்லது பார்வையில் விழாத அல்லது இந்தச் சிறுகதையின் நோக்கம் கருதி தவிர்த்து விட்ட பல விஷயங்கள் இதில் இருக்கிறது. ஐரோப்பாவில் வாழ்ந்துகொண்டிருப்பதால் என்னால் இதை உறுதியாகச் சொல்லமுடியும். அதைச் சொல்வது வாசகனான என்னுடைய கடமை. ஒரு இலக்கிய படைப்பில் வாசகனுக்கான தளம் எப்போதுமே நிரப்பப்படாமல் இருக்கிறது. உண்மையில் ஒரு வாசகன்தான் ஒரு இலக்கியப் படைப்பை முடித்துவைக்கவேண்டும். எழுத்தாளர்கள் துவக்கி மட்டுமே வைக்கிறார்கள்.
ஹெலிகாப்டரில் உடலை எடுத்துக்கொண்டு போவது போக்குவரத்தை சரிசெய்வதற்காக மட்டுமல்ல. என் அலுவலகம் புகழ்பெற்ற காஸ்தஸ்பெர்க் மருத்துவமனை அருகில் தான் உள்ளது. கடந்த மார்ச்சு மாதம் ப்ரசல்சு விமான நிலைய தாக்குதலுக்குப் பிறகு எத்தனை ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைக்குப் பறந்து வந்தது! எத்தனை உயிர்களை அவை காப்பாற்றி இருக்கும்! இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு முறையும் இந்த ஹெலிகாப்டர்கள்தான் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தை முதலில் எனக்குத் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்கள் வருவது பலியானவர்களை அப்புறப்படுத்தவோ, காயமடைந்தவர்களை காக்கவோ மட்டும் அல்ல, விரைவில் அப்புறப்படுத்தி மேலும் சில விபத்துகள் நேர்வதை தவிர்க்கவும்தான். இவர்களின் இயந்திர மன நிலையைப் பற்றி நானே பலமுறை விமர்சித்து கதைகளிலும் கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறேன். ஆனால், அதைத் தவிர்த்து போற்றுதலுக்குரிய பல விஷயங்கள் இங்கே நிரம்பிக்கிடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. தீவிரவாதத் தாக்குதலில் பலியான இந்தியரின் உடலைப் பார்க்க இந்தியத் தூதருக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. டி.என்.ஏ சோதனைக்குப் பிறகே அவருடைய சகோதரருக்கு அனுமதி கிடைத்தது.
இன்றைக்கு உடலை அப்புறப்படுத்தவில்லை என்று காவல்துறையை விமர்சித்துக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உருக்குலைந்து போன உடலை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டிருப்பது என்னமாதிரியான ஊடக அறம் என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் சுஜாதாவின் வரிகள்:
.....
திடுக்கிட்டேன். ஒரு கணம், விபத்தில் இறந்துபோயிருந்த அந்த இரண்டு பேரின் முகங்கள் தெரிந்தன. முகமா அது! கசாப்புக்கு கடை வெட்டுப்போல ரத்தக் குதறல்!
......
இப்போது மீண்டும் சிறுகதையின் மற்ற வரிகளை வாசியுங்கள். உங்களுக்கு நான் கூறுவது புரியும். முடிந்தால் சிறுகதையையே வாசியுங்கள். இணையத்தில் தேடாதீர்கள். நிச்சயம் கிடைக்காது. 1977-ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை. அப்போதே இங்கு சாதாரண குடிமகனைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் வந்திருக்கிறது. நமக்கென்ன குறைச்சல். நாமும்தான் முன்னேறிவிட்டோம். நம் பாரதப் பிரதமர் அதிநவீன விமானத்தில் பறக்கிறார். கடன்பட்ட தேசத்தின் வங்கிகள் கோடிக்கணக்கில் கடன்களையெல்லாம் சர்வ சாதாரணமாக தருமளவிற்கு வளர்ந்திருக்கிறோம். நமக்கே நமக்கான நம்முடைய மாஸ் நடிகரின் உருவத்தை ஏந்திச் செல்கின்றன விமானங்கள். நாமும்தான் முன்னேறிவிட்டோம்.
புத்தக விவரம்: "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" முதல் தொகுதி, சுஜாதா, உயிர்மை பதிப்பகம்.

கருத்துகள்

  1. கட்டுப்பாடு அதாவது "டிசிப்ளின்". அது இந்தியாவில் இல்லையே? ஏன்? ஊழல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல். இது தம் நாட்டின் கலாச்சாரமாகி விட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பயணி..

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்